“பாட்டி பாத்தீங்ளா… நொய்யல் ஆத்துல வெள்ளப்பெருக்கு. கோவை குற்றாலத்துல ஆர்ப்பரிக்கும் தண்ணியினால குளிக்கத் தடை. அட கோயமுத்தூர்காரங்க முகத்துல அப்படியொரு சந்தோசம்! 20 வருஷமா நிறையாத குளமெல்லாம் நிறைஞ்சிருக்கு பாட்டி.”

கோவை மக்களின் சந்தோஷத்தை நேரில் பார்த்த நான், பாட்டியிடம் பகிர்ந்து கொண்டேன். ஆனால் அதனைச் சொல்லி முடிப்பதற்குள் இருமல் என்னைப் பாடாய் படுத்திவிட்டது.

“என்னப்பா… ஒரே இருமலா இருக்கு? சந்தோஷத்துல இருமல் வருதா? இல்ல சளினால இருமல் வருதா?” பாட்டி அடுப்படியிலிருந்து கொல்லைப்புறத்திற்கு நடந்தபடியே கேட்டாள்.

“சந்தோஷத்துல எப்படி பாட்டி இருமல் வரும்? எல்லாம் பாழாப்போன இந்த சளினாலதான். கோயமுத்தூர் மழையில நானும் போய் ஒருவாரம் மாட்டிக்கிட்டேன் பாட்டி.”

“அண்டத்துல இருப்பது பிண்டத்துலயும் இருக்குன்னு சும்மாவா சொன்னாங்க. வெளியில பஞ்சபூதங்களோட செயல்பாடுல மாற்றம் வரும்போது, நம்ம உடல்லயும் அதுக்கு ஏத்த விளைவு நடக்கத்தானே செய்யும். இதெல்லாம் இயற்கைதான்."

"மழைக்காலத்துல சளிப்பிடிக்கறது இயற்கையானதுதான். இதுக்கெல்லாம் நாம இரசாயன மருந்த தேடிப்போகக்கூடாது.”

சொல்லிக்கொண்டே கொல்லைப்புறத்திற்குச் சென்ற பாட்டியின் கையில், இரண்டு மூன்று பச்சை இலைகள்.

“இந்தாப்பா வாயில போட்டு மென்னு சாப்பிடு!”

பாட்டி கொடுத்த அந்த இலைகளைச் சாப்பிட்டதும், காரமும் கசப்பும் ஒருவித நல்ல வாசனையையும் உணர முடிந்தது.

“இதுக்கு பேருதாம்ப்பா கற்பூரவல்லி இலை, இதுல இருக்குற காரச்சுவை நுரையீரலுக்கு சக்தி கொடுக்கும். இது இருமல் சளிக்கு அற்புத மருந்து” என பாட்டி விளக்கினாள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

“ஆமாம் பாட்டி… எங்க அம்மா சிவாங்கா விரதம் இருக்கும்போது தினமும் காலையில் வெறும் வயித்துல இத சாப்பிடுவாங்க. நான் பாத்திருக்கேன்.”

“ஓமவல்லி’னுகூட இன்னொரு பேர் இதுக்கு இருக்கு. கற்பூரவல்லி இலைய சாதரணமா அப்படியே எடுத்து மென்னு சாப்பிடலாம். இல்லேன்னா தேனோட சேர்த்தும் சாப்பிடலாம். இந்த இலைய தேங்காய், பருப்பு, மிளகாய்வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து அரைச்சு சட்னியாக சாப்பிடலாம். இந்த இலைய சாறெடுத்து நல்லெண்ணெய் சர்க்கரையோட சேத்து நல்லா கலக்கி நெற்றியில பற்றுப்போடலாம். அப்படி செஞ்சா ஜலதோஷத்துனால வர்ற தலைவலி நீங்கும். குழந்தைகளுக்கு வர்ற அஜீரண வாந்திய இந்த மூலிகை நிறுத்தக்கூடியது.

வயிறு சம்பந்தப்பட்ட நோய்க்கும் இளைப்பு நோய்க்கும் உள்மருந்தா இது பயன்படுது. கண் அழற்சி ஏற்படும்போது இந்தக் கற்பூரவல்லி இலைச்சாற மேல் பூச்சா தடவினால் குணம் தரும். அதிகப்படியான கபம் பிரச்சனை இருக்குறவங்களுக்கு, சளி வெளியே வர்றதுக்கு, இந்த இலைய அரைச்சு தண்ணி கலந்து கொதிக்க வச்சு, ஏலக்காய், கிராம்பு, அதோட ஒரு ஸ்பூன் தேன் கலந்து மூன்று நாள் தினமும் இரண்டு வேள குடிச்சா நல்ல பலன் கிடைக்கும். கற்பூரவல்லி இலையை சூடான தண்ணியில போட்டு ஆவி பிடிச்சாலும் நெஞ்சு சளிக்கு குணமளிக்கும்.

கற்பூரவல்லியின் மருத்துவ குணங்களை பாட்டி அடுக்கிக்கொண்டே செல்ல, எனக்கு ஒரு கேள்வி அவ்வப்போது வந்து கொண்டே இருந்தது. அதைக்கேட்டு விட்டேன் கடைசியில்.

“கற்பூரவல்லிய எங்க போய் நான் வாங்குறது பாட்டி?”

கேட்டதும் பாட்டி மென்மையாக சிரித்துவிட்டு, “எல்லாத்தையும் ஏன் வாங்கணும்னு நினைக்குற?! நீ வீட்டிலயே கற்பூரவல்லிய வளர்க்கலாம். அதுக்கு ஒரு டப்பா மண் இருந்தா போதும். அந்த இலைகள் பார்க்குறதுக்கு பச்சையா அழகா இருக்குறதால, அது வீட்டு முன்னாடி ஒரு அழகுச்செடியாவும் இருக்கும்.”

சொல்லிக்கொண்டே பாட்டி மீண்டும் கொல்லைப்புறத்திற்குச் சென்று இரண்டு கற்பூரவல்லி இலைத்தண்டுகளைக் கொடுத்தார்.

“இந்தா போய் நட்டுவை! இதுங்க தண்ட கிள்ளி நட்டு வச்சாலே நல்லா வளந்திடும்.” என்று பாட்டி சொன்னதும், விலைமதிப்பற்ற பொக்கிஷத்தைப் பெறுவதைப் போல மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டேன்.

மருத்துவக் குறிப்புகள்: மரு. சக்தி புவனாம்பிகை, ஈஷா ஆரோக்கியா மருத்துவமனை, சேலம்.