கராத்தே, குங்ஃபூ போன்ற தற்காப்பு கலைகள் மிகவும் புகழ்பெற்று விளங்கும் இந்தக் காலத்தில், 'களரி' எனும் ஒரு அற்புதக் கலை இருப்பது வெகுவாக மறக்கப்பட்டு வருகிறது. ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள், தாங்கள் பெற்றுள்ள இந்த வெற்றியின் மூலம் நமக்கு அதன் பெருமையையும் உயர்வையும் நினைவூட்டியுள்ளனர். ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் களரியில் மாநில சேம்பியனான அந்த நிகழ்வு குறித்து சில வரிகள்...

கடந்த ஜூலை 13 அன்று கோவை கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு களரிப்பயட்டு கழகம் (இந்தியக் களரிப்பயட்டு கூட்டமைப்புடன் இணைக்கப்பட்டது) சார்பில் மாநில களரிப்பயட்டு சேம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் ‘ஈஷா சம்ஸ்கிருதி’ மாணவர்கள் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களைப் பெற்று 2014ஆம் ஆண்டிற்கான சுழற்கோப்பையை வென்று மாநில சேம்பியனாகி உள்ளனர்.

சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் என மூன்று பிரிவுகளிலும் நடைபெற்ற போட்டிகளில், “ஈஷா சம்ஸ்கிருதி” மாணவர்கள் தங்கள் பயிற்சித் திறனை செம்மையாக வெளிப்படுத்தி பதக்கங்களைக் குவித்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. உயரம் தாவி எத்துதல் (ஹை-கிக்), மெய்பயட்டு (உடலை வளைத்து பயிற்சி செய்தல்), கைப்போர் (ரெஸ்ட்லிங்), வாளும் கேடயமும் (ஸ்வார்ட் & ஷீல்ட்), உருமி (சுருள்) போன்ற போட்டிகள் நடைபெற்றன.

6 மாவட்டங்களிலிருந்து சுமார் 200 மாணவர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் 23 தங்கம், 8 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களைப் பெற்றனர். கேரள மாநிலம் கோழிக்கோடில் அமைந்துள்ள "ஜி.சி.சாமி குருக்கள் மெமோரியல் கைரளி" களரி சங்கத்திலிருந்து திரு.ஆனந்தன் குருக்கள் அவர்கள், ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

களரியில் கேரள மாநிலத்திற்கு இணையாக தற்போது தமிழ்நாடும் “ஈஷா சம்ஸ்கிருதி” மாணவர்கள் மூலம் தனது சாதனைப் பயணத்தைத் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிபெற்ற ஈஷா மாணவர்களின் பகிர்தல்கள்

நாங்கள் போட்டி நடைபெறும் அறைக்குள் நுழைந்ததும் சுழற்கோப்பையைப் பார்த்தோம். அப்போதே முடிவு செய்துவிட்டோம், அந்த சுழற்கோப்பையை கைப்பற்றிவிட வேண்டுமென்று. என்னதான் நடந்தாலும் அந்தக் கோப்பையைக் கைப்பற்ற வேண்டுமென்ற உறுதி எங்கள் அனைவரிடமும் இருந்தது. எனது திறமையை என்னால் இயன்றவரை முழுவதுமாக வெளிப்படுத்த வேண்டுமென்று எனக்குள் கூறிக்கொண்டேன். இறுதியில், நாங்கள் அதிக பதக்கங்களை வென்று கோப்பையைக் கைப்பற்றினோம்.
- சாய் சஸ்மித்

எங்களில் சிலர் சற்று பதற்றத்துடன் காணப்பட்டாலும் எங்களுக்குள் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை நிறைந்திருந்தது. ஒவ்வொரு போட்டியாக நடைபெற்றது. பானைகள் உடைந்து சிதறின; கைப்போர் உச்சத்தை எட்டியது; வாளும் கேடயமும் சுழன்றன; உருமிகள் நாற்புறமும் வீசப்பட்டன. பார்வையாளர்களின் கைதட்டல் ஓசைகளும் விண்ணைப் பிளந்தன. அனைவரும் ஆர்வத்துடன் போட்டி முடிவிற்காகக் காத்திருந்தோம். மாலையில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டதோடு பதக்கங்களும் வழங்கப்பட்டன. ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் பெயர்கள் மீண்டும் மீண்டும் அழைக்கப்பட்டன. நாங்கள் இன்ப அதிர்ச்சியில் மிதந்தோம். மொத்தம் அங்கே வழங்கப்பட்ட பதக்கங்களில் பாதிக்கும் மேலாக நாங்கள் வாங்கினோம். இன்னும் ஒரே ஒரு அறிவிப்பு பாக்கி இருந்தது. அதுதான் சேம்பியன்ஷிப் சுழற்கோப்பை. நாங்கள் யாருக்கு கிடைக்குமோ என்று ஆவலுடன் காத்திருந்தோம். அவர்கள் "ஈஷா சம்ஸ்கிருதி" என்று அறிவித்ததும் மகிழ்ச்சியில் எங்கள் இருக்கையிலிருந்து துள்ளிக் குதித்தோம். அனைவரும் மேடையை நோக்கி ஆர்ப்பரித்து ஓடினோம்.
- ருஷ்மித்தா

களரிப் பயட்டு - சில தகவல்கள்!

'களரி' என்பது முற்காலத்தில் மிருகங்களிடமிருந்து மனிதர்கள் தங்களைக் காத்துக்கொள்ள அகஸ்தியர் உருவாக்கி வழங்கிய பயிற்சிமுறை. களரிப் பயிற்சியின் செயல்முறைகளும் நிற்கும் நிலைகளும் மனித உயரத்தை விட குறைவான உயரத்தில் உள்ள ஒன்றை எதிர்கொள்ளும்படியாக அமைந்திருப்பதை நாம் கவனிக்கலாம். களரியிலிருந்து உருவானதே கராத்தே, குங்ஃபூ போன்ற தற்காப்பு வடிவங்கள். ஆனால், களரி மனிதர்களைத் தாக்குவதற்கோ சண்டையிடுவதற்கோ உருவாக்கப்பட்டதன்று. இது மிகவும் சூட்சுமமாக, யோகத்தை நோக்கி மனிதர்களைக் கொண்டு செல்லும் ஒரு அற்புத பயிற்சி என்பது அதனைத் தொடர்ந்து உணர்ந்து பயின்று வருகையில் புரியும்.

களரி குறித்து சத்குரு பேசும்போது...

உலகில் உள்ள தற்காப்புக் கலைகளிலேயே மிகவும் தொன்மை வாய்ந்தது களரியாகத்தான் இருக்க முடியும். முதன்முதலில் இவற்றை உருவாக்கி பயிற்றுவித்தவர் அகஸ்திய முனிவரே. தற்காப்புக் கலை என்றாலே யாரையாவது உதைப்பதோ அடிப்பதோ குத்துவதோ மட்டும் கிடையாது. இந்த உடலை முறையாக பயன்படுத்த என்னவெல்லாம் சாத்தியங்கள் உள்ளனவோ, அவை அனைத்தையும் கற்றுக்கொள்வது பற்றியதே தற்காப்புக் கலை.

இன்றைய உலகில் களரிப் பயிற்சி செய்பவர்களில், போதுமான அளவு நேரமும், சக்தியும் செலவு செய்து, முழுகவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் உள்ளவர்கள், மிகச் சிலரே இருக்கின்றனர். இருந்தும் இதில் ஒருவர் நன்கு ஆழமாக செல்லும்போது, அவர் யோகத்தை நோக்கி நகர்வது இயல்பாகவே நிகழும். ஏனென்றால், அகஸ்தியரிடமிருந்து தோன்றியது எதுவுமே ஆன்மீக சாரமில்லாமல் வேறெப்படியும் இருக்க முடியாது.
உண்பது, உறங்குவது, சிறுசிறு இன்பங்கள்-இவற்றைத் தவிர தங்கள் உடலைப் பற்றிய புரிதல் மனிதர்களுக்கு வேறொன்றும் கிடையாது. உடலின் ஆராயப்படாத பரிமாணங்கள் ஏராளமானவை. சில கராத்தே வல்லுனர்கள், லேசாக தொட்டாலே உங்களை சாகச் செய்யமுடியும், தெரியுமா? லேசாக தொட்டு ஒருவரின் உயிரை எடுப்பது பெரிய விஷயம் கிடையாது. அதேபோல் தொடுவதன் மூலம், உங்களை உயிர்தெழுப்பிடுவதும் சாத்தியம். இது மிகப்பெரிய விஷயம். ஒருவரை தொடுவதன் மூலமாகவே உயிர்த்தெழும்படி செய்வது மிகப்பெரிய விஷயம். உங்கள் உடலை குறிப்பிட்ட விதமாக தொடுவதன் மூலம், உங்கள் அமைப்பு முழுவதையுமே விழித்தெழச் செய்திடலாம்.

ஈஷாவில் இலவச களரிப் பயிற்சி

ஈஷா யோகா மையத்தில், மையத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பலன் பெறும் வகையில் 'ஈஷா கிராம புத்துணர்வு' இயக்கம் சார்பாக இலவச களரி மற்றும் பரத நாட்டியப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் இவ்வொரு ஞாயிறு அன்றும் (வாரம் ஒருமுறை) நிகழ்கிறது. நரசிபுரம், தொண்டாமுத்தூர் ,செம்மேடு, ஆலாந்துறை இன்னும் பல ஈஷா மையத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் இதனால் பயனடைவது குறிப்பிடத்தக்கது.