நம்மவரு நம்மாழ்வார்... பகுதி 10

இந்தியக் கலாச்சாரத்தில் ஒரு பொருளைப் பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் பேச்சுக்கே இடமில்லை. ஆனால் சர்வாதிகார மனப்போக்கு கொண்ட மேற்கத்திய நாடுகளிலோ, எல்லாமே 'யூஸ் & த்ரோ' தான். புத்தர் கொடுத்த ஒரு போர்வை கால்மிதியாகவும், பின் கடைசியில் விளக்குத் திரியாகவும் மாறிய கதையைக் கூறி, மறுசுழற்சியின் மகத்துவத்தை எடுத்துரைக்கிறார், நம்மாழ்வார்.

நம்மாழ்வார்:

நான் சந்தித்த இயற்கை நேயர்களில் ஆரோவில்காரரான, பெர்னார்டு டடி கிளார்க் முக்கியமானவர். ஒரு நாள் இயற்கை உழவாண்மை பயிற்சி நேரம்; தமிழன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை நடித்துக் காட்டினார்.

"100 வருடங்களுக்கு முன்பு ராஜாக்களும் ராணிகளும் நினைத்துக்கூடப் பார்க்காத சௌகரியங்களை இன்று சாதாரண மனிதன் அனுபவிக்கிறான். ஆனால் மகிழ்ச்சியில் இருக்கிறனா? என்ன நடக்கிறது? மகிழ்ச்சியைத் தேடும் முயற்சியில் மனிதன் இந்த உலகத்தைத் தன் வசதிக்குச் சுரண்டுகிறான்."

காலையில் கண் விழிக்கும் ஒருவன் கண்ணைக் கசக்கிக் கொள்கிறான்; தொங்கும் வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டுகிறான்; தலையைப் பின்னுக்கு வளைத்தபடி கண்களை மேலே சுழலவிட்டபடி முன்னோக்கி நடக்கிறான்; ஒரு வேப்பமரத்துக் கிளை கண்ணில் பட்டுவிடுகிறது; தொங்கும் கிளை நோக்கி வந்தவன், இலை, தழை, பூ, காயோடு ஒரு கொத்தை ஒடித்துக் கொண்டு கிளையை விட்டு விடுகிறான். ஒரு பென்சில் நீளத்துக்கு ஒரு குச்சியை ஒடித்துக் கொண்டு, எஞ்சியதைப் பின்பக்கமாக வீசுகிறான். குச்சி பல்லுக்கிடையில் மெல்லப்படுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இதற்குப் பெயர் ‘பயன்படுத்தி வீசி எறி’ என்பதாகும். இப்படி சூழல் மீது அக்கறை இல்லாத சுயநலம் மேற்கு நாடுகளுக்கே உரிய கலாச்சாரம். இந்தியக் கலாச்சாரம் அதுவல்ல.

ஒரு பௌத்த ஆசிரமம். புத்தர் சுற்றி வரும்போது ஒரு பிட்சுவின் குடிலுக்குள் நுழைந்தார். பிட்சுவிற்கு இருந்த போர்வையில் கிழிசல் தென்பட்டது. ஒரு கிழியாத போர்வை கொடுப்பதாக பிட்சுவுக்கு புத்தர் வாக்களித்தார். பிறகு ஒரு போர்வையும் கொடுத்தார். ஒரு வாரம் சென்றது. பிட்சுவின் குடிலுக்குள் நுழைந்த புத்தர் கேட்டார், போர்வை பயனுள்ளதாக இருக்கிறதா?

"ஆமாம் குருவே" இது பிட்சுவின் பதில்.
"பழைய போர்வையை என்ன செய்தாய்?"
"கிழிசலை வெட்டித் தைத்து படுக்கை விரிப்பாக்கிக் கொண்டேன், குருவே"
"முன்பு படுக்கை விரிப்பாக இருந்தது........?"
"இப்போது தலையணை உறையாக........"
"முன்பு தலையணை உறையாக இருந்தது........?"
"வாயில்படி அருகில் கால் மிதியாக உள்ளது, குருவே. அதன்மீது நடந்துதான் தாங்கள் உள்ளே வந்தீர்கள்"
"முன்பு கால்மிதியாக இருந்தது........?"
"விளக்குத் திரியாக நம் முன் உள்ள தீபத்தில் எரிந்து கொண்டுள்ளது, குருவே"

இப்படியாக "வீண்" என்று எதையுமே பார்க்காத கலாச்சாரம் நமது கலாச்சாரம். மேற்கு தேச கலாச்சாரத்தால் எவ்வளவு சீரழிந்து போனோம்?!

சத்குரு சொல்கிறார், "100 வருடங்களுக்கு முன்பு ராஜாக்களும் ராணிகளும் நினைத்துக்கூடப் பார்க்காத சௌகரியங்களை இன்று சாதாரண மனிதன் அனுபவிக்கிறான். ஆனால் மகிழ்ச்சியில் இருக்கிறனா? என்ன நடக்கிறது? மகிழ்ச்சியைத் தேடும் முயற்சியில் மனிதன் இந்த உலகத்தைத் தன் வசதிக்குச் சுரண்டுகிறான்."

இந்தப் போக்கு நீடித்தால் 2030க்கும் 2040க்கும் இடையே மனிதனுக்கு இன்னொரு கிரகம் தேவைப்படும். இப்படிச் சொல்கிறது 'WWF' நிறுவனம்.

இலை, தழை, பூ, காய், கனி, விலங்குகளின் உடல், கழிவு இவையெல்லாம் மக்கி மீண்டும் மண்ணாகி செடி கொடி வளர்க்கக்கூடியவை. மற்றவை மக்காதவை. பிளாஸ்டிக், கல், கண்ணாடி, ரப்பர், செருப்பு, போன்றவை எவ்வளவு காலமானாலும் உரு மாறாதவை. இரண்டையும் கலந்து வீதியில் எறிந்தோம். இதன் மூலம் மக்கக்கூடிய பொருளையும் மக்காமல் செய்து விட்டோம்.

மக்காத பொருள் நுகர்வைக் குறைப்போம். மக்கும் பொருளை மறு சுழற்சியில் சேர்ப்போம். பூமியைப் பச்சைக் குடையால் காத்து காய்ச்சலைத் தணிப்போம். வேறு மார்க்கம் எதுவும் இருப்பதாகப் புலப்பட வில்லை.

தொடர்ந்து விதைப்போம்...

nature, nammalvar, agriculture

தள்ளாத வயது என வர்ணிக்கப்படும் வயதில், வாலிபராய் நம்மிடையே வலம் வரும் நம்மாழ்வார் அவர்கள், இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவை எடுத்துரைப்பது எனப் பல தளங்களில் தனது சேவையை ஆற்றிவருகிறார்.

alessandrobi @ flickr