சீரகம் - மருத்துவ சிறப்புகள் என்ன? (Seeragam in Tamil)
நம் வீடுகளில் சைவமோ அசைவமோ, மசாலா பொருட்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றுள் மிக முக்கியமானது 'சீரகம்'. சமையலில் சீரகத்தை சேர்த்துக்கொள்வது ருசிக்காக என்பதைத் தாண்டி, முக்கியமாக அதன் மருத்துவ குணத்திற்காகவே ஆகும். இதோ, சீரகம் குறித்து இன்னும் பல தகவல்களைத் தெரிவிக்க உமையாள் பாட்டி வருகிறாள்!
கொல்லைப்புற இரகசியம் - பகுதி 9
உமையாள் பாட்டி அம்மியில் எதையோ அரைக்கும் சத்தம் வீட்டு முற்றம் வரை அதிர்வுகளைப் பரப்பியது. பக்குவமாக அரைத்த மசாலாவை வக்கனையாக குளவியிலிருந்து வழித்தெடுத்து மண் கலயத்தில் சேர்த்துக்கொண்டிருந்தார் பாட்டி.
"ம்கும்..." என்று நான் செருமிக் காட்டியபோதுதான் நான் நின்றுகொண்டிருந்ததைக் கவனித்தார் உமையாள் பாட்டி. "என்ன பாட்டி, பிஸியா எதோ வேல பாக்குறீங்க போல?!"
"நான் எப்போ சும்மா இருந்தேம்ப்பா... பொம்பளைக சும்மா அக்கடான்னு உக்காந்துட்டா அப்புறம் குடும்பம் எப்படி நடக்கும்?!"
பாட்டி ஏதோ வீட்டுக்கு புதுக்குடித்தனம் வந்த புதுப்பெண் போல பேசியது வேடிக்கையாக இருந்தாலும் அவரின் ஈடுபாட்டினைப் பார்க்க வியப்பாகவும் இருந்தது.
"அம்மி-குளவி, திருகை, உரல்-உலக்கை இந்தக் கருவிகளெல்லாம் கிராமங்கள்ல கூட இப்போ காணாம போயிருச்சு பாட்டி, நீங்கதான் இன்னும் அம்மிய மாங்கு மாங்குனு அரச்சுகிட்டு இருக்கீங்க. பேசாம மிக்ஸியில போட்டு வேலைய முடிக்க வேண்டியதான பாட்டி?!"
Subscribe
"அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது; அம்மியில அரைக்குறது ஒரு கலை! அதோட, கையால அரைக்குறப்போ எனக்கும் அரைபடும் பொருளுக்கும் இடையில ஒரு பந்தத்தை நான் உணர்வேன்."
"பாட்டி நீங்க ரொம்ப அனுபவிச்சு பேசுறீங்க! ஆமா... இவ்வளவு ரசிச்சு ரசிச்சு அப்படியென்னதான் அரைச்சீங்க?!"
"மிளகு-சீரகம் போட்டு ரசம் வைக்குறதுக்காக அரைச்சேம்ப்பா... செத்தயிரு பாட்டியோட ரசத்த கொஞ்சம் ருசி பாக்கலாம்!"
"நீங்க சொல்லாட்டியும் நான் அத டேஸ்ட் பண்ணாம போறதா இல்ல... ஆமா பாட்டி... 'சீரகம்' இல்லாம நம்ம வீட்டு குழம்பு பதார்த்தம் எதுவுமே சமைக்கப்படுறதில்ல, இந்த சீரகத்த பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்."
சீரகம் - மருத்துவப் பயன்கள் (Seeragam Benefits in Tamil)
செரிமான கோளாறுகளுக்குத் தீர்வு:
"அகத்தை (உள் உடல்) சீர் செய்றதால அதுக்கு சீரகம்னு பேர் வந்துச்சு. 'போஜனகுடோரி, பித்தநாசினி' அப்புடீன்னும் சீரகத்த சொல்றதுண்டு. (போஜனம் - உணவு/செரிமானம், குடோரி-மருந்து). அதாவது செரிமான கோளாறுகளுக்கு இது சிறந்த மருந்தா இருக்கு."
பித்தம் சமநிலைப்பட:
"உடலில் பித்தத்தை சமநிலைப் படுத்தும் தன்மையும் சீரகத்துக்கு உண்டு."
"ஓ... இவ்வளவு சின்ன சீரகத்துக்கு இவ்வளவு சிறப்பா?!"
"எதையும் அளவ வெச்சு எட போடாத தம்பீ! சீரகத்தோட சிறப்பு இது மட்டுமல்ல, இன்னும் இருக்குது கேளு."
தேக வன்மை பெற:
"சீரகத்த நாட்டுச் சக்கரையோட சேர்த்து சாப்பிடும்போது, தேக வன்மை கிடைக்குது."
இருமல் தீர:
"கற்கண்டு கூட கலந்து சாப்பிடும்போது இருமல் தீருது."
வயிற்றுப்புண், வயிறு எரிச்சல் குணமாக:
"சீரகப் பொடியோட வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வந்தா வயிற்றுப்புண், வயிறு எரிச்சல் குணமாகுது... அப்புறம்..."
"பாட்டி... பாட்டி... இருங்க போதும், ரசம் வைக்கும்போது பேசிகிட்டே ரசத்த கொதிக்க விட்டுடாதீங்க!"
கண்நோய், வாந்தி, தலைவலி சரியாக:
"அதெல்லாம் நான் பாத்துக்குறேன்... அப்புறம் முக்கியமான இன்னொரு பலன் என்னன்னா, சீரகத்த நல்லெண்ணெய்ல போட்டு, காய்ச்சி சீரகம் ஒடியத்தக்க பதத்தில வடிச்செடுத்து தலைக்கு தேச்சு குளிச்சா கண்நோய், வாந்தி, தலைவலி போன்ற பிரச்சனைகள் சரியாகும். சரி... சரி! சீரகம் பத்தி நெறய பேசிட்டோம், இந்த ரசத்த குடிச்சுப் பாத்து சொல்லு, சீரகத்தோட ருசியும் பாட்டி கைமணமும் எப்படின்னு..."
ஒரு பித்தளைக் குவளையில் ரசத்தை எனக்கு ருசி பார்க்கக் கொடுக்க, பாட்டியின் அஞ்சறைப் பெட்டியில் இருந்த சீரக மணிகளை வியப்புடன் பார்த்தபடி ரசத்தை ருசித்தேன்!
குறிப்பு: செரியாமை, வாயுத் தொல்லை, கைகால் எரிச்சல், இரத்தக் கொதிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு, ஈஷா ஆரோக்கியா மருத்துவமனையில் சீரகம் கொண்டு முறைப்படி தயாரிக்கப்பட்ட மருந்து கிடைக்கும்.