ஈஷாவும் நானும் - மரபின் மைந்தன் முத்தையா
மரபின் மைந்தன் முத்தையா - தமிழ் இலக்கிய உலகின் பிரபல எழுத்தாளர், மரபுக் கவிதைகளின் வித்தகர் என்ற அடையாளங்களைத் தாண்டி, ஈஷாவின் இணை பிரியா ஆர்வலர். ஈஷாவினால் தன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.
 
 

மரபின் மைந்தன் முத்தையா - தமிழ் இலக்கிய உலகின் பிரபல எழுத்தாளர், மரபுக் கவிதைகளின் வித்தகர் என்ற அடையாளங்களைத் தாண்டி, ஈஷாவின் இணை பிரியா ஆர்வலர். ஈஷாவினால் தன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

மரபின் மைந்தன் முத்தையா:

1996 ஜுன் மாதத்து மாலைப் பொழுது... கல்யாண மண்டபம் ஒன்றில் ஈஷா யோகா அறிமுக வகுப்புக்காக அமர்ந்திருந்தேன். அறிவிக்கப்பட்டபடி, ஆறு மணிக்கெல்லாம் மேடையில் தலைப்பாகையும் தாடி மீசையுமாய்த் தோன்றிய சத்குருவை, ‘யோகா மாஸ்டர்’ என்றுதான் முதலில் எண்ணியது மனது.... அவர்தான் ‘மாஸ்டர்’ என்பதை அறியாமல்!

“ஒரு விஷயத்தை எப்படிச் செய்யலாம் என்று பார்க்க வேண்டுமே தவிர, முடியாது என்ற முடிவுக்கு வராதீர்கள்” என்றார் சத்குரு

13 நாட்களும் சத்குரு வகுப்பெடுத்தார். ஒவ்வொரு நாளும் உள்ளே ஒவ்வொன்றாய் உடைபட்டு வந்தது. இந்த வகுப்பில் என்னைச் சேர்த்துவிட்ட திரு.கிருஷ்ணன், “ஒவ்வொரு நாளும் யோகா வகுப்பின் அனுபவங்களைக் கவிதையாக எழுதி வாருங்களேன்” என்று யோசனை தெரிவித்திருந்தார். ஒருநாள் வகுப்பில் உட்கார்ந்திருந்த போதே மனதில் ஒரு மெல்லிய கர்வம். ‘இவர் சொல்வதை தினம் கவிதையாக எழுதிவிடுகிறோம். நாம்தான் இந்த வகுப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறோம்’. இந்த நினைப்பு தோன்றி சில நிமிடங்கள்கூட நகர்ந்திருக்காது. துல்லியமான ஆங்கிலத்தில் சத்குரு சொன்னார், “சிலர் இருக்கிறார்கள். ஆன்மிகத்தில் ஒரு துளி அனுபவம் ஏற்பட்டால்கூட உட்கார்ந்து கவிதை எழுதுகிறார்கள். இது மிகையான எண்ணங்களைத் தோற்றுவிக்கக்கூடும்!’

முகத்தில் விழுந்த முதல் அறை!

இந்த வாக்கியத்தின் முடிவில் தீட்சண்யம் மிக்க அவரது பார்வை ஒரு விநாடி என்னை உரசி நகர்ந்ததாய் உணர்ந்தேன்.

அதன்பின் யோக மையத்துடன் தொடர்பைத் தக்க வைத்துக்கொண்டே வந்தேன். விஜி அக்காவின் மஹாசமாதிக்குப் பிறகு சத்குருவின் வரலாற்றைப் புத்தகமாக எழுதும் மகத்தான வாய்ப்பு 1997-ல் அமைந்தது. அப்போது சத்குருவுடனான அணுக்கமான நிமிடங்களில் ஏற்பட்ட அனுபவங்கள் வார்த்தைகளில் விவரிக்க முடியாத அற்புதங்கள்.

பாவஸ்பந்தனாவில் ஒரு நூதனமான அனுபவம். தலைக்குள் தாண்டவமிட்ட தர்க்க அறிவின் நாடகத்தில் பாவஸ்பந்தனாவை அனுபவரீதியாக அணுகும் வாய்ப்பை இழந்தேன். என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு மகத்தான ஒன்று நிகழ்ந்துகொண்டு இருந்தபோது அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேனே தவிர, நான் முழுமையாக ஈடுபடவில்லை. அதன் விளைவாக, அறுவை சிகிச்சை முடியும் முன்னே அறையை விட்டு ஓடி வந்த நோயாளிபோல் ஆனேன்.

சத்குருவைச் சந்தித்துச் சொன்னபோது, பிரத்யேகமாய் ஒரு பயிற்சி கொடுத்தார். ஒரு நள்ளிரவில் சத்குருவின் படத்துக்கு முன்னால் பாவஸ்பந்தனாவும் நிகழ்ந்தது. மனம் சுமந்த கணம், தினம் தினம் ஒரு கவிதையாய் வெளியேற, மிக லேசாக உணர்ந்தேன். அப்படி எழுதிய கவிதைகள், ‘இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்து இன்று சில கல்லூரிகளில் பாடமாக இருக்கின்றன. அவை நான் எழுதிய கவிதைகளல்ல. சத்குரு தந்த சிகிச்சை.

இலக்கிய உலகில் புகழ்பெற்ற ஒரு மனிதர் இறந்து சில நாட்கள் ஆகியிருந்தன. திருச்சியில் என் உறவினர் ஒருவரின் இல்லத்தில் ஒரு மதியப் பொழுதில் படுத்துக்கிடந்தேன். உறக்கமும் இல்லை, விழிப்பும் இல்லை. உடலில் ஒரு முறுக்கம், வியர்த்துக்கொட்டியது. இறந்த அந்த மனிதர் என்னுள் ஊடுருவ முயல்வது தெரிந்தது. அலற வாய் திறந்தால், வார்த்தைகள் வரவில்லை. அடுத்த விநாடி சத்குருவின் பிரசன்னத்தை அங்கே தெளிவாய் உணர்ந்தேன். தீய சக்தியின் அதிர்வுகள் முற்றாக நீங்கி அந்த இடம் நிர்மலமாய் இருந்தது. இதை நம்புவது பலருக்கும் சிரமமாக இருக்கும். அந்த அனுபவம் எனக்கு நேரடியாய் நிகழ்ந்திராவிட்டால், நான் கூட நம்பியிருக்க மாட்டேன்.

தியானலிங்கம் உருவாகிக்கொண்டு இருந்த காலத்திலும், பிராணப் பிரதிஷ்டை நிகழ்ந்த பிறகும், சத்குரு முன்னால் அமரும்போது ஏற்படும் மெல்லிய நடுக்கம் (உண்மையில் அது குலை நடுக்கம்) தியானலிங்கத்தின் முன் செல்லும்போதெல்லாம் ஏற்படும். ஒருமுறை சத்குருவிடம் இது குறித்துச் சொன்னபோது சிரித்துக்கொண்டே “இட் இஸ் ஸோ” (அது அப்படித்தான்) என்றவர், பிறகு விளக்கம் கொடுத்தார். “சமாதியில் அநாகதம் என்ற தன்மை அன்பின் அதிர்வுகளைப் பிரதானமாகக்கொண்டு இருக்கிறது. அங்கே பாதுகாப்பாக உணர்கிறீர்கள். தியான லிங்கம் அனைத்து நிலைகளிலும் உங்கள் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குகிறது. அதனால் பதட்டமாகிறீர்கள். போகப் போகச் சரியாகிவிடும்’’ என்றார். அந்த வார்த்தையும் பலித்தது.

கிராமப் புத்துணர்வு இயக்கம் என்ற திட்டத்தைப் பற்றி கலந்து பேச ஈஷா அன்பர்கள் சிலரை சத்குரு அழைத்திருந்தார். அவர்களில் நானும் ஒருவன். சத்குரு இது குறித்துச் சொன்னவுடனே எங்களில் பலருக்கும் முதலில் எழுந்தது அவநம்பிக்கை. இந்தத் திட்டம் வெற்றி பெறுவது மிகவும் சிரமம் என்று அவரிடம் வாதிட்டதை இப்போது நினைத்தாலும் வெட்கமாக இருக்கிறது. “ஒரு விஷயத்தை எப்படிச் செய்யலாம் என்று பார்க்க வேண்டுமே தவிர, முடியாது என்ற முடிவுக்கு வராதீர்கள்” என்ற சத்குரு, அமெரிக்கச் சிறைகளில் வகுப்புகள் தொடங்கியபோது முதல் நாள் கைதிகள் எவ்வளவு அவநம்பிக்கையுடன் வகுப்பில் வந்து அமர்ந்திருந்தார்கள் என்பதை சில நிமிடங்கள் நடித்தே காட்டினார். “அப்புறம் ஏழாம் நாள் கட்டிப் புடிச்சு அழுதாங்க” என்று சிரித்துக்கொண்டே சொன்னபோது அமெரிக்கக் கைதிகளின் கதை, அகங்காரத்தின் கைதிகளான என் போன்றவர்களுக்காகச் சொன்னது என்பது புரிந்தது.

எல்லையை உணர்ந்த பின்னும் எளிமையின் சிகரமாய், உயிர்களை மலர்த்தும் உதயமாய் நம்மிடையே உலா வரும் சத்குருவைச் சந்திக்காமல் இருந்திருந்தால், சாரமற்ற வாழ்க்கையையே வாழ்ந்திருப்பேன். ஈஷா யோக மையத்தின் நிர்வாகிகளுடனும், தியான அன்பர்களுடனும் கலந்து பழகாமல் போயிருந்தால், பணிவு என்னும் தன்மையினை முற்றாக இழந்திருப்பேன். ஈஷாவின் பயிற்சிகளை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால், ஆரோக்கியத்தையும் ஆனந்தத்தையும் விட்டு வெகுதூரம் விலகியிருப்பேன்.

2008 டிசம்பரில் ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி மேற்கொண்ட அற்புதமான அனுபவத்தில் விளைந்த கவிதைகள், ‘நீயே சொல் குருநாதா’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளன.

ஈஷாவும் நானும் என்பதை விளக்க அதில் உள்ள ஒரு கவிதையின் சில வரிகளே போதும்:

சகதியில் பிறந்தது என்தேகம் - இதில்
சக்தி பிறப்பது சந்தேகம்!
எனநான் இருந்தேன் அந்நேரம் - உன்
அருளால் எழுந்தது சங்கீதம்!

பாதங்கள் கிழிக்கும் பாதையிலே - நீ
பாதுகை கொடுப்பாய் என்றிருந்தேன்
ஜோதிச் சிறகுகள் முளைக்கவிட்டாய் - உன்
சொந்த வானத்தில் பறக்கவிட்டாய்

புத்தியின் இரும்புக் கதவுடைத்தாய் - என்
புதிய சுவாசமாய்ப் புகுந்துவிட்டாய்
பித்து மனந்தனில் ஏதிருக்கும் - என்
பேரருளே நீ குடியமர்ந்தாய்

சந்நிதி முன்னின்று பாடுகையில் - எங்கள்
சத்குரு மலரடி சூடுகையில்
நிம்மதி என்னென்று புரிந்துவிடும் - இனி
நம்விதி வலைகள் கிழிந்துவிடும்"

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1