ஈஷாவும் நானும் - சுபா
சுபா - திரு. சுரேஷ் மற்றும் திரு. பாலகிருஷ்ணன் - தமிழ் எழுத்து உலகில் இவர்களைப் பற்றி அறியாதோர் இல்லை. தங்கள் வாழ்வில் ஈஷா எப்படி நுழைந்தது, சத்குரு தங்கள் வீட்டில் தங்கிய அனுபவம் ஆகியவற்றை நெகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளும் இவர்கள், "அத்தனைக்கும் ஆசைப்படு" புத்தகம் பிறந்த கதை பற்றியும் இக்கட்டுரையில் மனம் திறக்கின்றனர்.
 
 

எழுத்தாளர்கள்

சுபா - திரு. சுரேஷ் மற்றும் திரு. பாலகிருஷ்ணன் - தமிழ் எழுத்து உலகில் இவர்களைப் பற்றி அறியாதோர் இல்லை. தங்கள் வாழ்வில் ஈஷா எப்படி நுழைந்தது, சத்குரு தங்கள் வீட்டில் தங்கிய அனுபவம் ஆகியவற்றை நெகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளும் இவர்கள், "அத்தனைக்கும் ஆசைப்படு" புத்தகம் பிறந்த கதை பற்றியும் இக்கட்டுரையில் மனம் திறக்கின்றனர்.

சுபா:

வாழ்க்கையின் சில மகத்தான விஷயங்கள் நம்முடைய பெரும் முயற்சி இல்லாமலேயே நமக்குக் கிடைத்துவிடுகின்றன. அப்படி எங்களுக்குக் கிடைத்த ஓர் ஆனந்த வரம்தான் சத்குருவுடன் நேர்ந்த அறிமுகம்!

15 வருடங்களுக்கு முன், நாங்கள் இருவரும் வங்கிப் பணியில் இருந்தோம். தவிர, பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதுவது, மாத நாவல்கள் எழுதுவது, சினிமா தொடர்பான கதை விவாதங்களில் ஈடுபடுவது என்று பல பணிகளைச் செய்துகொண்டு இருந்தோம். அந்தக் கட்டத்தில் சத்குருவின் வகுப்புகளுக்குச் சென்று வந்த அனுபவத்தைப் பரவசத்தோடு பகிர்ந்துகொண்டார் திரு ஹரி.

தன் அழுத்தமான கருத்துக்களை, சரளமான வார்த்தைகளில் சொல்லி, ஆணியடித்தாற்போல் விளங்கவைப்பதில் சத்குரு வல்லவர் என்று அன்றைக்கே உணர்ந்தோம்.

14 நாட்கள் தொடர்ந்து வகுப்புக்குச் செல்ல வேண்டும் என்று அவர் சொன்ன போது, அதற்கான நேரமே கிடைக்காது தட்டிக்கழித்து வந்தோம். அப்போது ஈஷாவின் வகுப்புகள் சென்னைக்கு வரவில்லை. திருச்சியில் துவங்கும் வகுப்புகளுக்கு உங்களுக்கான பணத்தைக் கட்டிவிட்டேன். போவதும் போகாததும் உங்கள் பாடு என்று ஹரி கிடுக்கிப்பிடி போட்டார்.

அப்படி என்னதான் இருந்துவிட முடியும் அந்த யோகா வகுப்புகளில் என்று ஆர்வம் வந்தது. பல வேலைகளை அவசரம் அவசரமாக முடித்துக் கொண்டு, பல வேலைகளைக் கையோடு எடுத்துக் கொண்டு, திருச்சிக்கு ரயில் ஏறினோம்.

அந்தப் பயணம் எங்கள் வாழ்க்கைப் பயணத்தையே மாற்றிவிட்டது. தினமும் மாலை நேரத்தில் வகுப்பு. காலையில் மற்ற எழுத்து வேலை.

தன் அழுத்தமான கருத்துக்களை, சரளமான வார்த்தைகளில் சொல்லி, ஆணியடித்தாற்போல் விளங்கவைப்பதில் சத்குரு வல்லவர் என்று அன்றைக்கே உணர்ந்தோம். அதுவரை இறுக்கமாயிருந்த பல ஜன்னல்கள் எங்களுக்குள் திறந்தன. பல சுவர்கள் தகர்ந்து விழுந்தன. யாருடன் இருந்த பகைமை உணர்ச்சியும் கரைந்து நட்பு பெருகிற்று.

எங்கள் குடும்பத்தினர், உறவினர், நண்பர், வாசகர் என்று அனைவரையும் சத்குருவின் வகுப்புகளுக்கு அறிமுகம் செய்தோம்.

அடுத்தடுத்து பாவஸ்பந்தனா, ஹட யோகா, சம்யமா என்று சத்குருவின் நிழலில் மேல் வகுப்புகளில் கலந்துகொண்டோம். சென்னையில் நீங்கள் வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று சத்குருவிடம் அன்புக் கோரிக்கை வைத்தோம்.

பல நண்பர்களின் உதவியுடன் நாங்களே முன் நின்று சென்னையில் வகுப்புகள் நடத்த ஏற்பாடுகள் செய்தோம். விரைவிலேயே சென்னை மாநகரமே சத்குருவின் அன்புக்கு அடிமையானது.

சென்னையில் வகுப்புகள் துவங்கியபோது, எங்களுக்கு மாபெரும் பேறு ஒன்று கிட்டியது. சத்குருவும் அவரது மனைவி விஜியும் எங்கள் இல்லத்தில் தங்கினர்.

சத்குரு எங்களுடன் தங்கியிருந்தபோது தனக்கென எந்த பிரத்யேக வசதியும் கேட்கவில்லை. எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நடந்துகொண்டார்.

எங்கள் வீட்டுக் கழிவறைகளைச் சுத்தம் செய்யும் பெண்மணி சத்குரு எதிர்ப்பட்டதும், அபச்சாரமோ என்று மிரண்டு ஒதுங்கினாள். சத்குருவோ அவளைப் பார்த்து கைகளைக் கூப்பிப் புன்னகைத்து வணக்கம் சொன்னார். அவளுடைய வாழ்நாளில் அப்படி ஓர் அங்கீகாரத்தை சாதாரண மனிதரிடத்தில்கூட அனுபவித்து அறியாத அந்தப் பெண்மணியின் கண்களில் கண்ணீர் ததும்பியது.

ஒரு குருவாக வகுப்புகளில் அவர் கற்றுத்தந்ததை விடவும், ஒரு மாமனிதராக அந்த நிகழ்ச்சி மூலம் அவர் கற்றுக்கொடுத்த மனிதநேயம் எங்கள் மனதில் இன்றளவும் ஆழமாகப் பதிந்திருக்கிறது.

மோட்டார் சைக்கிள்களைக் கையாள்வதில் அவருக்கு இணை யாரும் கிடையாது என்று அறியாமல், அவரை எங்கள் பைக்கில் பின்னால் உட்காரவைத்து அழைத்துப் போனதையெல்லாம் இப்போது நினைத்தால் சிலிர்க்கிறது.

அப்போது, தியானலிங்கம் நிறுவப்பட அவர் முழு முனைப்பில் இருந்ததால், அது தொடர்பாக அவரைச் சந்திக்க யாராவது வந்து கொண்டே இருப்பார்கள். காலை, மதியம், மாலை என்று மூன்று வகுப்புகள் எடுத்துக்கொண்டு, தியானலிங்கம் தொடர்பான வேலைகளிலும் முழுமையாக அவர் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது கண்டு பிரமித்திருப்போம்.

ஒரு முறை சத்குரு தங்கியிருந்த சமயத்தில் விநாயகர் சதுர்த்திப் பண்டிகை வந்தது. எங்கள் அம்மா கொழுக்கட்டைகள் பிடித்துக் கொண்டு இருந்தார்.

சத்குரு எங்களுடன் தங்கியிருந்தபோது தனக்கென எந்த பிரத்யேக வசதியும் கேட்கவில்லை. எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நடந்துகொண்டார்.

தன் அறையிலிருந்து வெளிப்பட்ட சத்குரு, என்னம்மா பண்றீங்க? என்று கேட்டுக்கொண்டே வந்து அம்மாவின் பக்கத்தில் அமர்ந்தார். அம்மா கொழுக்கட்டைகள் பற்றிச் சொன்னதும், சிரித்துக் கொண்டே, என்னம்மா இது? இப்படி குட்டி குட்டியா நெல்லிக்காபோல பிடிச்சிட்டிருந்தா, எப்ப பிள்ளையார் கண்ல காட்டி, எப்ப எனக்குத் தரமுடியும்? பிள்ளையார் பசிக்கு பெரிசு பெரிசாக அவருக்குத் தர வேண்டாமா? நகருங்க என்று சிரித்தார்.

வேகவைத்த மாவையும், தேங்காய்ப் பூரணத்தையும் தன்பக்கம் இழுத்துக் கொண்டார். லட்டு லட்டுவாக கொழுக்கட்டைகளைப் பிடித்தார். அம்மா 30 கொழுக்கட்டைகளாகப் பிடித்திருக்கக் கூடியதை 6 கொழுக்கட்டைகளாக சத்குரு பிடித்து விட்டார்.

“இதை வேகவெச்சுப் பாருங்கம்மா...” என்றார், குறும்புடன்.

அன்றைக்கு மற்ற கொழுக்கட்டைகளைவிட அந்தக் கொழுக்கட்டைகள்தாம் அற்புதமாக ருசித்தன.

சத்குருவின் வார்த்தைகளை தமிழ்ப் பத்திரிகைகளில் வழங்க வேண்டும் என்று எங்கள் ஆர்வத்தை அவரிடம் தெரிவித்துக்கொண்டே இருந்தோம்.

அதற்கும் ஒரு வழி பிறந்தது. ஆனந்த விகடனுக்காக, சத்குருவிடம் ஆங்கிலத்தில் உரையாடி அதைத் தமிழில் அத்தனைக்கும் ஆசைப்படு என்று தொடராக எழுதினோம். தொடர் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

அதன் பின் தொடர்ச்சியாக உனக்காகவே ஒரு ரகசியம், ‘கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் ஆயிரம் ஜன்னல் என்று விகடன் தொடர்களுக்காக சத்குருவை அடிக்கடி சந்திக்கும் பேறு எங்களுக்குக் கிட்டியுள்ளது.

தொடர்களுக்காக சத்குருவிடம் காதல் பற்றிக் கேட்டோம். கருணைக் கொலையைப் பற்றிக் கேட்டோம். மாதர் பற்றிக் கேட்டோம். மரணம் பற்றிக் கேட்டோம். தேசம் பற்றிக் கேட்டோம். தலைவன் பற்றிக் கேட்டோம். உங்கள் மனதிலும், எங்கள் மனதிலும் ஓயாமல் தளும்பும் எத்தனையோ சந்தேகங்களை சத்குரு முன்வைத்தோம். கேள்விகள் அவர் புருவங்களை உயர்த்தியதில்லை. இதழ்களில் புன்னகைகளைத்தாம் கொண்டுவந்தன.

எந்தக் கேள்வியானாலும், கணநேரத்தில் மிகத் தெளிவான பதில்கள் அவரிடமிருந்து வெளிப்படுவதைக் கண்டு பிரமித்தோம். அது பற்றியும் அவரிடமே கேட்டோம்.

“இது எனக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று அல்ல. உங்களுக்கும் சாத்தியம். எதையும் விழிப்பு உணர்வுடன் அணுகுவது யாருக்கும் சாத்தியம்” என்று சத்குரு அருளுரைத்தார்.

நம்மிடமிருந்து தன்னை வேறுபடுத்தி எங்கோ உயரத்தில் அமர்ந்துகொண்டு தாழ்ந்தவர்களாக நம்மைப் பார்க்காமல், நட்புடன் தோளோடு தோள் அணைத்து அனைத்தும் வழங்கும் ஓர் அற்புதமான குருவை வேறு எங்காவது காண முடியுமா?

நாம் மிகக் கொடுத்துவைத்தவர்கள்!

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1