ஈஷாவும் நானும் - பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டை பிரபாகர் - பிரபல துப்பறியும் கதை எழுத்தாளர். 17 வருடங்களுக்கு முன்பு தான் கலந்துகொண்ட ஈஷா யோகா வகுப்பு அனுபவம், அதனால் தன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள், "வெளிச்சம் வருகிறது" கட்டுரை எழுதிய அனுபம் ஆகியவற்றை இங்கே நம்முடன் நெகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறார்.
 
 

எழுத்தாளர்

பட்டுக்கோட்டை பிரபாகர் - பிரபல துப்பறியும் கதை எழுத்தாளர். 17 வருடங்களுக்கு முன்பு தான் கலந்துகொண்ட ஈஷா யோகா வகுப்பு அனுபவம், அதனால் தன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள், "வெளிச்சம் வருகிறது" கட்டுரை எழுதிய அனுபம் ஆகியவற்றை இங்கே நம்முடன் நெகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறார்.

பட்டுக்கோட்டை பிரபாகர் :

17 வருடங்களுக்கு முன்பு ஈஷா என்கிற பெயரும், சத்குரு ஜக்கி வாசுதேவ் என்கிற பெயரும் முதல் முறையாக என் காதுகளில் விழுந்தன. நண்பர் ஹரி ஒரு நாள் ஈஷா பற்றி, சத்குரு அளிக்கும் மகத்தான தியானப் பயிற்சிகள் பற்றி விரிவாக சொன்னதும் முதல் முறையாக எனக்குள் ஓர் ஆர்வம் தலை காட்டியது.

சத்குருவைச் சந்தித்துப் பேசினாலும் சரி, தூரத்திலிருந்து அவரின் அருளுரைகளைக் கேட்டாலும் சரி. அவ்வளவு ஏன், அவரை நினைக்கும்போதே ஒரு வித உற்சாகம், நம்பிக்கை, விழிப்பு உணர்ச்சி மனதில் பாய்வது நிஜம்.

ஈஷா யோகா வகுப்புகளுக்காக தினம் 3 மணி நேரம் என்று தொடர்ந்து 13 நாட்கள் தவறாமல் வர வேண்டும் என்று சொல்லப்பட்டதும் எட்டிப்பார்த்த ஆர்வம் புஸ்ஸென்று அடங்கிவிட்டது. 3 மணி நேரம் பிரச்சனை இல்லை. இந்த வகுப்புகளுக்காக திருச்சி, கோவை அல்லது சேலம் என வெளியூருக்குச் சென்று கற்க வேண்டும் என்பதுதான் என் ஆர்வத்துக்குத் தடையாக இருந்தது. அப்போது சென்னையில் வகுப்புகள் இல்லை.

அப்போது எனக்கு ‘மகா பிரபு’ என்ற திரைப்படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. தினசரி வேலை நெருக்கடிகளிலிருந்து விலகி, வெளியூரில் தங்கி வசனம் எழுத விரும்பினேன். சேலத்தில் சத்குரு எடுக்கும் வகுப்புகள் நடைபெறும் செய்தி அறிந்து கிளம்பினேன்.

அந்த 13 நாட்களும் என் வாழ்வின் வித்தியாசமான, அற்புதமான, அருமையான, திருப்புமுனையான நாட்கள்!

எளிமையான வார்த்தைகளில் சத்குருவின் அழுத்தமான கருத்துகள் என் மனதில் கல்வெட்டுக்கள் போலப் பதிந்தன. அவரைப் பார்ப்பதும் அவரது வித்தியாசமான தமிழை, கம்பீரமான, ஆளுமையான குரலைக் கேட்பதுமே பரவசம் தந்தது.

வாழ்வில் பலரும் அறிந்தும் அறியாமலும் கடைப்பிடித்து வரும் அபத்தமான கொள்கைகளையும், அர்த்தமில்லாத கோட்பாடுகளையும் இத்தனை எளிமையாக, ஆனால் வலிமையாக, நகைச்சுவையுடன், சுவாரசியமான குட்டிக் கதைகள் மூலம் மனம் நோகாமல் சுட்டிக்காட்ட முடியுமா என்கிற பிரமிப்பு எனக்கு.

ஆன்மிகம், தன்னை அறிதல், ஞானம் போன்ற தத்துவ விளக்கங்கள் என ஆயிரம் பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களையெல்லாம் படம் போட்டுப் பாகம் குறிக்காத குறையாகப் புரிய வைத்தார். வகுப்புகள் முடிந்து ஊர் திரும்பும் போது மனதில் கலவையான உணர்வுகள். ஆதங்கம், பரவசம், நிறைவு, குற்ற உணர்ச்சி, தெளிவு, மனோதிடம், விழிப்பு உணர்ச்சி என்று பலவிதமான பேரலைகள் மனதில் அலையடித்தன.

என்னுள் ஒரு புதிய புத்துணர்ச்சியை உணர முடிந்தது. பல பிரச்னைகளுக்குச் சுலபமான, தெளிவான தீர்வுகளைக் காண முடிந்தது. எதையும் ஏற்கவும், எதையும் மன்னிக்கவும் முடிந்தது. எனது அவசர கோபங்கள் கட்டுக்குள் வந்தன. தொழில் சார்ந்து ஆர்வம் பல மடங்கு பெருகியிருந்தது. அன்றிலிருந்து சத்குருவைச் சந்தித்துப் பேசினாலும் சரி, தூரத்திலிருந்து அவரின் அருளுரைகளைக் கேட்டாலும் சரி. அவ்வளவு ஏன், அவரை நினைக்கும்போதே ஒரு வித உற்சாகம், நம்பிக்கை, விழிப்பு உணர்ச்சி மனதில் பாய்வது நிஜம்.

சென்னையில் நானும், நண்பர்கள் சுபாவும் இணைந்து கட்டிக்கொண்ட ஆத்மா இல்லம் என்கிற எங்கள் இல்லத்தில் சென்னை வகுப்புகளுக்கான ஆரம்ப பூஜை நடந்ததை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. எனது இல்லத்துக்கு சத்குருவை அழைத்து விருந்தளிக்கும் அரிய வாய்ப்பும் ஒருமுறை கிடைத்தது.

ஈஷாவின் காட்டுப் பூ இதழில் தியானலிங்கம் பற்றி ‘வெளிச்சம் வருகிறது’ என்கிற கட்டுரைத் தொடர் எழுதினேன். அதற்கு சன்மானம் எவ்வளவு வேண்டும் என்று நிர்வாகிகள் கேட்டார்கள். சத்குருவின் அருளுரைகள் கொண்ட புத்தகங்கள், சி.டிகள் தந்தால் போதும் என்றேன். ஈஷாவின் வெளியீடுகள் அத்தனையும் பெரிய பெட்டியில் போட்டு அனுப்பி என்னை நெகிழச் செய்தார்கள். மனம் சோர்வாக இருக்கும்போது சத்குருவின் சத்சங்க அருளுரைகளைக் கேட்பதும், பார்ப்பதுமே எனக்கு விட்டமின் மாத்திரைகள்! சத்குருவின் எத்தனையோ கருத்துக்கள் என்னைக் கவர்ந்தாலும்... குழந்தை தத்தெடுப்பது குறித்து அவர் சொன்ன ஒரு கருத்து எனக்கு மிகவும் பிடித்தமானது.

ஈஷாவும் நானும் - பட்டுக்கோட்டை பிரபாகர், Ishavum naanum pattukkottai prabhakar

‘ரத்த சம்பந்தமில்லாத, எங்கோ பிறந்து வளர்ந்த, அறிமுகமே இல்லாத யாரோ ஓர் ஆணையோ அல்லது ஒரு பெண்ணையோ காதலித்து வாழ்வின் துணையே அவர்தான் என்று பரிபூரணமாக ஏற்றுக் கொள்ள முடியும் என்றால்... ஏதோ ஒரு குழந்தையை நம் குழந்தையாக முழுமையான பாசத்துடன் ஏற்கவும் முடியும்!’ என்பது அவரின் அற்புதமான ஆயிரமாயிரம் கருத்துக்களில் ஒன்று.

சத்குருவிடம் இருந்து அவநம்பிக்கையான வார்த்தைகள் வந்ததே இல்லை. சமூகத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றி மட்டும் அவர் பேசுவதில்லை. அவற்றுக்கான தீர்வுகளையும் சேர்த்தே பேசுகிறார். சுற்றுச்சூழல், மனித நேயம், கல்வி, மருத்துவம், கிராம முன்னேற்றம், பொருளாதாரம், நிர்வாகம், கலை, தொழில் என்று எது குறித்தும் சத்குருவிடம் ஆலோசனை கேட்க முடியும்.

கல்வி என்பது எப்படி இருக்க வேண்டும் என்று ஈஷாவின் பள்ளியைப் பார்த்து உணரலாம். ஈஷாவின் கிராம முன்னேற்றம் குறித்த செயல்பாடுகள் போற்றுதலுக்குரியவை. 12 கோடி மரங்களை தமிழ்நாட்டில் நட வேண்டும் என்று லட்சியம்கொண்டு அதை நோக்கித் திட்டமிட்டுச் செயலாற்றி வருவது ஈஷா செய்து வரும் மற்றுமொரு மகத்தான சேவை. சத்தமில்லாத புரட்சி தனி மனிதனில் துவங்கினால் அது நிச்சயமாக சமூக மாற்றங்களை ஏற்படுத்தியே தீரும் என்கிற ஈஷாவின் கொள்கையை ஆழ்ந்து யோசிக்க யோசிக்க, உண்மைகளை உணரலாம்.

சிறைச்சாலை மனிதர்களிடமே சத்குருவால் மன மாற்றங்களை ஏற்படுத்த முடிந்திருக்கும்போது, அவரது சிந்தனைகளும், அவர் கற்றுத் தரும் யோகாவும் விலை மதிப்பில்லாதவை என்பதை உணர முடியும்.

சத்குரு நமது தமிழ்நாட்டுக்குக் கிடைத்த வரம். இந்த வரத்தை நமது ஆட்சியாளர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதும், இளைய சமூகம் இவரை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வதும் நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது என்பது என் நம்பிக்கை!

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1