ஈஷாவும் நானும் - கலைமாமணி இந்திரா ராஜன்
இந்திரா ராஜன் - பல விருதுகளுக்கும் பட்டங்களுக்கும் சொந்தக்காரர். இத்தனை வயதிலும் திறம்மிக்க பரதநாட்டிய கலைஞராகவும், ஆசிரியராகவும் ஜொலித்துக் கொண்டிருப்பவர். தான் ஈஷாவில் நாட்டியம் கற்றுக் கொடுத்ததையும், சத்குரு முன்னிலையில் தான் நடனமாடிய அனுபவத்தையும், இங்கே நம்முடன் நெகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறார்...
 
 

பரதநாட்டியக் கலைஞர்

இந்திரா ராஜன் - பல விருதுகளுக்கும் பட்டங்களுக்கும் சொந்தக்காரர். இத்தனை வயதிலும் திறம்மிக்க பரதநாட்டிய கலைஞராகவும், ஆசிரியராகவும் ஜொலித்துக் கொண்டிருப்பவர். தான் ஈஷாவில் நாட்டியம் கற்றுக் கொடுத்ததையும், சத்குரு முன்னிலையில் தான் நடனமாடிய அனுபவத்தையும், இங்கே நம்முடன் நெகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறார்...

கலைமாமணி இந்திரா ராஜன்:

ஈஷாவிற்கு நான் அறிமுகமாகி சுமார் பத்து வருடங்களாகின்றன. ஈஷாவில் எனது மாணவி அனிதாவின் நடன நிகழ்ச்சி நடந்தபோது, அதற்கு நட்டுவாங்கம் செய்வதற்காக வந்திருந்தேன். அந்த நாட்களில் ஆசிரமம் வெறும் காடுபோல் இருந்தது. இப்போது உள்ளதுபோல அவ்வளவு பஸ் வசதியும் கிடையாது. மனிதர்கள் நடமாட்டமும் குறைவு. இங்கு எப்படித் தங்குவது, நிகழ்ச்சி நடத்துவது என்றெல்லாம் யோசித்தேன். ஆனால், அந்த நிகழச்சி மிகவும் நன்றாக நடந்து முடிந்தது.

ஈஷாவுடன் தொடர்பு கொண்டதற்கும், ஈஷாவில் இந்தக் குழந்தைகளுக்கு நடன வகுப்புகள் நடத்துவதற்கும் நான் மிகவும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.

நாளடைவில் அனிதாவின் குடும்பமே இங்கு குடியேறிவிட்டது. திருச்சி பெல்லில் உதவிப் பொது மேலாளராக இருந்த அவள் அப்பா எத்திராஜுலு வேலையை விட்டுவிட்டு இங்கு நிரந்தமாகக் குடும்பத்தை அழைத்து வந்துவிட்டார். அவர், 'ஈஷா சமூகநலத் திட்டங்க'ளில் கை கொடுக்க, அவர் மனைவி மகேஸ்வரி, ஈஷா ஹோம் ஸ்கூலிலும், மகன் ஆனந்த், ஈஷாவின் பசுமைக் கரங்கள் திட்டத்திலும், மகள் அனிதா, அங்கிருந்த குழந்தைகளுக்கு நடன ஆசிரியையாகவும் அனைவரும் ஈஷாவின் அங்கமாகிவிட்டனர். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் எப்படி ஒன்றாக முடிவெடுத்து வந்து இங்கு உழைக்கிறார்கள் என்று மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

நடனம் சொல்லித் தருவதை மேற்பார்வையிடுவதற்காக நானும் இப்போது ஈஷாவுக்கு ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட சில நாட்கள் வந்து செல்கிறேன். பல குடும்பங்கள் இங்கே இப்படி ஐக்கியமாகி இருக்கின்றன என்று அப்போதுதான் என்னால் கவனிக்க முடிந்தது. வெளிநாடுகளில் நல்ல வேலைகளில் இருந்தவர்கள் தங்களின் பணிகளை விட்டுவிட்டு குடும்பத்துடன் இங்கு வந்து தங்கி இருக்கிறார்கள். அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று சத்குரு உண்மையாகவே விரும்புவதால்தான், இவ்வளவு நல்ல மனிதர்கள் சத்குருவுக்கு உதவியாக இங்கு வந்து சேவை செய்கிறார்கள். இத்தனை நல்லுள்ளங்களும் மனமுவந்து சேர்ந்து செயல்படுவதால்தான் ஈஷா வெகுவேகமாக வளர்ந்து வருகிறது.

ஈஷாவுடன் தொடர்பு கொண்டதற்கும், ஈஷாவில் இந்தக் குழந்தைகளுக்கு நடன வகுப்புகள் நடத்துவதற்கும் நான் மிகவும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். இங்கு பள்ளிக் குழந்தைகளும் ஆசிரியர்களும் குடும்ப உறுப்பினர்கள் போலத்தான் பழகுகிறார்கள். குழந்தைகள் இங்கு மனதளவில் மிகவும் சுதந்திரமாக இருக்கிறார்கள். இங்கு வந்து படிக்கும் குழந்தைகள் மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். சத்குரு வந்தால், குழந்தைகள் ஓடிச் சென்று அவர் கைகளைப் பிடித்துக் கொள்கிறார்கள். சத்குருவே குழந்தைகளுக்கு ஊட்டிவிட்டார். அன்புக்கு இலக்கணமே சத்குருதான் என்று உணர்ந்தேன். இதையெல்லாம் பார்த்தபோது மிகவும் நெகிழ்ந்து போனேன்.

சில மாதங்களுக்கு முன் நான் பள்ளியில் நாட்டிய வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தபோது சத்குரு அங்கு வந்தார். வந்தவர், வாசலிலேயே உட்கார்ந்து கொண்டார். மிகவும் கேட்டுக்கொண்ட பிறகு, வகுப்பை சிறிது நேரம் கவனித்து விட்டு, எனக்கு ஆசி வழங்கி ஒரு மலரைக் கொடுத்தார். நான் ஆனந்தக் கண்ணீர் பெருக, ஓவென்று அழுதுவிட்டேன். 60 வருடங்களாக இந்தத் துறையில் இருக்கிறேன். இத்தனை வருடங்கள் நான் செய்தவற்றுக்கு அன்றுதான் பலன் கிடைத்ததாக உணர்ந்தேன்.

ஆயிரக்கணக்கான கச்சேரிகள் செய்திருக்கிறேன். ஆனாலும் இது என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்.

ஈஷாவில் குழந்தைகளுக்கு பாட்டு, நாட்டியம், இசை என்று எல்லாக் கலைகளையும் சிறப்பாகக் கற்பிக்கிறார்கள். ஒரு குழந்தையே பல கலைகளைக் கற்கிறது. வெளியுலகப் பள்ளிகளில் ஏட்டுக் கல்விக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருவார்கள். பள்ளிக்குச் செல், கல்லூரிக்குச் செல், வேலைக்குச் செல் என்று இயந்திரத்தனமாக இருக்கும். ஆனால் ஈஷாவில், குழந்தைகளுக்குக் கல்வியும் கலையும், இணையாக, சிறப்பாகச் சொல்லித் தரப்படுகிறது. ஈஷாவில் 180 குழந்தைகள் பரதநாட்டியம் பயில்கிறார்கள். ஒரே இடத்தில் இத்தனை எண்ணிக்கை என்பது பெரிய அதிசயம். ஆனால், சத்குருவின் ஆசியால் அனைத்தும் சுமுகமாக நடக்கிறது.

இங்கு அனைவருமே உற்சாகமாகவும் சிரித்த முகத்துடனும் சேவை புரிகிறார்கள். ஈஷா யோகா வகுப்புதான் இவர்களை இப்படி முழுமையாக மாற்றியிருப்பதாக உணர்கிறேன். தங்களைப் போலவே அனைவரும் ஈஷாவால் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே ஒருங்கிணைந்து பணி புரிகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் ஈஷாவில் நான் இருந்தபோது, சுதா ரகுநாதன் வந்திருந்தார். சத்குரு முன்னிலையில் அவருடைய கச்சேரி நடப்பதாக அறிந்தேன். சுதாவை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். எனக்காகப் பலமுறை அவர் பாடியும் இருக்கிறார். மனதில் திடீரென்று எனக்கு ஒரு ஆசை பிறந்தது. இந்த நிகழ்ச்சியில், சுதா பாடி நான் ஆடினால் எப்படி இருக்கும் என்று நினைத்தேன். நான் நினைத்தது சத்குருவுக்கு எப்படித்தான் தெரிந்ததோ? நிகழ்ச்சி ஆரம்பித்த உடனேயே எங்கேயோ மூலையில் அமர்ந்திருந்த என்னைச் சைகை காட்டி அழைத்து ஆடச் சொன்னார். சுதா பாட, நான் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற கண்ணன் பாட்டுக்கு அபிநயம் பிடித்து ஆடினேன். அனைவரும் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். சத்குரு மிகவும் ரசித்தார். எனக்கு ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. ஆயிரக்கணக்கான கச்சேரிகள் செய்திருக்கிறேன். ஆனாலும் இது என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்.

ஈஷாவிற்குள் நுழையும் போதெல்லாம் புதிதாக சுவாசம் எடுப்பது போல் உணர்கிறேன். ஈஷாவில் எப்போதும் நிரந்தரமாக நூற்றுக்கணக்கில் மனிதர்கள் இருந்தாலும், மிகவும் அமைதியான சூழலும் நன்மதிப்புடன் பழகும் பண்பும் உள்ளது. ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போதே நமஸ்காரம் சொல்லி கைகளை இதயத்துக்கு அருகில் குவித்துக் கொள்கிறார்கள். இங்கு பரிமாறப்படும் உணவும் மிகவும் சத்தானதாக, சுவை நிறைந்ததாக இருக்கிறது. வெங்காயம், பூண்டு போன்ற பொருட்களைப் பயன்படுத்தாமல் எப்படி இத்தனை ருசியாகச் செய்கிறார்கள் என்று வியப்பாக உள்ளது.

சத்குரு யோகா சொல்லிக் கொடுப்பதுடன், நிறையச் சமூகத் திட்டங்களையும் செயல்படுத்துவதுதான் வியப்பாக உள்ளது. கிராமக் குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வளர வேண்டுமென்பதற்காக பள்ளி நடத்துகிறார். ஏழைகளுக்காக இலவசமாக மருத்துவச் சேவை செய்கிறார். மக்கள் நன்றாகச் சுவாசம் செய்வதற்காக மரம் நடுகிறார். லட்சக்கணக்கில் மரங்கள் நட ஊக்குவிக்கிறார். உலக நன்மைக்காக அவர் ஆற்றும் பணிகளை நினைத்து மெய்சிலிர்த்து வணங்குகிறேன். அனைவரின் நன்மைக்காகப் பாடுபடும் சத்குருவை நான் தெய்வமாகவே நினைக்கிறேன்!

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1