தமிழக அரசின் முன்னாள் சுகாதாரத் துறை இயக்குனர்

டாக்டர் கிருஷ்ணமூர்த்தி - தமிழக அரசின் முன்னாள் சுகாதாரத் துறை இயக்குனர். தனக்கு வகுக்கப்பட்ட பணிக்காக சத்குருவை சந்திக்க நேர்ந்து பின்னர் எப்படி ஈஷாவில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் என்பதையும், ஈஷா வகுப்புகள் தன் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தையும் நம்முடன் இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

டாக்டர். கிருஷ்ணமூர்த்தி:

அரசுப் பணியில் 35 ஆண்டுகள். நானும் கொஞ்சம் இயந்திரமயமாகித்தான் போய்விட்டேன். என் ஆன்மிக அனுபவம் என்பது, ஒரு சில கோவில்களுக்கு விசேஷ நாட்களில் சென்று வருவதுடன் முடிந்துவிட்டது. அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் தமிழகத்தில் செயல்பட்டு வந்த எய்ட்ஸ் தடுப்புத் திட்டத்தில் இயக்குனராகச் சேர்ந்தேன். என் வாழ்க்கையில் ஆன்மிக வித்து அந்த பொறுப்பில் இருக்கும்போதுதான் ஏற்பட்டது.

அவர் எங்கிருந்தாலும் என் முன்னே இருப்பதாக உணர்ந்த அந்த கணத்தை நினைத்தால், இப்போதும் பரவசம்தான்.

எய்ட்ஸ் நோய் தடுப்பு குறித்த விழிப்பு உணர்வைப் பரப்பும் திட்டத்தில் ஆன்மிகத் தலைவர்களை ஈடுபடுத்தும் நோக்கில் இரண்டு நாள் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். பல நாடுகளில் இருந்து வந்திருந்த மதத் தலைவர்கள், ஆன்மிகக் குருக்கள் பங்கேற்ற கருத்தரங்கின் இறுதியில் சிறப்புரை ஆற்ற சத்குருவை அழைத்திருந்தோம். சத்குருவுடன் என் முதல் சந்திப்பு அங்குதான்.

எய்ட்ஸ் தடுப்பு பற்றியும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு பற்றியும் சத்குரு கூறிய கருத்துக்கள் எனக்குப் புது உற்சாகத்தைக் கொடுத்தது. என் அனுபவத்தில், இந்த நோய் பற்றி மதத் தலைவர்கள் பேசுவார்களே தவிர, செயல்படுவதில் சுணக்கம் இருந்ததை நான் அறிவேன். மாநாட்டின் முடிவில் சத்குருவிடம் பேச வாய்ப்பு கிடைத்தபோது, “எய்ட்ஸ் ஒரு மோசமான நோயாகச் சமுதாயத்தில் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நோய் பற்றி ஆன்மிகத் தலைவர்கள் பேசுவதோடு சரி, செயல்படுவதில் தயக்கம் காட்டுவார்கள். ஈஷா இந்தப் பிரச்னைக்குக் கை கொடுக்குமா?” என்று கேட்டேன். சத்குரு மெலிதாகச் சிரித்துக் கொண்டே, “துன்பமுறும் மக்களுக்கு உதவ ஈஷா எப்போதும் தயார்தான். நீங்கள் தயாரா?” என்று கேட்டார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

மாநாடு முடிந்த சில நாட்களிலேயே ஸ்வாமி நிசர்கா என்னுடன் தொடர்புகொண்டார். “சத்குரு அவர்கள் எச்.ஐ.வி பாசிட்டிவ் நபர்களுடன் கலந்துரையாடவும், சத்சங்கம் நடத்தவும் ஏற்பாடு செய்யலாமா?” என்று கேட்டார். கோவையில் சுமார் 600 எச்.ஐ.வி பாசிட்டிவ் நபர்களும், ஈஷா தன்னார்வத் தொண்டர்களும் கலந்துகொண்ட நான்கு மணி நேர சத்சங்கம் சத்குருவால் நிகழ்த்தப்பட்டது. அரங்கத்தில் ஈஷா தன்னார்வத் தொண்டர்களும், எச்.ஐ.வி பாசிட்டிவ் நபர்களும் ஒன்று சேர்ந்து அமர்ந்திருந்த காட்சியே எனக்கு மனநிறைவைத் தந்தது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும், பெண்களும், நோயாளிகளும் கேட்ட அத்தனை வினாக்களுக்கும் தனக்கே உரிய பாணியில் சத்குரு விளக்கம் அளித்தார். மனிதநேயம் கலந்த அந்தப் பதில்கள் இந்த நோய்த் தடுப்பில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் வழிகாட்டியாக விளங்கும் தரம் வாய்ந்தவை.

இந்த சத்சங்கம் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஈஷாவின் பயிற்சிகளில் ஈடுபட ஆர்வம் ஏற்பட்டது. ஈஷாவின் முழுமைப் பயிற்சியில் பயிற்சி பெற எனக்குக் கிடைத்த வாய்ப்பு ஒரு வரப் பிரசாதம். என் மனைவியும் ஆர்வமுடன் கலந்துகொண்டார். ஏழு நாட்கள் போனதே தெரியவில்லை. ஒவ்வொரு நாள் காலையிலும் ஹட யோகப் பயிற்சிகள், பின்பு சத்குருவின் விளக்கங்கள், சத்சங்கங்கங்கள், ஈஷா இசைக் குழுவின் இன்னிசை என அனைத்தும் அருமருந்தாய் அமையும். ஒரு நாள் மலையேற்றம்.

அதன் முடிவில் சலசலக்கும் ஓடை அருகே அருமையான இயற்கைச் சூழலில் கிடைத்த சத்குருவின் உபதேசங்கள் மறக்க முடியாதவை. கடைசி நாள் சத்குரு அனைவரிடம் இருந்தும் விடைபெறும் நேரம்... கண்களை மூடி மந்திர உச்சாடனையில் லயித்திருந்தேன். திடீரென சத்குருவின் அரவணைப்பை உணர்ந்தேன். உள்ளமெல்லாம் பரவசமாக உணர்ச்சிப் பிழம்பாக உணர்ந்தேன். நேரம் போனது தெரியவில்லை. கண் விழித்துப் பார்த்தபோது சத்குரு விடைபெற்றுச் சென்றிருந்தார். அவர் எங்கிருந்தாலும் என் முன்னே இருப்பதாக உணர்ந்த அந்த கணத்தை நினைத்தால், இப்போதும் பரவசம்தான்.

தியானலிங்கத்தில் தியானிக்கும் ஒவ்வொரு முறையும் சத்குருவின் அருகாமையை உணர்ந்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை தியானலிங்கம் வேறு, சத்குரு வேறு அல்ல!

அதன் பின் பலமுறை ஈஷா யோக மையத்துக்குச் சென்று வந்துள்ளேன். ஒரு சில பயிற்சிகளில் தன்னார்வத் தொண்டனாக இருந்துள்ளேன். ஈஷாவில் எனக்குப் பிடித்த மற்றுமோர் இடம் ஈஷா புத்துணர்வு மையம் (Isha rejuvenation centre) அதன் சுற்றுப்புறமும், நிர்வகிக்கும் முறையும், சிகிச்சை முறைகளும், புத்துணர்வு கொடுப்பவை.

அடுத்த பயிற்சியான பாவ ஸ்பந்தனா என் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. நான் வேதனையும் விரக்தியும் அடைந்திருந்த காலகட்டம் அது. பயிற்சியின் முடிவில் குடும்ப வாழ்க்கை பற்றிய ஒரு புத்துணர்வு கிடைத்தது. father மற்றும் fatherhood என்ற இரண்டு ஆங்கில வார்த்தைகளின் அர்த்தத்தை எனக்குப் புரியவைத்த பயிற்சி. I transformed myself from being a biologicol father to my children into practitioner of universal fatherhood.

ishavum-naanum-dr-krishnamoorthy

ஈஷாவின் கிராமப் புத்துணர்வு இயக்கம் சத்குருவின் தொலைநோக்குத் திட்டம். அதில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். கிராமப் புத்துணர்ச்சி என்பது கிராம மறுமலர்ச்சித் திட்டம். மக்களின் ஆர்வத்தைத் தூண்டி சுயமதிப்புடன் தங்கள் பகுதியில் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கொண்டுவருவது எளிதானது அல்ல. கிராமப்புற மருத்துவமனைகள், எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவமனை, ஆரோக்கிய அலைத் திட்டம், சிறப்பு மருத்துவ முகாம்கள் என கிராமச் சுகாதாரத் திட்டங்கள் பல உண்டு.

இறுதியாக, தியானலிங்கத்தைப் பற்றி சில வார்த்தைகள். நான் ஒவ்வொரு முறை தியானலிங்க வளாகத்தில் நுழையும்போதும் நுழைவாயிலில் உள்ள சத்குருவின் வாசகங்கள் அடங்கிய திரைச்சீலையைப் படிப்பேன். தியானலிங்கத்தில் தியானிக்கும் ஒவ்வொரு முறையும் சத்குருவின் அருகாமையை உணர்ந்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை தியானலிங்கம் வேறு, சத்குரு வேறு அல்ல!