ஈஷா யோகா மையத்தில் BSF வீரர்களுக்கு யோகா வகுப்புகள்!

நம் நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் பணியை மேற்கொள்ளும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஈஷா யோகா மையத்தில் சில சக்திவாய்ந்த யோகா வகுப்புகள் பிரத்யேகமாக வழங்கப்பட்டன. இதுகுறித்த சில தகவல்கள் உங்களுக்காக!
 

ஒரு நாட்டில் விவசாயிகள் எப்படி சேற்றில் கால்களை வைத்து மக்களுக்கான உணவை வழங்குகிறார்களோ, அதைப்போலவே ஒரு நாட்டின் எல்லையில் நின்று நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் முக்கியமான பணியை BSF வீரர்கள் செய்கிறார்கள்.

 

எல்லையில் பணி புரிபவர்களுக்கு தனிமை மற்றும் மன அழுத்தம் பெரும் பிரச்னையாக இருக்கிறது. இதற்கு தீர்வாக யோகா துணைநிற்கும்

 

கடந்த டிசம்பர் மாதம் ஈஷா யோக மையத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பணிபுரியும் எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் 99 பேர் உப-யோகா, அங்கமர்தனா, சூரிய க்ரியா, ஹட யோகா போன்ற சக்திவாய்ந்த மற்றும் பாரம்பரிய யோகப் பயிற்சிகளை கற்றுக்கொண்டனர்.

14 நாட்கள் நிகழ்ந்த இந்த யோகா நிகழ்ச்சிகளில் “ஆஉம்” மந்திர உச்சாடனை மற்றும் ஈஷா கிரியா ஆகிய எளிமையான, சக்திவாய்ந்த பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இவற்றை கற்றுக்கொண்ட வீரர்களுக்கு தங்களுடன் பணியாற்றும் சக வீரர்களுக்கும் கற்றுக்கொடுப்பதற்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. உயர் அதிகாரிகளின் அனுமதிக்குப் பிறகு இவர்கள் அனைத்து எல்லை பாதுகாப்பு முகாம்களிலும் இப்பயிற்சிகளை கற்றுக்கொடுப்பார்கள்.

இந்நிகழ்ச்சியில், எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் சத்குரு கலந்துரையாடினார். அவர் பேசும்போது, மிகவும் தொன்மையான யோக விஞ்ஞானத்தை நம் தேசத்தை பாதுகாக்கும் வீரர்களுக்கு அளிப்பதன் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டார். BSF வீரர்களுக்கு யோகப் பயிற்சி அளிப்பதன் மூலம், அவர்கள் தங்களை சிறந்த முறையில் நிர்வகிக்கவும், நாட்டின் எல்லையை திறம்பட பாதுகாக்கவும் யோகா உறுதுணையாய் இருக்கும் என சத்குரு தெரிவித்தார்.

இப்பயிற்சியில் கலந்துகொண்ட எல்லை பாதுகாப்பு பிரிவின் துணைத் தளபதி திரு. மன்மோகன் சிங் மேத்தா கூறுகையில், “உடலை வலுவாக வைக்க தீவிரமான உடற்பயிற்சிகள் செய்தால் போதும் என்று நினைத்தோம். ஆனால், யோகா செய்யும் போதுதான் உடல் இறுக்கமாக உள்ளதை உணர்ந்தோம். அந்த உடல் இறுக்கத்தை போக்கி உடலை வலுவாகவும் வளைந்து கொடுக்கும் தன்மையுடனும் வைக்க யோகா உதவுகிறது. குறிப்பாக, எல்லையில் பணி புரிபவர்களுக்கு தனிமை மற்றும் மன அழுத்தம் பெரும் பிரச்னையாக இருக்கிறது. இதற்கு தீர்வாக யோகா துணைநிற்கும்,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “ஈஷா யோக மையத்தில் தங்கியிருந்த 15 நாட்களும் மன அமைதி நிரம்பிய, ஆனந்தமான நாட்கள்,” என்றார்.