ஈஷா மீது சுமத்தப்பட்ட வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்தது
ஈஷா மீது சுமத்தப்பட்ட வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்தது
 
 

Read in english: High Court Ends Controversy: Rules in Favor of Isha Yoga Center

தன்னுடைய இரு மகள்களையும் ஈஷா யோகா மையத்தினர் சிறை வைத்துள்ளனர் அவர்களை மீட்டுத் தாருங்கள் என்று ஒரு பெற்றோர் கொடுத்த ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் உயர்திரு நாகமுத்து மற்றும் உயர்திரு பாரதிதாசன் அவர்கள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் கோவை மாவட்ட தலைமை நீதிபதி கொண்ட குழுவினை இதுகுறித்து விசாரணை செய்யும்படி உத்தரவிட்டிருந்தார்கள்.

கோவை மாவட்ட நீதிபதி அடங்கிய குழு ஒன்று கோவை ஈஷா யோகா மையத்தில் மா மதி மற்றும் மா மாயு இருவரையும் சந்தித்து நீதி விசாரணை நடத்தியது. தங்கள் விசாரணை முடிவுகளை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தது.

மாண்புமிகு நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பில்,"பெற்றோர் தொடுத்த வழக்கில் உண்மையில்லை, பிடித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டவர்கள் அந்த மையத்தில் தங்களது சுயவிருப்பத்திலேயே தங்கி இருக்கிறார்கள் என்று திட்டவட்டமாக தெரிவிக்கிறோம்," என்று கூறியுள்ளார்கள். ஈஷா யோகா மையத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள அபாண்டமான குற்றச்சாட்டினை வன்மையாக கண்டித்த நீதியரசர்கள், "இவர்கள் இருவரும் தங்கள் சுயவிருப்பத்தோடு ஈஷா மையத்தில் தங்கி இருக்கிறார்கள் என்பதில் எங்களுக்கு ஐயப்பாடு எதுவுமில்லை, இதனை முழு திருப்தியுடன் நாங்கள் சொல்கிறோம்," என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலும், பெற்றோர் அளித்த ஆட்கொணர்வு மனுவினை தள்ளுபடி செய்தும் உத்திரவிட்டுள்ளார்கள்.

இந்தத் தீர்ப்பின் மூலம், கட்டாயப்படுத்தி மகள்களை தங்க வைத்துள்ளனர், கட்டாயப்படுத்தி பிரம்மச்சரியம் எடுக்கச் செய்தனர் என்று ஈஷா அறக்கட்டளையின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தவிடுபொடி ஆகின்றன. மனித உரிமை மீறல்கூட இங்கு இல்லை என்று சொல்லப்பட்ட பின்னர் சிறுநீரகம் திருடுவது, கர்ப்பப்பையை நீக்குவது, குழந்தைகளுக்கு போதைப் பொருள்கள் கொடுப்பது போன்றவை கற்பனைக்கும் அப்பாற்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டுக்கள்தான் என்பதை இங்கு உறுதியாக சொல்ல விரும்புகிறோம். ஈஷா மையம், அந்தப் பெண்களின் பெற்றோரை இதுவரை தடுத்ததும் இல்லை, இனி தடுக்கப்போவதும் இல்லை.

ஈஷா அறக்கட்டளை அனைத்து தரப்பினரையும், அனைத்து சாராரையும் அரவணைத்து, இடமளிக்கும் ஒரு நிறுவனம். இங்கு பேதங்கள் இல்லை, பாகுபாடுகள் இல்லை. எல்லாவிதமான நம்பிக்கைகளுக்கும் இங்கு இடமுண்டு. பெற்றோருக்கு குழந்தைகள் மீது உணர்ச்சிரீதியான பந்தங்கள் இருக்கும் என்பதை ஈஷா அறக்கட்டளை முழுமையாக உணர்ந்துள்ளது. அதனால், எந்தவொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை சந்திக்க மையத்திற்கு வருவதை ஈஷா மையம் ஒருபோதும் தடைவிதித்தது இல்லை. அதுமட்டுமல்ல, ஈஷா யோக மையம் அனைவரையும் தங்கள் மையத்திற்கு வரவேற்கிறது. மக்கள் இவ்விடத்தில் தங்கி பயன்பெற்று, தங்கள் வாழ்வை வளமைப்படுத்திக் கொள்ள அதன் வாசல்கள் என்றும் திறந்தே இருக்கின்றன.

ஈஷா யோகா மையம், யாரையும் கட்டாயப்படுத்தி இங்கு தங்க வைப்பது இல்லை. சாதி, மத, இன, தேச பேதங்கள், சமூக-பொருளாதார பின்னணிகளைக் கடந்து அனைவருக்கும் ஈஷா யோக வகுப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சீனா, லெபனான் போன்ற பல தேசங்களிலும் பல்வேறு ஆசிய ஆப்பிரிக்க ஐரோப்ப நாடுகளிலும் யோக வகுப்புகள் வழங்கப்படுகின்றன. கிராமப் பகுதிகளிலும் நகர்புறங்களிலும் யோக வகுப்புகள் நிகழ்கின்றன. பல்வேறு சமூக பின்னணியைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். ஒரு ஏழைக் குடியானவனும் வருகிறார் பிரபலங்களும் வருகிறார்கள். சொந்தமாக தொழில் செய்பவரும் வருகிறார், உயர்பதவி வகிக்கும் வல்லுநரும் வருகிறார். இப்படி அனைத்து தரப்பு மக்களையும் ஒரேநேரத்தில் ஈஷா யோகா வகுப்புகள் சென்றடைகின்றன.

கடந்த 30 ஆண்டுகளாக மனித நல்வாழ்விற்காக பாடுபட்டு வரும் ஈஷா அறக்கட்டளை சமத்துவத்தையும் நல்வாழ்வையும் வளர்ச்சியையும் கொண்டு வருவதில் நாட்டம் கொண்ட ஒரு நிறுவனம். உள்நிலையில் சக்திவாய்ந்த மாற்றம் ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள், விருதுகள் வென்றிருக்கும் சமூகநலத் திட்டங்கள், சுற்றுப்புறச் சூழலுக்கான திட்டங்கள் போன்ற தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்குவதோடு மனித நல்வாழ்விற்கு தேவையான அத்தனை அம்சங்களையும் ஒருங்கே ஈஷா யோக மையம் வழங்குகிறது.

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் இதுவரை 2.8 கோடி மரங்களை நட்டு பராமரித்து வருகிறது. தமிழகத்தின் பசுமைப் பரப்பை உயர்த்துவதில் ஈஷாவின் பங்கு முக்கியமானது. அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து 79,000 ஏழைக் குழந்தைகள் பயன்பெறும் விதமாக பல்வேறு செயல்களைச் செய்து வருகின்றது. கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் மூலம் தமிழகம் மற்றும் ஆந்திராவில் 4600 கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த இயக்கத்தின் மூலம் இலவச மருத்துவம், சுகாதாரம், விளையாட்டு, யோகா போன்ற நாட்டுநலத் திட்டங்கள் மூலம் பயன்பெற்ற கிராம மக்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டும். அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் நடைபெற்ற உலக யோகா தினத்தின் போது இந்தியா முழுக்க உள்ள 35,000 பள்ளிகளில் பயிலும் 1.5 கோடி குழந்தைகளுக்கு இலவச யோக வகுப்புகள் நடத்தப்பட்டன.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1