ஈஷா கிராம மருத்துவமனையின் 9வது ஆண்டு விழா!

குள்ளப்பநாயக்கனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஈஷா கிராம மருத்துவ மனையின் 9வது ஆண்டு விழா ஜூலை 3ஆம் தேதியன்று சிறப்பாக நிகழ்ந்தேறியது. குருபூஜையுடன் துவங்கிய விழாவில், இலவச மருத்துவ முகாம், கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் என நாள்முழுக்க கொண்டாட்டங்கள் தொடர்ந்தன. SKS மருத்துவமனையின் உதவியுடன் நிகழ்ந்த பொது மருத்துவம் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவத்திற்கான இலவச முகாமில், சுமார் 200 பேர் கலந்துகொண்டு பலனடைந்தனர்.

காலை 9:15க்கு துவங்கிய விளையாட்டுப் போட்டிகளில், கிராமப்புற பகுதியைச் சேர்ந்த 21 கைப்பந்து அணிகளும் 5 எறிபந்து அணிகளும் பங்கேற்றன. இறுதிகட்ட போட்டிகளை திரு.கிருஷ்ணமூர்த்தி (SK கார்ஸ் சேலம்) அவர்கள் துவங்கி வைத்தார். குழந்தைகளுக்கான கேளிக்கை விளையாட்டுகள் மாலையில் நிகழ்ந்தன. சுற்றுவட்டார கிராமப்புற குழந்தைகள் வழங்கிய நாட்டுப்புற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் மாலையில் அரங்கேறின. நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது!

ஈஷாவில் ‘குருவின் மடியில்’ நிகழ்ச்சி!

ஜூலை 17, 18 & 19 ஆகிய மூன்று நாட்கள் சத்குரு நேரடியாக வழங்கிய ‘குருவின் மடியில்’ எனும் நிகழ்ச்சி ஈஷா யோகா மையத்திலுள்ள ஆதியோகி ஆலயத்தில் வெகுசிறப்பாக நிகழ்ந்தது. சத்குரு வழங்கிய சக்திவாய்ந்த தியான செயல்முறைகளுடன் முதல் இரண்டு நாட்கள் ஆங்கிலத்திலும், மூன்றாவது நாள் குருபௌர்ணமி கொண்டாட்டத்துடன் தமிழிலும் சத்சங்கங்கள் நிகழ்ந்தன. ஆங்கிலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியில் சுமார் 4000 பேரும் தமிழ் நிகழ்ச்சியில் சுமார் 15000 பேரும் கலந்துகொண்டு குருபௌர்ணமியைக் கொண்டாடி சிறப்பித்தனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.