ஈஷா இன்சைட் 2015 - ஒரு பார்வை!

வணிகத்தில் தலைமைப் பண்பை மேம்படுத்தும் நோக்கில், ஆற்றலும் தனித்துவமுமிக்க 'இன்சைட்' எனப்படும் இந்த நிகழ்ச்சி, சத்குரு அவர்களால் ஒவ்வொரு ஆண்டும் நேரடியாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான இன்சைட் நிகழ்ச்சி நிகழ்வுகளிலிருந்து சில பகிர்வுகள் இங்கே!
 

வணிகத்தில் தலைமைப் பண்பை மேம்படுத்தும் நோக்கில், ஆற்றலும் தனித்துவமுமிக்க 'இன்சைட்' எனப்படும் இந்த நிகழ்ச்சி, சத்குரு அவர்களால் ஒவ்வொரு ஆண்டும் நேரடியாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான இன்சைட் நிகழ்ச்சி நிகழ்வுகளிலிருந்து சில பகிர்வுகள் இங்கே!

இந்த ஆண்டிற்கான இன்சைட் நிகழ்ச்சி ஈஷா யோக மையத்தில், நவம்பர் 26 - 29 வரை வெகுசிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் வடிவமைப்பு மற்றும் நிகழ்ச்சி வழங்கப்படும் விதத்தில் மிகுந்த தனித்தும் கொண்ட நிகழ்ச்சியாக உள்ள இந்த இன்சைட் நிகழ்ச்சி, கைதேர்ந்த பயிற்சியாளர்களின் தலைமையில் சத்குருவின் முன்னிலையில் நடைபெற்றது.

எப்போது பயத்திலிருந்து விடுபடுகிறோமோ அப்போதுதான் நமது முழுத்திறனும் வெளிப்படும்

இந்நிகழ்ச்சியில் இந்தியா மட்டுமல்லாது சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வணிகப் பெருமக்கள், வர்த்தக நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் என மொத்தம் 205 பங்கேற்பாளர்கள் வருகை தந்திருந்தனர். உலக அளவில் மதிப்புபெற்ற வணிக தலைமைகளான இன்ஃபோஸிஸ் திரு. நாராயண மூர்த்தி மற்றும் ஊடக ஆளுமை ரோனி ஸ்குரூவலா ஆகியோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், மேலாண்மை கல்விக்கான கெல்லோக் பள்ளியின் முன்னாள் தலைவர் Dr.தீபக் ஜெயின் அவர்கள் நிகழ்ச்சியை வழிநடத்தியதோடு, B.S நாகேஷ் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

உற்பத்தி, கட்டுமானம், சேவை, கல்வி, ஊடகம் மற்றும் உடல்நலம் என அனைத்து தரப்பிலிருந்தும், குறிப்பிடத்தகுந்த வணிக ஆளுமைகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில், உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் வணிகப் போட்டிகளைப் பற்றிப் பேசிய Dr.ஜெயின் அவர்கள், புதுமையான உத்திகளை உருவாக்குவதும் தரத்தை உயர்த்துவதும் வணிகத்தில் வெற்றி பெறும் வழிமுறைகள் என எடுத்துரைத்தார். ஃபெடெக்ஸ் (FedEx) போன்ற முன்னணி வணிக தலைவர்களுடன் பணியாற்றிய தனது பத்தாண்டு கால அனுபவத்தின் மூலம், பல விஷயங்களை பேசிய Dr.ஜெயின் அவர்கள், தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் தகவல்களை நன்கு அறிந்துள்ளதோடு அவர்களின் தேவை அதிகரித்துள்ளதையும் சுட்டிக் காட்டினார்.

நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட Dr.தீபக் ஜெயின் அவர்களின் பேச்சின் மீது தனது கருத்தினை முன்வைப்பதற்காக சத்குரு அவர்களை அழைத்தார். புதிய சிந்தனையுடன் கூடிய வணிகமுறைகள், நிறுவனமயமாதல், அரசியல் என பலதரப்பட்ட தலைப்புகளில் தனது பார்வையை முன் வைத்த சத்குரு அவர்கள், ஈஷா ஒரு வணிக மாதிரி இல்லை என்பதையும், மனிதர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதே தனது தொழிலில் என்றும் தெரிவித்தார்.

புதுமைகளே வெற்றிக்கான வழிவகுக்கும் எனக் கூறிய சத்குரு, பிறருக்கு ஒரு அடி முன்னால் இருப்பதையே மக்கள் தங்களின் வெற்றியாக எண்ணிக்கொள்ளக்கூடாது என்பதை தெளிவுபடுத்தினார். வணிகப் பெருமக்கள் தங்களின் திறமையை வளர்த்துக்கொள்வதில் கவனத்தை செலுத்த வேண்டுமே தவிர, போட்டி மனப்பான்மையை வளர்க்க தேவையில்லை என்பதை சத்குரு வலியுறுத்தினார். இக்கருத்தை உதாரணம் ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டினார் சத்குரு! மல்லிகை மற்றும் மாம்பழம் இரண்டும் தனித்துவம் மிக்கது; அவை இரண்டும் இன்னொன்றைப் போல ஆக விரும்புவதில்லை. மனிதர்களும் தங்கள் அளவில் முழுமையானவர்களாக இருக்க வேண்டுமே தவிர, அடுத்தவரைப் போல நடந்துகொள்ளவோ போட்டி போட்டுக்கொள்ளவோ தேவையில்லை என்று எடுத்துரைத்தார் சத்குரு.

தொடர்ந்து தனது பேச்சில் கல்விமுறையில் உள்ள குறைபாட்டினை சுட்டிக்காட்டிய சத்குரு, அரசியல் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டபோது, அரசியல்வாதிகளை வெறுமனே குற்றம் சொல்லுவதை சாடினார். நாம் அனைவரும் அரசியலில் பங்குகொள்ளும் தகுதிபடைத்தவர்கள் என்பதையும், அரசியல் குறித்த அக்கறை நமக்கு இல்லையென்றால் நாம் அரசியல்வாதிகளை குறைசொல்லக்கூடாது எனவும் பதிலுரைத்தார்.

இந்தியாவில் சினிமா தொலைக்காட்சி பார்ப்பவர்களிடையே பிரபலமானவரான ரோனி ஸ்குருவலா அவர்கள் லூயிஸ் மிராண்டாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டபோது, தனது அனுபங்களிலிருந்து வெற்றி, தோல்வி குறித்தும், தன்னுடன் பணிபுரிந்தவர்களிடம் சிறந்த கலையை வெளிக்கொணர்ந்தது பற்றியும் சுவைபடப் பகிர்ந்தார்.

தொடர்ந்து சத்குருவுடன் கலந்துரையாடிய ரோனி, தோல்வி அவருக்கு எந்த அளவிற்கு உத்வேகத்தையும் அனுபவத்தையும் தந்தது என்பதை பகிர்ந்துகொண்டார். தோல்வி என்பது முற்றுப்புள்ளி அல்ல என்றும் அது தொடக்கத்திற்கான அரைப்புள்ளி என்றும் கூறி பங்கேற்பாளர்களின் கரகோஷத்தைப் பெற்றார். பரிசோதனை முயற்சியிலுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான திறன், போதுமான சவாலை சந்திக்கும் திறன், வெற்றியைக் கொண்டாடுவதற்காக நேரம் ஒதுக்குவது என இம்மூன்று முக்கிய விஷயங்களை முதல் தலைமுறை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

முதலீட்டாளர் தங்களை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அதோடு சாத்தானின் முக்கிய ஆயுதங்களான சோர்வு, மன அழுத்தம் மற்றும் துக்கம் ஆகியவற்றை வாங்கிவிடக் கூடாது என்றும் கூறிய சத்குரு, நாம் அனுபவிக்கும் வெளிச்சம், இருள், ஆனந்தம், வலி, மகிழ்ச்சி என அனைத்துமே நமக்குள்தான் உள்ளது எனத் தெளிவுபடுத்தினார். இந்த விழிப்புணர்வு நமக்குள் வந்துவிட்டால், நாம் அனைத்து அனுபவங்களையும் இனிமையானதாக இருக்கும்படி தேர்ந்தெடுக்கும் விழிப்புணர்வை பெறுவோம் என்று அவர் தெரிவித்தார்.

முழுவிழிப்புணர்வுடனும் அச்சமில்லாமலும் வாழுமாறு பங்கேற்பாளர்களைக் கேட்டுக்கொண்ட சத்குரு, எப்போது பயத்திலிருந்து விடுபடுகிறோமோ அப்போதுதான் நமது முழுத்திறனும் வெளிப்படும் என்ற உணமையை எடுத்துரைத்தார். யோகா, உணவுப்பழக்கம் ஆகியவை ஒரு மனிதன் தன்னை நிர்வகிப்பதில் முக்கிய பங்குவகிப்பதைப் பற்றிப் பேசிய சத்குரு, அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உடல் எனும் கருவி, முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் தனது பேச்சில் வெளிப்படுத்தினார்.

மருத்துவத் துறையில் தனது நிர்வாக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட டாக்டர்.தேவி ஷெட்டி அவர்கள், அவரது மருத்துவமனையில் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதால் கிராமப்புற பெண்களை முன்னேற்றுவதில் தனது பங்கினை வழங்குவதாகக் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் சம்ஸ்கிருதி மாணவர்களின் இசை, நடன நிகழ்ச்சிகளும், களரி, சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளும் பார்வையாளர்களின் காட்சிக்கு விருந்தாகின. ஈஷா தன்னார்வத் தொண்டர்களின் கைவண்ணத்தில் ஆரோக்கியமும் ருசியும் மிக்க உணவு வகைகள் பங்கேற்பாளர்களுக்கு பரிமாறப்பட்டன. நிகழ்ச்சியின் இடையிடையே ஈஷா அறக்கட்டளையின் செயல்பாடுகள் மற்றும் யோகா குறித்த காணொளிக் காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டன.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1