ஈஷா அறக்கட்டளை இணைந்து நடத்திய நூலகர் நாள் கட்டுரைப்போட்டி!
ஈஷாவும் இந்தியன் அகாடமி நூலக அமைப்பின் தமிழக பிரிவும் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியைப் பற்றி சில தகவல்கள்...
 
 

ஈஷாவும் இந்தியன் அகாடமி நூலக அமைப்பின் தமிழக பிரிவும் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியைப் பற்றி சில தகவல்கள்...

நூலக அறிவியலின் விடிவெள்ளி பத்மஸ்ரீ டாக்டர் SR ரங்கநாதன் அவர்களின் 123வது பிறந்தநாளான ஆகஸ்ட் 12ஆம் தேதி நூலகர் நாளாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, இந்தியன் அகாடமி நூலக கூட்டமைப்பின் தமிழக பிரிவும் ஈஷா அறக்கட்டளையும் ஒன்றிணைந்து, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ மாணவிகளுக்கு வாசிப்பு திறனை மேம்படுத்தும் நோக்கில் கட்டுரைப் போட்டியை நடத்தினர். போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா ஜனவரி 30 சனிக்கிழமை திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் வெகுசிறப்பாக நிகழ்ந்தேறியது!

“வாசிக்கும் பழக்கம்” என்ற தலைப்பில், மாநில அளவில் நடத்தப்பட்ட இந்த கட்டுரைப் போட்டியில் தமிழ்நாடு முழுவதும் 200 கல்லூரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, சுமார் 140 பேர் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர். பரிசளிப்பு விழாவில் நிகழ்ச்சியில் தேசிய கணக்கீடு மற்றும் சான்றிதழ் வழங்கும் குழு ஆலோசகர் டாக்டர்.மதுக்கேர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இந்தியன் அகாடமி நூலக கூட்டமைப்பின் தமிழக தலைவர் டாக்டர். M.துரைராஜன் அவர்கள் மற்றும் ஈஷா அறக்கட்டளையிலிருந்து சுவாமி பிரபோதா ஆகியோர் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். போட்டியில் வெற்றபெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு சுவாமி பிரபோதா அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

முதற்பரிசை திருச்சி SR கல்லூரியைச் சேர்ந்த அக்ஷயா, இரண்டாம் பரிசை சீர்காழி விவேகானந்தா கல்லூரியைச் சேர்ந்த அசிமா சஹாமர், மூன்றாம் பரிசை திருநெல்வேலி சதக் அப்துல்லா அப்பா கல்லூரியைச் சேர்ந்த சொர்ணக்கிளி மற்றும் சிறப்பு பரிசினை கரூர் அரசு கல்லூரியைச் சேர்ந்த மாரியப்பன் ஆகியோர் பெற்றனர்.

மாணவர்களின் புத்தகம் படிக்கும் பழக்கம் மேம்படுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்தக் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டதாக தெரிவித்த சுவாமி பிரபோதா அவர்கள், மாணவர்களுக்கு சத்குருவின் உயரிய கருத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகப் பகிர்ந்துகொண்டார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் கல்லூரி மாணவர்களுடன் சத்குரு உரையாற்றிய வீடியோ தொகுப்பான “புரிந்ததும் புரியாததும்” எனும் ஒளிப் பேழையும், “உடல் எனும் யந்திரம் - மனதைக் கையாளும் தந்திரம்” எனும் புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.

புத்தகங்கள் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் நண்பனாகவும் இருக்கும் என்பதைக் கருத்தில்கொண்டு, சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு புத்தகங்கள் சேதமடைந்த மூன்று அரசு நூலகங்களுக்கு, ஈஷா அறக்கட்டளை சார்பில் புதிதாக புத்தகங்கள் நன்கொடை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் இந்தியன் அகாடமி நூலக கூட்டமைப்பின் தலைவர் டாக்டர். M.துரைராஜன் அவர்கள் ஈஷா அறக்கட்டளைக்கும், கல்லூரி முதல்வர் F.ஆன்ட்ரூ அவர்களுக்கும், நூலக இயக்குநர் டாக்டர்.S.செபாஸ்டியன் அவர்களுக்கும் மற்றும் போட்டியில் கலந்துகொண்ட மாணவ மாணவியருக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1