இப்போது இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?

இப்போது இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?, Ippothu irakka nernthal enna seiveergal?
 

சில மாதங்களுக்கு முன் ஈஷா யோக மையத்திற்கு சீனாவிலிருந்து ஒரு விநோதமான இமெயில் வந்தது.

"எனக்கு காலபைரவ கர்மா செய்யுங்கள்," என்ற வேண்டுகோளுடன் வந்த அந்தக் கடிதம் அனைவரின் மனத்தையும் உருக்கியது.

மரினா நெல்சன் அவர்களின் கடிதம்:

"நமஸ்காரம், நான் விநோதமான ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன். என்னுடைய காலபைரவ கர்மாவிற்கு தற்போது ஏற்பாடுகள் செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளேன்.

மரினா நெல்சன்

புற்றுநோயினால் நான் மெல்ல இறந்து கொண்டிருக்கிறேன். இன்னும் ஓரிரண்டு மாதங்களில் என் வாழ்க்கை முடிந்துவிடும். அதன்பின், எனக்கு காலபைரவ கர்மா செய்யவோ, எனக்காக ஈஷா யோக மையம் வரவோ என் குடும்பத்தில் யாரும் இல்லை.

உங்களுக்கு கடிதம் அனுப்புவது, ஒருசில ஏற்பாடுகளைச் செய்வது போன்ற சிறுசிறு வேலைகளை என்னால் இன்னும் செய்ய முடிகிறது. என் வாழ்க்கைப் பயணத்தின் இந்த பகுதியை நான் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

எனக்கு 54 வயதாகிறது. நான் இறந்த 14 நாட்களுக்குள் காலபைரவ கர்மா செய்யப்பட வேண்டும் என்று நான் அறிகிறேன். அதற்கு, நான் உடுத்திய துணியும் என் புகைப்படமும் உங்களுக்கு தேவை. ஒரு வருடம் கழிந்தபின் என்னுடைய காலபைரவ சாந்திக்கும் நான் ஏற்பாடு செய்ய விரும்புகிறேன்.

என்னுடைய காலபைரவ கர்மாவிற்கு தற்போது ஏற்பாடுகள் செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளேன். புற்றுநோயினால் நான் மெல்ல இறந்து கொண்டிருக்கிறேன். இன்னும் ஓரிரண்டு மாதங்களில் என் வாழ்க்கை முடிந்துவிடும். அதன்பின், எனக்கு காலபைரவ கர்மா செய்யவோ, எனக்காக ஈஷா யோக மையம் வரவோ என் குடும்பத்தில் யாரும் இல்லை.

அதற்கு தேவையானவற்றை எல்லாம் இப்போதே உங்களுக்கு அனுப்பிவிடுகிறேன். என் உயிர் பிரிந்தபின் எனது நண்பன் என் இறந்த நாளை உங்களுக்குத் தெரிவிப்பார்.

இது சாத்தியமா எனத் தெரிவியுங்கள். என் நிலையைப் புரிந்துகொண்டதற்கு மிக்க நன்றி!"

- மரினா நெல்சன்

இப்படி ஒரு வித்தியாசமான வேண்டுகோள் கடிதத்தைப் பெற்றபின் அதற்கு ஈஷா யோகா மையம் பதிலும் அளித்தது. அவரது மறைவுக்குப்பின் அவர் நண்பரே தேவையானவற்றை அனுப்பட்டும் எனக் கூறி அவரது இறுதிப் பயணத்தை அமைதியாக நிகழ்த்திக் கொள்ள சில வழிகாட்டுதல்களை அவருக்கு வழங்கியது.

"தங்களின் அந்த கடைசி நேரத்தில் தாங்கள் இருக்கும் அறையில் எப்போதும் ஒரு விளக்கு எரிந்துகொண்டு இருக்கட்டும். அது நெய் தீபமாகவோ அல்லது நல்லெண்ணெய் தீபமாகவோ இருக்கலாம். "பிரம்மானந்த ஸ்வரூபா" மந்திர உச்சாடனை அந்த அறையில் 24 மணி நேரமும் ஒலிக்கட்டும். உங்கள் வீட்டில் சத்குருவின் புகைப்படமோ, தியானலிங்கம் அல்லது லிங்கபைரவியின் படமோ வைத்துக் கொள்ளுங்கள். உகந்த சூழ்நிலையை இது உருவாக்கும்" என்ற செய்தி அவருக்கு அனுப்பப்பட்டது.

மரினா மரணத்தை தொட்டுக் கொண்டிருந்த அந்த வேளையில் அவர்களது இல்லத்தில் "பிரம்மானந்த ஸ்வரூபா" உச்சாடனம் தொடர்ந்து ஒலித்தது. அன்று முழுவதும் தீபம் எரிந்தது. வேதனையுடனும் வலியுடனும் நிகழவேண்டிய இந்த யாத்திரை மிகுந்த அமைதியுடன் நிகழ்ந்தது.

அவரது புகைப்படத்தையும் உடையையும் அனுப்பியபோது மரினாவின் நண்பரிடமிருந்து இந்தச் செய்தி வந்தது. மிகுந்த மனமுதிர்ச்சியுடன் மரினா எடுத்த முடிவும் அவரது விழிப்புணர்வும், ஈஷா யோகப் பயிற்சியை மரினா தொடர்ந்து செய்து வந்ததை நமக்கு உணர்த்துகிறது. வெறும் சடங்காக அல்லாமல் உயிர் விஞ்ஞானமாக செய்யப்படும் காலபைரவ கர்மாவின் முக்கியத்துவத்தை சொல்கிறது.

ஒரு காய்ச்சல், தும்மல் என்றாலே பெரும் வேதனையை அனுபவிக்கும் மனிதர்கள் மத்தியில், உயிரை விழுங்கும் நோய் தனக்கு இருப்பதை அறிந்தும் அந்தச் சூழ்நிலையில் தான் செய்யவேண்டியதை அமைதியாக செய்தார் மரினா. தான் மரணத்தைத் தழுவப் போகிறோம் என்ற உண்மையை மனதில் நிறுத்திய போதும் மரினா எந்தப் பதட்டமும் இன்றி அன்பாக அமைதியாக விடைப்பெற்றார்.

மரினா நெல்சன் ஈஷா யோக மையத்தில் சில காலம் தங்கியிருந்தார். அந்தச் சமயத்தில் அவருடன் நட்பாய் இருந்த சியாமா, மரினாவுடன் பழகியதில் தனக்கு ஏற்பட்ட உணர்வுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்...

ஆகஸ்ட் 15ம் தேதி அவர் மரணம் எய்தினார். அவர் விரும்பியபடியே ஈஷா யோக மையத்தில் காலபைரவ கர்மா செய்யப்பட்டது. அவரது காலபைரவ கர்மாவில் கலந்துகொண்டு அவருக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பியது உள்ளத்தை உருக்குகிறது.

மரினாவின் கடிதத்தை பார்த்தவுடன் வாழ்க்கை எத்தனை சுலபத்தில் நொறுங்கிப் போய்விடக் கூடியதாய் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். யாரோ ஒருவரை சந்திக்கிறோம், உயிரே அவர்தான் என்று பழகுகிறோம். ஆனால், அவரை சந்திப்பது இதுதான் கடைசி முறை என்பதுகூட அறியாமல் பிரிகிறோம். அப்படித்தான் எனக்கும் மரினாவிற்குமான சந்திப்பு நிகழ்ந்தது.

ஈஷா யோக மையத்தில் மரினா தங்கியிருந்த நாட்களில் அவர் காலையிலும் மதிய வேளைகளிலும் தியானலிங்கத்திற்கு வேக வேகமாய் சென்று கொண்டிருப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அவரிடம் விநோதமான விரைவுத்தன்மையும் தனிமையும் என்னால் உணர முடிந்தது. அவரை நோக்கி ஏதோவொன்று எனை ஈர்த்தது. ஒரு நாள் அவர் எனக்கு அறிமுகமாகையில் இனம்தெரியாத ஒரு தயக்கம் அவரிடம் இருந்ததைப் பார்க்க முடிந்தது. தான் குடல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு கடைசி கட்டத்தில் இருப்பதாக சொன்னார்.

தான் இறக்கப் போவதை அறிந்த ஒரு நபரை நான் முதல்முறையாகப் பார்க்கிறேன் என்று மரினாவிடம் சொன்னேன். இறப்பு தனக்கு மிக நெருக்கத்தில் இருப்பதை அவர் உறுதியாக அறிந்திருந்தார். அன்று மதியம், இருவரும் கைகளை பிடித்தவாறு கிட்டதட்ட 2 மணி நேரத்திற்கு மேல் அமர்ந்திருந்தோம். இருவரது கைகளும் வேர்த்தன, ஆனால், ஒரு கணம்கூட கைகளை நாங்கள் பிரித்துக் கொள்ளவில்லை. நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது பிறர் வந்தனர் பேசினர் சென்றனர். ஆனால், நாங்கள் இருவரும் கைகளைக்கூட பிரிக்காமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். வாழ்க்கை, சத்குரு, உயிர் என பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன.

வெறும் 6 மாதங்கள் மட்டுமே இருப்பதாக மருத்துவர்கள் சொல்லி இருக்கின்றனர். மருத்துவமனையில், கீமோ செய்துகொண்டு நொந்து சாவதை அவர் விரும்பவில்லை. ஆரம்பத்தில், தனக்கு ஏன் புற்றுநோய் வந்தது என்ற ஆதங்கம் அவரிடம் இருந்தது. பின், அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஈஷா யோகப் பயிற்சிகளும், சத்குருவின் வீடியோக்களும் அந்த முதிர்ச்சியை அவருக்கு வழங்கியதாக மரினா சொன்னார். "தன் நேரம் முடிந்தது" என்று தெரிந்ததில் அவருக்கு மகிழ்ச்சி. எத்தனை பேருக்கு தான் இறக்கப் போகிறோம் என்பது முன்னமே தெரிகிறது!

மரணத்திற்காக தன்னை தயார்ப்படுத்திக் கொள்வது அவசியம் என்று அவர் நினைத்தார். முதல்முறை கீமோ செய்து, அறுவை சிகிச்சை முடிந்து, மரினாவை ஸ்ட்ரசரில் கிடத்தியபோது - "நான் இப்படி மரணம் அடைய விரும்பவில்லை. உதவுங்கள் சத்குரு," என்று நினைத்திருக்கிறார்.

தன்னால் முடிந்த அளவு ஈஷாவில் நேரம் செலவிட அவர் நினைத்தார். சத்குருவுடன் மீண்டும் ஒரு சம்யமா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினார். தன் மரணத்திற்கு தன்னை சிறப்பாய் தயார் செய்துகொள்ள வேண்டும் என்று தேவையான அனைத்தையும் செய்தார். அவரிடம் இருந்த தெளிவு, அவரது மனநிலை, வாழ்க்கையைப் பற்றிய அவரது புரிதல் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

நீங்கள் இறக்கப்போவது குறித்து சத்குருவிற்கு கடிதம் எழுதியிருக்கிறீர்களா என்று நான் கேட்டபோது, "அதற்கு தேவையே இல்லை. அவர் எப்போதும் என்னுடனே இருக்கிறார். அதனை என்னால் உணரமுடிகிறது," என்றார்.

தனக்கு 54 வயது என்றார். அவருக்கு 40 வயது இருக்கும் என்றுகூட என்னால் நம்ப முடியவில்லை. மணிக்கணக்கில் தியானலிங்கத்தின் அருளில் மூழ்கியிருந்தார். காலையில் தேவி அபிஷேகங்களில் கண்களை மூடி லயித்திருப்பார். மிகுந்த பலத்துடன் இருந்தார்.

ஈஷா யோக மையம் வழங்கும் சக்தி சூழ்நிலையை எந்தளவிற்கு உள்வாங்ககிக் கொள்ள முடியுமோ அந்தளவிற்கு உள்வாங்கிக் கொள்ள அவர் நினைத்தார். மீண்டும் தன் ஊருக்கு சென்ற அவர், சம்யமா நிகழ்ச்சிக்காக மறுமுறை மையத்திற்கு வந்திருந்தார். அந்த குறிப்பிட்ட சம்யமா அவருக்கு சிறப்பு வாய்ந்ததாய் இருந்தது என்று என்னிடம் சொன்னார். செல்வதற்கு தயாராய் இருப்பதாய் சொன்னார். உண்மையிலேயே அவர் தனிச்சிறப்பு வாய்ந்த மனிதர். சிரம்தாழ்த்தி அவரை வணங்குகிறேன்.

ஆகஸ்ட் 15, 2016 அன்று அவர் மரணம் எய்தினார். அவர் விரும்பியபடியே ஈஷா யோக மையத்தில் காலபைரவ கர்மா செய்யப்பட்டது. அவரது காலபைரவ கர்மாவில் கலந்துகொண்டு அவருக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பியது உள்ளத்தை உருக்குகிறது. சத்குரு அவர்கள் சொன்ன வார்த்தை என் நினைவுக்கு வருகிறது. "ஒரு மனிதரிடம் நீங்கள் பேசுவது உங்களுடைய கடைசி வார்த்தையாய் இருந்தால் எப்படி பேசுவீர்களோ, அதைப் போலவே ஒவ்வொரு மனிதரிடமும் பேசுங்கள்," என்றார். சத்திய வாக்கு இது.

குறிப்பு:

காலபைரவ கர்மா -இறந்த குறிப்பிட்ட தினங்களுக்குள் செய்வது.
காலபைரவ சாந்தி -இறந்தஉயிருக்கு எப்போது வேண்டுமானாலும் செய்வது.

காலபைரவ சாந்தியை ஒவ்வொரு வருடமும் செய்யலாம், அல்லது முன்பே பதிவு செய்து 10 வருடங்களுக்கு (ஒவ்வொரு வருடமும் மஹாளய அமாவாசை அன்று) தொடர்ச்சியாகச் செய்துகொள்ளலாம்.

மஹாளய அமாவாசை அன்று செய்யப்படும் வருடாந்திர காலபைரவ சாந்தி, இந்த வருடம் லிங்க பைரவியில், வரும் செப்டம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ளது.

கால பைரவ கர்மா மற்றும் சாந்தி பற்றி மேலும் விவரங்களுக்கு...

பதிவு செய்ய: lingabhairavi.org/register
தொடர்பு எண்: +91 83000 83111
இ-மெயில்: info@lingabhairavi.org
இணையதள முகவரி: www.lingabhairavi.org

உள்ளூர் மையத்திலும் பதிவு செய்து கொள்ளலாம் (தமிழ்நாட்டில் மட்டும்)

காலபைரவ கர்மா,
லிங்கபைரவி,
ஸ்ரீ யோகினி அறக்கட்டளை,
ஈஷான விஹார் அஞ்சல்,
கோவை-641114

மஹாளய அமாவாசை அன்று அன்னதானம் வழங்க...

மஹாளய அமாவாசை அன்று இறந்த முன்னோர்களுக்கு திதி செய்து அவர்களது நினைவாக அன்னதானம் வழங்குவது தொன்றுதொட்டு நிலவி வரும் ஒரு வழக்கமாய் இருந்து வருகிறது.

உங்கள் பிரியமானவர்களின் நினைவாக, ஈஷா யோக மையத்தில் நீங்கள் அன்னதானம் செய்யலாம். தாங்கள் வழங்கும் அன்னம் ஆன்மீக பாதையில் உள்ள சன்னியாசிகள், பிரம்மச்சாரிகள் மற்றும் பலரையும் சென்று சேரும்.

மேலும் தகவல்களுக்கு:

தொலைபேசி: 9442504655
இணையதள முகவரி: http://www.ishafoundation.org/Get-Involved/annadanam.isa