இளமை புதுமை சத்குருவுடன் நடிகர் சித்தார்த்
பொதுவாக நடிகர்களை திரைப்படத்தில் பார்த்திருப்போம், விளம்பரங்களில் பார்த்திருப்போம், வெகு சில நடிகர்களை சில சிறப்பு நிகழ்ச்சிகளில் பார்த்திருப்போம். இங்கே நடிகர் சித்தார்த் ஒரு படி மேலே சென்று ஒரு யோகியுடன் இணைந்திருக்கிறார்... அவர் கேள்விகள் ஸ்வரஸ்யமாகிப் போக சத்குருவின் பதில்கள் சுவையோ சுவையாகிப் போனது. அதிலிருந்து சில துளிகள் உங்களுக்காக..
 
 

பொதுவாக நடிகர்களை திரைப்படத்தில் பார்த்திருப்போம், விளம்பரங்களில் பார்த்திருப்போம், வெகு சில நடிகர்களை சில சிறப்பு நிகழ்ச்சிகளில் பார்த்திருப்போம். இங்கே நடிகர் சித்தார்த் ஒரு படி மேலே சென்று ஒரு யோகியுடன் இணைந்திருக்கிறார்... அவர் கேள்விகள் ஸ்வரஸ்யமாகிப் போக சத்குருவின் பதில்கள் சுவையோ சுவையாகிப் போனது. அதிலிருந்து சில துளிகள் உங்களுக்காக...

உரையாடல் நடக்குமிடத்திற்கு வரும்வழியில் இருவருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில், "என்னிடம் புத்திசாலித்தனமான கேள்விகளைக் கேட்பவர்கள் மிகக் குறைவே," என்று சத்குரு குறிப்பிட்டாராம். இதை தனக்கு சவாலாகவே கொண்டு நிகழ்ச்சியில் கேள்வி கேட்பதற்கு ஆயத்தமாகியிருக்கிறார் சித்தார்த்.

"திரையுலகில் இருக்கும் என்னைப்போல் ஒருவருக்கு உங்களைப்போல் ஒரு ஞானியைச் சந்திக்கும் வாய்ப்பு எளிதில் கிடைப்பதில்லை, இப்போது கிடைத்துள்ள இந்த வாய்ப்பை என் பெருமையாகக் கருதுகிறேன். இந்த அரிய சந்தர்ப்பத்தில் இந்நிகழ்ச்சியைக் காண என் பெற்றோர்களும் இங்கே வந்திருக்கிறார்கள்," என்று துவங்கினார் சித்தார்த்.

சித்தார்த்தின் முதல் கேள்வியே இன்றைய தலைமுறைக்கு சாட்சியாக இருந்தது. "இளைய தலைமுறையின் வலிமை அதன் சீறியெழும் கோபத்தில்தானே இருக்க முடியும்?" என்ற சித்தார்த்திடம், "கோபத்தில் பொங்கியெழும்போது தவறுகள்தான் நடக்கும், அப்படியே ஏதோ சரியாக நடந்திருந்தால் அது தற்செயலாகத்தான் நடந்திருக்கும்; தெளிவுடனும் நிதானத்துடனும் செயல்படும்போதுதான் சரியாகச் செயல்பட முடியும்," என்ற சத்குருவின் வார்த்தை இளமையில் புதுமையை நிறைத்தது.

"உறவுகளில் யார் சரி, யார் தவறு என்ற கேள்வி எப்போதும் இருக்கிறது. நீங்கள் ஒருமுறையாவது ஒரு பெண்ணிடம் 'நான் தவறு, நீ சரி' என்று சொன்னதுண்டா?" என்று சித்தார்த் கேட்டவுடன் அதை ரசித்து சிரிப்பலையில் ஆழ்ந்தது அரங்கம்.
"என் மகளிடம் 'எனக்குத் தெரியாது' என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். இது அவளை சிந்திக்கவைத்து புத்திசாலியாக வளர்த்திருக்கிறது," என்று தன் பிள்ளை வளர்ப்பு ரகசியத்தையும் பகிர்ந்துக் கொண்டார் சத்குரு.

சித்தார்த் நடித்து சத்குரு பார்த்த 'ரங்க் தே பசந்தி' திரைப்படத்தைப் பற்றி சத்குருவிடம் கருத்துக் கேட்டார் சித்தார்த்.
"நீங்கள் ஒரு முதிர்ந்த நடிகர் என்று கருதுகிறேன்," என்று கூறிய சத்குரு, "இயக்குனர் முதற்கொண்டு அனைவரும் அப்படத்தின் கடைசிக் காட்சியைப் பற்றி தர்க்கம் எழுந்தபோது அதை விட்டு விலகிவிட்டீர்கள். ஆனால் அதுதான் நீங்கள் அனைவரும் உரிமையுடன் பொறுப்பேற்றிருக்க வேண்டிய தருணம்," என்று குறிப்பிட்டார்.

"இந்தத் தலைமுறையிலிருந்து உங்கள் ஞானம் அடுத்துவரும் தலைமுறைகளுக்கு போய்ச்சேர என்ன செய்திருக்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு, "மிகவும் நேர்மையான நாணயமான மனிதர்களை உருவாக்கியிருக்கும் பெருமை நமக்கு இருக்கிறது. சரியான மனிதர்களை உருவாக்கிவிட்டால் எது எப்படி நடக்க வேண்டுமோ அப்படி சரியாகவே நடக்கும்," என்று பதிலளித்தார்.

கடைசியாக மிகவும் முக்கியமான கேள்வி என்று கூறி, "இந்திய அணி கிரிக்கெட் போட்டியில் ஜெயிக்க, என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்ட சித்தார்த்திடம், "அவர்களை ஒரு வாரம் என்னிடம் கொடுங்கள், நான் ஜெயிக்க வைக்கிறேன்," என்றார் சத்குரு.

இந்திய அணி ஜெயிக்குமா, சித்தார்த்தின் கேள்வி பலிக்குமா? காலம் தான் விடை சொல்ல வேண்டும்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1