கடந்த மாதத்தில் சத்குரு நிகழ்வுகள்!
பெருந்தொற்று காரணமாக சவாலான சூழ்நிலை தொடர்ந்து நிலவிவரும் இவ்வேளையில், இணையம் வழியாக சத்குரு தனது பங்களிப்பினையும் வழிகாட்டுதல்களையும் தொடர்ந்து சமூகத்திற்கு வழங்கி வருகிறார். கடந்த ஒரு மாத காலத்தில் சத்குரு பங்கேற்ற ஆன்லைன் நிகழ்ச்சிகள் பற்றி இங்கே படித்தறியலாம்.

மகாகவி பாரதி பற்றி சத்குரு...
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினமான செப்டம்பர் 11 அன்று, அவரது 'துன்பம் இல்லாத நிலையே சக்தி' என்ற பாடலைக் குறிப்பிட்டு, ஒரு யோகியின் உள்நிலை அனுபவத்திலிருந்தே இத்தகைய ஆழமிக்க வார்த்தைகள் வெளிப்படும் என்று கூறிய சத்குரு, பாரதிக்கு உரிய மரியாதையும் சிறப்பும் கிடைக்கப் பெற வேண்டுமென்று தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார்.
இந்தியாவின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டம்
தன்னார்வத் தொண்டர்கள், ஹடயோகா ஆசிரியர் பயிற்சியாளர்கள், ஆசிரமவாசிகள் மற்றும் பலரும் பங்கேற்க, இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் ஆதியோகி முன்னிலையில் தேசியக்கொடி ஏற்றினார் சத்குரு. உற்சாகமும் கொண்டாட்டமும் நிறைந்த சுதந்திர தின நிகழ்ச்சியில், ஈஷா சமஸ்கிருதி மாணவர்களுடன் உரையாடலும், சத்குருவுடன் சிறப்பு அதிரடி ஃபிரிஸ்பி விளையாட்டுப் போட்டியும் இடம்பெற்றது. சிறப்புரையாற்றிய சத்குரு, "அடுத்த 25 ஆண்டுகளில் நமது சுதந்திர தின நூற்றாண்டு தினத்தைக் கொண்டாடும் வேளையில், நமது தேசம் ஒரு வலிமையான, உத்வேகமடைந்த, மீண்டெழும் திறன் மற்றும் சமநிலையான மனிதர்கள் நிறைந்த நாடாக வளர்வது மிக முக்கியமானது" என்று குறிப்பிட்டார்.
சத்குருவுடன் கைலாய பயணம் 2021
கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் சத்குருவுடன் ஆன்மீக பயணம் மேற்கொண்ட சாதகர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்து காத்திருந்த கைலாஷ் மற்றும் மானசரோவர் ஏரியின் தரிசனத்திற்காக லாப்ஷாவுக்கு வந்தடைந்தனர். சிமிகோட் முதல் லாப்ஷா வரையிலான மலையேற்றம் முழுவதும் கடினமானதாக இருந்தாலும், குருவின் முன்னிலையில் அது ஒரு விலைமதிப்புமிக்க அனுபவமாக இருந்தது.
மானசரோவர் ஏரியிலிருந்து 7 கிமீ தொலைவில் நேபாளத்தில் 'லாப்சா லா பாஸ்' அமைந்துள்ளது. மானசரோவருக்கு அர்ப்பணம் செய்வது என்பது ஒருவர் சொர்க்கத்தை அடைவதற்கு சமம் என்று ஹும்லா பகுதி மக்கள் நம்புகின்றனர்.
சத்குருவுடன் 2021 கைலாஷ் பயணம், அதில் பங்கேற்ற சாதகர்களின் உள்நிலையில் ஓர் ஆழமிக்க அற்புத அனுபவமாக அமைந்தது.
Subscribe
சத்குருவின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தி
ஞானத்தை வழங்கும் கடவுளான விநாயகர் சதுர்த்தியில் சத்குரு தனது வாழ்த்து செய்தியைக் கூறும்போது, அறிவுசார் இயக்கத்தின் உயர்ந்த குறியீடாகவும், தடைகளைக் கடந்து செல்வதற்கான புத்திசாலித்தனமாகவும் விக்னேஸ்வரர் திகழ்வதாக காணொளிப் பதிவில் குறிப்பிட்டார். விநாயகர் சிலைகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இயற்கை மூலப் பொருட்களால் தயாரிக்க வேண்டுமென்ற வேண்டுகோளையும் முன்னதாக அவர் முன்வைத்திருந்தார்.
4D வித் டெமி லொவெட்டோ வலையொலி நிகழ்ச்சியில் சத்குரு
அமெரிக்க பாடகர், பாடலாசிரியர் மற்றும் நடிகருமான டெமி லொவெட்டோ தமது 4D வித் டெமி லொவெட்டோ வலையொலி நிகழ்ச்சியில் பங்கேற்க சத்குருவை அழைத்திருந்தார். கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி நடந்த இந்த உரையாடலின்போது, ஆனந்தமாக வாழ்வது, எது ஒருவரை மறைஞானி ஆக்குகிறது, மோட்டார் சைக்கிள்களின் மீதான தனது காதல் மற்றும் மனித உடலமைப்பின் பல்வேறு அம்சங்களைக் குறித்தும் சத்குரு பல்வேறு பரிமாணங்களில் பேசினார். விழிப்புணர்வான, ஆனந்தமான மனிதர்களை உருவாக்குவதன் மூலம் விழிப்புணர்வான உலகை கட்டமைத்திட இளைஞர்கள் எழுந்து நிற்க வேண்டும் என சத்குரு இந்நிகழ்ச்சியின் மூலம் வேண்டி கேட்டுக்கொண்டார்.
உங்களுடன் உரையாடியது அற்புதம்,டெமி. விழிப்புணர்வான மனிதர்களை உருவாக்கி அதன்மூலம் விழிப்புணர்வான உலகம் உருவாக்க, வாழ்க்கை மீதான நம் பிரியம் நம் இனத்தைத் தாண்டி நீடிக்கவேண்டும். மனித விழிப்புணர்வை உயர்த்துவதென்றால் இதுதான் அர்த்தம். இதை நிகழ்த்துவதில் எங்களுடன் இணையுங்கள்.ஆசிகள்-Sg https://t.co/z9emqBsMNS
— IshaFoundation Tamil (@IshaTamil) August 5, 2021
கானா தேசத்தின் இசையமைப்பாளர் ஓக்யாம் க்வாமே சத்குருவுடன்
மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள கானா தேசத்தை சேர்ந்த இசையமைப்பாளர், ராப் கலைஞர் மற்றும் தொழில் முனைவோருமான ஓக்யாம் க்வாமே அவர்கள் சத்குருவுடன் இணையம் வாயிலாக உரையாடினார். ஆன்மீகம், கலாச்சார அடையாளம் மற்றும் வரலாறு, விழிப்புணர்வான ராப் குறித்தும் அவர் சத்குருவிடம் கேள்விகளை எழுப்பினார். தனது பாடல் ஒன்றையும் நிகழ்ச்சியின் போது அவர் பாடிக்காட்டினார். வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அதனால் காயப்படக் கூடாது என்று குறிப்பிட்ட சத்குரு, சமூக சவால்களுக்கு பதிலளிக்கும் விதமாக அடையாளங்களைத் தாண்டி உயர்ந்து, அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
டியூக் கார்ப்பரேட் எஜுகேஷன் & டயலாக் பத்திரிகைக்கு பேட்டி
டியூக் கார்ப்பரேட் எஜுகேஷன் நிறுவனத்தின் உலகளாவிய நிர்வாக இயக்குனரான மைக் கேனிங், மேலாளர்கள் மற்றும் நிறுவன தலைவர்களுக்கான இதழான டயலாக் பத்திரிகைக்காக சத்குருவை ஆகஸ்ட் 16ம் தேதி பேட்டி எடுத்தார். பல்வேறு தலைப்புகளிலும் நிகழ்ந்த உரையாடலின் போது, மனிதர்களின் சாத்தியத்தை பேணி வளர்ப்பது, நடைமுறைக்கேற்ப செயல்படும் தொழில் தலைவர்களுக்கு அதிகரித்து வரும் முக்கியத்துவம் மற்றும் கூர்மையாக கவனம் செலுத்துவது குறித்தும் ஆராய்ந்தார்கள். ஒருவரது வாழ்க்கையில் இலக்கின் பங்கு குறித்து பேசிய சத்குரு, "இலக்கை நிலைநிறுத்துவதன் மூலம் அடிப்படையாக, உங்கள் நோக்கத்தை கட்டமைக்கிறீர்கள். சுயமாக நீங்கள் எந்த நோக்கமும் வைத்திருக்கத் தேவையில்லை; வாழ்க்கை மட்டுமே ஒரே இலக்கு. நீங்கள் அதனோடு ஒரு பாகமாகிவிட வேண்டும். இந்த வாழ்க்கையில் நீங்கள் பயணிக்க வேண்டும், இதில் என்ன நடக்க வேண்டும் என்பதை உங்கள் சொந்த கற்பனையில் நீங்கள் உருவாக்கக்கூடாது" என்றார்.
முதலீட்டாளர் குருராஜ் தேஷ்பாண்டே & தொழில் முனைவோர் டே வீர்லபட்டியுடன் சத்குரு
SU Tech நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டே வீர்லபட்டி மற்றும் ஸ்பார்ட்டா குரூப் LLC நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான குருராஜ் தேஷ்பாண்டே இருவரும், நாளைய தொழில்முனைவோர்களுக்கு உத்வேகமளிப்பது குறித்து சத்குருவுடன் கலந்துரையாடினார்கள். சுவாரஸ்யம் மிகுந்திருந்த இந்த உரையாடலின் போது, தொழில்நுட்பம் பல்வேறு தரப்பினரையும் இணைப்பது, புத்திசாலித்தனமும் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கும் மற்றும் வாழ்வின் தனிப்பட்ட முறையில் உணரும் பரிணாமங்கள் குறித்தும் கலந்துரையாடினார்கள். உங்களை எது உந்திச் செலுத்துகிறது என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் தன் இயல்பான நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்திய சத்குரு, "நீங்களே பாருங்கள், என்னை எதுவும் செலுத்தவில்லை. நான்தான் எல்லாவிதமான வாகனங்களையும் செலுத்துகிறேன், எனவே நான் நன்றாகவே இருக்கிறேன்" என்றார்.
பிரிட்டிஷ் இராணுவ அமைச்சகத்தின் ‘Mindfulness Symposium’ நிகழ்விற்கு சத்குருவின் காணொளி
பிரிட்டிஷ் பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்கான வீடியோவுக்காக பேசும்போது, பாதுகாப்பு படையினர் இருப்பதன் முக்கியத்துவம் குறித்தும், அவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து இந்த பூமியில் அமைதியை நிலைநாட்ட உதவுவது குறித்தும், அவர்களது இருப்பின் முன்னிலையில் அமைதி காக்கப்படுவது குறித்தும் பேசினார் சத்குரு. அதி அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளை கையாளும் பணியில் உள்ளவர்கள் தியானத்தில் ஈடுபடுவதன் முக்கியத்துவம் பற்றிப் பேசிய சத்குரு, வருங்காலங்களில் படை பலத்திற்கான தேவை குறையக்கூடும் என்ற தன் நம்பிக்கையை வெளிப்படுத்தினார். "படை வீரர்கள் என்பவர்கள் ஏதோ இயந்திரங்களோ ரோபோக்களோ அல்ல; அவர்கள் மனிதர்கள். அவர்கள் மனிதர்களாக நடத்தப்பட வேண்டும். அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு மனிதத் தன்மையோடு இருக்கிறார்களோ, அப்போது அவர்கள் இன்னும் சிறப்பான வீரர்களாக இருப்பார்கள்" என்று குறிப்பிட்டார் சத்குரு.
பஞ்ச பிராணங்களின் சக்தியை உணர்த்திய பௌர்ணமி சத்சங்கம்
இந்த மாத 'முழு நிலவில் அருள் மடியில்' பௌர்ணமி சத்சங்கத்தில், பஞ்ச வாயுக்கள் குறித்து - உடலில் சக்தி ஓட்டம் குறித்து விரிவாக பேசினார் சத்குரு. துடிப்பான வாழ்க்கையை வாழ்வதற்கு பிராண வாயுவை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து பேசிய சத்குரு, ஏற்கனவே சக்தி சலன கிரியா கற்றுக்கொண்டுள்ள சாதகர்களுக்கு பயிற்சிக்கு புத்துயிர் ஊட்டுவதற்காக சக்தி சலன கிரியா ரீஸ்டார்ட் நிகழ்ச்சி நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்பதையும் அறிவித்தார்.