குரு பௌர்ணமி கொண்டாட்டத்தை முன்னிட்டு வருடம்தோறும் நிகழும் ‘குருவின் மடியில்' நிகழ்ச்சி ஆங்கிலத்தில் 2 நாட்களும் (ஜூலை 14&15) தமிழில் 1 நாளும் (ஜூலை 16) சிறப்பாக நிகழ்ந்து முடிந்தது. சத்குருவின் அருள்மடியில் திளைத்திருப்பதற்கான வாய்ப்பினை வழங்கும் இந்நிகழ்ச்சியில், இவ்வருடம் பல்லாயிரக்கணக்கான தியான அன்பர்கள் கலந்துகொண்டனர்.

அடிக்கடி ஆசிரமத்திற்கு வருகைதரும் கோவை வட்டார அன்பர்கள் முதல், வருடம் ஒருமுறையாவது ஆசிரமும் செல்ல வேண்டும், சத்குரு முகத்தைக் காணவேண்டும் என்ற ஆசையில் இருக்கும் வெளிமாநில வெளிநாட்டு அன்பர்களும் இந்நிகழ்ச்சியை ஒரே அளவிலான ஆனந்தத்துடனும் எதிர்பார்ப்புடனும் எதிர்கொள்ள காத்திருந்ததை காணமுடிந்தது. தியானத்தின் ருசியை, குருவருளின் பரவசத்தை ஒருமுறையேனும் ருசித்துவிட்ட ஒவ்வொருவருக்கும் இந்நிகழ்ச்சி ஒரு அரிய வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும்.

இந்நிகழ்ச்சிக்காக பல மாதங்கள் முன்பிருந்தே திட்டமிட்டு காத்திருந்த அன்பர்கள், சூரிய குண்டம் முன்பாக தங்களுக்கான அடையாள பட்டையினை மணிக்கட்டுகளில் கட்டிக்கொண்டபோது, அவர்களின் முகத்தில் பிறவிப்பயனை அடைந்ததுபோன்றதொரு ஆனந்தம்!

ஆதியோகி ஆலயத்தில் காலை 11 மணியளவில் முதல்நாள் முதல் அமர்வு சம்ஸ்கிருதி மாணவர்களின் களரிப்பயட்டு அரங்கேற்றத்துடனும் ஹோம் ஸ்கூல் மாணவர்களின் இன்னிசையுடனும் வெகுசிறப்பாக தொடங்கியது.

குருவின் மடி என்றால்…

மடி என்று சொல்லும்போது அன்பின் மடி, சுகத்திற்கான மடி, காதலுக்கான மடி என்றுதான் பொதுவாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், குருவின் மடி அத்தகைய மடி அல்ல; அது அனைத்தையும் எரித்து வாழ்வின் மகத்தானதொரு பரிமாணத்தை நமக்கு சாத்தியமாக்குவதற்கான அருள்மடி என்பதை சத்குரு நிகழ்ச்சியில் தெளிவுபடுத்தினார்

ஸ்வாமி நிஸ்சலா… மென்மையான ஓர் உயிர்!

நிகழ்ச்சியை துவங்கும் தருணத்தில் சமீபத்தில் சாலை விபத்தில் மறைந்த ஸ்வாமி நிஸ்சலா அவர்களின் நினைவுகளை சத்குரு பகிர்ந்ததோடு, அவருக்காக தான் இயற்றிய ஆங்கில கவிதையொன்றை அங்கே திரைக்காட்சி மூலம் வழங்கினார்.

உண்மையான பக்தர்கள் விரைவில் மரணிப்பதற்கு காரணம் அவர்களின் கர்ம பிணைப்புகள் அனைத்தும் விரைவில் கரைந்துவிடுவதால்தான்

தொடர்ந்து சத்குரு பேசுகையில், உண்மையான பக்தர்கள் விரைவில் மரணிப்பதற்கு காரணம் அவர்களின் கர்ம பிணைப்புகள் அனைத்தும் விரைவில் கரைந்துவிடுவதால்தான் என்பதை விவரித்ததோடு, நம் மூச்சின் எண்ணிக்கையை குறைக்கும்போது நமது உடலின் காலம் வேகமாக முடிவடையாமல் குறைக்கப்படுகிறது என்ற சூட்சுமத்தை சத்குரு விளக்கினார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மேலும், தனது மூச்சுடனும் இதயத்துடிப்புடனும் பங்கேற்பாளர்களின் மூச்சும் இதயத்துடிப்பும் இயைந்துகொள்ளும் விதத்திலான சக்திமிக்க ஒரு செயல்முறை ஒன்றை சத்குரு அத்தருணத்தில் வழங்கினார்.

பிற்பகலில், ஞானியுடன் ஒரு கலந்துரையாடல்…

முதல் நாள் நிகழ்வின் பிற்பகல் அமர்வில், பிரபல வட இந்திய நாவல் எழுத்தாளர் அமிஷ் திரிபாதி அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். ராவணன் பற்றி வட இந்தியர்களும் தென்னிந்தியர்களும் கொண்டுள்ள மாறுபட்ட பார்வையினை சத்குரு மிகவும் சுவாரஸ்யமாக கலந்துரையாடலில் முன்வைத்தார். இலங்கையில் பிரம்மாண்ட நகரத்தை கட்டமைத்த ராவணன் மிகச் சிறந்த நிர்வாகி, மிகச்சிறந்த கல்வியாளன், மிகச் சிறந்த புத்திசாலி, மிகச்சிறந்த பேரரசன் என்பதை எடுத்துரைத்த சத்குரு, ராவணனிடம் இல்லாத ஒன்று ராமனிடம் இருந்தது என்னவென்றால், உள்நிலை சமநிலைதான் என்றார். கோபம், பொறாமை போன்ற உணர்ச்சிகள் மீதான ஆளுமையின்மை தான் இராவணன் அழிவிற்கு காரணம் என்பதை சத்குரு பதிவு செய்தார்.

sadhguru-amish

இராமாயணம் எனும் இதிகாசத்தை தனது பார்வையில் அணுகிய சத்குரு தொடர்ந்து பேசுகையில், இலங்கைக்கு இராமர் அமைத்த பாலம் குறித்தும், இராமருக்கு உதவிய தமிழ் மக்களின் உத்வேகம் குறித்தும் சுவைபட சத்குரு எடுத்துரைத்தார். இராவணன் இறக்கும் தருவாயில் இராமன் லட்சுமணனை அனுப்பி, இராவணன் கொண்டிருந்த விஷய ஞானத்தை கேட்டுப் பெற்று வரும்படி கூறியதையும், இராவண வதத்திற்குப் பின்னர், இராமன் இராவணனுக்காக ஈமக்கிரியை செய்ததையும் சத்குரு கலந்துரையாடலில் பதிவு செய்தார்.

பிற கலாச்சாரங்களில் வரலாறு என்பது செய்தித்தாள்களின் தொகுப்பாக மட்டுமே இருக்கும் வேளையில், நம் கலாச்சாரத்தில் வரலாறு என்பது இதிகாசங்களாக, நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் விதத்தில் சொல்லப்பட்டிருப்பதை சத்குரு உணர்த்தினார்.

முதல்நாள் இரவில் பிரத்தியேகமாக வழங்கப்பட்ட ஆதியோகி திவ்யதரிசனம் பங்கேற்பாளர்களுக்கு காட்சிக்கு விருந்தாக அமைந்தது.

இரண்டாம் நாளின் சுவாரஸ்யங்கள்…

2ம் நாள் முதல் அமர்வில் சத்குரு பகிர்ந்த ஒரு செய்தி அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. முந்தைய நிகழ்வை முடித்த கையோடு, தான் இரவில் விமானம் மற்றும் சாலை மார்க்கமாகப் பயணித்துச்சென்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் நம் தேசத்தின் விண்வெளி ஆராய்ச்சியாளர்களை சந்தித்து கலந்துரையாடியதை சத்குரு தெரிவித்தார். இரவுமுழுக்க தூங்காமல் தற்போது மீண்டும் நிகழ்வுக்கு திரும்பியுள்ளதை அங்கு பார்த்தவர்கள் சத்குருவை ஒரு சூப்பர் ஹீரோவாகப் பார்ப்பது மிகையானதல்ல!

sadhguru-neelakantan

நம் தேசத்தின் விண்வெளி அறிவியலாளர்கள் பற்றி கூறும்போது, மிகவும் மதிநுட்பத்துடன் விளங்கும் அவர்கள், இஸ்ரோவிலிருந்து தான் விடைபெறும்போது தனது ஆசீர்வாதங்களை கேட்டுப்பெற்றதாக கூறிய சத்குரு, இதுதான் உண்மையான அறிவியல் என்பதை அங்கே உணர்த்தினார்.

2ம் நாளின் கலந்துரையாடல்…

இரண்டாம் நாள் பிற்பகலில் பிரபல எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடினார். உடல் இல்லாத உயிர்கள் பற்றி, சத்குருவின் முந்தைய மூன்று பிறவிகளின் ஞாபகங்கள் வந்தது பற்றி என பல்வேறு அமானுஷ்ய விஷயங்கள் பற்றி கேட்பதில் ஆர்வம் காட்டிய எழுத்தாளர், சங்கரன்பிள்ளை எனும் கதாப்பாத்திரம் தமிழனா மலையாளியா என்ற கேள்வியுடன் தொடங்கியது அங்கே சிரிப்பலைகளை எழுப்பியது.

சத்குருவிற்கு வந்த முன்ஜென்ம ஞாபகங்கள் உண்மையா அல்லது கற்பனையா என்ற கேள்வியை முன்வைத்தபோது, தனக்கு முற்பிறவிகளின் ஞாபகங்கள் வந்தபோது என்ன நடந்தது என்பது குறித்து விரிவாகப் பேசிய சத்குரு, கற்பனைகள் நம்மை பரிமாற்றத்திற்கு இட்டுச் செல்லாது என்பதையும், தனக்கு அத்தகைய ஞாபகங்கள் வந்தபோது தனது கண்கள், குரல் மற்றும் கண்ணோட்டம் என அனைத்தும் பரிமாற்றமடைந்ததையும் அங்கே அவர் பதிவுசெய்தார்.

தமிழில் நிகழ்ந்த குருவின் மடியில்…

சென்னையில் தண்ணி இல்லை… என்ன பண்ணுவது?

சத்குருவிடம் கேள்வி கேட்பதற்கு மைக் பிடித்த சென்னைவாசி ஒருவர், முன்பு ஒரு டேங்க் தண்ணீர் 1500 ரூபாய் என இருந்ததாகவும், தற்போது 5,000 ரூபாயாக உள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்து, தற்போது “காவேரி கூக்குரல்” எனும் புதிய முன்னெடுப்பை அறிவித்துள்ள சத்குருவிற்கு தாங்கள் எந்த விதத்தில் உதவிகரமாக இருக்க முடியும் என்பதையும் கேள்வியாக முன்வைத்தார்.

சென்னையின் நகரங்கள் ஊடே ஓடும் ‘கூவம் மற்றும் அடையாறு' நதிகளின் அவல நிலையை எடுத்துரைத்த சத்குரு, இதுகுறித்து மக்களுக்கு அக்கறை வரவில்லையென்றால் அரசாங்கங்கள் இவற்றைக் கண்டுகொள்ளாது என்ற நிதர்சனத்தைக் கூறினார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள காவேரி கூக்குரல் எனும் இந்த முன்னெடுப்பு, செப்டம்பர் மாதத்தில் துவங்கவுள்ளது. இதற்காக தமிழக மக்கள் அனைவரும் துணைநிற்பதோடு, நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் எவ்விதத்தில் உதவ முடியும் என்பதையும் சத்குரு விரிவாகப் பேசினார்.

இதற்காகதான் தான் கர்நாடகத்திலுள்ள தலைக்காவிரியிலிருந்து தமிழகத்திலுள்ள திருவாரூர் வரை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் பயணிக்க விருப்பதைக் கூறி தொடர்ந்து பேசுகையில், காவேரிக் கரையிலுள்ள விவசாய நிலங்களில் மூன்றில் ஒரு பங்கில் அங்குள்ள விவசாயிகளை வேளாண்காடுகள் உருவாக்கச் செய்வதுதான் இத்திட்டத்தின் நோக்கம் என்பதை தெளிவுபடுத்தினார் சத்குரு. ஆரம்பகாலத்தில் அதற்காக விவசாயிகளுக்கு அரசாங்கம் உதவித்தொகை வழங்க வேண்டிய அவசியம் என்ன என்பதை சத்குரு அங்கே அறிவியல் பூர்வமாக விவரித்தார்.

ஆதியோகி முன்னிலையில் குரு பௌர்ணமி கொண்டாட்டம்…

ஜூலை 16 அன்று மாலை 6 மணியளவில் ஆதியோகி முன்பாக குரு பௌர்ணமி கொண்டாட்டம் களைகட்டியது. இதில் தியான அன்பர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். சத்குரு பங்கேற்பாளர்களின் மத்தியில் நடந்துசென்று தனது அருட்பார்வை வழியே ஆசிகள் வழங்கினார். முழுமதியும் சத்குருவும் அங்கே வீற்றிருக்க, 3D ஒளி-ஒலி காட்சிகளில் ஆதியோகி திவ்யதரிசனம் பொதுமக்களின் காட்சிக்கு விருந்தாகியது.

gp-celebration

விழாவிற்கு வருகைதந்த அனைவருக்கும் மகாவில்வ மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன. நிகழ்வின் முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. குரு பௌர்ணமி கொண்டாட்டத்திற்கு வருகை தந்த மக்கள் இரவில் திரும்பிச் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.