பூச்சிகள் பற்றி புதுப்புது விஷயங்கள், அறிவோம் வாருங்கள்! -பாகம் 4

கம்பளிப் பூச்சிகள், ஒட்டுண்ணிகள், குளவி இனங்கள் போன்ற பூச்சிகளின் இயல்புகள் மற்றும் இனப்பெருக்க முறைகள் குறித்து விவரிப்பதாகவும், அவை எப்படி விவசாயிகளுக்கு நன்மை செய்கின்றன என்பதை விளக்குவதாகவும் இந்த பதிவு அமைகிறது!

இறைவிழுங்கிகளின் தாக்குதலிலிருந்து தப்பிக்கும் கம்பளிப்புழுக்கள்

சில பூச்சிகள் இறைவிழுங்கிப் பூச்சிகளிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள இயற்கையாகவே சில பாதுகாப்பு முறைகளையும் பெற்றுள்ளன. அதில் ஒன்றுதான் அரிக்கும் உரோமங்கள். அரிக்கும் உரோமங்கள் உடைய புழுக்கள் இறைவிழுங்கிகளால் அதிகம் தாக்கப்படுவதில்லை.

இத்தகைய கம்பளிப்பூச்சிகளின் உரோமங்கள் நமது உடலின் மேல் தோலில் பட்டால் தாங்க இயலாத அரிப்பை ஏற்படுத்தும். மேலும், கண்கள் மற்றும் சுவாசப்பாதையையும் பாதிக்கக் கூடியவை. எனினும் இந்த உரோமங்கள் உள்ளங்கையில் அரிப்பை ஏற்படுத்துவதில்லை.

எனவே பூச்சிகளை கையாளும்போது அவை எந்த வகையான பூச்சிகள்? அவற்றின் இயல்பு எப்படிப்பட்டது? என்பன போன்ற சில தகவல்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஒட்டுண்ணிகள்

ஒட்டுண்ணிகள்

ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த நன்மை செய்யும் பூச்சிகள் எதிரிப் பூச்சிகளைவிட சிறிதானவை, இவற்றால் பல்வேறு வகையான பூச்சிகளைத் தாக்க இயலாது. ஒவ்வொரு வகையான ஒட்டுண்ணியும் அதற்கென உள்ள குறிப்பிட்ட பூச்சியிலேயே முட்டையிடும்.

இவற்றின் வாழ்க்கைச் சுழற்சி 7 முதல் 20 நாட்கள் வரையே இருக்கும். ஒட்டுண்ணிப் பூச்சிகளின் முட்டைப்பருவம் மற்றும் புழுப்பருவம், எதிரிப்பூச்சிகளின் முட்டை அல்லது புழு உடலில் இருக்கும். வகைக்கேற்றபடி இதில் மாற்றம் இருக்கும். இத்தகைய ஒட்டுண்ணிகள் முட்டை போடும் வரை சுறுசுறுப்பாகவும் அதன் பின் சோம்பலாகவும் இருக்கும்.

முட்டை ஒட்டுண்ணி

ட்ரைகோகிராமா குளவி

ட்ரைகோகிராமா (Trichogramma chilonis) என்பது குளவிகள் வகையைச் சேர்ந்தவை. 1 மி.மீ முதல் 5 மி.மீ வரை இருக்கும். இயற்கையாகவே காணப்படக்கூடிய இக்குளவிகள் கரும்பின் நுனி குருத்துப்புழு, இடைக்கணுப்புழு, நெல்லின் சுருட்டுப்புழு, பருத்தியில் காய்புழு போன்றவற்றின் முட்டைகளைத் துளைத்து முட்டைகளை வைக்கும்.

இவற்றின் வாழ்க்கைச் சுழற்சி 10 நாட்கள் மட்டுமே. முதிர்ந்த குளவிகள், சுருட்டுபுழுவின் முட்டையைக் குத்தி அதில் தனது முட்டைகளை இட்டுவிடும். குளவிகளின் முட்டைகள் உள்ளேயே பொறித்து குளவிகளாக வெளியே வரும்.

புழு ஒட்டுண்ணி

இக்னியுமானிட் குளவி, இது நெல்லைத்தாக்கும் தண்டு துளைப்பான் புழுக்களின் மீது துளை எற்படுத்தி முட்டையை இடுகிறது. சில நாட்களில் புழுக்களில் இருந்து குளவிகள் வெளிவருகின்றன. இந்த புழுக்கள் எங்கிருந்தாலும் அவைகளைத் தேடிக்கண்டுபிடித்து அவைகளின் மீது முட்டையிடுகிறது.

கூட்டுப்புழு பருவ ஒட்டுண்ணி

சால்சிட் என்ற தேனீயை போன்ற பூச்சிகள், பருத்தியை தாக்கக்கூடிய காய்புழு மற்றும் புருடினியா கூட்டுப்புழுக்களின் மீது முட்டையிடக் கூடியவை.

மாவுப்பூச்சியை கட்டுப்படுத்தும் கிரிப்டோலிமஸ்

Cryptolaemus_montrouzieri2

கிரிப்டோலிமஸ் (Cryptolaemus montrouzieri) என்ற பூச்சியின் இளம்பருவம், மாவுப்பூச்சிகளை அழிப்பதில் அதிக பங்காற்றுகின்றன.

மாவுப்பூச்சிகள்

மாவுப்பூச்சிகள் வெய்யில் காலங்களில் அதிகம் தாக்கக்கூடியவை, மழைகாலங்களில் அதிகம் தாக்க இயலாது. மழையின் தாக்கத்தினால் இடம்பெயறும் பூச்சிகள் மீண்டும் இலைக்கு வந்து தாக்க இயலாது. கீழ்கண்ட வழிமுறைகளைக் கடைப்பிடித்து மாவுப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயலும்.

1. ஸ்பிரிங்ளர் அல்லது ஸ்பிரேயர் மூலம் தண்ணீர் அடித்து மாவுப்பூச்சிகளை இடம் நகர்த்த வேண்டும்.

2. அதன் பின் ஒரு லிட்டர் தண்ணீரில், ஒரு சிட்டிகை சோப்புத்தூள் சேர்த்து அடிக்க வேண்டும், இந்த சோப்பு பூச்சிகளின் மேல் இருக்கும் மெழுகினைக் கரைக்கும்.

3. இறுதியாக பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு கரைசலை அடிக்கும்போது பூச்சிகளை நன்றாகக் கட்டுப்படுத்த முடியும்.

இனப்பெருக்கம்

நன்மை செய்யும் ஒட்டுண்ணி பூச்சிகளை இனப்பெருக்கம் செய்தல்

குளவி வகையைச் சேர்ந்த ட்ரைகோகிராமா, முட்டை ஒட்டுண்ணியாக செயல்படுகிறது. இது தீமைசெய்யும் பூச்சிகளின் முட்டைகளின் மேல் 20 முட்டைகள் வரை இடக்கூடியது. ட்ரைகோகிராமா முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் தீமைசெய்யும் பூச்சியின் முட்டையை உண்டு முட்டையை அழித்துவிடுகிறது.

ட்ரைகோகிராமா முட்டைகள் உள்ளீடு செய்யப்பட்ட அட்டைகள் (Tricho card) ½ CC 9,000 முட்டை, 1 CC 18,000 முட்டை என பல அளவுகளில் வேளாண் பல்கலைகழகங்கள் விற்பனை செய்கின்றன. எனினும் விவசாயிகளுக்கு போதுமான அளவுக்கு கிடைப்பதில்லை. எனவே இந்த ட்ரைகோ அட்டையை விவசாயிகளே உற்பத்திசெய்ய முயற்சிக்க வேண்டும்.

ட்ரைகோ அட்டை

ட்ரைகோ அட்டை தயாரிக்கும் முறை

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

சாதாரணமாக புளுத்துப்போன அரிசியில் நிறைய புழுக்களை காணமுடியும், இந்த புழுக்கள் கோர்சைரா செபாலோனிகா (Corcyra cephalonica - Rice Moth) நெல் அந்துப்பூச்சிகளின் இளம் பருவமாகும். இந்தப் பூச்சியின் முட்டைகளில் ட்ரைகோகிராமா நன்றாக பெருக்கக்கூடியவை. இந்த பூச்சியின் வாழ்க்கை சுழற்சி 35 முதல் 40 நாட்களாகும்.

1. ஒரு தட்டை எடுத்துக்கொண்டு அதில் இரண்டரை கிலோ சோளம் அல்லது கம்பை ரவை போல நொறுக்கிப் போடவேண்டும். இந்தத் தட்டை மெல்லிய துணியினால் மூடி துணியைக் கட்டி வைக்கவேண்டும்.

2. அதில் 3-4 நாட்களில் கோர்சைரா புழுக்கள் வெளிவந்துவிடும்.

3. புழுக்கள் வெளிவந்த நாளில் இருந்து 25 நாட்களில் புழுக்கள் முழு வளர்ச்சியடைந்திருக்கும்.

4. பின்னர் இந்த முழு வளர்ச்சியடைந்த புழுக்கள் கூட்டுப்புழுவாக மாறி 5 நாட்கள் வரை கூட்டுப்புழுவாக இருக்கும்.

5. கூட்டுப்புழுவில் இருந்து வெளிவரும் அந்துப்பூச்சிகள் 5 நாட்கள் வரை உயிருடன் இருக்கும்.

6. முட்டைப்பருவம், புழுப்பருவம், கூட்டுப்புழுப் பருவம், வளர்ந்த பூச்சி என இந்த அனைத்து பருவங்களையும் கடக்க 35 நாள்கள் வரை ஆகும்.

7. இந்த வளர்ந்த பூச்சிகளைக் காலை 6 முதல் 7 மணி வரை சேகரித்து இனச்சேர்க்கைக்கு விட வேண்டும்.

8. இனச்சேர்க்கைக்கு விடப்படும் பூச்சிகள் தொடர்ந்து நான்கு நாட்கள் வரை முட்டையிடும்.

9. இந்த முட்டைகளைச் சேகரித்து பசை தடவப்பட்ட அட்டைகளில் பரப்ப வேண்டும்.

10. இப்படி தயார் செய்யப்பட்ட அட்டைகளை ஒட்டுண்ணி உள்ளீடு செய்வதற்காக பாலிதீன் பைகளில் வைக்கவேண்டும்.

11. இந்தப் பைகளில் வேளாண் பல்கலைகழகங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட ட்ரைக்கோ அட்டையில் இருந்து வெளிவந்து, இனச்சேர்க்கையை முடித்த ட்ரைகோகிராமா பூச்சிகள் முட்டையிட தயாராக உள்ளன.

12. இந்த ஒட்டுண்ணி ட்ரைகோகிராமா பூச்சிகள் நெல் அந்துப்பூச்சிகளின் முட்டைகளின் மேல் தனது முட்டைகளை இடுகின்றன.

13. ட்ரைகோகிராமா குளவிகளின் புழுப்பருவம் மற்றும் கூட்டுப்புழு பருவம், நெல் அந்துப்பூச்சி முட்டையிலேயே முடிந்து 6 நாட்கள் கழித்து குளவிகள் வெளிவருகின்றன.

14. இந்த வளர்ந்த குளவிகளின் வாழ்நாள் 5 நாட்கள் வரை இருக்கும். இவ்விதம் குறைந்த அளவு ட்ரைகோ அட்டைகளை வாங்கி அதைப் பெருக்கி அதிக குளவிகளை உருவாக்க முடியும்.

15. மேற்கண்டவற்றை செயல் முறையாக செய்யும்போது சில தொழில் நுட்ப பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும், முட்டைகளின் மேல் நோய்த் தாக்குதல், வேறு ஒட்டுண்ணிப் பூச்சிகளின் தாக்குதலும் ஏற்படக்கூடும். ஆயினும் படிப்படியாக இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும்.

ட்ரைகோ அட்டை தயாரிக்கும் முறை

மேலும் தகவல்களுக்குக் கீழ்கண்ட வெப்சைட்டில் பார்க்கவும், இதில் பல ஒட்டுண்ணிகளை இனப்பெருக்கம் செய்யும் முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

http://keralaagriculture.gov.in/htmle/bankableagriprojects/ld/biopesticide.htm

பூச்சிகளைக் கொல்லும் நுண்ணுயிர்கள்

வைரஸ்

NPV வைரஸ் (Nuclear Polyhedrosis Virus) இது மருந்தாக விற்கப்படுகிறது. இது புழுக்களைக் கொல்லும் வைரஸ் ஆகும். இந்த மருந்தை உண்ட பூச்சிகளின் உடலில் வைரஸ்கள் பெருகி உடலை உப்ப வைக்கிறது. இந்த புழுக்கள் பயிரின் உச்சிப்பகுதிக்கு வந்து தலைகீழாகத் தொங்கி இறந்து கிடக்கும்.

ஒரு குறிப்பிட்ட வகை வைரஸ், ஒரு குறிப்பிட்ட வகை புழுவை மட்டுமே தாக்கும். எனவே பூச்சித் தாக்குதலுக்கு ஏற்ப வைரஸ் மருந்துகளை வாங்க வேண்டும். உதாரணமாக பருத்தியின் பச்சைக் காய்ப்புழுவை அழிக்க ஹெச்.ஏ.என்.பி. தெளிக்கலாம், படைப்புழுவை அழிக்க எஸ்.என்.பி வைரஸ் தெளிக்கலாம்.

பேக்டீரியா

பேசில்ஸ் துரிஞ்சியன்சிஸ் (bacillus thuringiensis-BT) என்ற பேக்டீரியா பூச்சிகளின் உடலில் புகுந்து அதற்கு நோயை ஏற்படுத்தி பூச்சிகளை அழிக்கக்கூடியது. இந்த பாக்டீரியா பல காலமாக பயன்பாட்டில் உள்ளது.

இந்த பேக்டீரியா திரவ வடிவில் சந்தையில் கிடைக்கிறது, தண்ணீரில் கலந்து செடிகளில் தெளித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

பருத்தியில் இந்த வகை பாக்டீரியாவின் மரபணுவை உட்புகுத்தி பூச்சிகளால் தாக்கப்படாத BT பருத்தி ரகத்தை உருவாக்கினர். ஆயினும் BT பருத்தியால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை, BT பருத்தி பூச்சிகளுக்கான எதிர்ப்புத் திறனை சிறிது காலத்திலேயே இழந்து விட்டது. இந்தப் பருத்தியில் விதையையும் விவசாயிகளே உற்பத்தி செய்துகொள்ள இயலாது, உரம் மற்றும் தண்ணீர் அதிகம் தேவைப்படும்.

பூஞ்சைகள் (Fungus)

பிவேரியா, மெட்டாரைசிம், வெர்டிசிலியம், நுமேரியா போன்ற பூஞ்சைகள் பூச்சிகளுக்கு நோயை உண்டாக்கக் கூடியவை. பூச்சிகள் அதிகம் காணப்படும் இடங்கள் மற்றும் இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் இந்த பூஞ்சனங்களைத் தெளித்து விட்டால் பூஞ்சனங்களால் பூச்சிகள் தாக்கப்பட்டு இறந்து விடுகின்றன.

உதாரணமாக காண்டாமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்த பூஞ்சைகள் பயன்படுகிறது. இவ்வண்டுகளின் புழுக்களும், கூட்டுப்புழுக்களும் சாணக் குப்பையிலேயே காணப்படுகிறது. அந்த சாணக் குப்பையில் பிவேரியா (Beauveria bassiana) என்ற பூஞ்சணத்தைத் தூவிவிடும்போது அதில் பூஞ்சை நன்கு வளர்ந்து விடுகிறது. இந்த காண்டாமிருக வண்டுகளின் லார்வாக்கள் பூஞ்சையால் தாக்கப்பட்டு இறந்து விடுகின்றன.

இவ்வகைப் பூஞ்சணங்கள் புகையான், பச்சைத் தத்துப்பூச்சி, கருப்பு வண்டு, மக்காச்சோள குருத்துப்புழு, பச்சைக்காய்ப் புழுக்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.

பூச்சிகளை மீண்டும் கவனிங்க!

பயிர்களை நாள்தோறும் கவனமாக கண்காணிக்க வேண்டும். அதில் காணப்படும் பூச்சிகளைச் சேகரித்து அது எந்த வகையைச் சேர்ந்தது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

பூச்சிகளைக் கைளால் சேகரிக்கலாம். அபாயகரமான பூச்சிகள் மற்றும் வேகமாக செல்லும் பூச்சிகளைப் பிடிக்க பூச்சிபிடிக்கும் வலையைப் பயன்படுத்தலாம். சிறிய பூச்சிகளைப் பார்க்க ஒரு உருப்பெருக்கி (10x lense) யைப் பயன்படுத்தலாம். மெல்லிய பாலிதீன் கவர்களில் பூச்சிகளைப் போட்டு அவை தப்பி விடாதபடி பாலிதீன் கவரைக் கட்டிவிடவேண்டும். பின்பு பூச்சிகளை லென்ஸ் வைத்துப் பார்த்து அவைகளின் உருவ அமைப்பினை வரைந்து அது எந்தப் பூச்சி என்பதனை அடையாளம் காணவேண்டும். தொடர்ந்து பழகப்பழக பூச்சிகள் நமது நண்பர்கள் ஆவார்கள், பூச்சிகளை அடையாளம் காண அனுபவசாலிகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஒரு சில பூச்சிகளைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.


பூச்சிகளை தொடர்ந்து கவனிப்போம்...