கடந்த வாரம் ஜூன் 24ஆம் தேதியன்று நிகழ்ந்த தியானலிங்க பிரதிஷ்டை தின கொண்டாட்ட நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே! கூடவே, கொண்டாட்டத்தில் நேரடியாக கலந்துகொண்டவர்களின் பகிர்வுகளும்!

காலை 6மணிக்கு “ஒம் நம ஷிவாய” உச்சரிப்புடன் தொடங்கியது 18ஆம் ஆண்டு தியானலிங்க பிரதிஷ்டை தினம். பருவநிலையில் ஒரு மாற்றம், தூறல்கள் தூற அடர்ந்த மேகங்கள் எப்போதும் கூரையின் மேல் படர்ந்து நிற்க பசுமையின் கூடாரமாய் காணப்பட்டது தியானலிங்க வளாகம். காலை முதலே ஆன்மீக அன்பர்களின் வரவு சற்று அதிகமாகவே காணப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் உற்சாகமாக காணப்பட்டனர். உலகம் முழுவதுமிருந்து பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். ஜாதி, மதம், இனம், மொழி மற்றும் கலாச்சாரம் கடந்து பலதரப்பட்ட மக்களை ஒரே இடத்தில் காணமுடிந்தது.

நிகழ்ச்சிகள்

சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா, ஈஷா சமஸ்க்ருதி மாணவர்களின் இசை நிகச்சிகள் அவ்வப்போது நடந்தேறிய வண்ணம் இருந்தது. சூஃபி இசை, சீக்கிய இசையான ஷாபத் கீர்தன், கிறிஸ்தவ இசை, புத்த மந்திர உச்சாடனங்கள் மற்றும் சமஸ்க்ருத கீர்த்தனைகள் இடம்பெற்றிருந்தன, இவற்றுடன் சர்வ மத பிரார்த்தனைகளும் நடைபெற்றன. காலை முதல் நடந்தேறிய பற்பல நிகழ்ச்சிகள் மாலை நாத ஆராதனையுடன் முடிவடைந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சில தியான அன்பர்களின் பகிர்வுகள்

ஈஷா குறித்து நான் கேள்விப்பட்டது ஒரு விபத்து என்று தான் சொல்வேன், Facebookல் தற்செயலாக சத்குருவின் வீடியோ பதிவு ஒன்றை கண்டேன், அவரின் நேர்த்தியான பதில் என்னை மிகவும் கவர்ந்தது. அவரின் பேச்சால் ஈர்க்கப்பட்டு இங்கு வந்துள்ளேன், முதல்முறையாக இன்று தியானலிங்கத்தை தரிசித்தேன், அதுவும் 18ஆம் ஆண்டு கொண்டாட்டங்களின் போது, இது ஒரு அற்புதமான அனுபவம். நாங்கள் உள்ளே சென்றபோது வேத மந்திர உச்சாடனங்கள் நடந்தேறின. வியக்கத்தக்க வகையில் அவர்களின் குரல்வளம் இருந்தது, கேட்க மிகவும் இனிமையாக இருந்தது. இன்னும் பல முறை வரவேண்டும் என்று தோன்றுகிறது.

-ஸ்மித், ஆஸ்திரேலியா.

இது எனது முதல் ஈஷா யோக மைய விஜயம், இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது இன்று 18 ஆண்டு பிரதிஷ்டை தினம் என்று. இதுவரை நான் யோகா குறித்து எதுவும் கற்றதில்லை, இதுமாதிரியான இடங்களுக்கு முன்பு சென்றதுமில்லை. நாங்கள் உள்ளே சென்ற அந்த நொடி ஒரு வகையான அதிர்வலை மற்றும் சக்தி இருப்பதை தெளிவாக உணர்ந்தோம். அது ஒரு அற்புதமான தெய்வீக அனுபவம் வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை, நான் வெளியில் வரும்போது என் முகத்தில் ஒரு புன்னகையை என்னால் உணரமுடிந்தது. வாழ்க்கையில் இது மாதிரி எப்போதும் நடந்ததில்லை, என்னுள் ஒரு சாந்தத்தை உணர்ந்தேன். சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா, இசை குழுவின் ஆராதனையைக் கேட்கும்போது சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை மெய்மறந்து விட்டேன், கண்களில் கண்ணீர் வந்து விட்டது, திடீர் என்று உணர்ச்சிகள் மேலோங்கும்போது ஒரு வகையான ஆனந்தம் என்னுள். மீண்டும் மீண்டும் வர வேண்டும் என்று தோன்றுகிறது. மிகவும் நன்றாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள், சர்வ மதமும் இங்கு சங்கமித்திருப்பது வேறு எங்கும் இல்லாத ஒன்று, மிகவும் பாரட்டத்தக்கது.

-விஜயா-ஆஷிஷ் தம்பதியர், பூனே.

கடந்த 10 ஆண்டுகளில் பல முறை ஈஷா யோக மையத்திற்கு வந்துள்ளேன், இன்று விசேஷமான நாள். தியானலிங்கத்தின் 18 ஆண்டு பிரதிஷ்டை தினம். இதற்கு எப்போதுமே என் மனதில் ஒரு உயரிய இடமுண்டு, நம் உள்நிலையோடு தொடர்பில் இருந்து பிரதிபலிப்பதற்கு இது ஒரு அற்புதமான இடம். சிறப்பான இசை மற்றும் எப்போதும் நெகிழ்ச்சி தரக்கூடிய அந்த வளைவுக்கூரை, இது ஒரு அற்புதமான இடம். நிறைய வெளிநாட்டவரை காணும்போது ஈஷா உலகம் முழுவதும் பரவி வருவது கண்கூடாக தெரிகிறது, அதை எண்ணும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

-எமிலி மேனோன், ஆஸ்திரேலியா.

இன்று காலைதான் திடீர் என்று நினைவுக்கு வந்தது இன்று ஜூன் 24, தியானலிங்கத்தின் பிறந்த நாள் என்று, உடனே தயாராகி இங்கு வந்தேன், இந்த பருவநிலை மாற்றம் இதற்காகவே அமைந்தார் போல் இருந்தது, இந்த மழைச் சாரல் அற்புதமாக உள்ளது. ஒவ்வொரு முறை வரும்போதும் ஒரு மாற்றத்தைக் கண்கூடாகக் காண்பேன். இந்த முறையும் சில மாற்றங்களைக் காண நேரிட்டது. தியானலிங்கத்தில் இன்று நடந்த சர்வ மத பிரார்த்தனை என்னை மிகவும் கவர்ந்தது. புத்த மத பிரார்த்தனையாகட்டும் அல்லது சூஃபி இசையாகட்டும், சீக்கிய வழிபாட்டு பாடலாகட்டும் மிகுந்த பரவசத்தை என்னுள் ஏற்படுத்தியது. இரண்டு மணிநேரம் உள்ளே அமர்ந்திருந்தேன். அந்த சிவனே நம்மை ஆசீர்வதிப்பது போல, மழைச் சாரல் இது ஒரு அற்புதமான அனுபவத்தை தருகிறது. எல்லோரும் இந்த நிலையில்தான் இருப்பார்கள் என்று நம்புகிறேன். மழையாக எல்லோரையும் இந்த அருள் சேரட்டும் என்று சத்குருவிடம் பிரார்த்திக்கிறேன்.

-மஹேஷ்வரி, கோயம்புத்தூர்.