தேவியின் முன் துவங்கட்டும் திருமண வாழ்வு
ஒரு கொண்டாட்டமாக செய்யப்பட்டு வந்த திருமணங்கள் இப்போது சடங்குகளின் அர்த்தம் புரியாத காரணத்தால் சம்பிரதாய நிகழ்வாக களையிழந்து வரும் வேளையில், லிங்கபைரவி திருமணங்கள் நம் கலாச்சாரத்தின் அழகை மீட்டெடுப்பதோடு ஆன்மீக வாய்ப்பாகவும் அமைகிறது. இங்கே லிங்கபைரவியில் நிகழும் திருமணங்கள் குறித்த சத்குருவின் உரையும், திருமண வீட்டாரின் அனுபவமும் உங்களுக்காக!
 
 

ஒரு கொண்டாட்டமாக செய்யப்பட்டு வந்த திருமணங்கள் இப்போது சடங்குகளின் அர்த்தம் புரியாத காரணத்தால் சம்பிரதாய நிகழ்வாக களையிழந்து வரும் வேளையில், லிங்கபைரவி திருமணங்கள் நம் கலாச்சாரத்தின் அழகை மீட்டெடுப்பதோடு ஆன்மீக வாய்ப்பாகவும் அமைகிறது. இங்கே லிங்கபைரவியில் நிகழும் திருமணங்கள் குறித்த சத்குருவின் உரையும், திருமண வீட்டாரின் அனுபவமும் உங்களுக்காக!

சத்குரு:

இந்திய கலாச்சாரத்தில் திருமணம் என்பது சக்தி நிலையில் இரண்டு நபர்களை ஒன்று சேர்ப்பது. உடல், மனம், உணர்ச்சிகள் இவற்றில் இணைவது மட்டுமல்லாமல் அவற்றைக் கடந்து உச்ச நிலை அடைவதற்கான படிக்கல்லாக திருமணம் இருக்கிறது. பொதுவாக நமது பாரம்பரியத்தில் குறிப்பிட்ட விதத்தில் புரிதலும், விழிப்புணர்வும் கொண்ட ஒருவர் மணமக்களின் சக்தியை திருமணத்தின்போது பிணைத்து வைத்தார்.

நாங்களும் எங்கள் சம்மந்தி வீட்டாரும் எங்கள் இல்லத் திருமணம் நிகழ்வது லிங்கபைரவியில்தான் என முடிவு செய்துகொண்டோம்.

லிங்கபைரவியில் மணமக்கள் தேவியின் முன் ஒன்று சேர்கிறார்கள். தேவியின் உக்ரமும், தீவிரமும் எத்தன்மையது என்றால்... உடல், உள்ளம், உணர்ச்சி, சக்தி நிலையில் இருக்கும் எல்லைகளை தளர்த்தி இரண்டு நபர்கள் ஒருமை உணர தேவையான சூழலை உருவாக்குகிறாள்! முழுமையான, உணர்ச்சிமிக்க ஒரு உறவினை இது உறுதி செய்கிறது.

லிங்கபைரவியில் திருமணம் செய்த மணமகளின் தந்தையின் அனுபவம்!

திரு.M.P.செந்தில்குமார், கோபி:

நாங்களும் எங்கள் சம்மந்தி வீட்டாரும் எங்கள் இல்லத் திருமணம் நிகழ்வது லிங்கபைரவியில்தான் என முடிவு செய்துகொண்டோம். தேதி முடிவானவுடன் ஈஷா சென்று லிங்கபைரவி அலுவலகத்தில் தெரிவித்து தேவையான ஏற்பாடுகளைச் செய்தோம். திருமண நாளன்று ஆசிரமவாசிகளுடன் சேர்ந்து உண்ணும் "அன்னதான" திட்டத்திற்கு எங்களது நன்கொடையினை செலுத்தினோம்.

ஏப்ரல் 3, வெள்ளிக்கிழமை எங்கள் மகளின் திருமண நாள். நாங்கள் பலமுறை ஈஷாவுக்கு சென்றுள்ளோம். ஆனால் ஏறத்தாழ 500 பேர் கொண்ட ஒரு கூட்டத்தினை கூட்டிச் சென்று அங்கு தங்க வைத்த அனுபவம் எனக்கு இல்லை. எனவே, எப்படி நடக்கும் என்று தெரியாமல் அங்கு சென்றோம். எங்களுக்கு முன்னரே கோபியிலிருந்து தன்னார்வ தொண்டர்கள் சிலர் அங்கு சென்று, வந்தவர்களை வரவேற்று, எவ்வளவு பேர் இரவு தங்க வருவார்கள் என்று கணக்கிட்டு முன்பதிவு செய்த அறைகளை ஒதுக்கி அவரவர் அறைகளுக்கு அழைத்து சென்றார்கள். அதுபோல் விழா முடிந்து அனைவரும் திரும்பும் வரை உடனிருந்து உபசரித்தார்கள்.

லிங்கபைரவி அலுவலகத்தின் தன்னார்வத் தொண்டர்கள் முந்தைய நாள் இரவே எங்களைச் சந்தித்து, தேவியின் சன்னதியில் திருமணம் எவ்வாறு நடக்கும் என்பதனை விளக்கினார்கள்.

காலையில், தேவியின் சன்னதியில் புதுமணத் தம்பதிகள் விளக்கேற்றி விளக்கு சேவா முடித்த பின்னர், தேவியின் திருப்பாதத்தில் சமர்ப்பித்து திருமாங்கல்யம் எடுத்துக் கொடுக்கப்பட்டது. மாங்கல்யம் அணிவிக்கப்பட்டு மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டனர். காலை 7.40 மணி வாக்கில் ஆரத்தியும், அதன் பின்னர் சர்ப்ப சேவாவும், தாக நிவாரணமும் அற்புதமாக நிகழ்ந்தது. அனைத்து செயல்களையும் அன்போடும் பக்தியோடும் அதேசமயத்தில் துல்லியமாகவும் நிகழுமாறு லிங்கபைரவியின் தன்னார்வத் தொண்டர்கள் பார்த்துக் கொண்டது என் மனத்தினை நெகிழச் செய்துவிட்டது. இது மட்டுமல்ல, வந்திருந்த அனைவரும் அமைதி காத்து தேவியின் திருவருளில் திழைத்தது எனக்கு பேரானந்தமாக இருந்தது.

இதன் பின்னர் தன்னார்வத் தொண்டர்கள் வழிநடத்த உறவினர்கள் தீர்த்த குளம், தியானலிங்கம் சென்று வழிபாடு செய்து வந்தார்கள்.

அனைத்தையும் விட நடந்த அடுத்த நிகழ்வு, எங்கள் உறவினர்களை பிரமிக்க வைத்தது. 10 மணிக்கு "அன்னதானம்" என்று அழைத்திருந்தோம். விருந்து என்று சொல்லாமல் "அன்னதானம்" என்று சொன்னதே அவர்களுக்கு புதியதாக இருந்தது. புதிய பிக்ஷா ஹால் முன்பு நின்று கைகூப்பி அனைவரையும் வரவேற்று, அமர வைத்ததோடு, சமைத்திருந்த உணவினை முன்கூட்டியே பரிமாறி வைக்காமல், அனைவரும் அமர்ந்த பின்னர் தேவையற்ற வார்த்தை பரிமாற்றங்கள் செய்யாமல் அன்போடு உணவினை பரிமாறி உபசரித்த தன்மையினை வாய்விட்டு பாராட்டாதவர்களே அங்கில்லை.

என்னோடு பலமுறை ஈஷா வந்திருந்த நண்பர்களும், உறவினர்களும், முதல்முறையாக வந்தவர்களும் ஈஷா என்பது பிரம்மாண்டமான கட்டிடம் மட்டுமல்ல, அன்பும் அருளும், பண்பும் பணிவும், துல்லியமான திட்டமிடுதலுமான மிகப் பெரிய சக்தியும் சேர்ந்த இடம் என்பதை உணர்ந்தார்கள். அங்கே வந்திருந்த, யோக வகுப்புகள் செய்யாத பலரும், அன்னதானம் பற்றி கேட்டு, தாங்களும் அன்னதானம் அளிக்க ஆசைப்படுவதாகத் தெரிவித்தனர்.

இது மட்டுமல்ல, அடுத்த நாள் கோபியில் நடந்த வரவேற்பு விழா நிகழ்ச்சியிலும் கோபியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டு, அதே தன்மையோடு வந்தவர்களையும் உபசரித்து, கோபியில் உருவாகிவரும் லிங்கபைரவி கோவில் மாடலையும் தேவியின் திருவுருவப் படத்தினையும், அழகாக அங்கே அலங்கரித்து மீண்டும் ஒரு ஈஷா விழாவினை மக்கள் உணருமாறு செய்துவிட்டார்கள்.

குறிப்பு:

திருமண வைபவம் பைரவி ஸ்துதி உச்சாடனைகளை உள்ளடக்கியது. ஒருவர் தேவியின் அருள் பெரும் வண்ணம் திறந்த, ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்க இது உதவி செய்கிறது. தொடர்ந்து திருமணமானது பைரவி ஷடகம், உச்சாடனையுடன் நிகழ்கிறது. இது ஒரு அதிர்வு மிக்க, சக்தி மிக்க உச்சாடனை. திருமணம் ஒருவரின் நீண்ட ஆயுளுக்காக இன்னொருவர் அர்ப்பணிக்கக் கூடிய மாங்கல்ய பல சூத்ராவும், நலவாழ்வினை மேம்படுத்தும் சமர்ப்பணம் ஆகியவற்றை உள்ளடக்கியது. அதோடு தேவிக்கு அபிஷேகம் அர்ப்பணித்து அவளின் அளப்பரிய கருணையின் பலன்களை பெறலாம்.

லிங்கபைரவி முன்னிலையில் நடக்கும் திருமணங்களின் சிறப்பைப் பற்றி தெரிந்துகொள்ள: http://tamilblog.ishafoundation.org/lingabhairavi-mun-thirumanam-enna-sirappu/
லிங்கபைரவியில் சஷ்டியப்தபூர்த்தியும் சதாபிஷேகமும் செய்யலாம். 60ம் கல்யாணத்தின் சிறப்பை பற்றி தெரிந்துகொள்ள: http://tamilblog.ishafoundation.org/arubatham-kalyanam-etharkaga/
மேலும் தொடர்புக்கு : 94864 94865, 94433 65631

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1