கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா: ஒரு நாள் காலை ஏழு மணி இருக்கும். ஈஷாவில் சுற்றி வந்து கொண்டிருந்த நான் லிங்கபைரவி சன்னதியில் நுழைந்தேன். அவள் தன்னுடைய பத்துக் கைகளில் ஒரு கையை நீட்டி, “எங்கே? சமர்ப்பணம் எங்கே?” என்று கேட்பதை மிகத் துல்லியமாக உணர்ந்தேன்.

இங்கே ஒரு விளக்கத்தைத் தந்துவிடுவது அவசியம். ஏதாவது ஒரு பிரார்த்தனையை முன்வைக்கும்போது சமர்ப்பணம் என அழைக்கப்படும் காணிக்கைப் பொருள் வாங்கிக் கொண்டு அவளைக் காணச் செல்வேன். மற்ற கோயில்களில் இருக்கும் அர்ச்சனை தட்டைப் போன்றதுதான் அது. என் பிரார்த்தனையை சொல்லிவிட்டு வருவதும் அவள் அதனை நிறைவேற்றித் தரும்போது பதிலுக்கு இன்னொரு சமர்ப்பணம் அர்ப்பணித்து அவளுக்கு நன்றி தெரிவிப்பதும் என்னுடைய வழக்கம்.

இது கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பதாய் ஆகாதா என்று சிலர் கேள்வி கேட்கலாம். இல்லை, இது உரிமை சார்ந்த மனநிலை. என் பாட்டி ஏதாவது வேண்டுதல் இருந்தால் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு தயிர்சாதம் படைப்பார். அதை ஒரு பாத்திரத்தில் வைத்து நைவேத்யம் செய்யமாட்டார். ஒரு துணியில் பொதியாகக் கட்டி அதை ஒரு குச்சியில் கோர்த்து ஆஞ்சநேயருக்குப் படைப்பார். அதாவது இவருடைய வேலையை செய்து முடிப்பதற்காக ஆஞ்சநேயர் அந்தப் பொதிச்சோற்றை எடுத்துக்கொண்டு புறப்பட வேண்டுமாம். வழியில் வயிறு பசித்தால் எங்கேனும் அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளலாமாம். தோளில் தூக்கிச் செல்ல வசதியாய் அது ஒரு குச்சியில் கோர்க்கப்பட்டிருக்கும். இது நம்பிக்கையா, உண்மையா, மூடநம்பிக்கையா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். இந்த வழிபாடு கடவுளுடன் வளர்த்துவிடும் உறவையும் உரிமையையும் என்னென்பது? அதுபோல் என்ன கோரிக்கை வைத்தாலும் ஒரு சமர்ப்பணத் தட்டை காணிக்கையாக்குவது என் வழக்கம்.

ஒருமுறை மத்திய அரசு சார்ந்த துறை ஒன்றில் ஓர் உரிமைக்காக விண்ணப்பித்திருந்தேன். அது கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்து சமர்ப்பணம் அர்ப்பணித்தாயிற்று.

இது நடந்து ஓரிரு மாதங்களுக்குப் பிறகுதான் நான் முன்னர் சொன்ன அந்த அதிகாலை அனுபவம். என் மனதில் ஒரே நேரத்தில் இரண்டு பதில்கள் உருவாயின. முதல் பதில் என்னவென்றால், நான் பணத்தை எல்லாம் அறையில் வைத்துவிட்டு நடைப்பயிற்சிக்காக வந்திருக்கிறேன். எனவே சமர்ப்பணம் கொண்டு வரவில்லை. இன்னொன்று, நான் உன்னிடம் கோரிக்கை வைத்த காரியம் இன்னும் முடியவில்லை. இந்த இரண்டு எண்ணங்களும் மாறி மாறி மனதுக்குள் வந்து போயின.

அறைக்குத் திரும்பினேன். என்னுடைய கைக்கணினியை திறந்தேன். அந்த உரிமைக்காக நான் விண்ணப்பித்த செய்தியையே அறிந்திராத ஒருவர் தன்னுடைய அலுவல் ஒன்றுக்காக அந்தத் துறையின் வலைத்தளத்திற்கு சென்றிருக்கிறார். அந்த வலைத்தளத்தில் என்னுடைய உரிமம் கிடைத்ததற்கான தரவுகள் வெளியாகி இருக்கின்றன. அது எனக்குத் தெரியாது. அதை சற்று நேரத்திற்கு முன்புதான் அவர் மின்னஞ்சலில் எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார். எனவே வேலையை முடித்துக் கொடுத்துவிட்டுதான் அந்த சமர்ப்பணம் எங்கே என்று தேவி கேட்டிருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டேன்.

எனக்கு மட்டுமல்ல, என்னுடன் தொடர்புள்ள நூற்றுக்கணக்கானவர்கள் இதுபோல் அவர்களுக்கு நேர்ந்த அனுபவங்களை எனக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.