மா கம்பீரி : "மன்னியுங்கள், இவ்விடம் ஜகி அவர்களுக்காக ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது," என்று மென்மையாக அந்த தன்னார்வத் தொண்டர் சொன்னார். "என்ன அநியாயம் இது," என்று எனக்குள் முனுமுனுத்தபடி, காரை நிறுத்த வேறு இடம் தேடிச் சென்றேன். என் அக்காவுடைய ஆஸ்துமாவிற்கு யோகா உதவியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புதான் என்னை யோகா வகுப்பிற்கு அழைத்து வந்திருந்தது. அவளை வகுப்பிற்குக் கூட்டிவந்து விடுவதும் மீண்டும் அழைத்துச் செல்வதும் என் கைகளுக்கு எப்படியோ வந்து சேர்ந்ததால் நானும் வகுப்பில் கலந்துகொள்ள நேர்ந்தது. வெறும் பத்தொன்பது வயதில், விமான பைலட்டாக பணிபுரிய பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த எனக்கு, யோகா வகுப்பில் அப்படியொன்றும் நாட்டமிருக்கவில்லை.

அதனால், கடனே என்று வகுப்பில் அமர்ந்திருந்தேன். ஜிம் பயிற்சியாளர் போன்ற உடலுடன் ஒருவர் வந்து யோகா போஸ் கற்றுக்கொடுப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். சில நிமிடங்களுக்குப் பிறகு, தாடியுடன் வெள்ளை குர்தாவும் வேஷ்டியும் அணிந்த ஒருவர், மிக மென்மையாக நடந்து வருவதைக் கண்டேன். எனக்கு சொல்லமுடியாத ஏமாற்றம். சுவாரசியமற்ற ஆரம்பம். சத்குருவின் குரல் என் கவனத்தை ஈர்ப்பதாய் இருந்தபோதும், நான் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், அடுத்தநாள் சற்று சீக்கிரமாகவே வந்து அவர் காருக்காக ரிசர்வ் செய்யப்பட்டிருந்த இடத்தில் என் காரை நிறுத்தினேன்! அவர் இடத்தை அபகரித்த திருப்தியுடன் வகுப்பில் அமர்ந்தேன். ஆனால், இந்த இரண்டாவது நாள் இருவருக்குமே வித்தியாசமாக இருந்தது. சாதாரணமாக அரட்டை அடித்துக்கொண்டே திரும்பச்செல்லும் சகோதரிகளான எங்களுக்கிடையே அன்று அதிக வார்த்தை பரிமாற்றங்கள் இல்லை. மூன்றாவது நாள் அவர் கார் நிறுத்துமிடம் காலியாக இருந்தும், நான் அதை ஆக்கிரமிக்கவில்லை. அன்று அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் முழு கவனத்துடன் கேட்டேன். அன்று வகுப்பு முடிந்ததும், நான் சற்றும் எதிர்பாராத விதத்தில் சத்குரு என்னிடம் வந்து, என்னுடைய விமானிப் பயிற்சி அனுபவங்கள் குறித்து சகஜமாக பேசிச் சென்றார்.

அன்று இரவு நான் தூங்கவில்லை.

ஆன்மீகப் பாதை பற்றியும் ஞானோதயம் பற்றியும் குரு பற்றியும் எனக்கு ஒன்றுமே தெரியாது. சத்குரு யாரென்றே தெரியாது, ஆனால் காலகாலமாக தெரிந்தவர் போன்ற ஒரு உணர்வு எனக்குள் ஏற்பட்டது. என்னவாக இருந்தாலும், இது எப்படிப்பட்ட பாதையாக இருந்தாலும், அதுதான் என் வாழ்க்கை என்பது அன்று எனக்குள் உறுதியானது. ஆனால் எப்படி என்பது மட்டும் புலப்படவில்லை. அன்று முதல், நான் துடிப்பாக தன்னார்வத் தொண்டு செய்யத் துவங்கினேன். இளவயதாக இருந்ததால், இப்பாதையில் செல்வதென்றால் என்ன என்பதை நான் அறிந்திருந்தேனா என்பதில் என் பெற்றோருக்கு வருத்தம் இருந்தது. தெளிவுபெற, சத்குருவை சந்தித்தார்கள். இந்த சந்திப்பிற்குப் பின், என்னை மூன்று மாத இடைவெளி எடுத்துக்கொள்ள சொன்ன சத்குரு, உண்மையில் நான் இதைத்தான் விரும்புகிறேனா என்று என்னைப் பார்க்கச் சொன்னார். என் பெற்றோர் என்னை இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்தார்கள். என் விருப்பம் உண்மையானதாய் இருந்தது. ஹோல்னெஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தேன்.

என் முடிவுக்கு மரியாதை அளித்து, என் பயணத்திற்கு ஆசிகள் வழங்கிய என் பெற்றோருக்கு நன்றியுள்ளவளாய் இருக்கிறேன்.

யோக ஆசிரியராக இருந்தவர், குருவானார்

90 நாள் ஹோல்னெஸ் நிகழ்ச்சியில் நான் சத்குருவிடம் கண்டவை, எனக்கும் அவருக்கும் இடையிலான உறவை பலவிதங்களில் முதிரச்செய்தது. ஒவ்வொரு நாளும் மிக வித்தியாசமாகத் தெரிவார். ஒவ்வொரு நாளும் முற்றிலும் மாறுபட்ட சக்தி அவரிலிருந்து வெளிப்படும். முதல் 30 நாட்களில், வெடித்துப்போக வைக்கும் அளவு சக்திவாய்ந்த புதுப்புது தியானங்களுக்கு அவர் வழிகாட்டினார். எங்களில் பலர், புலன்களைக் கடந்து உணரும் சில காட்சிகளைக் கண்டோம். 90 நாட்களின் முடிவில், நண்பர்களாக இருப்பதிலிருந்து சீடர்களாகவும், அதிலிருந்து பக்தர்களாகவும் நாங்கள் மாறியதற்கேற்ப, சத்குருவின் ஆளுமையும் யோகா ஆசிரியராக இருந்து ஞானியாகவும், அதிலிருந்து குருவாகவும் மாறியதை உணர்ந்தோம். எங்களில் பெரும்பாலானவர்கள் இதை வார்த்தையால் பகிர்ந்துகொள்ளாத போதிலும், எங்கள் கவனத்தில் இடம்பெறாமலேயே இந்த மாற்றம் நிகழ்ந்தது. 90 நாள் ஹோல்னெஸ் நிகழ்ச்சி முடிந்தபின், நான் தொடர்ந்து ஆசிரமத்திலேயே தங்கினேன். இதுவா அதுவா என்ற தேர்விற்கே எனக்குள் இடமில்லாமல் ஆகியிருந்தது. வெகு விரைவிலேயே, தேர்வே இல்லாமல் பாதையில் நடப்பது என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள நேர்ந்தது.

சமநிலையை உணர்ந்த சமயம்

ஹோல்னெஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு என் உயிர்சக்தி திறந்திருந்த விதத்தால், பரவசத்தின் உச்சத்தையும், துயரத்தின் பாதாளத்தையும் தினசரி ரீதியில் எனக்குள் எதிர்கொள்ள நேர்ந்தது. இருபது வயது இளம்பெண்ணிற்கு, சில சமயம் இது தாங்கமுடியா பாரமாகத்தான் இருந்தது. இப்படி நான் உச்சத்தை எட்டியிருந்த ஒரு நாளன்று, உதவிக்காக சத்குருவை தொலைபேசியில் அழைத்தேன். "இதிலிருந்து வெளியே வருவதற்கான கருவிகள் அனைத்தையும் உனக்கு நான் வழங்கியிருக்கிறேன்," என்று சொல்லி அழைப்பை துண்டித்தார். அவர் சொன்னதை சிந்தித்துப் பார்த்து, என் ஆன்மீக சாதனாவுக்கு ஒரு அட்டவணைப் போட்டுக்கொண்டேன். அடுத்த 48 நாட்களுக்கு, காலை பயிற்சிகளையும் உணவையும் முடித்துக்கொண்டு, நாங்கள் சிவாலயா என்று அழைத்த ஒரு வேப்பமரத்தடியில், ஒரு கல்லின் மீது, காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அமர்ந்தேன். அங்கு 3 மணிநேரம் "ஆஉம் உச்சாடணம்," அதன்பின் 3 மணிநேரம் சுக-க்ரியா, தொடர்ந்து சம்யமா தியானம் செய்தேன். மாலையில், பிரசென்ஸ் நேரத்திற்கும், பயிற்சி செய்வதற்கான நேரம் வந்த பிறகும்தான் என் கால்களை தரையில் வைத்தேன். இன்றுவரை, பலவிதமான சூழ்நிலைகளை உள்ளுக்குள் சமநிலையுடன் நான் கடக்கக் காரணம், அன்று நான் செய்த சாதனாவும் சம்யமாவும்தான். பாதையில் என்னை உறுதிப்படுத்திய திருப்புமுனையும் இதுதான். பிறகு, 1996ஆம் ஆண்டு பிரம்மச்சரிய தீட்சை பெற்றேன்.

விஜி அக்காவின் பிசிபேளேபாத்

ஆரம்பத்தில் நாங்கள் ஐந்துபேர்தான் ஆசிரமத்தில் இருந்தோம். நம் அன்பிற்குரிய "பாட்டி," விறகடுப்பில் எங்களுக்காக உணவு சமைப்பார். ஒரு சிறு செக்யூரிட்டி கொட்டகை, சமையலறையாகவும் உணவருந்தும் இடமாகவும் இருந்தது. பாட்டி சமையல் செய்கையில் நானும் அவருக்கு உதவுவேன். ஆசிரமத்தில் இருந்தபோதெல்லாம் சத்குருவும் எங்களுடன் காய்கறிகள் நறுக்க இணைந்துகொள்வார். ஒருமுறை எங்களுக்காக விஜி அக்கா பிசிபேளேபாத் சமைத்தார். பாராட்டை எதிர்பார்த்து, சத்குருவிடம், "பிசிபேளேபாத் எப்படி இருக்கிறது," என்று விஜி அக்கா கேட்டார். "ம்... சாம்பார் சாதம் அருமை!" என்று சத்குரு சொல்லிக் கேட்டவுடன் விஜி அக்காவின் முகம் சற்றே மாறத்தான் செய்தது. அவர்களின் வேடிக்கைப் பேச்சுக்களை நாங்கள் ரசித்து மகிழ்ந்தோம்.

sadhgurus-wife-vijjimaa-samadhi

ஆரம்பத்திலிருந்தே விஜி அக்காவும் நானும் நன்று பழகினோம். அவர் ஆசிரமத்தில் இருந்தபோதெல்லாம் நாங்கள் யோகப் பயிற்சிகளை சேர்ந்து செய்தோம். அவர் உடலை உதிர்த்த அந்த தினத்தில், நாள் முழுவதும் அவருடனேயே நான் இருந்தேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

1997 ஜனவரி 23ம் தேதி, ஒரு பௌர்ணமி நாள். அன்று சத்குரு என்னை அழைத்து விஜி அக்காவுடன் இருக்கச்சொன்னார். விஜி அக்கா ஒரு குறிப்பிட்ட ஆன்ம சாதனையில் இருந்ததால், அவர் சாதனாவில் ஈடுபட்டபோது நானும் அவருடன் தியானத்தில் அமர்ந்தேன். அவர் பிரம்மச்சாரிகளுக்கு உணவு சமைத்தபோது அவருக்கு உதவிசெய்தேன். பௌர்ணமி தினங்களில் அவர் எங்களுக்கு உணவு பரிமாறுவது வழக்கம். ஆனால், அன்று முதல்தடவை தியானம் முடித்ததும், நேராக சத்குருவின் மேஜைக்கு சென்ற அவர் ஒரு டைரியை எடுத்து என் கையில் கொடுத்து, "இனிமேல் நீதான் ஜகியின் அப்பாயின்ட்மென்ட் அனைத்தையும் இதில் எழுதி அவருக்கு அனுப்பவேண்டும்," என்றார். நான் மென்மையாக மறுத்தேன். நான் விஜி அக்காவிடம் சத்குருவின் அப்பாயின்ட்மென்ட் சொல்வதும், அதை அவர் சத்குருவுக்கு சொல்வதும் எனக்கு சௌகரியமாக இருந்தது. அந்த ஏற்பாடு நன்றாகவே வேலைசெய்தது, அதனால் விஜி அக்கா அதை மாற்ற விரும்புவது எதனால் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால், அவர் வலியுறுத்தினார். எப்படியும் நான் இதை செய்யப்போவதில்லை என்று நினைத்தபடி டைரியை கையில் வாங்கிக்கொண்டேன். அன்று மாலையே உடலை உதிர்க்க அவர் போட்டிருந்த பிரம்மாண்ட திட்டமெதையும் நான் அறிந்திருக்கவில்லை.

இன்றுவரை அந்த டைரி என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அவரின் ஞாபகார்த்தமாக மட்டுமல்ல, இங்கிருக்கும் சாத்தியத்தின் மிகப்பெரிய நினைவூட்டலாக அதனைப் பாதுகாக்கிறேன். துயரமும் எரிச்சலும் மேலோங்கும் சமயங்களில் அது என்னை பயணத்தை தொடரச்செய்துள்ளது.

பிரதிஷ்டையின் தாக்கம்

அந்த சமயத்தில் தியானலிங்க பிரதிஷ்டை தொடர்பான சக்தி செயல்முறைகளில் சத்குரு ஈடுபட்டிருந்தார். எங்களுக்கு அப்படியென்றால் என்னவென்றுகூட தெரியாது. பிரதிஷ்டைக்குப் பிறகு தான் உடலை துறக்க நேரிடலாம் என்பதால், அந்த நிகழ்வுக்காக சத்குரு எங்களை தயார்படுத்திக் கொண்டிருந்தார். இன்னும் சொல்லப்போனால், அவருடைய சமாதியைக்கூட முன்கூட்டியே கட்டியிருந்தார். எங்களுக்குள் சொல்லமுடியாத குமுறிக்கொண்டிருந்தோம். தியானலிங்க பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்ற விருப்பம் இருந்த அதேசமயம், சத்குருவின் உயிர் எங்களுக்கு விலைமதிப்பில்லாததாய் இருந்தது. சூழ்நிலையை எப்படி உதவியாய் இருப்பது என்பதை அறியாமல், அவர் வாழ்க்கையை சுலபமாக்கிட பிரம்மச்சாரிகள் நாங்கள் எங்களால் இயன்ற எல்லாவற்றையும் செய்வதென்று முடிவுசெய்தோம். நாங்கள் மிகவும் இளவயதுக்காரர்களாக இருந்ததால், முதலாவதாக, எங்களுக்குள் சண்டைப் போட்டுக் கொள்வதில்லை என்று முடிவெடுத்தோம். அவரிடம் முறையிட்டு அவரை தொந்தரவு செய்யாமல், எங்களுக்குள் எழுந்த வேறுபாடுகளை நாங்களே தீர்த்துக்கொள்வோம் என்று முடிவுசெய்தோம். இரண்டாவதாக, அவருக்கு நீண்ட ஆயுள் வேண்டுமென்று கேட்டு சித்சக்தி தியானம் செய்யத் துவங்கினோம். நாங்கள் இந்த தியானத்தை பல வாரங்களுக்கு தினமும் தொடர்ந்து செய்தோம்.

பிரதிஷ்டை நிறைவை நெருங்கியது. பிரதிஷ்டைக்கான இறுதிநாளினை சத்குரு அறிவிக்காமல் இருந்தார். இறுதிகட்ட பிரதிஷ்டைக்கு அவர் உடலமைப்பு முழுவதும் தயாராக இருக்கவேண்டும் என்று சத்குரு விரும்பினார். முதலில், வெகுசீக்கிரத்தில் அது நடக்கும் என்றார். பிறகு, "நாளை, அல்லது நாளை மறுநாள் நடக்கலாம்," என்று சொல்ல ஆரம்பித்தார். அந்த நாளை எதிர்நோக்கி ஆவலுடன் நாங்கள் காத்திருக்க ஆரம்பித்தோம். 1999ஆம் ஆண்டு, ஜூன் 23ம் தேதியன்று, மறுநாள் பிரதிஷ்டை நிறைவடையும் என்று சத்குரு சொன்னார். தனக்கு தொந்தரவு நேராத வண்ணம், மிகுந்த ஒழுக்கத்துடன் இருக்கக்கூடிய தன்னார்வத் தொண்டர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அழைக்கச்சொல்லி என்னிடம் சொன்னார். அன்று தியானலிங்க வளைகூரையின்கீழ் தோராயமாக 150 - 200 பேர் அமர்ந்திருந்தோம்.

dhyanalinga-consecration-pic

பிரதிஷ்டையின்போது, தியான அன்பர்கள் தங்கள் முதுகுத்தண்டு லிங்கத்தை பார்த்தபடியும், பிரம்மச்சாரிகள் லிங்கத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தோம். சத்குரு ஆவுடையாரின் மீது இருந்தார். ஒரு குறிப்பிட்ட செயல்முறையின் நிறைவில், அவர் "ஆக்ஞா" என்றார். அப்படிச் சொல்லும்போது என்னசெய்யவேண்டும் என்று அவர் முன்னமே வழிகாட்டியிருந்தபடி நாங்கள் செய்தோம். பிறகு "விஷுத்தி" என்றார். "அனஹதா" என்றார். "மணிபூரகா" என்று கூறியபோது வலியில் இருப்பதுபோல முன்னால் குனிந்தார். பிறகு "சுவாதிஷ்டானா" என்றபோது அவர் கால்கள் நிலையிழந்தது போலத் தெரிந்தன. இதைக் கண்டதும் நான் நுனிவிரல்களில் எழத்தயாராக அமர்ந்திருந்தேன். இறுதியில் அவர் "மூலாதாரா" என்று சொன்னதைக் கேட்ட மறுக்கணம் அவர் கீழே சரிவதைக் கண்டோம். உள்ளுணர்வால் உடனே ஓடிச்சென்று ஆவுடையாரில் அவர் தலைப் படும்முன் அவர் தலைக்கடியில் என் கைகளை ஏந்தினேன். அதற்குள் மற்ற பிரம்மச்சாரிகளும் வந்துவிட்டனர்.

அவரை தூக்கிச்கொண்டு ஒரு வண்டியில் ஏற்றி அவர் வீட்டிற்கு கொண்டுசென்றோம். அதற்குப்பிறகு, 3 நாட்களுக்கு அவரைப் பார்க்கவில்லை, தன்னார்வத் தொண்டர்கள் சந்திப்பிற்காக சிறிதுநேரம் கண்டதைத் தவிர. அந்த சந்திப்புக்கும்கூட பிரம்மச்சாரிகளால் கைத்தாங்கலாகத்தான் அவர் அழைத்து வரப்பட்டார். நான் மிகுந்த மன உளைச்சலுடன், அவர் உடல்நலம் பற்றி சாதகமான ஒரு செய்தி வாராதா என்று காத்திருந்தேன். மூன்று நாட்களுக்குப் பிறகு சத்குருவை சந்திக்குமாறு எனக்கு செய்தி வந்தது. சத்குரு புன்னகையுடன் மிகப் பிரகாசமாக ஈஸிசேரில் அங்கு அமர்ந்திருந்தார். அவரை பற்றிக்கொண்டு அழுதேன். அவர் கண்களிலும் கண்ணீர். அந்தக் கணத்தில் எல்லாம் சரியாக இருப்பதாக நான் உணர்ந்தேன். இதோ அவர்... எங்கள் மத்தியில் உயிருடன் இருக்கிறார்.

ஈஷாவின் வளர்ச்சி

பிரதிஷ்டை முடிந்தபிறகு, செயல்கள் பெருகின, நாங்கள் அனைவரும் பற்பல செயல்களை எடுத்துச்செய்தோம். ஆசிரமத்தில் இருப்போருக்குத் தேவையான பொருட்களை விநியோகிக்கும் ஹவுஸ்கீப்பிங், கிச்சன், ஆசிரம நிர்வாகம் என்று என் செயல்கள் வளர்ந்தவண்ணம் இருந்தன. எல்லாவற்றையும் கொண்டாட்டத்தைப்போல் செய்வது சத்குருவின் இயல்பு. இதனால், இரவுபகலாக நாங்கள் வேலைசெய்தாலும், சுற்றிலும் உற்சாகம் ததும்பி இருந்தது.

ஆசிரமத்திற்குத் தேவையான கட்டமைப்புகளையும் முறைமைகளையும் உருவாக்கவதை மிகவும் ரசித்து செய்தோம். ஸ்பந்தா ஹாலில் புது கிச்சனிற்காக ஸ்வாமி நிசர்காவும் நானும் திட்டமிட்டது இன்றும் நினைவிலிருக்கிறது. பின்னர், சமையலறைக்குத் தேவையான சமையல் பாத்திரங்கள் வாங்குவதுபற்றி ஒரு செட்டியார் குடும்பத்திடம் விசாரித்து தெரிந்துகொண்டேன். இந்த சமூகம், ஏராளமான் பாத்திரப் பண்டங்களை சீர்வரிசையாய் வழங்குவதற்கு பெயர்பெற்றது (தங்கமும் வைரமும் தவிர!), அவர்கள் தங்கள் சீதனத்தை குறைவான விலைக்கு எங்களுக்கு கொடுக்க முடிவுசெய்தார்கள். நாங்கள் உற்சாகமாக, ஸ்பூன்கள், கிண்ணங்கள், தட்டுகள், கரண்டிகள், டம்ளர்கள், சமைப்பதற்கு பெரிய பெரிய பாத்திரங்கள், சமையலறைச் சாதனங்கள் என எல்லாவற்றையும் இந்த சீர்வரிசைப் பொருட்களிலிருந்து தேர்ந்தெடுத்தோம். ஒரே ஒரு பெண்ணிற்குரிய வரதட்சிணை சாமானில், நம் சமையறைக்குத் தேவையான எல்லா பொருட்களும் கிடைத்தது.

புதிய பாரம்பரியமொன்றும் அப்போது உருவானது. மாதமொருமுறை அனைவரும் கிச்சனில் ஒன்றுகூடினோம் - சிலர் சமைக்க, சிலர் உதவ, சிலர் குறும்பாக தொந்தரவுசெய்ய. அன்று சமைத்தபிறகு நாங்கள் ஒன்றாக தோட்டத்தில் அமர்ந்து சாப்பிடுவோம், ஆசிரமத்தில் இருந்தபோதெல்லாம் சத்குருவும் எங்களுடன் சேர்ந்துகொள்வார். ஒருமுறை இந்த பாரம்பரியம் தொடரட்டும் என்று சத்குரு சொன்னார். விளக்குகளை அனைத்துவிட்டு பௌர்ணமி இரவில், நிலவொளியில் உணவருந்தச் சொன்னார். இப்படித்தான், நம் பிரியமான "மூன்லைட் டின்னர்" துவங்கியது.

எதிர்பாராத ஒரு வெளிப்பாடு

kailash-manasarovar-lake-maa-gambiri

சில வருடங்களுக்குப் பிறகு, ஈஷா யாத்திரை என் முக்கிய பொறுப்பாக மாறியபின், தியான அன்பர்களை திபெத்தில் இருக்கும் கைலாஷ் மானசரோவருக்கு அழைத்துச்செல்ல முடியுமா என்று சத்குரு பார்க்கச்சொன்னார். அதனால் 2006ல், முதல்முறையாக, இந்த புனித யாத்திரைக்கு 160 தியான அன்பர்களை அழைத்துச்சென்றோம். அதற்கான ஏற்பாடுகளில் நான் மும்முரமாக இறங்கினேன், ஒருமுறைகூட ஆன்மீக மகத்துவம் நிறைந்த இடமாக கைலாஷ் மானசரோவரை நான் நினைக்கவில்லை. நன்றாக நடத்தப்படவேண்டிய ஒரு செயலாகவே அது இருந்தது.

சத்குருவின் ஜீப் ஒரு இடத்தில் நின்று அவர் இறங்குவதைப் பார்த்ததும், அவர் வண்டியைப் பின்தொடர்ந்துவந்த எங்கள் வண்டியும் நின்றது, நானும் இறங்கினேன். சற்று தொலைவில் ஒரு பெரிய ஏரி விரிந்திருந்தது. அதைப் பார்த்தபோதே எனக்குள் ஏதோவொன்று மாறத் துவங்கியது. என் கண்கள் குளமாகின. அதுவரை இவ்வளவு சக்திவாய்ந்த ஒரு இடத்திற்கு யாத்திரை வந்திருக்கிறோம் என்பதை அறியாதிருந்தேன், யாத்திரைக்கான ஏற்பாடுகள் மட்டுமே என் கவனத்தில் இருந்தன. நான் சத்குருவைப் பார்த்தேன், அவர் கண்களிலும் கண்ணீர். அன்றுமுதல் கைலாஷ் மானசரோவர் யாத்திரை என் வாழ்வின் அங்கமாகிவிட்டது. பல தேசங்களிலிருந்து வரும் பலநூறு தியான அன்பர்களை, சீனாவின் உயர்ந்த மலைப்பகுதியில் இருக்கும் ஒரு தரிசுநிலத்திற்கு பத்திரமாக கூட்டிச்செல்வதற்கு, சொல்லமுடியாத அளவு பலவிதமான சூழ்நிலைகளை சமாளிக்க நேர்ந்தாலும், இந்த பொறுப்பு என் கைகளில் கொடுக்கப்பட்டிருப்பதற்கு நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி என்றே உணர்கிறேன்.

வலியின் பரவசம்

2009 யாத்திரையின்போது மிக வித்தியாசமான சம்பவமொன்று நடந்தது.

கைலாயத்திற்கு செல்லும் வழியில் நிகழ்ந்த சிறுவிபத்தால், என் மணிக்கட்டில் சற்று பல எலும்புமுறிவுகள் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, நம் மருத்துவர்களில் ஒருவர் பத்து நிமிடங்களில் அங்கு வந்து தற்காலிக சிகிச்சை அளித்தார். ஆனால், வலியோ தாங்கமுடியாததாக இருந்தது. பல ஊசிகள் போட்டார்கள், வலிநிவாரண மாத்திரைகள் தந்தார்கள், எதுவும் வேலைசெய்யவில்லை. வலி என்னை தூங்க விடவில்லை. தலையணையை முட்டுக்கொடுத்து, ஜன்னல் வழியாக கைலாய மலையைப் பார்த்தபடி நான் அமர்ந்திருந்தேன். என்னுடன் தங்கியிருந்த அறைவாசி தூங்கிப் போயிருந்தார். ஒருகட்டத்தில் நான் எனக்குள் "ஷம்போ" என்று உச்சரிக்கத் துவங்கியிருந்தேன். சீக்கிரமே ஷம்போ சொல்வதுபோல, "சத்குரு" என்று தொடர்ச்சியாக உச்சரிக்கத் துவங்கினேன். உச்சாடணம் செய்யவேண்டும் என்ற நோக்கமில்லை, ஆனால் அது தானாக நடந்துகொண்டே இருந்தது. "சத்குரு" என்று உச்சரிக்கலாம் என்றுகூட எனக்குத் தெரியாது! மெதுவாக எனக்கும் அந்த வலிக்குமிடையே ஒரு இடைவெளி ஏற்பட்டதை கவனித்தேன். தாங்கமுடியாத வலி அப்போதும் இருந்தது, ஆனால் நான் வேதனையில் இல்லை.

அந்த வருடம் நான் கைலாயத்திலிருந்து திரும்பியபோது என்னுள் ஒரு அடிப்படையான மாற்றம் நடந்திருந்ததை கவனித்தேன். "அது என்ன மாற்றம்?" என்று வியந்தேன். சில நாட்களுக்குப் பிறகுதான் உணர்ந்தேன், என் சிறுவயது முதல் எவ்வளவு சந்தோஷமாக இருந்தாலும் விவரிக்கமுடியா ஒரு வலி என்னுள் எப்போதும் இருந்தது. அந்த வலி மாயமாய் மறைந்திருந்தது!

இன்னொரு சமயம், நான் சற்று சோர்வாக இருந்தபோது, வாடிக்கையான மாலைநேர வாக்கிங்கிற்கு சிவபாதம் நோக்கி நடந்தேன். நடக்கநடக்க, மென்மையான தென்றல் என் மீது படர்வதை உணர்ந்தேன், ஒருவித அமைதி என்னை ஆட்கொண்டது. எல்லாவற்றையும் என்னுள் ஒரு பாகமாக உணரும் உணர்வு என்னுள் படர்ந்தது. வானம், மலைகள், தென்றல், மரங்கள், என்னைச் சுற்றியிருந்த உயிர் எல்லாம் எனக்குள் ஒன்றாக இருப்பதுபோல் உணர்ந்தேன். இந்த உணர்வு சிறிதுநேரம் நீடித்தது. அதன்பின், பூமியுடன் தொடர்பு ஏற்படுவதை உணர்ந்ததால், பல நாட்களுக்கு நான் வெறுங்கால்களில் நடந்தேன், எனக்குள் ஆழமான அமைதி நிலவியதை உணர்ந்தேன்.

நான் சிறிதும் எதிர்பாராத சமயங்களில்தான் என்னை ஆழமாக மாற்றிய அற்புதத் தருணங்கள் நிகழ்ந்தன.

கடவுளர்களும் பொறாமை கொள்வார்கள்

on-the-path-of-the-divine-maa-gambiri-and-sadhguru-pic

ஆரம்ப காலங்களில், ஒரு சிறு நிலத்தில் சாதாரணமாக துவங்கியபோது, சத்குருவை, அவர் தன்மைக்காக இந்த உலகம் அடையாளம் காணும் நாளினை நாங்கள் கனவு கண்டதுண்டு. அது நிஜமாவதைக் காண்பது உளமகிழ்ச்சியைத் தருகிறது. ஆசிரமத்திற்கு நிலம்தேடி சத்குருவுடன் பயணம்செய்த அந்தநாள் முதல் இன்று வரை இந்தப் பயணம் முழுவதும் அவருடன் இருப்பது என் பாக்கியம். கடவுளர்களும் பொறாமைப்படக் கூடிய ஒர் இடத்தை நாம் உருவாக்கவேண்டும் என்று சத்குரு ஒருமுறை கூறினார். ஆம், அப்படியொரு இடத்தை படைப்பவருடன்தான் நான் வாழ்கிறேன்.