சைக்கிள் ஓட்டிய உதவிக்கரம்!

பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்கான வழிகள் நம் கண்ணில் தானாகவே தெரியும். சுவாரஸ்யமான ஒரு வழியில் தனது உதவிக் கரத்தை ஈஷா வித்யா மாணவர்களுக்கு நீட்டியுள்ளார் ஒரு இளைஞர். சைக்கிள் ஓட்டியதன் மூலம் அவர் மேற்கொண்ட அந்த முயற்சி, அவரின் உள்ளப் பகிர்வாக இங்கே!
 

பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்கான வழிகள் நம் கண்ணில் தானாகவே தெரியும். சுவாரஸ்யமான ஒரு வழியில் தனது உதவிக் கரத்தை ஈஷா வித்யா மாணவர்களுக்கு நீட்டியுள்ளார் ஒரு இளைஞர். சைக்கிள் ஓட்டியதன் மூலம் அவர் மேற்கொண்ட அந்த முயற்சி, அவரின் உள்ளப் பகிர்வாக இங்கே!

ஹரிஹரன் ரகுநாதன்:

ஹைத்ராபாத்தில் 2013ல் முதன்முதலாக ஈஷா யோகா வகுப்பில் கலந்து கொண்டேன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் கடந்த 5 வருடங்களாக பணிபுரிந்து வரும் நான், தற்போது ஈஷா தன்னார்வத் தொண்டராகவும் இருந்து வருகிறேன். நான் கல்வி கற்ற காலத்தில் எங்கள் குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, எங்களுக்கு பலர் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். அவர்களின் உதவியினாலும் ஒத்துழைப்பினாலும் நான் சிறப்பான கல்வியை பெற்றேன். எனவே இயல்பாகவே பிறருக்கு உதவ வேண்டும் என்ற ஆவல் என்னிடம் எப்போதும் உண்டு.

நான் ஏதோ ஒரு சைக்கிள் பயணத்தை பொழுதுபோக்காக மேற்கொள்ள வரவில்லை. எனது சைக்கிள் இப்போது ஈஷா வித்யா குழந்தைகளுக்காக மிதிக்கப்படுகிறது. இந்தியாவின் ஒரு மூலையிலுள்ள ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக மேற்கொள்ளப்பட்ட பயணம் இது!

பொதுவாக நமது உடல் பலநேரங்களில் கட்டுப்பாடாகவே உள்ளது. ஆனால், அதையும் தாண்டி சில வலிமையான எண்ணங்கள் நம் உடல் எல்லைகளை வெற்றிகொண்டு சாதிக்க வைக்கிறது. அப்படியொரு தருணத்தை நான் அன்று எதிர்கொண்டேன். ஆம்! நான் ஈஷா வித்யா பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காக நன்கொடை திரட்டும் நோக்கில் 202 மைல்களை சைக்கிளில் கடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.

வடமேற்கு அமெரிக்காவில், ஒரு நாளுக்கு மேல் பயணிக்கக் கூடிய மிகப் பெரிய சைக்கிள் ஓட்ட நிகழ்ச்சி இதுவேயாகும். ஜூலை 12ஆம் தேதி, சியாட்டில் முதல் போர்ட்லேண்டு (Seattle to Portland (STP) ) வரை மேற்கொள்ளப்பட்ட இந்த சைக்கிள் பயண நிகழ்ச்சியில், சுமார் 10,000 பேர் வரை கலந்துகொண்டனர். நீண்ட தூர சைக்கிள் பயணங்களில் ஆர்வம் நிறைந்த எனக்கு, பயண வழி நெடுகிலும் (மேற்கு வாஷிங்டன் பகுதி) அமைந்திருந்த கண்கவர் பள்ளத்தாக்குகளும், காடுகளும், விளைநிலங்களும் உற்சாகத்தை தந்தன.

முதல் 100 மைல்களை மணிக்கு 16 - 17 மைல்கள் வீதம் கடந்ததில் மிகுந்த மகிழ்ச்சியிலும் பரவசத்திலும் இருந்தேன். பயணம் துவங்கப்பட்ட வாஷிங்டன் பல்கழைக் கழகத்திலிருந்து பாதி தொலைவிலுள்ள சென்ட்ரேலியாவை கிட்டத்தட்ட ஆறரை மணிநேரத்தில் அடைந்துவிட்டதால், அடுத்துள்ள தொலைவை 7-8 மணி நேரத்தில் கடந்து விடலாம் என எண்ணி இருந்தேன். ஆனால், எதிர்பாராத விதமாக சூரியனின் உக்கிரம் என்னை வதைக்க ஆரம்பித்தது. 103 டிகிரி ஃபாரன்ஹீட்டை தொட்ட உஷ்ணம், என்னை செயல்பட விடாமல் சுருட்டிப்போட்டது. 120வது மைலில் இருந்த நிறுத்தத்தில் நான் நின்றபோது, இத்தோடு கதை முடிந்தது என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.

அப்போதுதான் அந்த எண்ணம் என்னை வீறுகொள்ளச் செய்தது. ஆம்! நான் ஏதோ ஒரு சைக்கிள் பயணத்தை பொழுதுபோக்காக மேற்கொள்ள வரவில்லை. எனது சைக்கிள் இப்போது ஈஷா வித்யா குழந்தைகளுக்காக மிதிக்கப்படுகிறது. இந்தியாவின் ஒரு மூலையிலுள்ள ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக மேற்கொள்ளப்பட்ட பயணம் இது! 328 கி.மீட்டர் (202 மைல்கள்) பயணமான இதில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் $5 டாலர் நன்கொடை திரட்டப்படுவதே எனது நோக்கம். இந்தத் தொகை 10 குழந்தைகளுக்கு ஒரு வருடத்திற்கான கல்விச் செலவை கொடுக்கும். என் நண்பர்கள் உறவினர்கள் மூலமாக பயணத்திற்கு முன்னதாகவே 2300 அமெரிக்க டாலர்களை திரட்டி இருந்தோம். இது மனதளவில் கூடுதல் ஊக்கத்தை அளித்தது.

150வது மைலில், அங்கே கட்டுமானம் இல்லாத இரும்புச் சட்டங்களாலான, 2722 அடி நீண்ட ( Lewis & Clark Bridge ) பாலத்தை கடந்தது சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருந்தது. எனக்கு முன்னே இன்னும் 50 மைல்கள் மட்டுமே கடக்க வேண்டியிருந்தது. இது எனது மனதளவில் உற்சாகத்தை தந்தது. நான் தொடர்ந்து பயணித்தேன். 176வது மைலில் உள்ள செயின்ட் ஹெலன்ஸை அடைந்தபோது இரவு 9 மணியாகி இருந்தது. இருள் சூழ்ந்த அந்த சூழ்நிலையில் அன்றைய என் பயணத்தை முடித்துக்கொண்டேன்.

மறுநாள் காலை எழுந்திருக்கும் பொழுது எனது உடலெங்கும் வலியை உணர்ந்தேன். முந்தைய நாளின் 16 மணி நேர பயணத்திற்கு பிறகு, மறுநாள் காலை 6.45 மணியளவில் (ஜுலை 13ஆம் தேதி) மீண்டும் என் பயணத்தை துவங்கினேன். அடுத்திருக்கும் 2 மணி நேர பயணத்தை கடப்பதற்காக வலியைப் பொருட்படுத்தாமல் முன்னேறினேன். காலை 9 மணியளவில் போர்ட்லேண்டை அடைந்து, ஈஷா வித்யா போஸ்ட்டரை தாங்கியபடி இருந்த எனது அன்னையை அணைத்துக்கொண்ட போதுதான் பூரண திருப்தியை உணர்ந்தேன்.

18 மணிநேர பயணத்தை முடித்தபோது வலியையும் ஆனந்தத்தையும் சேர்ந்து உணர்ந்தேன். எந்த ஒரு தயக்கமும், மதிப்பீடுகளும் மனதில் கொள்ளாமல் முழு ஈடுபாட்டுடன் ஒரு செயலைச் செய்யும்போது, அந்தச் செயல் நிறைவேறும் என சத்குரு சொல்வதை அன்று அனுபவப் பூர்வமாக உணர முடிந்தது. எனது இந்த பயணத்தில் ஈஷா வித்யாவிற்காக கைகொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்!

 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1