கரண்ட் போன சமுதாயம் !

மின்சாரப் பற்றாக்குறையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் இன்றைய நிலைக்கு காரணம் என்ன? அதற்குத் தீர்வு காண்பது எப்படி? போன்ற கேள்விகளுக்கு விடை காணும் வகையில் அமைகிறது நம்மாழ்வாரின் இந்தப் பதிவு. நாகரீக மனிதர்களைக் கேலி செய்யும் கதை, உதாரணங்களோடு, நம்மாழ்வார் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்...
 

நம்மவரு நம்மாழ்வார்... பகுதி 9

மின்சாரப் பற்றாக்குறையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் இன்றைய நிலைக்கு காரணம் என்ன? அதற்குத் தீர்வு காண்பது எப்படி? போன்ற கேள்விகளுக்கு விடை காணும் வகையில் அமைகிறது நம்மாழ்வாரின் இந்தப் பதிவு. நாகரீக மனிதர்களைக் கேலி செய்யும் கதை, உதாரணங்களோடு, நம்மாழ்வார் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்...

நம்மாழ்வார்:

விளக்கிலே வெளிச்சம் இல்லை. கொசு கடிக்குது, காற்றாடி சுழலவில்லை. மாணவர்கள் படிக்க முடியவில்லை. ஆலைச்சக்கரம் சுழலவில்லை. அதனால் பலர் வீட்டில் உலை கொதிக்கவில்லை. கிணற்றில் மோட்டார் ஓடவில்லை. பயிருக்குத் தண்ணீர் கொடுக்க முடியவில்லை. வாகனங்களுக்குப் பெட்ரோல் நிரப்ப முடியவில்லை.

இந்த அனைத்துச் சிக்கலுக்கும் வேர்க்காரணம் ஒன்றே ஒன்றுதான். அது "மின்வெட்டு. அதாவது, மின்சாரப் பற்றாக்குறை. நீரைக் குதிக்க விட்டு மின்சாரம் உற்பத்தி செய்தோம். நிலக்கரியை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்தோம். அணுவைப் பிளந்து ஆற்றலைப் பெருக்கி மின்சக்தி உற்பத்தி செய்தோம். அத்தனையும் பற்றாமல் போய்விட்டது.

இந்தச் சூழலை நோக்கும்போது பரமார்த்த குரு கதை ஒன்று நினைவிற்கு வருகிறது. குருவின் ஆடையிலே ஒரு கிழிசல் ஏற்பட்டுவிட்டது. அதைத் தைப்பதற்கு சீடர்கள் முயன்றார்கள். நூலைத் தேடி எடுத்துவிட்டார்கள். ஆனால், ஊசிதான் கண்ணில்படவில்லை. யார் ஊசி வாங்கி வரப்போவது என்பதில் போட்டி வந்துவிட்டது. எட்டு பேரும் புறப்பட்டுப் போனார்கள். இரண்டு கோடாரிகளும் கொண்டு போனார்கள். கோடாரி எதற்கு? ஒரு சிறு ஊசியை எட்டு பேர் எப்படிச் சுமந்து வர முடியும்? ஆதலால் ஒரு பனை மரத்தை வெட்டித் துண்டு போட்டுத் தூக்கிக் கொண்டு போனார்கள்.

ஊசியை வாங்கிய சீடர்கள் அதைப் பனை மரத்தில் குத்தி எட்டு பேருமாகச் சுமந்து வந்தார்கள். முன்னால் நடந்த மடையன் (ஒரு சீடனின் பெயர்) பள்ளத்தில் கால் நொடித்ததால் இடறி வீழ்ந்தான். மற்றவர்களும் மரத்தைப் போட்டுக் கொண்டு வீழ்ந்தார்கள். கையை ஊன்றி எழுந்து தூசி தட்டி மீண்டும் மரத்தைச் சுமந்து நடந்து அதனை வீடு சேர்த்தார்கள். குரு வெளியில் வந்து பார்த்தார். "ஊசி வாங்கப் போனவன் எங்கே? எதற்குப் பனை மரம்?" என்றார்.

சீடர்கள், "ஊசிதான் வாங்கி வந்தோம்" என்று மரத்தைத் தடவினார்கள். ஊசியைக் காணவில்லை. அதைத்தான் வழியிலேயே தொலைத்து விட்டார்களே!

இந்தக் கதையைப் போல, உணவு உற்பத்திக்கான சாதனங்களைப் பட்டணத்தில் உற்பத்தி செய்வதாகச் சொன்னார்கள். அதற்காகவே கல்வி கற்பதாகவும் சொன்னார்கள். கற்றலை மேம்படுத்துவதற்காகக் கணினியையும் கண்டுபிடித்தார்கள். உற்பத்தி மட்டும் பற்றாக்குறையாகவே போனது.

பில் மொல்லிசன், ஆஸ்திரேலிய நாட்டுப் பேராசிரியர். இவர் நிலைத்து நீடிக்க வல்ல உழவாண்மைக் கொள்கையை உலகம் முழுவதும் பரப்பியவர். இவர் வெள்ளைக் கோழி (ஒயிட் லெகான்) முட்டை போடுவது பற்றி இப்படி விவரிக்கிறார்.

"பின்னாக்கையும் தவிட்டையும் தானியத்தையும் கலந்து கோழித்தீவனம் தயாரித்தோம். கோழிக்கு ஒரு வீடு கட்டினோம். கோழியின் முன்னால் தீவனத்தைக் குவித்தோம். அவற்றைத் தின்றுவிட்டு, கோழி நின்ற இடத்தில் முட்டை போட்டது. ஆனால் அந்தக் கோழிக்கு அடை காக்கவும் குஞ்சு பொறிக்கவும் தெரியாமல் போய்விட்டது. அந்தப் பணிகளை இப்போது மனிதன் செய்து கொண்டு இருக்கிறான்."

ஆஹா... உண்மைதானே, கிராமப்புறத்தில் கூடையில் கவிழ்த்து வைக்கப்பட்ட கோழி, குப்பையைக் கிளறி பூச்சி, புழு தின்னு சேவலுடன் கூடி இருட்டறை தேடி முட்டை இடுகிறது. முட்டை மீது உட்கார்ந்து குஞ்சும் பொறிக்கிறது. குஞ்சுக்கு வெப்பம் தந்து வளர்க்கிறது. இரை தேடக் கற்றுக் கொடுக்கவும் செய்கிறது.

இப்போது பில் மொல்லிசனின் நையாண்டி புரிகிறதா? காடுகள் தான் நமது வாழ்வாதாரங்கள். காடுகளை அழித்து உணவு உற்பத்தி செய்கிறேன் என்பது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.

உலக மக்களின் பசிப்பிணி களைய ஒரே வழி பூமித் தாயை பச்சைக் கம்பளம் போர்த்திக் காப்பது மட்டுமே! அதற்கு மகன், மகள்கள் நாம் எல்லோரும் மண் மீது பேரன்பு கொண்டவர்களாய் இருக்க வேண்டும். பேரன்பும் பெரும் பாசமும் என்றென்றும் இயற்கையின் மீதும் கொண்டால் உலகம் உய்வுறும். பிரபஞ்சம் எப்போதும் ஈரமாக இருக்கும்... நம் மனங்களைப் போல!

தொடர்ந்து விதைப்போம்...

nature, nammalvar, agriculture

தள்ளாத வயது என வர்ணிக்கப்படும் வயதில், வாலிபராய் நம்மிடையே வலம் வரும் நம்மாழ்வார் அவர்கள், இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவை எடுத்துரைப்பது எனப் பல தளங்களில் தனது சேவையை ஆற்றிவருகிறார்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1