மழைவெள்ள பாதிப்புகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் சென்னையில், சத்குரு சத்சங்கம் டிசம்பர் 17ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நிகழ்ந்தது. உடல், மனம், உடைமைகள், உறவுகள் என பலவகையிலும் பாதிப்புகளை எதிர்கொண்ட சென்னை மக்களுக்கு இந்த சத்சங்கத்தின் மூலம் சத்குரு சொன்ன செய்தி என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர் மற்றும் விழுப்புரம் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கு பலவகையில் செயல்பட்டுவரும் தன்னார்வத் தொண்டர்களை அங்கீகரிக்கும் விதமாக சத்குரு சத்சங்க நிகழ்ச்சியை டிசம்பர் 17 அன்று சென்னையில் நிகழ்த்தினார்.

மழைவெள்ளம் போன்ற பேரழிவு காலங்களில் மட்டும் மனிதநேயம் மலர்வதல்ல, மனிதநேயம் என்பது எப்போதுமே இருக்க வேண்டும். நீங்கள் ஒருவருக்கொருவர் முகம்பார்த்து புன்னகை பூத்தால், அதுவே சென்னை மகிழ்ச்சிகரமான ஒரு இடமாக மாறுவதற்குப் போதுமானது!

“மழை வெள்ளம் எங்களுக்கு நல்லதுதான் செஞ்சிருக்கு. கரண்ட் இல்லாம நாலஞ்சு நாளா வேற வேலையும் இல்லாம வீட்டுக்குள்ளேயே இருந்தோம். ரொம்ப நாள்கழிச்சு குடும்பத்தோட உக்காந்து மனம்விட்டு பேசினோம். டிவி, செல்ஃபோன் சத்தமெல்லாம் இல்லாம, புது உலகத்துக்கு போனோம்.” என்றெல்லாம் இந்த வெள்ள பாதிப்பைக்கூட நேர்மறை எண்ணத்துடன் சிலர் பார்ப்பதை சென்னையில் பார்க்கமுடிகிறது. ஆனால்... இதெல்லாம் ஓரளவிற்கு பாதிக்கப்பட்ட இடங்களில் மட்டும்தான்.

சில இடங்களில் வீடே மூழ்கி இருந்தது. வாகனங்களும் வீட்டிலிருந்த மின்னணு பொருட்களும், நாசமாகின. குடும்ப அட்டை போன்ற அத்தியாவசிய ஆவணங்கள் அடித்துச் செல்லப்பட்டன. சென்னையின் பெரும்பாலான மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர். தங்கள் உறவுகளை வெள்ளத்தில் இழந்தவர்களுக்கோ சொல்ல ஆறுதல் வார்த்தைகள் ஏதும் இல்லை என்பதுதான் உண்மை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆனால்... இந்த மழைவெள்ளம் சென்னை மக்களின் மனங்களில் ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தது. பக்கத்து வீட்டுக்காரரின் பெயர்கூட தெரியாத பலர் மற்றவர்களுக்காக உணவு சமைத்து ஓடியோடி வழங்கினர். மனிதாபிமானம் என்பது அப்போது மலர்ந்ததைப் பார்க்க முடிந்தது.

இது குறித்து சத்சங்கத்தில் பேசிய சத்குரு, “மழைவெள்ளம் போன்ற பேரழிவு காலங்களில் மட்டும் மனிதநேயம் மலர்வதல்ல, மனிதநேயம் என்பது எப்போதுமே இருக்க வேண்டும். நீங்கள் ஒருவருக்கொருவர் முகம்பார்த்து புன்னகை பூத்தால், அதுவே சென்னை மகிழ்ச்சிகரமான ஒரு இடமாக மாறுவதற்குப் போதுமானது!” என்று சத்குரு தெரிவித்தார்.

சென்னையின் முறையற்ற வடிவமைப்பு குறித்து சத்குரு பேசுகையில், தான் சமீபத்தில் அமெரிக்காவிலுள்ள டென்னஸியில் இருந்தபோது டார்னடோ எனும் ஒருவகை அசுரத்தனமான சூறைக்காற்று வீசியதையும், அதனால் அங்கு எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்றும் கூறினார். இயற்கைப் பேரழிவுகளைத் தாங்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த நகரின் முறையான வடிவமைப்பே இதற்குக் காரணம் எனத் தெரிவித்த சத்குரு, அத்தகைய ஒரு தொலைநோக்கு சிந்தனையோடு சென்னை வடிவமைக்கப்படவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.

சென்னைவாசிகள், செல்ஃபோன், டிவி க்களில் மூழ்க்கிக் கிடக்காமல், உடலையும் கொஞ்சம் உறுதியோடு வைத்துக்கொண்டால், ஏதாவது ஒரு பாதிப்பு வரும்போது தான் காப்பற்றப்பட வேண்டுமென்று எதிர்பார்த்திராமல், பிறரைக் காப்பாற்ற முன்வரும் வகையில் இருக்கலாம் என்றும் உணர்த்தினார்.

விதி எனும் விஷயம் பற்றி பேசுகையில், தியானலிங்கம் பிரதிஷ்டை சமயங்களில் அண்டை ஊர்களில் தனக்கு எழுந்த எதிர்ப்பு குறித்தும், அதனைப் பற்றி கவலைப்படாமல் அச்சூழ்நிலையை நேர்மறை அணுகுமுறையுடன் கடந்துவந்து வெற்றிபெற்றதையும் குறித்து சொல்லி, விதியைப் பற்றி கவலைப்படாமல் நாம் நமது இலக்கை நோக்கி செல்ல வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் பங்கேற்று சத்குருவின் ஆசிபெற்றுச் சென்றனர்.

சென்னை மக்களுக்கு சத்குருவின் செய்தி... , Chennai makkalukku sadhguruvin seithi

தன்னார்வலர்களுக்கு நினைவுப்பரிசு...

இக்கட்டான தருணத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றி, அத்தியாவசிய பொருட்களை வழங்கியதோடு பலவிதத்தில் இன்றுவரை தங்களது உதவிகளை செய்து வரும் தன்னார்வலர்களுக்கும், தன்னார்வத் தொண்டு அமைப்புகளுக்கும் சத்குரு அவர்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக நினைவுப்பரிசுகளை வழங்கினார்.

  • சென்னை மைக்ரோ அமைப்பின் திரு.கந்தன் தணிகாச்சலம்
  • டாக்டர் விஜயபாரதி
  • மனக்களிம்பு அமைப்பிலிருந்து நடிகர் பார்த்திபன்
  • பால் சன்ஸைச் சேர்ந்த சாம் பால்
  • சென்னை-டா மற்றும் சர்ஜிகல் அவென்யூவின் அஜேஷ் சக்லேசா மற்றும் அபிஷேக் ஜெயின்
  • அனில் ஸ்ரீனிவாசன் & துஷ்யந்த்

ஆகியோருக்கு சத்குரு தன் கரங்களால் நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

ஈஷா தன்னார்வத் தொண்டர்களின் செயல்பாடுகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் தங்களால் முடிந்தவரை வழங்கினர். தொற்றுநோய் பரவும் அபாயம் பெரும் அச்சுறுத்தலாக நின்றதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்துவதில் இன்றுவரை கவனம் செலுத்தி வருகிறது ஈஷா.

தொற்றுநோய்கள் பரவா வண்ணமும் சேற்றுப்புண் போன்ற மழைக்கால பாதிப்புகளுக்கு மருத்துவம் வழங்கும் வண்ணமும் மருத்துவ முகாம்களையும் நடமாடும் மருத்துவமனைகளையும், தொடர்ந்து ஈஷா நடத்திவருகிறது. டெங்கு, சிக்குன்குனியா, பன்றிக்காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சலை தடுக்கக் கூடிய நிலவேம்பு குடிநீர் மழைவெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் டிசம்பர் 8ஆம் தேதி துவங்கி இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது; 8 லட்சம் முதல் 10 லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3.2 லட்சம் மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 1,98,000 பேருக்கும் அதிகமானோர் மருத்துவ உதவிகளையும் 1,50,000 பேருக்கும் மேற்பட்டோர் நிவாரணப் பொருட்களையும் பெற்று பலனடைந்துள்ளனர்.