நடந்தாய் வாழி காவேரி… மீண்டும் நடையிட ஒரு இயக்கம்!
‘காவேரி கூக்குரல்' எனும் புதிய முன்னெடுப்பு சத்குரு அவர்களால் ஜுலை 20ஆம் தேதியன்று துவங்கப்பட்டது. இந்நிகழ்வு குறித்தும், இவ்வியக்கத்தின் நோக்கம் மற்றும் அதற்கான செயல்திட்டம் குறித்தும் இங்கே ஒரு பார்வை!
காவேரி நதியை மீட்க ’காவேரி கூக்குரல்’இயக்கம் தொடக்கம்
தென்னிந்திய மக்களின் உயிர்நாடியாக திகழும் காவேரி நதியை மீட்பதற்காக ‘காவேரி கூக்குரல்’எனும் இயக்கத்தை சத்குரு மற்றும் நதிகளை மீட்போம் இயக்க குழுவினர் நேற்றைய முன்தினம் (ஜூலை 20) தொடங்கி வைத்தனர். வறண்டு வரும் காவேரி நதியை மீட்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி நேரடியாக களப் பணியாற்றுவதற்காகவும் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
ஈஷாவின் ‘நதிகளை மீட்போம்’இயக்கத்தின் 5-வது நிர்வாக குழு கூட்டம் பெங்களூருவில் ஜூலை 20-ம் தேதி நடைபெற்றது. இதில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி டாக்டர். அரிஜித் பஷயத், இஸ்ரோ முன்னாள் தலைவர்கள் திரு.ஏ.எஸ்.கிரண்குமார், திரு.கே.ராதாகிருஷ்ணன், ‘பயோகான்’நிறுவனத்தின் தலைவர் திருமதி.கிரண் மசூம்தார் ஷா, உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்கங்களின் தந்தை என அழைக்கப்படும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் ப்ரவேஷ் ஷர்மா, உலக வன உயிரின நிதியத்தின் (WWF) இந்திய தலைமை செயல் அதிகாரி திரு.ரவி சிங், கர்நாடகாவின் முன்னாள் முதன்மை செயலர் திரு.நரசிம்ம ராஜூ மற்றும் நடிகை திருமதி.சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் பங்கேற்றனர்.
Subscribe
’காவேரி கூக்குரல்’இயக்கத்தின் தொடக்க விழாவில் சத்குரு பேசும்போது, “என்றென்றைக்கும் காவேரி நம்மை அரவணைத்து நமக்கு வளம் சேர்த்திருக்கிறாள். இப்போது நாம் காவேரியை அரவணைத்து வளம் சேர்ப்பதற்கான நேரம் வந்திருக்கிறது. காவேரி கூக்குரலிட்டு அழைக்கிறாள், கேட்பதற்கான இதயம் உங்களுக்கு உண்டா ?” என்று பேசினார்.
இந்த இயக்கத்தின் முதல் பணியாக வறண்டு வரும் காவேரி நதியை மீட்க வேண்டியதன் உடனடி தேவை குறித்து மாபெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக வரும் செப்டம்பரில் சத்குரு அவர்கள் கர்நாடகாவில் உள்ள தலகாவேரியில் (குடகு) தொடங்கி தமிழகத்தில் உள்ள திருவாரூர் வரை மோட்டார் பைக்கில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதைத் தொடர்ந்து கர்நாடகம் மற்றும் தமிழக அரசுடன் இணைந்து காவேரி நதி மீட்பு திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதற்காக 2017-ம் ஆண்டு கர்நாடக அரசுடன் ஈஷா அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 12 ஆண்டுகளில் காவேரி நதிப்படுகைகளில் அரசு மற்றும் விவசாய நிலங்களில் 242 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கான களப்பணிகள் தொடங்கப்படும். முதல்கட்டமாக, 73 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. காவேரி நதியை மீட்பதோடு மட்டுமின்றி விவசாயிகளின் வருமானத்தை பல மடங்கு அதிகரிக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கர்நாடகம் மற்றும் தமிழகத்திலுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் பலன்பெறுவர்.
இதற்காக காவேரி நதிப்படுகையில் உள்ள விவசாயிகளின் நிலங்களில் மூன்றில் ஒரு பகுதி வேளாண் காடாக மாற்றப்பட உள்ளது. அதற்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் கள உதவிகளை ஈஷா அறக்கட்டளை செய்து தர உள்ளது. ஈஷாவின் தொடர் முயற்சியால் தமிழகத்தில் 69,670 விவசாயிகள் பயிர் சாகுபடி முறையில் இருந்து வேளாண் காடு வளர்க்கும் முறைக்கு மாறியுள்ளனர். அதில் முன்னோடியாக திகழும் விவசாயிகளின் வருமானம் 5 முதல் 7 ஆண்டுகளில் 5 மடங்கு உயர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.