பூமித்தாயின் புன்னகை - பகுதி 39

ஈஷா விவசாய இயக்கம் மூலம் பயிற்சி பெற்று தற்போது இயற்கை விவசாயம் செய்து வரும் ஆத்தூர், தலைவாசல் அருகில் உள்ள சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி திரு. ராஜு அவர்களை ஈஷா விவசாய இயக்கக் குழுவினர் சந்தித்தனர், பண்ணையில் அறுவடை செய்த மஞ்சளின் மணம் வீசிக்கொண்டிருக்க, அடுத்த சாகுபடிக்காக விதை மஞ்சளை பீஜாமிர்தத்தில் நனைத்து விதைக்கத் தயார் செய்து கொண்டிருந்தார் ராஜு அண்ணா, தொழுவத்தில் நின்ற பர்கூர் நாட்டுமாடு எங்களை வரவேற்றது.

இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது?

எங்கள் பகுதியில் பருத்தி சாகுபடிதான் பிரதானம், சிறு வயதில் எனது அப்பா சாண எருவை மட்டுமே பயன்படுத்தி பருத்தி சாகுபடி செய்ததை நான் பார்த்திருக்கிறேன். தற்போது எங்கள் ஊர் விவசாயிகள் இரசாயன விவசாயத்திலும் பி.டி. பருத்தியின் பிடியிலும் சிக்கியுள்ளனர், அதிலிருந்து மீண்டுவர வழி தெரியாமல் திகைக்கிறார்கள். சாண எருவை மட்டுமே பயன்படுத்தி சாகுபடி செய்து வந்த விவசாயிகள், தற்போது இரசாயன உரத்தை நம்பி நிற்கும் நிலை, நானும் இரசாயன விவசாயத்தில் சிக்கிக் கொண்டேன், படித்தது வேதியியல் என்பதால் புதுப்புது உரங்களை நானே சொந்தமாக தயார் செய்து எனது நிலத்தில் இடுவேன்.

10 வருடங்களுக்கு முன்பு மான்சாண்டோவின் பி.டி. பருத்தி அறிமுகமானதிலிருந்து இப்பகுதி விவசாயிகள் பி.டி. பருத்தியைத்தான் சாகுபடி செய்கிறார்கள். ஆரம்பத்தில் பி.டி. ஒரு ஏக்கர் பயிர் செய்தால் ஒரு லட்சம் வரை வருமானம் வந்தது, உண்மையில் அது கானல் நீர் என்பது தற்போது புரிந்துள்ளது. இந்த நிலையில் சீனாவின் பி.டி. பருத்தியும் சந்தையில் உள்ளது என்பது பலருக்குத் தெரியாது.

காய்புழு தாக்குதலுக்காக உருவாக்கப்பட்ட பி.டி. பருத்தியில் (BT=Bacillus thuringiensis) ஆரம்பத்தில் பூச்சித்தாக்குதல் குறைவாக இருந்தது, ஆனால் படிப்படியாக பல்வேறு பூச்சிகளின் தாக்குதலுக்கு ஆளானது, காய்புழுவுக்கு பதிலாக இளஞ்சிவப்புக் காய்புழுத் தாக்குதலும், சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதலும் அதிகரித்தது. பி.டியை சாகுபடி செய்தால் பூச்சி மருந்துகளே தேவையில்லை என்றும், பூச்சி மருந்துகளால் விளையும் தீமைகள் இனி இல்லை என்று விளப்பரப்படுத்தப்பட்ட பி.டி. பருத்திக்கு பூச்சி மருந்துகளுக்காகவே பெருந்தொகையை செலவு செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

பல்வேறு பூச்சி மருந்துகளை தொடர்ந்து அடித்தாலும் இளஞ்சிவப்புக் காய்புழுத் தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை. சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த விதைகளிலேயே "கௌசௌ" என்ற பூச்சி மருந்து சேர்க்கப்பட்டது, இந்தப் பூச்சி மருந்து 40 நாட்களுக்கு சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் என்று விளம்பரப்படுத்தப் பட்டாலும் உண்மையில் இந்த மருந்து சேர்க்கப்பட்ட பின்புதான் பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்தது, தொடர்ந்து உரச்செலவு, பூச்சி மருந்து செலவு என பல செலவுகள் செய்தும் மகசூல் எடுக்க முடியவில்லை.

நாட்டு ரகப்பருத்தி விதைகள் பல்கலைக்கழகங்களிலோ விவசாயிகளிடேமோ தற்போது இல்லை, இந்தியா முழுவதும் இதே நிலைதான், தமிழகத்திலும் பெரும்பாலும் பி.டி. பருத்திதான் சாகுபடி செய்யப்படுகிறது. விதிமுறைப்படி 600 கிராம் எடையுள்ள பி.டி. விதைப்பையில் 450 கிராம் பி.டி. பருத்தியும், 150 கிராம் நாட்டுரகப் பருத்தியும் இருக்க வேண்டும், ஆனால் நாட்டுரகப் பருத்தி விதைகள் அதில் இருப்பதில்லை, அதற்கு பதில் சந்தையில் மலிவாகக் கிடைக்கும் பருத்தி விதைகள்தான் இருக்கும்.

இந்தப் பகுதியில் 10,000 ஏக்கர் அளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுவதால் பருத்தி விவசாயிகள் பெரிய சிக்கலில் உள்ளார்கள், இந்தப் பிரச்சினை எனக்கு புரிய வந்தபிறகு படிப்படியாக இயற்கை விவசாயத்திற்கு மாறினேன், பி.டி. பருத்தியையே சாகுபடி செய்தாலும் இயற்கை முறையில் சாகுபடி செய்ய முடியுமா என்றும் யோசித்தேன், அது சாத்தியமா என்பது தெரியவில்லை. கடந்த வருடம் பருத்திக்கு பதிலாக மஞ்சளையும், இந்த வருடம் மஞ்சள் மற்றும் கோலியஸையும் சாகுபடி செய்து அறுவடையும் எடுத்துவிட்டேன்.

ஐயோ சாமி இந்த கொடுமைய பாத்தீங்களா?! பருத்தி வெடிச்சதும் பரிசச் சேலை கொண்டாறேன்னு தெம்மாங்கு பாட்டெல்லாங் அந்த காலத்துல அழகா இருந்ததுங்க, ஆனா கெரகம் இப்போ நம்ம நாட்டு பருத்தி விதைய காணாம ஆக்குறதுக்கு சதி நடக்குதுங்க. நம்ம ஆத்தூர் அண்ணா சொல்றத கேக்கும்போது விவசாயிக இனியாவது வெகரமா புரிஞ்சு நடந்துக்கோணுமுங்க!

பருத்தி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதா?

படிப்படியாக மாற்றங்கள் வருகிறது, பருத்திக்கு பதிலாக மாற்றுப்பயிர் சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் தயங்குவதால் பருத்தி சாகுபடி தவிர்க்க முடியாததாகி விட்டது. பருத்தி விதைகளை விவசாயிகளுக்குக் கொடுத்து, விளையும் பருத்தியைக் கொள்முதல் செய்யும் பல்வேறு நிறுவனங்கள் இப்பகுதியில் உள்ளன. நானும் ஒரு விதை நிறுவனத்துடன் தொடர்பில் இருப்பதால், அதில் உள்ள 200க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்துச் சொல்ல முடிகிறது.

பி.டி. பருத்தியை சாகுபடி செய்தாலும் இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தினால் பூச்சி மருந்து செலவுகளை சிறிதளவு குறைக்க முடியும், நான் சில இடுபொருட்களை விவசாயிகளுக்குக் கொடுத்து வருகிறேன், இதைப் பயன்படுத்தியவர்களுக்கு பூச்சிமருந்து செலவுகள் குறைந்துள்ளதைக் பார்க்க முடிகிறது, மற்ற இரசாயன விவசாயிகள் பூச்சிமருந்துகளுக்காக 10,000 ரூபாய் வரை செலவு செய்யும்போது, எங்கள் விவசாயிகள் 2,000 மட்டுமே செலவு செய்கிறார்கள். இப்படி பயனடைந்த பலர் இடுபொருள் தயாரிப்பு முறைகளையும் ஆர்வமாகக் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள், சிலர் நாட்டு மாடுகளை வாங்கி இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர்.

பருத்தி சாகுபடியில் இருந்து மஞ்சள் சாகுபடிக்கு திடீரென மாறியுள்ளீர்கள், விளைச்சல் எப்படி இருந்தது, வருமானம் திருப்திகரமாக இருந்ததா?

இரண்டு வருஷமா மஞ்சள்தான் சாகுபடி செய்கிறேன், நல்ல மகசூல் கிடைக்கிறது. நாரிப்பனூர் ரகம் இப்பகுதியில் பிரபலமானது, சந்தையில் இந்த மஞ்சளுக்கு சற்று கூடுதல் விலையும் கிடைக்கும். இந்த வருஷம் 2½ ஏக்கரில் மஞ்சளும், 1.9 ஏக்கரில் கோலியஸும் சாகுபடி செய்திருந்தேன், இரண்டிலும் நல்ல விளைச்சல். அடியுரமாக தொழுஉரத்தையும், வளர்ச்சியூக்கியாக ஜீவாமிர்தம் மற்றும் அரிசி இ.எம் கரைசலைக் கொடுத்தே நல்ல விளைச்சல் எடுத்திருக்கிறேன். 2½ ஏக்கர் மஞ்சள் சாகுபடி செய்ததில் 25 டன் மகசூல் வந்தது. இயற்கை முறை சாகுபடி என்பதால் கிழங்கு நீளமாகவும், குர்குமின் அளவும் அதிகம், 450 கிலோ பச்சை மஞ்சளைப் பதப்படுத்தினால் 100 கிலோ அளவுக்கு உலர் மஞ்சள் கிடைக்கும். மஞ்சள் தரமாக இருப்பதால் விதைக்காகவே கொடுக்கிறேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

மஞ்சளில் நிழலுக்காக மக்காச்சோளம் போட்டிருந்ததால் அதிலிருந்தும் சிறிது வருமானம் கிடைத்தது, மூடாக்காக நரிப்பயறு (Moth bean) போட்டிருந்தேன், அதில் வருமானம் இல்லையென்றாலும் களையெடுக்கும் செலவு குறைந்தது, இரசாயன விவசாயத்தில் களையென்பது பெரிய பிரச்சினையாகும், ஒரு ஏக்கருக்கு 6 களை வரை எடுக்க வேண்டியிருக்கும், ஒருமுறை களையெடுக்க குறைந்தபட்சம் 2000 ரூபாய் செலவாகும், 6 களைக்கு 12,000 ரூபாய் வரை செலவாகும். நரிப்பயரை மூடாக்காகப் போட்டால் களை எடுக்கும் செலவு குறையும். நரிப்பயறில் தரையில் படரும் ரகம் மற்றும் கொடிபோல் படரும் ரகம் என இரண்டு ரகம் இருக்கு, தரையில் படரும் ரகம்தான் மூடாக்கு செய்வதற்கு ஏற்றது.

மாற்றம் ஒன்றுதான் மாறாததுன்னு சொல்லுவாங்க இல்லிங்கோ?! அதுமாறி விவசாயிகளும் நிலவரத்த புரிஞ்சி மாறிக்கோணுமுங்க. பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்னு ஒரு பழமொழி சொல்லுவாங்கோ. அதுமாறி லாபத்த மட்டும் நினைச்சு மாற்றத்துக்கு தயங்கக் கூடாதுங்கோ! என்னங்ணா சரிதானுங்களே!

கோலியஸ் சாகுபடி பற்றி கூறினீர்கள், தற்போது மூலிகைகளுக்கு விற்பனை வாய்ப்பு எப்படி உள்ளது, கோலியஸ் சாகுபடி லாபகரமாக உள்ளதா?

இந்தப் பகுதியில் நிறைய விவசாயிகள் மருந்துகூர்க்கன் என்ற கோலியஸ் (Coleus forskohlii) சாகுபடியை செய்து வருகிறார்கள். சேலம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் ஏறக்குறைய 1000 ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. கோலியஸ் என்பது சாதாரணமாக பயன்படுத்தக்கூடிய கற்பூரவல்லிச் செடியைப் போன்றுதான் இருக்கும். 180 நாள் பயிரான இதை சாதாரணமாக சாகுபடி செய்யலாம், தண்டுகளை வெட்டி நடவு செய்தாலே வளர்ந்துவிடும். இது எளிமையான லாபகரமான சாகுபடியாக இருக்கிறது, இந்த கிழங்குகளுக்கு ஏற்றுமதி வாய்ப்பு உள்ளதால் தற்போது நல்ல விலையும் கிடைக்கிறது.

இரண்டு ஏக்கர் சாகுபடி செய்ததில் நடவுக்கு 14 ஆயிரம், களையெடுக்க 10 ஆயிரம், கிழங்கை வெட்டியெடுக்க 36 ஆயிரம் என மொத்தம் 60,000 வரை செலவு செய்து, 19 குவிண்டால் கிழங்கு அறுவடை எடுத்தோம், கிழங்கு தரமாகவும் பெரிதாகவும் இருந்ததால், கிலோவுக்கு 19 ரூபாய் வீதம் 3,62,000 ரூபாய் கிடைத்தது, செலவுகள் போக 3 லட்ச ரூபாய் வருமானம் வந்திருக்கு. தற்போது கோலியஸ் கிழங்கிற்கு மார்கெட் நன்றாக இருப்பதால் இடைத்தரகர்கள் இல்லாமல் நிறுவனங்களிடமே விற்பனை செய்ய முடிகிறது. பொதுவாக மூலிகைகளின் விற்பனை வாய்ப்பு ஒரே சீராக இருக்காது எனவே மூலிகைகளை சாகுபடி செய்பவர்கள் சந்தை நிலவரங்களை தெரிந்து கொண்டு சாகுபடி செய்வது சிறந்தது. இந்த வருஷம் 7 ஏக்கரிலும் மஞ்சளை நடுவதற்கு உழுது வத்திருக்கிறேன்.

அட குருட்டுப் பூனை விட்டத்துல பாஞ்சது மாதிரினு சொல்லுவாங்க இல்லீங்கோ?! அதுமாறி நம்ம ஊர்ல யாரவது ஒருத்தரு ஒரு விசயத்த செஞ்சுபோட்டா, கண்ண மூடிக்கிட்டு மித்தவங்களும் செய்வாங்கோ. இதானுங்க இங்க பெரிய பிரச்சனையே. அண்ணா நல்ல வெகரமா சந்த நிலவரத்த புரிஞ்சு செய்யுறாரு பாருங்கோ. இதுமாறி விவசாயிகளுக்கு சந்த நெலவரம் புரியுறதும் ரொம்ப அவசியமுங்கண்ணா!

விவசாயிகளுக்கு இடுபொருட்களை தயாரித்து வழங்கித் வருவதாக கூறினீர்கள், தங்களுக்கு ஈஷா வழங்கிய இடுபொருள் தயாரிப்புப் பயிற்சி எந்த வகையில் உபயோகமாக இருந்தது?

சுபாஷ் பாலேக்கர் ஐயாவின் வகுப்புகளில் இரண்டுமுறை கலந்து கொண்டிருந்தாலும் ஈஷா ஒருங்கிணைத்த பல்லடம் வகுப்பு முழுமையான பயிற்சியாக அமைந்தது, மேலும் இடுபொருள் தயாரிப்புப் பயிற்சியில் பல நுணுக்கமான விஷயங்களையும் கற்றுக் கொண்டேன். இந்தப் பயிற்சிக்கு முன்பு ஜீவாமிர்தத்தை மூடிவைக்க மாட்டேன், திறந்தே வைத்துவிடுவேன், திறந்து வைத்தால் ஈக்கள் பெருகி ஜீவாமிர்தம் கெட்டுவிடும் என்பதை பயிற்சியில்தான் தெரிந்து கொண்டேன், தற்போது டிரம்மின் வாயை துணியால் மூடி கட்டிவைக்கிறேன், இதுபோன்ற முக்கியமான பல விஷயங்களை விவசாயிகள் தெரிந்துகொள்ளும்போது அவர்களுக்கு இயற்கை விவசாயத்தின் மீது ஈடுபாடும் நம்பிக்கையும் ஏற்படுகிறது.

குலவித்தை கற்றுப் பாதி, கல்லாமல் பாதினு என்ற அப்பாரு அடிக்கடி சொல்லுவாப்டிங்கோ. என்னதான் விவசாயத்த காலங்காலமா நாம செஞ்சாலும் நம்மாழ்வார் ஐயா, பாலேக்கர் ஐயா போன்ற பெரியவங்க கிட்ட நாம் தெரிஞ்சுகிட்டதும், தெரிஞ்சுக்க வேண்டியதும் நிறைய இருக்குதுங்கண்ணா!

சிறுவாச்சூர் ராஜு அவர்கள் ஈஷா தியான வகுப்புகளிலும் பங்கு பெற்றுள்ளார், இயற்கை விவசாயம் வளர ஈஷா செய்து வரும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்த அவருக்கும், மதிய உணவளித்த அவரது துணைவியாருக்கும் நன்றி கூறி விடைபெற்றோம்.

தொடர்புக்கு: திரு. ராஜு: 8825855784

தொகுப்பு: ஈஷா விவசாய இயக்கம்: 8300093777

முகநூல்: ஈஷா விவசாய இயக்கம்