சவாலான இந்நேரத்தில் முதியவர்களை பாதுகாக்கும் தன்னார்வலர்கள்! வைரஸை வெல்வோம் - ஈஷா டைரி - பாகம் 24

இந்த நோய்த்தொற்று காலம் முக்கியமாக வயதானவர்களுக்கு தனிமைப்படுத்துதல் மற்றும் தங்கள் முதுமையால் செயல்பட முடியா வண்ணம் இருப்பது என மிகக்கடினமான காலமாக உள்ளது. எத்தனை துன்பங்கள் இருந்தபோதிலும் கிராமங்களில் உள்ள பல முதியவர்கள் அந்த துன்பங்களை எதிர்த்து போராடும் விடாமுயற்சியுடன் இருக்கின்றனர்.
Beat-the-virus-Part-24-feature
 

மீண்டும் எழுச்சியுற்ற உள்ளம்

ஒரு மாதம் முன்பு நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தபோது ராஜம்மாள் தன் வீட்டில் தன்னை முடக்கிக் கொண்டார். கோவை பச்சாப்பாளையம் கிராமத்தில் தனித்து வாழும் அந்த மூதாட்டிக்கு தேவையான மருந்துகளோ, உணவோ சரிவர கிடைக்கவில்லை; தன்னை முறையாக தற்காத்துக்கொள்ளவும் முடியவில்லை. ஆனால், இந்த நோய்த்தொற்று காலத்தில் அதை எதிர்த்து போராடும் குணமும் தைரியமும் பெற்றிருந்தார்.

பல வாரங்கள் தனியாக துன்பப்பட்ட போதிலும், அவர் நம்பிக்கையை இழக்கவில்லை. ஆனால், நம் தன்னார்வலர்களிடம் அவருடைய துன்பங்கள் தெரிவிக்கப்பட்டவுடன் அவர்கள் அந்த மூதாட்டிக்கு மருந்து வாங்கி கொடுப்பது, உணவு அளிப்பது என அவரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தனர்.

blog_alternate_img
 

நோய்த்தொற்று காலத்திலும் மன உறுதியோடு இருக்கும் ராஜம்மாள் போன்ற மூதாட்டிகளின் கதைகள் கிராமங்கள் எங்கும் பட்டிதொட்டிகளிலும் எதிரொலிக்கிறது.

நரசீபுரத்தில் பெரியவர் ரெங்கசாமிக்கும் இத்தகைய ஒரு கடின நிலை ஏற்பட்டது. ஆனால், இந்த சவாலான காலத்தைச் சமாளிக்க உள்நிலையில் வலிமை மிகவும் அவசியம் என்று அவர் உணர்ந்து இருந்தார். அவரும் நம் தன்னார்வலர்களின் மூலம் தேவையான அடிப்படை சேவைகளைப் பெற்று அவர்களின் உறுதுணையுடன் வாழ்ந்து வருகிறார்.

ஆனால், கிராமங்களில் வாழும் முதியவர்களுக்கு பணி ஓய்வு என்பதே கிடையாது. பல முதியவர்கள் தங்களால் முடிந்தவரை உழைத்து ஊதியம் பெற்று வாழ்கின்றனர். இந்த நோய்த்தொற்று காலம் அவர்களிடமிருந்து அந்த வாய்ப்பை எடுத்துவிட்டது. ஆனால், மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களைச் சுற்றியுள்ளவர்கள் வாழ்வில் இந்த நோய்த்தொற்றால் பாதிப்பு குறைவாக இருக்கும் வண்ணம் செயல்படுகின்றனர். 

சுவையான உணவு

மத்வராயபுரத்தைச் சேர்ந்த மக்களுக்கு இந்த சவாலான காலத்தில் ஈஷா தன்னார்வலர்களால் வழங்கப்படும் ஆரோக்கியமான உணவு என்பது, வெறும் உணவு மட்டுமல்ல - அவர்கள் அக்கறையுடன் கவனிக்கப்படுவதற்கான அடையாளமாகவும் உள்ளது. வைரஸைவெல்லும் இந்த போரில் அந்த மக்கள் ஆதரவின்றி தனித்து விடப்படவில்லை என்பதற்கான அடையாளமாகவும் அதை அவர்கள் உணர்கிறார்கள். இரண்டு மாதத்திற்கும் மேலாக கடைபிடிக்கப்படும் இந்த ஊரடங்கில், கிராம மக்கள் நம் தன்னார்வலர்கள் வழங்கும் சுவையான சூடான உணவு மற்றும் இனிய உரையாடல்களை பெரிதும் விரும்புகிறார்கள்.

ஊரடங்கு தொடங்கிய காலம்தொட்டு ஈஷா தன்னார்வலர்களால் வழங்கப்படும் உணவின் தரம், சுவை மற்றும் ஊட்டச்சத்து எந்த விதத்திலும் குறைந்துவிடவில்லை என்று கிராமப்புற பெண்கள் பலர் கூறுகின்றனர்.