யோகா செய்தாலே பலவாறு கிண்டலடித்து தடை செய்யும் இன்றைய மக்கள் மத்தியில், தன் தீர்க்கமான மனோதிடத்தால் யோகப் பயிற்சிகளைச் செய்து, தான் ஆஸ்துமாவிலிருந்து வெளிவந்ததையும், சத்குருவால் தான் பெற்ற அனுபவத்தையும் இக்கட்டுரையில் மனம் திறக்கிறார் வளர்ந்து வரும் எழுத்தாளர் திருமதி.சபிதா இப்ராஹிம்.

சபிதா இப்ராஹிம், சென்னை

யோகாசனம் என்றால் தலைகீழாக நிற்பது கால் விரல்களால் கழுத்தை சுற்றி மூக்கைத் தொடுவது போன்ற விபரீதமான ஆசனங்கள் என்றுதான் எல்லோரைப் போலவும் நானும் எண்ணியிருந்தேன். பிரசவத்திற்கு பின், கூடிய உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கு ஜிம், டயட் போன்ற பலவற்றையும் முயற்சி செய்து பலனளிக்காமல் இறுதியாக யோகா கற்கலாம் என முடிவு செய்தேன். எனது நண்பர்கள் சிலர் ஈஷா யோகா வகுப்பை பரிந்துரை செய்ததும் சிறு எச்சரிக்கை உணர்வு எட்டிப் பார்த்தது. ஏனென்றால் நான் எந்த மத நம்பிக்கையையோ குருவையோ பின்தொடர விரும்பவில்லை. "நான் என் ஆரோக்கியத்திற்காக மட்டுமே யோகா கற்கிறேன்" என மனதினுள் திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டேன்.

இத்தனை முயற்சிகளிலும் குணமாகாத ஆஸ்துமா ஒரு வருட யோகப் பயிற்சியில் குணமானது என்றால் அது காற்றில் மிதப்பதை விட, நீரின் மேல் நடப்பதை விட பேரதிசயம் இல்லையா?

முதல் நாள் அறிமுக வகுப்பிற்கு சென்ற அன்றே வெள்ளை உடையில் இருந்த தன்னார்வத் தொண்டர்களைக் கண்டு நான் வியந்து போனேன். இவர்கள் யோகப் பயிற்சிகளை மேற்கொள்பவர்கள் என்பதை பார்த்தாலே அறிந்து கொள்ளுமளவுக்கு அவர்களது உடல் மொழி, சுறுசுறுப்பு, ஒழுங்கு, மகிழ்ச்சி ததும்பும் முகம் எல்லாம் இருந்தது. நான் சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறேன் என உள்ளுணர்வு சொன்னது. ஆனாலும் மறுபடியும் நான் சொல்லிக் கொண்டேன், "நான் எந்த குருவையும் பின் தொடரப் போவதில்லை. எனக்கு தேவை யோகா மட்டுமே."

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

2006 ஆம் ஆண்டு ஈஷா வகுப்பிற்கு சென்று யோகப் பயிற்சிகளை கற்றேன். அன்றிலிருந்து இன்று வரை பெரும்பான்மையான நாட்கள் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொள்கிறேன். வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலும் சரி, உறவினர்கள் நண்பர்கள் வீட்டிற்கு சென்றாலும் சரி, யோகப் பயிற்சிக்கான நேரம் வந்ததும் அனிச்சையாக தனி அறைக்கு சென்று தாழிட்டுக் கொண்டு பயிற்சிகளை செய்வது வழக்கம். அப்படியென்ன இருக்கிறது யோகாவில் என்று என்னைக் கேலி செய்தனர், மர்மமாக பார்த்தனர். சிலர், "இன்னைக்கு ஒரு நாள் செய்யலன்னா என்ன இப்போ?" என்று எரிச்சலுற்றனர். எதற்கும் செவி சாய்க்காமல் என் பயிற்சிகள் அதன் பாட்டுக்கு நடந்து கொண்டுதான் இருந்தது.

இப்பொழுதெல்லாம் "யோகாவினால் உனக்கு கிடைப்பது என்ன? ஈஷா உனக்கு என்ன செய்தது?" என்ற கேள்விகளை வெவ்வேறு விதமாக நான் எதிர்கொள்கையில் நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன், "நான் என்ன பயன் அடைந்தேன்?" நான் ஓர் அடி வளர்ந்தேன், காற்றில் மிதக்கிறேன், நீரின் மேல் நடந்தேன் என்றால் இவற்றை கண்கூடாக காட்டி நிரூபிக்க முடியும். எனது உள்ளத்திற்குள் நிகழ்ந்த மாற்றங்களை எப்படி விவரிக்க?

சிறு வயது முதல் நான் ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டேன் என்றால் இன்று எனை அறிந்த யாரும் நம்பத்தான் மாட்டார்கள். ஹைதராபாத் அழைத்துச் சென்று உயிர் மீனை விழுங்கச் செய்வது, நரம்புகளைத் தேடி இரு கைகளிலும் மாற்றி மாற்றி ஊசியால் குத்தி எடுப்பது, லேகியம், சூரணம், பொடி என பார்த்தாலே குமட்டும் மருந்துகளையும் குப்பைகளுக்கு நடுவே முளைத்த இலை தழைகளை மூலிகை என்ற பெயரில் சாறெடுத்து விழுங்கச் செய்வது என எல்லாவிதமான மருத்துவ ஆராய்ச்சிகளுக்கும் உட்படுத்தப்பட்டேன்.

இத்தனை முயற்சிகளிலும் குணமாகாத ஆஸ்துமா ஒரு வருட யோகப் பயிற்சியில் குணமானது என்றால் அது காற்றில் மிதப்பதை விட, நீரின் மேல் நடப்பதை விட பேரதிசயம் இல்லையா? சுவாசம் இலகுவாக இல்லையென்றால், அதில் தடை ஏற்பட்டால், அது எத்தனை வேதனை தரக்கூடிய ஒன்று என்று நாம் நமது சுவாசத்தை ஓரிரு நொடிகள் நிறுத்திப் பார்த்தால் விளங்கும். எனது ஆஸ்துமாவை குணமாக்கி ஈஷா எனக்கு சுவாசம் தந்தது என்றால் மிகையாகாது.

"நான் உன்னை நேசிப்பதற்கு உனது அனுமதி எனக்குத் தேவையில்லை. என்னை நேசிக்க என்னிடம் ஏன் அனுமதி கேட்கிறாய்?" என்றார்.

முப்பது வயதை தாண்டியதும் நிகழ்ந்த சின்ன சின்ன உடல் மாற்றங்களை புரிந்து கொள்ளாமல் பலரின் பயமுறுத்தலால் குழப்பத்திற்கு ஆளாகி தைராயிட், சுகர், BP, ஹீமோக்ளோபின் என எல்லாவிதமான மருத்துவ பரிசோதனைகளும் செய்து ரிசல்ட் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தேன். "Everything is abnormally normal." இதுவும் யோகாவின் பயனே!

எனது நினைவாற்றல் மேம்பட்டிருக்கிறது, எனது படைப்பாற்றல் கூர்மைப்பட்டிருக்கிறது, எதைக் குறித்தும் தெளிவும் திட்டமிடலும் இருக்கிறது. சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் மனதை மகிழ்வுடன் வைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி தொடர்ந்த யோகப் பயிற்சிகளினால் தோற்றத்தில் இளமையை தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. இது அதிமுக்கியமான விஷயம் இல்லையா? நாம்தான் நமது தோற்றத்திற்கு எத்தனை முக்கியத்துவம் தருகிறோம். தலைமுடி வளர அமேசான் காடுகளை அழிக்கிறோம், டூத்பேஸ்ட் ஆயின்ட்மன்ட் தவிர ட்யூபில் வரும் அனைத்தையும் முகத்தில் தடவுகிறோம், உடல் இளைக்கவென்று மாத வருமானத்தில் கணிசமான தொகையை உடற்பயிற்சி நிலையங்களுக்கு செலுத்துகிறோம். இது எதுவுமில்லாமல் நமது வீட்டின் உள்அறையில் ஒருமணி நேர தீவிரப் பயிற்சியின் மூலம் மொத்த பலன்களையும் பெறுவதென்பது எளிதான ஒன்றில்லையா? ஆனால் நான் குறிப்பிட்ட பலன்கள் அனைத்தும் பக்க விளைவுகள் மட்டுமே. யோக பயிற்சிகளினால் நிகழும் அந்த மாற்றம் "கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்" நிலைதான்.
4

யோகா ஒரு பக்கம் நிகழ்ந்து கொண்டிருந்தபொழுதும் என் மனத் தடைகளை உடைத்து சத்குருவிடம் சரணடைந்தது சுவாரஸ்யமான ஒன்று...

முதன் முதலாக நான் ஈஷா யோகா மையம் சென்ற பொழுது, அது எனக்கு வேற்றுகிரகம் போலத் தோன்றியது. சத்குரு எதைச் சொன்னாலும் எல்லோரும் சிரித்தார்கள். எனக்கு அந்த மொழி புரிபடவேயில்லை. "இப்பொழுது இவர் பேசியதில் என்ன நகைச்சுவை இருக்கிறது? எதற்காக இந்தச் சிரிப்பு?" என நான் எரிச்சலுற்றேன். ஆசிரமத்தின் அழகிலும் அமைதியான சூழலிலும் மனதை பறிகொடுத்த போதிலும், "இது எனக்கான இடமில்லை நான் இங்கே வரப் போவதேயில்லை," என சொல்லிக் கொண்டேன், ஆனால் சுவரில் அடித்த பந்தாக மறுபடியும் மறுபடியும் ஆசிரமத்தில் வந்து விழுந்தேன்.

இது என்ன? எனக்கு என்ன நிகழ்கிறது என நான் அறிந்து கொள்ள இரு வருடங்கள் ஆனது. ஒரு சத்சங்கத்தில் சத்குருவிடம் மிகவும் துடுக்குத்தனமாக, "உங்கள் முன் நான் சௌகரியமாக உணரவில்லை, ஏன்?" என்றேன். "அப்படியா அப்படி என்றால் நீ உன் குருவை கண்டு கொண்டாய்?" என்றார். மறுபடியும் "நான் இங்கே வர விரும்பவில்லை, ஆனாலும் மறுபடியும் மறுபடியும் எதுவோ என்னை இங்கு இழுத்து வருகிறது, Sathguru am I becoming your devotee?" என்று நான் கேட்டதற்கு சிரித்த சத்குரு, "நான் உன்னை நேசிப்பதற்கு உனது அனுமதி எனக்குத் தேவையில்லை. என்னை நேசிக்க என்னிடம் ஏன் அனுமதி கேட்கிறாய்?" என்றார்.

இப்படியொரு பதிலை எதிர்பார்க்காத நான் ஸ்தம்பித்து போனேன். எனக்குள் எதுவோ முறிந்து போனது. இப்பொழுது நானும் இங்கு ஒரு கிரகவாசி ஆகிப் போனேன். சத்குருவின் வார்த்தைகள் எத்தனை நுட்பமான உரையாடல் என்பதும் எனக்கு தெளிவாகவே விளங்குகிறது. அதற்குப்பின் எனது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் சத்குருவின் அருளும் ஆசியும் நிறைந்திருப்பதை கண்கூடாக காண்கிறேன். "வாழ்வென்றால் போராட்டம்" என்கிற எனது கண்ணோட்டத்தை மாற்றி "வாழ்வென்றால் கொண்டாட்டம்" என்று அறிய வைத்த சத்குருவின் ஈஷா குடும்பத்தில் நானும் ஒருத்தி என்பதுதான் இந்த வாழ்வில் எனக்கு கிடைத்த அரிய வரம்.