ஆடு வளர்ப்போடு சிறுதானிய விவசாயம்... அசத்தும் இயற்கை விவசாயிகள்!

ஆடு வளர்ப்பென்பது விவசாயத்தோடு ஒன்றிய ஒரு செயல்முறையாகும். அதனையும் கூட இயற்கை வழியில் செய்யும்போது என்னென்ன நன்மைகள் என்பதை எடுத்துக்கூறும் இப்பதிவு, வறட்சியில் சிறுதானியங்கள் பயிரிடுவதால் விளையும் பலன்களையும் கூறுகிறது!
 

பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 23

ஆடு வளர்ப்பென்பது விவசாயத்தோடு ஒன்றிய ஒரு செயல்முறையாகும். அதனையும் கூட இயற்கை வழியில் செய்யும்போது என்னென்ன நன்மைகள் என்பதை எடுத்துக்கூறும் இப்பதிவு, வறட்சியில் சிறுதானியங்கள் பயிரிடுவதால் விளையும் பலன்களையும் கூறுகிறது!

தென் மாவட்ட விவசாயிகளுக்கு வறட்சியில் கைகொடுப்பது சிறுதானியங்கள் என்றால் மிகையாகாது. குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி சிறு தானியங்களை உற்பத்தி செய்யமுடியும் என்பதால், வறட்சி காலங்களிலும் சிறுதானியத்தைப் பயிரிட்டு நிறைவான மகசூலையும் எடுக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே விருதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் திரு.கார்த்திகைவேல் மற்றும் திரு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர். இவர்களின் பண்ணையை ஈஷா விவசாயக்குழுவினர் பார்வையிட்டனர், அதை பற்றிய ஒரு பதிவு.

தொடர்ந்து 15 நாட்களுக்கு 10 நிமிஷம் மட்டும் ஆடுகளை மேய விடுவோம், அடுத்த 15 நாட்களுக்கு கடலைக் கொடியைத்தான் தீவனமா தருகிறோம். இந்த இடைப்பட்ட நாளில் கம்பு வளர்ந்து மேய்ச்சலுக்குத் தயாராகிடும், இப்படி செய்யறதுனால வறட்சி காலங்களிலும் ஆடுகளுக்கு பசுந்தீவனம் கிடைக்குது.

முழுநேர விவசாயியான கார்த்திகைவேல் அவர்களுக்கு 13 ஏக்கர் நிலமும், பகுதி நேர விவசாயியான கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு 10 ஏக்கர் நிலமும் உள்ளது. முதலில் கார்த்திகைவேல் அவர்களுடன் பேச்சைத் தொடங்கினோம்.

"நாங்க தலைமுறை தலைமுறையா விவசாயக் குடுபத்தை சேர்ந்தவங்க, எங்க அப்பா இரசாயன விவசாயி, ஆனா எங்க மாமா இயற்கை விவசாயி, அவர் கொடுத்த ஊக்கத்தினால் ஈஷா ஒருங்கிணைத்த ஜீரோ பட்ஜெட் 8 நாள் பயிற்சிக்குச் சென்ற பிறகுதான் இயற்கை விவசாயத்துல முழுசா ஆர்வம் வந்துச்சு. அன்றிலிருந்து இயற்கை விவசாயம்தான் செய்கிறோம். நிலக்கடலையையும், சிறுதானியங்களையும் முக்கியமாகப் பயிர் செய்கிறோம்."

வறட்சியிலும் பசுந்தழைகள், ஆட்டுத் தீவனமாக காட்டுக் கம்பு

"ஆடுகளும் வளர்க்கிறோம், இப்போதைக்கு 45 செம்மறியாடுகளும், 4 வெள்ளாடுகளும் இருக்கு, மழைக்காலத்தில் பக்கத்துல இருக்கிற கொடங்கனார் அணைக்கட்டு ஓரமா ஆடுகள மேய விடுவோம், வறட்சியான காலத்துல மட்டும் தீவனம் போடத் தேவையிருக்கும், இதுக்காக காட்டுக் கம்பை பயிர் செய்திருக்கோம், இது நல்ல பசுந்தீவனம், உலர் தீவனமா எங்க நிலத்தில கிடைக்கிற நிலக்கடலைக் கொடியை தருகிறோம்."

"இந்த காட்டுக் கம்பு பசுந்தீவனத்துக்கு உகந்த ரகம், இதன் விதைகள் சந்தையில் கிடைக்கிறது. விதைத்து 40 நாட்கள் வரை ஆடு, மாடு மேயாம பாத்துக்கணும், 40 நாட்கள் கழிச்சு ஆடுகளை மேய்ச்சலுக்கு விடலாம், ஆடு மேயறதால செடியின் வளர்ச்சி பாதிக்காது, திரும்பவும் நல்லா வளர்ந்துடும். தொடர்ந்து 15 நாட்களுக்கு 10 நிமிஷம் மட்டும் ஆடுகளை மேய விடுவோம், அடுத்த 15 நாட்களுக்கு கடலைக் கொடியைத்தான் தீவனமா தருகிறோம். இந்த இடைப்பட்ட நாளில் கம்பு வளர்ந்து மேய்ச்சலுக்குத் தயாராகிடும், இப்படி செய்யறதுனால வறட்சி காலங்களிலும் ஆடுகளுக்கு பசுந்தீவனம் கிடைக்குது."

"இரசாயன விவசாயம் செய்யும்போது ஆடுகளுக்கு அடிக்கடி நோய் வந்து இறந்து போகும், இதற்கு பூச்சிக்கொல்லி படிந்த கடலைக் கொடிதான் காரணம்னு நினைக்கிறோம். தற்போது இயற்கை முறையில் பயிர் செய்வதால் ஆடுகள் நோயினால் இறப்பதில்லை."

“அட ஆடுமாடு இருந்தா தானுங்கோ விவசாயம் செய்யமுடியும்?! அதானுங்க இந்த கள்ளிப்பட்டி கலைவாணியும் ஊர்ல ஒரு ஆட்டுப்பண்ணை வச்சிருக்கேனுங்க. ரெண்டு குறும்பாடு இருந்தா குடி வாழும், நாலு வெள்ளாடு இருந்தா ஊரே வாழும்னு என்ற ஊருல பெரியவங்க அடிக்கடி சொலவடை சொல்லுவாங்கோ! அதுமாறி ஆடு வளத்தாலே போதுமுங்க, நல்ல வருமானம் கெடைக்குமுங்க. ஆனா ஒன்னுங்க இந்த இரசாயன பூச்சி மருந்தெல்லாம் தீவனத்துக்கு பயன்படுத்துனோமுன்னா, பொறவு சொந்த செலவுல சூனியம் வச்ச மாதிரி ஆகிப்போயிருமுங்க!”

ஆடு வளர்ப்போடு சிறுதானிய விவசாயம்... அசத்தும் இயற்கை விவசாயிகள்!, adu valarppodu sirudaniya vivasayam asathum iyarkai vivasayigal

ஆடு வளர்ப்போடு சிறுதானிய விவசாயம்... அசத்தும் இயற்கை விவசாயிகள்!, adu valarppodu sirudaniya vivasayam asathum iyarkai vivasayigal

இயற்கை விவசாயத்துக்கு மாறிய தந்தை

"நான் இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டாலும், எங்க அப்பா இரசாயன விவசாயம்தான் செய்யணும்னு சொன்னாரு, ஒரு முறை இயற்கை முறையில் பயிர் செய்த கத்தரியில் சில செடிகளில் மட்டும் வேர்ப் புழு தாக்கியிருந்தது, அதைக் கண்ட எங்கள் அப்பா நாங்கள் பலமுறை சொல்லியும் கேட்காமல் பூச்சிக்கொல்லி மருந்தைத் தூவிவிட்டார்.

இயற்கை விவசாயத்திற்கு மாறிய பிறகு செலவு மிகவும் குறைந்து விட்டது. தட்டைப்பயறு எங்க நிலத்திலேயே விளையறதால பயறுமாவு செலவு இல்லை. நாட்டுச்சர்க்கரையும், பூண்டும் மட்டுமே வெளியில் இருந்து வாங்குகிறோம், இதுக்கெல்லாம் மொத்தமாக ரூ.700 மட்டும் செலவாகிறது.

அடுத்த நாள் நீர் பாய்ச்சும்போது எந்தெந்த இடங்களில் பூச்சிக்கொல்லி மருந்தைத் தூவியிருந்தாரோ அந்த இடத்தில் எல்லாம் மண்புழுக்கள் இறந்து கிடந்ததைப் பார்க்க முடிந்தது, அதில் பாடம் கற்ற எங்கள் அப்பா, அன்றிலிருந்து இயற்கை விவசாயத்திற்கு அவரது ஒத்துழைப்பைத் தருகிறார்."

வறட்சியில் சிறுதானியங்கள்

பொதுவா எல்லா வகை சிறுதானியத்தையும் போடுவோம், அதிகமா போடுவது தினை, கம்பு, கேழ்வரகு, வெள்ளைச் சோளம் போன்றவைதான். சிறுதானியங்களை வரப்போரங்களிலும் ஊடுபயிராவும் கூடப் போடுவோம். தினையை ஒவ்வொரு வருஷமும் போடுவோம். தை பட்டத்தில ஒரு ஏக்கர் சோளம் போட்டதுல 6 மூட்டை விளைச்சல் கிடைத்தது, 15 சென்ட்டில் ராகியும் பயிர் செய்துள்ளோம், இதிலிருந்து 2 மூட்டை அறுவடை கிடைக்கும்.

நிலக்கடலை

ஐந்து வருஷத்துக்கு முன்பு வாங்கிய இந்த மானாவாரி நிலத்தில் முதல் பயிரா கடலை போட்டதுல, 22 மூட்டை கடலை கிடைத்தது. ஆனா தொடர்ந்து இரசாயன விவசாயம் செஞ்சதால் மண் வளம் குறைஞ்சு, கடைசியா 15 மூட்டைதான் கிடைத்தது.

இந்த வருஷம் இயற்கை முறையில்தான் பயிர் செய்தோம், ஏக்கருக்கு 18 மூட்டை கிடைத்தது, மண்வளம் படிப்படியா நல்லா மாறிட்டு வர்றதால அடுத்த அறுவடை 25 மூட்டை வரை கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். மகசூல் கொஞ்சம் குறைஞ்சாலும் நஷ்டம் எதுவும் கிடையாது, லாபந்தான்.

தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க உத்தி

தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கார்த்திகைப் பட்டத்தில் இரண்டு ஏக்கர், மார்கழி பட்டத்தில் இரண்டு ஏக்கர் எனப் பிரித்து விதைப்பு செய்வேன். இப்படி ஒரு மாத இடைவெளி விட்டு பயிர் செய்யும்போது இருக்கும் தண்ணீரை வைத்து ஓரளவு சமாளிக்க முடியும்.

கடலைக்குக் குறைந்தது நான்கு உழவு செய்யணும், அப்பத்தான் கடலை நன்கு காய் பிடிக்கும், சொந்தமா 4 நாட்டு மாடு இருக்கு, அதோட தொழு உரத்தையே ஒரு ஏக்கருக்கு 6 டிப்பர் வரை அடிப்போம். நடவுக்கு டிராக்டர் வச்சுத்தான் பாத்தி போடுவோம். விதைப்புக்கு கூலியாட்கள்தான் நல்லது. அப்பத்தான் கொஞ்ச கொஞ்சமா விதைச்சு தண்ணீர் பாய்ச்ச வசதியா இருக்கும்.

“மண்ண மதிச்சா இளையவ (மகாலட்சுமி) வருவா; மண்ணுதானேன்னு மிதிச்சா மூத்தவ (மூதேவி) வருவான்னு என்ற பெரிய வூட்டு ஆத்தா அடிக்கடி சொல்லுவாப்டிங்கோ! மண்ணுதானுங்க நம்ம சாமி! அதுக்கு போயி விஷம் குடுக்கலாமுங்ளா? ‘மண்புழு உழவனின் நண்பன்’னு சொல்லி 2ம் வகுப்பு பாடத்துல சொல்லிக்குடுத்தது இவ்வளவு நாளா ஆச்சுல்லீங்கோ அதான் மறந்துட்டோமுங்க! ஆனா... மண்ண அனுபவமா படிச்சோமுன்னா, அது நல்லாவே புரியுமுங்க!”

தொடர்ந்து பேசிய திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இயற்கை முறையில் நிலக்கடலை சாகுபடி பற்றித் தெரிவித்தவை...

"விதை நடவு செய்ய பாத்தி போடுவது, இடைவெளி எல்லாம் பொதுவாக எல்லாரும் செய்வது போலத்தான், ஐந்து அடி பாத்தி போட்டு அரை அடி இடைவெளியில் விதைப்போம், இடைவெளி அதிகமானால் மகசூல் குறையும்.

கடலை நட்டவுடன் முதல் தண்ணீர் விடுவோம், 20 நாள் கழித்து களையெடுத்து தண்ணீர் விடுவோம், இந்தத் தண்ணீர் கூடவே ஜீவாமிர்தத்தையும் கலந்துவிட்டு, இலைகளுக்கும் ஜீவாமிர்தம் தெளிப்போம்.

30வது நாளில் பயிர் நன்கு வேர் பிடித்து வளரும், இந்த நேரத்தில் நிலத்தைக் காயாம தேவைக்கேற்ப தண்ணீர் விடணும். 45வது நாளில் மண் அணைத்துக் களையெடுத்தபின் இரண்டாம் முறையா ஜீவாமிர்தத்தை பாசன நீருடன் விடணும். பூச்சிகள் தாக்குதல் ஏற்பட்டால் மட்டும் அக்னி அஸ்திரம், வேப்பங்கொட்டைக் கரைசல் மற்றும் இஞ்சி, பூண்டு கரைசல் அடிப்போம்."

ஆடு வளர்ப்போடு சிறுதானிய விவசாயம்... அசத்தும் இயற்கை விவசாயிகள்!, adu valarppodu sirudaniya vivasayam asathum iyarkai vivasayigal

ஆடு வளர்ப்போடு சிறுதானிய விவசாயம்... அசத்தும் இயற்கை விவசாயிகள்!, adu valarppodu sirudaniya vivasayam asathum iyarkai vivasayigal

செலவு வைக்கும் இரசாயன விவசாயம்

"இரசாயன விவசாயம் செய்யும்போது உரத்துக்கும், பூச்சிக்கொல்லிக்குமான செலவு கையை மிஞ்சி போகும். விதைக்கும்போது ஒரு உரமும், இரண்டாவது களையெடுக்கும்போது ஒரு உரமும் வைப்போம், சில நேரம் பிஞ்சு பிடிக்கும்போது கூட யூரியாவைத் தண்ணீரில் கலந்து விடுவோம். மூன்று ஏக்கருக்கு DAP போன்ற இரசாயன உரம் வைக்க மொத்தமா ரூ. 21,000 செலவாகும்.

இது தவிர பூச்சி மருந்து செலவும் இருக்கு. விதைத்து 25வது நாள், களையெடுத்து பூக்கும்போது, பிஞ்சு வைக்கும்போது என மூன்று முறை பூச்சிக்கொல்லி அடித்தாலும் பூச்சிகள் கட்டுப்படாது. மூன்று ஏக்கருக்கு பூச்சிக்கொல்லிக்கு மட்டும் ரூ.9,000 செலவாகும். மொத்தத்துல இரசாயன விவசாயம் பயிர் செய்யும்போது மூன்று ஏக்கருக்கு உரம், பூச்சி மருந்துக்கு மட்டும் ரூ.30,000 வரை செலவாகும்."

செலவில்லா இயற்கை விவசாயம்

"இயற்கை விவசாயத்திற்கு மாறிய பிறகு செலவு மிகவும் குறைந்து விட்டது. தட்டைப்பயறு எங்க நிலத்திலேயே விளையறதால பயறுமாவு செலவு இல்லை. நாட்டுச்சர்க்கரையும், பூண்டும் மட்டுமே வெளியில் இருந்து வாங்குகிறோம், இதுக்கெல்லாம் மொத்தமாக ரூ.700 மட்டும் செலவாகிறது.

இயற்கை விவசாயத்தில் பூச்சிகள் பிரச்சினையும் குறைவுதான், கடந்த முறை பூச்சிகளைக் கட்டுப்படுத்த நான்கு முறை பூச்சி விரட்டி தெளித்தோம். இயற்கை விவசாயம் என்பதால் பூச்சித்தொல்லை குறைந்துள்ளதால் இப்போது ஒரு முறை அக்னி அஸ்திரமும், ஒரு முறை வேப்பங்கொட்டைக் கரைசலும்தான் அடித்தோம்."

முருங்கை

"செடிமுருங்கையில குட்டை ரகம் மற்றும் நீள ரகம் என இரண்டு ரகம் இருக்கு. நீளக்காய்கள் ஐந்து அடிக்கு மேல் வளரக்கூடியது, குட்டை காய்கள் இரண்டு அடி நீளம் வளரக்கூடியது. இரண்டும் நல்ல சுவையாக இருந்தாலும் நீளக்காய்களில் சதைப்பற்று குறைவாக இருக்கும், இந்த நீளக்காய்களை உள்ளூர் சந்தையில் விற்க முடிவதில்லை, பெங்களூர் சந்தைக்கு அனுப்பி வைக்கிறேன். முருங்கையில் ஊடுபயிராக கத்தரி, உளுந்து, மிளகாய் என்று மூன்றையும் பயிர் செய்துள்ளேன்."

ஆடு வளர்ப்போடு சிறுதானிய விவசாயம்... அசத்தும் இயற்கை விவசாயிகள்!, adu valarppodu sirudaniya vivasayam asathum iyarkai vivasayigal

புண்ணாக்குக் கரைசல்

"கத்தரிக்காய் மற்றும் முருங்கைக்கு கடலை புண்ணாக்குக் கரைசலை தண்ணீருடன் கலந்து விடுகிறோம். 10 கிலோ கடலைப் புண்ணாக்கு, 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 5 கிலோ எள்ளுப் புண்ணாக்கு கலந்து ஊறவைத்து கிடைக்கும் நீரை பயிருக்குக் கொடுக்கிறோம். புண்ணாக்குக் கரைசல் பயன்படுத்தும்போது காய்கள் திறட்சியாக வரும்.

கடலைப் புண்ணாக்கை மட்டும் பயன்படுத்தினால் வேரில் புழுக்களைக் காணமுடிகிறது, அதனால் கடலைப் புண்ணாக்குடன் வேப்பம் புண்ணாக்கை சேர்த்தே கரைசல் தயாரிக்க வேண்டும். வேலியோரங்களில் இருக்கும் 30 வேப்ப மரங்களில் இருந்தே தேவையான வேப்பங்கொட்டைகளைச் சேகரித்துக் கொள்வோம். வேப்பங்கொட்டைகளை விற்பதில்லை, அடுத்த ஆண்டுக்கான வேப்பங்கொட்டைகளையும் இப்போதே சேகரித்து வைத்துள்ளேன்."

பயிர்களின் வாழ்நாளை அதிகரிக்கும் இயற்கை விவசாயம்

"பொதுவாக இரசாயன விவசாயம் செய்யும்போது கத்தரிக்காய் ஆறு மாதம் மட்டும்தான் காய்ப்பில் இருக்கும். இயற்கை விவசாயம் செய்வதால் பத்து மாதங்கள் வரை நன்றாகக் காய்த்தது. கத்தரிக்கு இந்த வருடம் நல்ல விலையும் கிடைத்ததால், நல்ல லாபமும் கிடைத்தது.

ஆமணக்குச் செடிகளை வேலியோரங்களில் வச்சிருக்கோம். பொதுவாக ஆமணக்கு இரண்டு காய்ப்பு முடிந்த பின் பட்டுப் போயிடும், ஆனா இப்போ இயற்கை விவசாயம் செய்வதால் மூன்று முறை வரை காய்த்தது, 60 கிலோ பருப்பு அறுவடை செய்துள்ளோம்.

துவரையும் இந்த மண்ணுக்கு நன்றாக வருகிறது, துவரை அறுவடை செய்யும்போது செடியை அடியோடு வெட்டிவிட்டு, காயப்போட்டுத் தட்டி துவரங்காயை சேகரிப்பார்கள், நாங்கள் துவரையை வெட்டாமல் காயைப் பறித்து எடுத்தோம், இதனால் துவரையில் மூன்று முறை அறுவடை கிடைத்தது."

நஞ்சையும் புஞ்சையும்

இறுதியாக "இந்த பகுதியில் சிறுதானியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பயிர் செய்வதால் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடிகிறது. தமிழ்நாடு முழுவதும் வறட்சி என்பது தொடர்கதையாகி விட்டதால் நஞ்சை பயிர்களான நெல், கரும்பு, வாழை, தென்னையை மட்டுமே நம்பி இருக்காமல் புஞ்சை பயிர்களாக சிறுதானியங்களையும் பயிர் செய்ய அனைத்து மாவட்ட விவசாயிகளும் முன் வரவேண்டும்."

"களைச்சவனுக்கு கம்மங்கூழு இளைச்சவனுக்கு கேப்பக்கூழுன்னு சொல்லி அந்தக் காலத்துல சிறுதானிய உணவுகள அன்றாட உணவுல சேத்து சாப்பிட்டுபோட்டு வந்தோமுங்க. இடையில நாகரீகமுங்கற பேர்ல அரிசிய மட்டும் பிரதானமா ஆக்கிப்போட்டோமுங்க. அதுனால தானுங்க இன்னைக்கு சக்கர வியாதியெல்லாம் அதிகமாயிபோச்சு! ஆரோக்கியத்துக்கு மட்டுமில்லீங்கோ விவசாயிக வறட்சியிலயும் சிறப்பா வெள்ளாம எடுக்கோணுமுன்னா சிறுதானியங்கள பயிர்செய்யணும்னு இவிக சொல்றாங்கோ!"

"ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சிறுதானிய சாகுபடி தமிழகம் முழுவதும் இருந்தது, இரண்டு தலைமுறைக்கு முன் மிக முக்கிய உணவாக சிறுதானியங்களே இருந்தன என்பதை நாம் அனைவரும் அறிவோம், எனவே விவசாயிகள் தயக்கமின்றி சிறுதானியங்களை பயிர் செய்ய முன்வரவேண்டும்." என்ற நல்லெண்ணத்தை வெளிப்படுத்திய திரு.கார்த்திகைவேல் அவர்களுக்கும் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் ஈஷா விவசாயக்குழு வாழ்த்துக்களைத் தெரிவித்து விடைபெற்றது."

தொடர்புக்கு:

திரு. கார்த்திகைவேல் - 9965317726
திரு. கிருஷ்ணமூர்த்தி - 9976914677

தொகுப்பு:

ஈஷா விவசாய இயக்கம் - 8300093777

 

'பூமித் தாயின் புன்னகை! – இயற்கை வழி விவசாயம்' தொடரின் பிற பதிவுகள்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1