6 மே 2020, கோவை: கலைநயத்துடன் கண்கவரும் ஒளி ஒலி அமைப்போடு படைக்கப்படும் ஆதியோகி திவ்ய தரிசனம் Mondo*dr என்ற சர்வதேச அமைப்பு வழங்கும் "வழிப்பாட்டு தளங்கள்" என்ற பிரிவின் கீழ் ஆசிய-பசிபிக் பகுதிகள் மற்றும் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா பகுதிகளுக்கான தொழிநுட்ப விருதை வென்றுள்ளது. Axis Three Dee Studios என்ற நிறுவனம் உருவாக்கிய ஆதியோகி திவ்ய தரிசனம், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய-பசிபிக் நாடுகளில் இருந்து வந்த மற்ற படைப்புகளோடு போட்டியிட்டது. Mondo*dr விருதுகள் உலகெங்கிலும் நிறுவப்பட்டுள்ள சிறந்த தொழில்நுட்ப நிகழ்ச்சிகளை சிறப்பிக்கும் ஒரு விருதாக உள்ளது.

Axis Three Dee Studios நிறுவனத்தின் நிறுவனரும், ஆதியோகி திவ்ய தரிசனத்திற்கான விஷுவல் டைரக்டருமான அவிஜித் சமஜ்தார் அவர்கள், இந்த விருதின் மூலம் "மிகவும் நெகிழ்வாகவும் மகிழ்ச்சியாகவும்" உணர்வதாக கூறினார். மேலும் அவர் கூறும்போது, "ஆதியோகி திவ்ய தரிசனத்திற்காக பணிபுரியும் வாய்ப்பினை வழங்கிய சத்குருவிற்கு நான் மனமார்ந்த நன்றியை கூறுகிறேன். இதை உருவாக்குவதில் சத்குரு எல்லா நிலைகளிலும் ஈடுபட்டார் - அதற்கான திரைக்கதை வடிவத்தை உருவாக்குவதிலிருந்து அதன் வார்த்தை விவரிப்பு, இசை, காட்சியமைப்பு மற்றும் எல்லா செயல்பாட்டிலும் அவர் பங்கு கொண்டிருந்தார். சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா இசை குழுவினர் உருவாக்கிய இசை இந்த பிரமாண்டமான நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டியது," என்றார்.

 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

கோவை ஈஷா மையத்தில் அமைந்துள்ள உலகிலேயே பெரிய மார்பளவு திருவுருவச் சிலையான 112-அடி உயர ஆதியோகி சிலை மீது ஒளி வீச்சு முறையில் முப்பரிமாண ஒளி-ஒலி காட்சியாக 14-நிமிடங்களுக்கு நடக்கும் இந்நிகழ்ச்சி, ஆதியோகி திவ்ய தரிசனம் ஆகும். சத்குருவின் குரலில் உலகின் முதல் யோகியான ஆதியோகியைப் பற்றிய விவரிப்போடு அமையும் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி, வார இறுதி நாட்களில் ஈஷா யோக மையம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோரை ஈர்க்கிறது. (நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக இந்நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது).

8000 சதுர அடியிலான மேடுபள்ளம் நிறைந்த கருமை நிற மேற்பரப்பில், ஒளி பாய்ச்சும் முறையில் காட்சிப்படுத்துவது இதுவே முதல்முறை என்று சமஜ்தார் கூறினார். கருப்பு நிறம் மற்ற நிறங்களை கிரகிக்கும் தன்மையுடையது என்பதால், பிரத்யேகமான நிறங்களின் தொகுப்புகளை மட்டுமே உபயோகிக்க வேண்டியிருந்தது என்பது சவாலானதாக இருந்ததாக கூறினார் சமஜ்தார்.

2019ம் ஆண்டு மஹாசிவராத்திரி நிகழ்வன்று மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் அவர்களால் ஆதியோகி திவ்ய தரிசனம் பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டது. 112-அடி சிலை மீது ஒளிவீழும் காட்சியாக படைக்கப்பட்ட இந்த நிகழ்வை சுமார் 3,50,000 பார்வையாளர்கள் கண்டனர்.

Axis Three Dee Studios நிறுவனம் 2009ம் ஆண்டு நிறுவப்பட்டது. ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆசியா என உலகெங்கிலும் பல நிகழ்ச்சிகளை இந்த நிறுவனம் இதுவரை செயல்படுத்தியுள்ளது. இருப்பினும் சமஜ்தாருக்கும், அவர் குழுவினருக்கும், இந்த ஆதியோகி திவ்ய தரிசனம் மிக தனித்துவம் வாய்ந்தது என்றும், அது "அன்பின் வெகுமானம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச அளவில் பொழுதுபோக்கில் தொழிற்நுட்பம் என்ற தளத்தில் வெகுவாக கவனிக்கப்படும் அமைப்பே Mondo*dr. 1990ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பத்திரிக்கை சர்வதேச சந்தையில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக தன் இருப்பை தக்க வைத்துள்ளது. திரை அரங்கங்கள், நேரடி இசை மையங்கள், அருங்காட்சியகங்கள், கப்பல்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் என உலகின் பலப் பகுதிகளும் அமைக்கப்பட்டுள்ள முத்திரைப்பதித்த நிகழ்ச்சிகளைப் பற்றி இந்த பத்திரிக்கை பிரசுரித்து வந்துள்ளது.