நம்மவரு நம்மாழ்வார்... பகுதி 8

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புயல், வெள்ளம் என பல்லாயிரக் கணக்கானோர் பலியாகிறார்கள். இயற்கை சீற்றமென்றால் மக்கள் சாகத்தான் வேண்டுமா? வேறு வழியே இல்லையா? இது பற்றி நம்மாழ்வார் கூற வருவதென்ன?!

நம்மாழ்வார்:

சத்குரு ஒரு முறை அமெரிக்காவில் இருந்தபோது ஒரு சூறாவளி புயல் வீசியது. மோட்டார் வாகனங்கள் வானில் பறந்தன. தொலைக்காட்சியில் இதைப்பார்த்த சத்குரு எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற தகவல் அடுத்த நாள் வரும் என்று எதிர்பார்த்தார். அடுத்த நாள் தொலைக்காட்சியில் தகவல் வந்தது. இருவர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

சத்குரு இது பற்றி ஒரு கூட்டத்தில் பகிர்ந்து கொண்டார். வளர்ந்த நாட்டவர்கள் பேரிடர் வரும்போது அதனை எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளார்கள். நாமோ எண்ணற்ற உயிர்களையும் உடைமைகளையும் பலி கொடுத்துப் பரிதவிக்கிறோம்.

இந்த விஷயங்களில் இந்தியாவின் நிலை மிக மோசமாக இருக்கிறது. வெள்ளம் வரும்போது இறப்போர் எண்ணிக்கையில் முதல் இடம் வகிப்பது வங்கதேசம். அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. உலகத்தில் வெள்ளத்தால் உயிரிழப்போரில் ஐந்தில் ஒருவர் இந்தியர்.

இயற்கையைச் சிதைத்து பட்டண மயமாக பூமியை மாற்றியபோதும் பணக்கார நாட்டவர் தங்களைக் காத்து கொள்கிறார்கள் என்கிறார் மோகனமூர்த்தி. வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றங்களை முழுவதுமாக தவிர்க்கமுடியும் என்று அந்த நாட்டவர்கள் நினைக்கவில்லை. பேரழிவு வந்தாலும் பெரும் சேதமில்லாமல் தங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்று திட்டமிடுகிறார்கள். வடிகால்களைப் பெரிது பெரிதாக எழுப்புவதற்கு மாறாக வெள்ளநீர் வடிகாலை எட்டும் வேகத்தைக் குறைக்கிறார்கள். கொட்டுமழை பெய்யும் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அப்பகுதி நிர்வாகத்திற்கு என அரசாங்கம் அதிக நிதி செலவிடுகிறது. இதைத்தான் முற்காலத்தில் நமது சிற்றரசுகளும் பேரரசுகளும் செய்தன.

வெள்ளம் என்பது இயற்கையான நிகழ்வு. ஆனால் மனிதர்களின் தவறான செயல்பாடுகளால் வெள்ளப் பெருக்கின் சேதம் அதிகரிக்கிறது. இதை உணர்ந்தவர்கள் வெள்ளப் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையில் பணத்தை முதலீடு செய்கிறார்கள். வெள்ளம் வரும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும்
பங்கேற்கிறார்கள்.

இதுபோன்ற விஷயங்களில் மனித சாதனையின் அடையாளச் சின்னமாக நெதர்லாந்து உள்ளது. இந்நாட்டில் குடியிருப்புகள் ஆற்றுமட்டத்திற்கு கீழ் அல்லது கடல் மட்டத்திற்கு கீழ் உள்ளது. மக்கள் தொகையில் பாதிப் பேர் இப்படிப்பட்ட தாழ்வான பகுதியில் வசிக்கிறார்கள். வெள்ளப் பெருக்கு அவர்களுக்கு வாடிக்கையான ஒன்று. அவர்கள் அதனை எப்படிச் சமாளிக்கிறார்கள் தெரியுமா? குடியிருப்புகளுக்குப் பின்புலத்தில் பெரிய ஏரிகளை உருவாக்கியுள்ளார்கள். (இராமநாதபுரத்தில் காகம் பறக்காத 49 கண்மாய் ஏரி உள்ளதே, அது போல). ஆதலால் நெதர்லாந்து நாட்டின் மேற்குப் பகுதியில் கடல் நீர் மட்டத்திற்குக் கீழே வாழ்பவர்கள் கூட வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை. இந்தியாவில் அதுபோன்ற திட்டங்கள் எப்போது வரும்?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் எழுதியுள்ளது நினைவுக்கு வருகிறது.

"மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப
மணிப்பூ ஆடை அது போர்த்து
கருங்கயல் கண் விழித்து ஒல்கி
நடந்தாய் வாழி காவேரி!"

'இரு கரைகளிலும் வண்டுகள் இசை எழுப்புகின்றன. பூக்களையே ஆடையாக அணிந்து புறப்பட்ட காவிரியே! உன்னில் துள்ளுகின்ற கெண்டை மீன்கள்தான் உனது கண்களோ? இடையை வளைத்து, நெளித்து நடைபோடும் காவிரியே! நீ வாழ்க!' என்று மாதவி பாடுவதாக இளங்கோ எழுதுகிறார். காவிரி மட்டும்தானா? எல்லா ஆறுகளும் இப்படி நடைபோட முடியும், கரை நெடுக மரங்கள் வளர்ந்தால்.

மரங்கள்! வரங்கள்!!
வளர்ப்போம்! வாருங்கள்!!

தொடர்ந்து விதைப்போம்...

nature, nammalvar, agriculture

தள்ளாத வயது என வர்ணிக்கப்படும் வயதில், வாலிபராய் நம்மிடையே வலம் வரும் நம்மாழ்வார் அவர்கள், இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவை எடுத்துரைப்பது எனப் பல தளங்களில் தனது சேவையை ஆற்றிவருகிறார்.

Moyen_Brenn_BE_BACK_IN_SEPTEMBER @ flickr