பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 19

கலப்படமில்லா பதநீர், இனிக்கும் தர்பூசணி, இயற்கை விவசாய இடுபொருட்கள், உள்ளூர் சிறுவர்களுக்காக தண்ணீர் தொட்டி... இப்படி நம் கவனத்தை ஈர்க்கும் செயல்பாடுகளில் நம்மை வெகுவாக கவரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இயற்கை விவசாயி பற்றி முழுவதும் தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்தறியுங்கள்!

ஈஷா விவசாயக்குழுவின் தெற்கு மாவட்ட பயணத்தில், தூத்துக்குடி மாவட்டம் வள்ளியம்மாள்புரத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி திரு.செந்தில்குமார் அவர்களின் பண்ணையை பார்வையிட்டது, அந்த நிகழ்வு தகவல்கள் உங்களுக்காக!

திருச்சியில் அப்பள நிறுவனம் வைத்திருக்கும் திரு.செந்தில்குமார் அவர்களின் சொந்த ஊர் தூத்துக்குடி. எங்கள் வருகையைக் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்ததால் அவரும் அவரது துணைவியாரும் தூத்துக்குடி வந்திருந்தனர். நாங்கள் உச்சி வெய்யிலில் அவர்களது இல்லத்திற்குச் சென்றிருந்தோம். செந்தில் அவர்களின் துணைவியார் எங்களுக்கு சுவையான பதநீரை கொடுத்து உபசரித்தார்.

போலி பதநீர் கவனம்

பதநீரின் சுவையில் நாக்கும் வயிறும் குளிர்ந்தது, அப்படியே பண்ணையை நோக்கி நடக்கத் துவங்கியபோது, பதநீரைப் பற்றிய பேச்சைத் தொடர்ந்தார் செந்தில்!

2015 ஜூன் மாதம் நம்மாழ்வார் ஐயாவின் வானகத்துக்குச் சென்றேன் பல அடிப்படை விஷயங்களை அங்கு கற்றுக்கொண்டேன். தொடர்ந்து 2015 டிசம்பரில் ஈஷா நடத்திய பாலேக்கர் ஐயா அவர்களின் 8 நாள் ஜீரோ பட்ஜெட் பயற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். பயிற்சி முடிந்த பிறகு இயற்கை விவசாயத்தில் ஜெயித்து விடுவோம் என்று தைரியம் வந்தது.

"பெரும்பாலான இடங்களில் பதநீர் என்று சொல்லிக்கொண்டு சாக்கரீன், குளுக்கோஸ், சர்க்கரை மற்றும் செயற்கை வண்ணங்களை கலந்து பதநீர் தயாரித்து விடுகிறார்கள். இதில் கலக்கப்படும் தண்ணீரும் சுகாதாரமற்றதாக இருக்கும். சுவைக்கு கலக்கப்படும் பொருட்களால் வயிற்றுக் கோளாறுகள் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளும் ஏற்படும். அதனால் பதநீரை தெரிந்த நபர்களிடமிருந்தோ அல்லது காதிகிராப்ட் போன்ற நிறுவனங்களில் விற்கும் பேக் செய்யப்பட்ட பதநீரையோ பருகுவது நல்லது" என்றார். இப்படி பேசிக்கொண்டே நடக்க பண்ணையும் வந்துவிட்டது.

“ஏனுங்ணா... அலுப்புக்கு சுடுநீரு சூட்டுக்கு பதநீருனு அந்தக் காலத்துல சும்மாவா சொல்லிவச்சிருக்காங்கோ?! ஆனா... இப்போ பன மரங்களும் கம்மியாகிக்கிட்டே வருதுங்ணா! அதனாலய்ங்க நாம அல்லாரும் அவங்கவங்க ஊருகல்ல குளம், குட்டை கரையோரத்துல பனை விதைய போட்டு வச்சுப்போடோணுமுங்க! அதுக மரமாகி கரைகளுக்கும் பாதுகாப்பா இருக்கும், நம்ம அடுத்த சந்ததிக்கும் பலன் குடுக்குமுங்க!”

கருவேலங்காட்டில் ஒரு புதிய பண்ணை

திரு.செந்தில் அவர்களின் பண்ணையைப் பார்த்த உடனே அப்பண்ணை ஒரு புதிய பண்ணை என்பதை அறியமுடிந்தது. அதை உறுதிப்படுத்திய செந்தில் "இந்த இடத்தில் கருவையும், சீமக்கருவையும்தான் இருந்தது, அதை சுத்தப்படுத்தி எனது அண்ணன் நான்கு ஏக்கரில் விவசாயம் செய்யத் தொடங்கினார். நான் சொந்தமாக தொழில் செய்து வந்தாலும், விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் இருந்தது, அதன்பின் நிலம் முழுவதையும் சுத்தம் செய்தபிறகு விவசாயம் செய்யறதுன்னா இயற்கை விவசாயமாகவே செய்யலாமென்று சொன்னேன். என் அண்ணனும் இயற்கை விவசாயம் செய்ய ஒத்துக்கொண்டார்.

அதன்பிறகு ஒரு சில புத்தகங்களை படிச்சு இயற்கை விவசாயத்தை பற்றி தெரிஞ்சுகிட்டேன், 2015 ஜூன் மாதம் நம்மாழ்வார் ஐயாவின் வானகத்துக்குச் சென்றேன் பல அடிப்படை விஷயங்களை அங்கு கற்றுக்கொண்டேன். தொடர்ந்து 2015 டிசம்பரில் ஈஷா நடத்திய பாலேக்கர் ஐயா அவர்களின் 8 நாள் ஜீரோ பட்ஜெட் பயற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். பயிற்சி முடிந்த பிறகு இயற்கை விவசாயத்தில் ஜெயித்து விடுவோம் என்று தைரியம் வந்தது.

“அட சாமி... மனுசங்க மனசு வச்சா கருவேலங்காட்ட மட்டுமில்லீங்கோ... கடும் பாறையையும் மாத்திப்புடலாமுங்க. பெருமாள் இருக்குற வரைக்கும் திருநாளுக்கு பஞ்சமிருக்காதுனு என்ற ஊர்ல பெரிய வூட்டு ஆத்தா அடிக்கடி சொல்லுவாப்டிங்கோ! அதுமாறி நம்மாழ்வார் ஐயா, பாலேக்கர் ஐயா மாதிரி இன்னும் நெறைய பேரு இருந்தா இயற்கை விவசாயம் அல்லா எடத்திலயும் வந்திருமுங்க!”

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

முருங்கையில் மகத்தான மகசூல்

ஜீரோ பட்ஜெட் வகுப்பு முடிஞ்சு ஒரு மாசத்துலயே விவசாயம் செய்ய ஆரம்பிச்சுட்டோம், பண்ணை முழுவதும் சொட்டுநீர் பாசனம் அமைத்து, சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க சோலார் பேனல்களையும் நிறுவினோம். 2016 தை மாதம் 13 ஏக்கரில் 1000 முருங்கை நட்டோம். போத்து நடவு செஞ்சதால மரம் வேகமா வளர்ந்து, ஆடி மாசத்துல காய்க்கவும் தொடங்கிடுச்சு! இந்த ரகத்தை குரூஸ் ரகம்னு சொல்லுவாங்க. போத்து குச்சிகளை பக்கத்து ஊர் விவசாயியிடம் வாங்கிக்கிட்டேன். 1000 போத்துல 700 பொழச்சிருக்கு அதில் 550 மரங்கள் நல்லா காய்க்குது.

முருங்கைக்கு இடுபொருளா ஜீவாமிர்தம் மற்றும் பத்திலை கஷாயம் மட்டும்தான் பயன்படுத்துறேன். ஒரு சில இடுபொருளை பயன்படுத்தியே சிறப்பாக விவசாயம் செய்ய முடியும் என்று பாலேக்கர் சொன்ன விஷயம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முருங்கையைச் சுற்றி ஆமணக்கு மற்றும் எருக்கந் தழைகளை மூடாக்காக போட்டிருக்கிறேன். வேறு இடுபொருள் எதையும் பயன்படுத்துவதில்லை.

முருங்கை வருஷத்துல ஆறுமாசம் வரைக்கும் பலன் கொடுக்கக்கூடியது. வருஷத்துக்கு இரண்டு முறை காய்ப்புக்கு வந்து மூன்று மாதம் வரை காய்க்கும். காய்ப்பு காலங்களில் ஒரு மரத்திலிருந்து மாதத்திற்கு 150 கிலோ வரை காய்கள் கிடைக்கும்.

முருங்கைக்காய்க்கு நிரந்தரமான விலை கிடைப்பதில்லை, விலை ஏற்ற இறக்கமாத்தான் இருக்கும். வைகாசி மாசத்துல கிலோவுக்கு 55 ரூபாய் வரை கிடைக்கும், ஆனா அந்த நேரத்தில் காய்ப்பு குறைச்சல்தான்! காய்ப்பு கூடிப்போச்சுன்னா கிலோவுக்கு 5 ரூபாய் கூட கிடைக்காது, கிலோவுக்கு குறைந்த பட்சம் 12 ரூபாய் கிடைச்சாதான் அறுப்புக்கூலி போக்குவரத்து செலவுக்கெல்லாம் கட்டுபடியாகும்."

முருங்கைக்காயில் புள்ளிநோய் தீர்வு என்ன?

"முருங்கை ரகங்களில் குரூஸ் ரகம், அழகியவிளை குரூஸ் ரகம் மற்றும் ஆண்டிப்பட்டி ரகம் என்று மூன்று ரகங்கள் வச்சிருக்கோம். இதுல குரூஸ் ரகங்களில் மட்டும் காய்களில் புள்ளி விழுகிறது, இந்த புள்ளிகள் இருந்தால் விலை குறைவாகத்தான் எடுக்கிறார்கள். ஆனால் ஆண்டிப்பட்டி முருங்கை ரகத்தில் இந்த புள்ளிகள் வருவதில்லை, இந்த புள்ளி வராமல் கட்டுப்படுத்தும் வழி முறைகள் ஏதேனும் உள்ளதா?” என்று வினவிய செந்தில் அவர்களுக்கு, "பழங்களின் மீது ஏற்படும் புள்ளிகளுக்கு திராட்சை ரசம் தெளிப்பது சிறந்த பலனை அளிப்பதினால் முருங்கைக்காயில் உண்டாகும் புள்ளிகளை கட்டுப்படுத்த திராட்சை ரசத்தை பரிட்சார்த்தமாக பயன்படுத்திப் பார்க்கலாம்" என்று தெரிவித்தோம்.

ஊடுபயிராக தர்பூசணி

"முருங்கையில் ஊடுபயிரா தர்பூசணியை அரை ஏக்கரில் பயிர் செய்திருக்கிறேன். அதுல 7 டன் மகசூல் கிடைச்சிருக்கு. இயற்கை முறையில் வளர்வதால் நல்ல இனிப்புச்சுவை! எனது நண்பர்கள், உறவினர்களுக்கெல்லாம் கொடுத்து, மேலும் காக்கா, குருவியெல்லாம் சாப்பிட்டது போக 5 டன் வரைக்கும் விற்பனை செய்தேன், உற்பத்தி செலவு பெருசா எதும் செய்யல, மொத்தமா 2000 மட்டும்தான் செலவாச்சு.

தர்பூசணி ஒரு கிலோ 12 ரூபாய், 5 டன்னில் ரூ.60,000 வருமானம் வந்தது. பறிப்புக்கூலி மற்ற செலவுகளுக்கு ரூ.10,000 போக எனக்கு ரூ.50,000 கிடைச்சது." தோட்டத்தில் இங்குமங்குமாக தர்பூசணி காய்த்திருந்தது. அதைப் பார்த்தவுடன் எங்களுக்கு தர்பூசணி சாப்பிட ஆவல் வந்து விட்டது. உடனே சில தர்பூசணிகளை பறித்து வெட்டிக் கொடுத்தார், தர்பூசணி இயற்கை முறையில் விளைந்ததால் நல்ல இனிப்புச் சுவையுடன் இருந்தது.

“சோழியன் குடுமி சும்மா ஆடாதுனு சொல்லுவாங்க இல்லீங்கோ... அதுமாறி சில பேரு ரொம்ப வெகரமா இருக்கறதா நெனச்சுப்போட்டு அல்லாத்துக்கும் கணக்கு பாத்து பாத்து, அடுத்தவங்களுக்கு எதையும் குடுக்காம லாபம் சம்பாதிக்க பாப்பாங்கோ! ஆனா நம்ம செந்திலண்ணா பாருங்கோ... பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்ங்கற ஐயன் வள்ளுவர் சொன்னத மனசுல வச்சு விளையுற பழத்த மித்த உயிர்களுக்கும் குடுக்குறாரு! இதுமாறி ஆளுங்க நெறைய இருக்கோணுமுங்க, அப்பதானுங்க மழ பெய்யும்!”

பண்ணையின் எதிர்காலத் திட்டம்

வருஷம் முழுவதும் விளைச்சல் கிடைக்கின்ற மாதிரி தேவையான மரங்களை நடணும், இப்போ 15 ஏக்கரிலும் முருங்கைக்கு இடையே மாங்கன்றுகளை வச்சிருக்கேன், இன்னும் இரண்டு வஷத்துல மா காய்ப்புக்கு வந்துடும். அதோட சேர்த்து 150 மாதுளை, 150 கொய்யா, 200 எலுமிச்சை மற்றும் பப்பாளி போன்ற கன்றுகளையும் நடவு செய்ய இருக்கிறேன்.

கத்திரிக்காய் இந்த மண்ணுக்கு நல்லா வருது, கொஞ்சம் கொடி காய்கறியும் போட்டிருக்கேன்; எல்லாம் நல்லா வருது; பூசணி, பரங்கி, பீர்க்கு, புடலை, பாகல் போன்ற காய்கறிகளை நிறைய போடணும்; வாழை ஒரு ஏக்கரில் இருக்கு. அதையும் அதிகரிச்சு 2500 வாழை மரங்கள் இருக்கிறமாதிரி பண்ணையை உருவாக்கணும். எனக்கு விவசாயம்தான் மனஅமைதிக்கான தொழிலா தெரியுது, இது ஆத்ம திருப்தியையும் தருது.

முத்துநகர் கண்டெடுத்த முத்தாக ஒரு இயற்கை விவசாயி...!, muthunagar kandedutha muthaga oru iyarkai vivasayi

கிராமத்தினருக்கு இடுபொருள் வழங்கத் திட்டம்

இயற்கை விவசாயத்த பத்தி தெரிச்சுக்க புதுசா யார் வந்தாலும் சொல்லிக் கொடுக்க தயாரா இருக்கேன். எங்கிட்ட 4 நாட்டு மாடு இருக்குறதனால இடுபொருள் பற்றக்குறை இல்லை. நண்பர்களுக்கு இடுபொருள் தர்றேன், இரண்டு பேர் என்னை பார்த்து இயற்கை விவசாயத்துக்கு மாறியிருக்காங்க.

கிராமத்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்பட முதலில் அவர்களுக்கு இடுபொருள்களை கொடுக்கணும், இடுபொருள்களை பயன்படுத்தி பலன் பார்த்துட்டாங்கன்னா சீக்கிரமா இயற்கைக்கு மாறிடுவாங்க! இன்னும் ஒரு வருஷத்தில் கிராமத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த என்னால் முடிந்த முயற்சிகளையெல்லாம் செய்வேன். அப்பள கம்பெனி முதலாளின்னு சொல்றத விட இயற்கை விவசாயின்னு என்ன மத்தவங்க சொல்றது எனக்கு சந்தோஷமா இருக்கு.

இப்படி பேசிக்கொண்டே கிணற்றருகில் வந்தோம், அங்கு பெரிய தண்ணீர் தொட்டி இருந்தது. அதைப்பற்றி கேட்டபோது... சிறுவர்கள் குளிப்பதற்காகவே தண்ணீர் தொட்டி கட்டியுள்ளேன். இதில் உள்ளூர் சிறுவர்கள் வந்து குளிப்பார்கள் என்று தெரிவித்தார். நாங்களும் சூடு தணிய ஒரு குளியலைப் போட்டுவிட்டு திரு. செந்தில்குமார் அவர்களுக்கும் அவரது துணைவியார் அவர்களுக்கும் "ஒரு சிறந்த மாதிரி பண்ணையாக உருவாக்குங்கள்" என்று வாழ்த்துக்கூறி விடைபெற்றோம்.

“அட இந்த கள்ளிப்பட்டி கலைவாணியும் செந்திலண்ணா மாறிதாங்ணா! என்ற பண்ணையில ஊர்க்காருங்கல்லாம் வந்து குளிப்பாங்கோ. நானும் சந்தோசமா குளிங்கன்னு சொல்லி விடுவேனுங்க. ஆனா ஒன்னுங்கண்ணா, சோப்பு சேம்ப்பெல்லாம் போடக்கூடாதுனு கட்டன்ரைட்டா சொல்லிப்போட்டேனுங்க! இயற்கை விவசாயத்துல இருந்துகிட்டு கெமிக்கல நிலத்துல விடக்கூடாதுங்கறதுல நான் ரொம்ப கறாரா இருக்கேனுங்க!”

தொடர்புக்கு:
திரு. செந்தில்குமார் - 99421 85554

தொகுப்பு:
ஈஷா விவசாய இயக்கம் - 83000 93777