என் இஷ்ட தெய்வம்
இந்தவார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு தனது இஷ்டதெய்வம் யாரென்ற உண்மையை சொல்கிறார். பக்தியென நாம் நினைப்பதை உடைக்கும் விதமாக பக்தி பற்றி விளக்குவதோடு, பக்தியும் தலைமையும் வெவ்வேறல்ல என்று அவர் அனுபவத்தில் உணர்ந்ததை பகிர்கிறார்.
இந்தவார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு தனது இஷ்டதெய்வம் யாரென்ற உண்மையை சொல்கிறார். பக்தியென நாம் நினைப்பதை உடைக்கும் விதமாக பக்தி பற்றி விளக்குவதோடு, பக்தியும் தலைமையும் வெவ்வேறல்ல என்று அவர் அனுபவத்தில் உணர்ந்ததை பகிர்கிறார்.
என்னிடம் ஒருவர் வந்து, "சத்குரு, உங்கள் இஷ்ட தெய்வம் யார்? நீங்கள் சிவபக்தரா?" என்று கேட்டார். நான் அவர்களிடம் சொன்னேன், "நான் சிவன் முன்னால் அமர்ந்துகொண்டு பூஜை செய்வதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? என் நேரம் முழுவதையும் உங்களைப்போன்ற முட்டாள்களுடன் செலவிடுகிறேன்! அதனால் யார்மீது எனக்கு பக்தி என்று நினைக்கிறீர்கள், உங்கள்மீதா? சிவன்மீதா? என் வாழ்க்கை முழுவதும் உங்கள் அனைவர்மீதும் பக்திவயப்பட்டுள்ளேன்!" என் முன்னால் எந்தவொரு கணப்பொழுதிலும் யார் இருக்கிறார்களோ அல்லது எது இருக்கிறதோ, அதுதான் என் இஷ்ட தெய்வம். இதுதான் என் வாழ்க்கைமுறை - நான் இப்போது என்னுடன் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு முழுவதுமாக கவனம் செலுத்துகிறேன். நீங்கள் யாராக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி, என்னை நான் முழுமையாகக் கொடுக்கிறேன். இது என்னை மிக உயர்ந்த உணர்ச்சி நிலையிலும் கவனக்கூர்மையுடனும் வைத்துக்கொள்கிறது, இது தான் நான் யாராக இருக்கிறேனோ அதை உருவாக்கியுள்ளது.
Subscribe
அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்று நான் விரும்பும் விஷயமிது: உங்கள் பக்தி எவ்விதத்திலும் உங்கள் தெய்வத்துடன் சம்பந்தப்பட்டது கிடையாது - அது உங்களுக்குள் தன்னிலை மாற்றம் ஏற்படுத்தவல்லது. உங்களை நீங்கள் மாற்றிக்கொள்வதற்கு உங்கள் பக்தியை எப்படி பயன்படுத்துவது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், அது ஏமாற்றமாகிவிடும். மேலானது கீழானது, உயர்ந்தது தாழ்ந்தது, நல்லது கெட்டது என்று நீங்கள் எல்லாவற்றையும் பார்த்தால் நீங்கள் தெய்வீகத்தை ருசித்ததில்லை என்றே அர்த்தம். எதையும் மேலே வைத்துப் பார்க்காதீர்கள், எதையும் கீழே வைத்துப் பார்க்காதீர்கள். எல்லாவற்றுக்கும் முழுமையான கவனம் கொடுத்தால், ஒவ்வொன்றிலும் பிரம்மாண்டமான ஏதோவொன்று இருப்பதை கவனிப்பீர்கள். நான் ஒரு எறும்பைப் பார்த்தால், அந்தக் கணத்தில் அந்த எறும்பு தான் என்னுடைய இஷ்டதெய்வம்.
எனக்கு தலைமை என்பது பக்தியோகா. மிக உயர்ந்தது என்று நீங்கள் எதை நினைக்கிறீர்களோ, அதற்கு நீங்கள் பக்தியாக இருந்தால், நீங்கள் ஒரு பக்தர். நீங்கள் செய்யும் செயல்மீது பக்தியில்லாதவரை, வாழ்க்கையில் மகத்துவம் வாய்ந்த எதையும் நீங்கள் செய்யமாட்டீர்கள். தொழில், தொழிற்சாலை, கலை, விளையாட்டு, ஆன்மீக செயல்முறை, அல்லது வேறொன்று, என்று எந்தத்துறையில் செயலாற்றுபவர்களுக்கும் இது பொருந்தும். ஒரு முறை சுவாமி விவேகானந்தர் சொன்னது போல, "கீதையைப் படிப்பதைக் காட்டிலும் கால்பந்து விளையாடுவது மூலம் நீங்கள் சொர்க்கத்திற்கு நெருக்கமாக முடியும்." ஈடுபாடு இல்லாமல் வழிபாடு செய்யலாம், ஆனால் ஈடுபாடு இல்லாமல் உங்களால் விளையாட முடியாது. உங்களை முழுவதுமாக அதற்குள் போடாவிட்டால், நீங்கள் விரும்பும் இடத்திற்கு பந்து போகாது.
நீங்கள் செய்யும் செயலுக்குள் கரைந்துபோவதற்கு பக்தி என்பது ஒரு கருவி. சாதாரணத்திற்கு அப்பாற்பட்ட புத்திசாலித்தனத்தையும் உள்நோக்குப் பார்வையையும் உங்கள் வசப்படுத்துவதற்கான வழியிது. பிறரால் பார்க்கவே முடியாத விஷயங்களை நீங்கள் பார்ப்பீர்கள். பக்தி என்பது கோயிலுக்குச் செல்வது, தேங்காய் உடைப்பது, அல்லது பூஜை செய்வது மட்டுமல்ல. பக்தி என்றால் எல்லைகளில்லா, முன்முடிவுகளில்லா, நிர்பந்தங்களில்லா ஈடுபாடு. நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அது உங்கள் செயலுக்குள் கரைகிறது, நீங்கள் இல்லாதது போல இருக்கிறது. அப்போதுதான் நீங்கள் உண்மையான தலைவராக இருக்கிறீர்கள். அப்போதுதான் நீங்கள் உண்மையான பக்தராக இருக்கிறீர்கள்.
இந்தியப் பாரம்பரியத்தின் மிக உயர்ந்த பக்தர்களை நீங்கள் கவனித்தால், ராமகிருஷ்ண பரமஹம்சர், மீராபாய், தென்னிந்தியாவின் நாயன்மார்கள், மற்றும் பலருக்கு தங்களைச் சுற்றிலும் இருந்த எதன்மீதும் ஆர்வமில்லை. அவர்கள் தங்கள் தெய்வத்திற்கு முழுவதுமாக பக்திவயப்பட்டிருந்தனர். அவர்கள் பக்தி அவர்களை அந்த அளவு கரைந்துபோகும் நிலைகளுக்கு எடுத்துச்சென்றதால், இயற்கையாகவே மக்கள் அவர்களை பின்தொடரத் துவங்கினர். உண்மையான ஒரு தலைவர் தலைவராக இருக்க நினைப்பதில்லை - அவருக்கு ஒரு குறிப்பிட்ட தன்மை இருப்பதால் மக்கள் எப்படியும் அவரைச் சுற்றி சேர்வார்கள்.
பக்தியும் தலைமையும் என் அனுபவத்தில் வெவ்வேறல்ல. மக்கள் என்னை ஒரு தலைவரென நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், நான் உங்கள் பக்தன்.