சத்குரு: எனது கொள்ளுப் பாட்டியின் ஒரு செயல் என்னை மிகவும் கவர்ந்தது என்னவென்றால் தனது காலை உணவை ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு வீட்டைச் சுற்றி இருக்கும் எறும்புகள், குருவிகள், அணில்கள், எலி போன்று எல்லா சிறு சிறு உயிரினங்களுக்கும் வைத்து விடுவாள். தான் சாப்பிடும் முன் முக்கால்வாசி உணவை இந்த மாதிரி பகிர்ந்து கொடுத்து விடுவாள். உணவை கொடுக்கும் பொழுது அவள் அந்த உயிரினங்களுடன் பேசுவாள், சில சமயம் வார்த்தைகளால், சில சமயம் மௌனமாய். எல்லோரும் அவளை பைத்தியக்காரி என்றே எண்ணினார்கள், ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. இது என்னை மிகவும் ஈர்த்தது ஏனென்றால் அவள் மிக சந்தோஷமாக அவைகளுடன் இருந்தாள். இது எனக்கு மிக இயற்கையாக இருந்தது – நீங்கள் மனிதர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது போல, அவள் மற்ற உயிரினங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தாள். அது அவளுக்கு எந்த அளவுக்கு இயற்கையாக தெரிந்ததோ, நானும் “எதோ செய்து கொண்டிருக்கிறாள்” என்று அதை சாதாரணமான ஒரு விஷயமாகவே உணர்ந்தேன்.

பல சமயங்கள் அவள் சாப்பிடவே மாட்டாள். யாரேனும் கேட்டால், ‘நான் எறும்புகளுடன் சாப்பிட்டு விட்டேன்’ என்று பதிலளிப்பாள்.

அவைகளுக்கு உணவளித்ததும் அவள் தான் சாப்பிட்ட மாதிரி உணர்ந்தாள். அது ஏதோ உணர்ச்சியில் செய்த அல்ல. அவளைப் பொறுத்த வரை அதுதான் யதார்த்தம். வெகு காலம் கழித்து, எப்பொழுது நான் அனுபவபூர்வமாக சிலதை உணர்ந்தேனோ, அவள் செய்தது எவ்வளவு அர்த்தமுள்ள விஷயம் என்று எனக்கு புரிந்தது.