உடைகள் என்று வரும்போது, இதுவரை நாம் அறிந்திருக்கும் 'மறைஞானி', 'யோகி'யரின் அங்கி போன்று சத்குருவின் உடைகள் இருக்கவே இருக்காது. அவர் அணியும் ஆடைகள் இத்தனை நேர்த்தியாக, அழகுநயம் மிளிர இருப்பதன் காரணம் என்னவாக இருக்கும்? இதோ சத்குருவின் வார்த்தைகளில்:

சத்குரு: என் வாழ்வின் குறிக்கோளான தியானலிங்கத்தை பிரதிஷ்டை , செய்துமுடிக்கும்வரை, நான் மிக எளிமையான உடைகளைத்தான் அணிந்து வந்தேன். அச்சமயத்தில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு நான் துணிக்கடைகளுக்குச் சென்றதுமில்லை, எனக்கென்று ஆடைகள் வாங்கியதும் இல்லை. மக்கள் எனக்குக் கொடுத்த எளிமையான வெள்ளைநிற ஆடைகளையே அணிந்து வந்தேன். அவை பெரும்பாலும் எனக்குப் பிடித்தமான ஆடைகளாகவோ, அழகுநயம் பொருந்தியதாகவோ இருக்காது. நான் செய்யும் எல்லாக் காரியங்களிலும் ஒரு அழகுநயம் மிளிரும் என்றாலும், அச்சமயத்தில் வேறு எதிலும் என் கவனம் சிதறுவதை நான் விரும்பவில்லை. ஏனெனில் நான் வேறொன்றில் முழுமையாக ஈடுபட்டிருந்தேன். அந்த வேலை முடிந்ததும், பிறகு தோன்றிற்று, "சரி! நான் நேர்த்தியாக உடை அணிய நேரம் வந்துவிட்டது" என்று. அதன்பின், இந்தியப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையிலான உடைகளை எனக்கு நானே வடிவமைத்துக் கொள்ள முடிவுசெய்தேன்.

உலகிலேயே இந்தியாவில்தான் பல விதமான துணி நெய்யும் திறமை உள்ளது. இத்தனை ஆண்டுகளாய் ஆராய்ந்ததில், இன்று எனக்கு இந்திய நெசவைப்பற்றி மிக நன்றாகவே தெரியும். பற்பல கிராமங்கள் இருக்கிறது என்றாலும் ஒரு குறிப்பிட்ட விதமான நெசவு, இவ்வுலகிலேயே அந்தவொரு குறிப்பிட்ட கிராமத்தில் மட்டுமே பின்பற்றப்படுகிறது. இதுபோல் பற்பல விதமான நெய்தல் சூட்சுமங்கள் நம் நாட்டில் பல இடங்களில் காணப்படுகிறது. இந்தியா மட்டும் தன் நெசவுப் பொருட்களை தக்கமுறையில் வணிகப்படுத்தினால், நம் நாட்டின் பொருளாதாரத்திற்கே அது அடிப்படையாய் அமையலாம். நான் அணியும் ஆடைகள் அதற்கு ஒரு சான்றாய் இருக்கவேண்டும் என்று விரும்பினேன். அதைத்தான் என் ஆடைகள் இன்று வெளிப்படுத்துகின்றன.