ஏன் வேண்டாம் சீமைக் கருவேலம்?
சீமை கருவேல மரங்கள் விளைவிக்கும் தீமைகள் குறித்தும், அவற்றை நாம் அழித்தொழிக்க வேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புணர்வு தரும் வகையில் சில தகவல்கள் இங்கே! ஏன் வெட்ட வேண்டும் சீமை கருவேல மரங்களை... தொடர்ந்து படித்து அறியுங்கள்!
சீமை கருவேல மரங்கள் விளைவிக்கும் தீமைகள் குறித்தும், அவற்றை நாம் அழித்தொழிக்க வேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புணர்வு தரும் வகையில் சில தகவல்கள் இங்கே! ஏன் வெட்ட வேண்டும் சீமை கருவேல மரங்களை... தொடர்ந்து படித்து அறியுங்கள்!
பொதுவாக, மரத்தை வெட்டக் கூடாது என்பதும் மரங்களைப் பேணி வளர்க்க வேண்டும் என்பதுமே இன்றைய சமூக ஆர்வலர்களின் குரல்களாக உள்ளது. அதுதான் இப்போதைய தேவையும் கூட! ஆனால், ஒருசில மரங்களை நாம் வெட்டி அழிக்கவும், பரவாமல் தடுக்கவும் தேவையுள்ளது. அவற்றில் மிக முக்கியமானது இந்த சீமைக் கருவேலம் மரங்கள்.
முன்பெல்லாம் கிராமங்களில் பட்டணத்திலிருந்து அயலூரிலிருந்து வருபவர்களை சீமையிலிருந்து வந்திருக்கிறார் என்று சொல்வார்கள். அதுபோல இந்த சீமை கருவேலம் மரங்களும் நம்மூரைச் சேர்ந்ததல்ல. நம் நிலத்திற்கும் நம் ஆரோக்கியத்திற்கும் வளத்திற்கும் தீமை விளைவிக்கக் கூடிய இவை, வெளிநாட்டிலிருந்து நம் ஊருக்குள் துரதிர்ஷ்டவசமாகப் புகுந்து, தற்போது நமக்கு சவாலாக உருவெடுத்து வருகிறது.
Subscribe
ஏன் வேண்டாம் சீமைக் கருவேலம்!
வேலி மர வகையைச் சேர்ந்த, முட்கள் நிறைந்த இந்த மரங்களால் பறவைகளுக்குக் கூட எந்த பிரயோஜனமும் இல்லை! வேடந்தாங்கலில் இதன் முட்களால் உடல் கிழிந்து இறந்த பறவைகள் ஏராளம். மேலும், இம்மரங்கள் நம் சுற்றுச்சூழலில் வெப்பநிலையை அதிகரிக்கிறது. இவை வெளியிடும் கதிர்வீச்சினால் சுற்றியுள்ள உயிரினங்களுக்கு பலவித பாதிப்புகள் ஏற்படுகின்றன. உதாரணமாக கால்நடைகள் இம்மரங்களின் கீழே தொடர்ந்து கட்டப்படும்போது, மலட்டுத் தன்மை ஏற்படுவதாக கண்டறிந்துள்ளனர்.
நிலத்தில் ஆழமாக சென்று பரவும் இம்மரங்களின் வேர்கள் நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சிவிடுவதால் மற்ற செடிகொடிகள் மற்றும் மரங்கள் வளர்வது பாதிக்கப்படுவதோடு, வறட்சியும் ஏற்படுகிறது. வறட்சியைத் தாங்கக் கூடிய முட்களோடு, நீரை உறிஞ்சி நீர்வளத்தைப் பாதிக்கும் இவை சமூகத்தின் வளத்திற்கு சவாலாக அமைகிறது.
பொதுவாக நன்மை தருபவற்றை வளர்ப்பது நமக்கு எப்போதும் சவாலாகவே இருக்கும். ஆனால், தீமை செய்பவை எதுவானாலும் அது வேகமாக பரவும் என்று சொல்வார்கள். அதுபோல, சீமை கருவேலம் மரங்களும் எளிதில் பரவக் கூடியவை. இந்த கருவேலம் மரங்களின் காய்களை சிலர் விலங்குகளுக்கு உணவாக அளிக்கிறார்கள். இதன்மூலம் விலங்குகளின் கழிவுகள் மூலம் இம்மரங்கள் விரைவில் பெருகுகின்றன. இதுகுறித்த விழிப்புணர்வை நாம் கால்நடை வளர்ப்பவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
ஒழிப்பதற்கு செய்ய வேண்டியவை!
இம்மரங்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதோடு, நேரடியாக களத்தில் இறங்கி இவற்றை வெட்டவும் தேவையிருக்கிறது. இன்று அரசாங்கமும் தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் சீமை கருவேலம் ஒழிப்பு இயக்கங்களை உருவாக்கி செயல்பட்டுக்கொண்டிருந்தாலும், இங்குள்ள ஒவ்வொரு இளைஞனும் இதில் ஈடுபடும் அவசியம் உள்ளது. தங்கள் குடியிருப்புகளில், தெருக்களில், கிராமங்களில் உள்ள சீமை கருவலம் மரங்களை வெட்டி அகற்றுவதோடு, பரவாமல் தடுத்துவிட்டால் நாம் சமூகத்திற்கு செய்யும் மிக முக்கிய செயலாக அது இருக்கும்.
இம்மரங்களை வெட்டி அகற்றுவதோடு அல்லாமல், அந்த நிலங்களில் வேறு நன்மை பயக்கும் மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலமும் இம்மரங்கள் மீண்டும் பரவாமல் தடுக்கமுடியும். சமூகநலம் கருதி சீமை கருவேலம் மரங்கள் தரும் பாதிப்பை இதன்மூலம் எடுத்துரைக்கும் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம், மண்ணிற்கும் சமூகத்திற்கு நன்மை தரும் பலவகை மரக்கன்றுகளை மிகக் குறைந்த விலையில் ஈஷா நாற்றுப்பண்ணைகள் மூலம் விநியோகம் செய்கிறது.
ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம்
ஈஷா அறக்கட்டளை பசுமைக் கரங்கள் திட்டம் மூலம், தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ள பசுமைக் கரங்களின் தன்னார்வத் தொண்டர்கள், எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளையும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் பிரத்யேகமாக தயார் செய்து வழங்குகிறார்கள்.
புங்கன், வாகை, தேக்கு, கல்தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.7) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊரின் அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் குறைந்த விலையில் பல அரிய வகை மரக்கன்றுகளைப் பெறுவதற்கு 94425 90062 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.