காடு பேசும் மொழி அறிய...
"இதென்ன வீடா...? காடு மாதிரி கெடக்குது!" என அவ்வப்போது வீட்டைச் சுத்தம் செய்யும்போது அம்மா சலித்துக்கொள்வார். ஆனால், உண்மையில், காடுகள் தனக்கே உரித்தான கோட்பாடுகளிலிருந்து தவறாமல் இயங்குகின்றன. காடுகள் என்னென்ன சொல்லித் தருகின்றன?! தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!
இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்... பகுதி 6
"இதென்ன வீடா...? காடு மாதிரி கெடக்குது!" என அவ்வப்போது வீட்டைச் சுத்தம் செய்யும்போது அம்மா சலித்துக்கொள்வார். ஆனால், உண்மையில், காடுகள் தனக்கே உரித்தான கோட்பாடுகளிலிருந்து தவறாமல் இயங்குகின்றன. காடுகள் என்னென்ன சொல்லித் தருகின்றன?! தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!
ஆனந்த்,
ஈஷா பசுமைக் கரங்கள்
எளிமையாகச் செல்வதானால், மனிதர்களின் உதவி காடுகளுக்குத் தேவையே இல்லை. காட்டு மரங்களை யாரும் நட்டு வளர்க்கவில்லை. காடுகள் இயற்கை சீற்றங்களால் அவ்வப்போது அழிவுகளை சந்தித்தாலும், காடுகள் தங்களைத் தாங்களே மறு சீரமைப்பு செய்துகொள்கின்றன. நான் காடுகளில் கவனித்த முக்கிய அம்சம் என்னவென்றால், ஒரு பெரிய மரம் வீழ்ந்ததென்றால் அடுத்த 2 அல்லது 3 மாதங்களில், அங்கு வேறொரு மரம் அதன் இடத்தைப் பிடித்திருக்கும். அங்கு யாரும் வந்து மரம் நட்டுவிட்டுச் சென்றார்களா என்றால், நிச்சயமாக இல்லை! உண்மையைச் சொல்லப்போனால், மனிதர்கள் யாரும் அங்கு வராததால்தான் அவை எந்த ஒரு தடையும் இல்லாமல் விரைவில் வளர்ச்சியடைகின்றன.
Subscribe
நாம் கவனித்துப் பார்த்தால் ஒரு பெரிய மரத்தின் கீழ் 15 முதல் 20 சிறிய மரங்கள் வளர்ந்து வரும். அந்த மரங்கள் சூரிய ஒளியை எட்டிப்பிடிக்க எத்தனிக்கும். ஆனால், பெரிய மரத்தின் கீழ் உள்ள அவைகளால் சூரிய ஒளியை நேரடியாகப் பெற முடியாது. ஆனால், அவை தொடர்ந்து காத்திருக்கும். நாள் கணக்கிலோ, வாரக் கணக்கிலோ அல்ல, வருடக்கணக்கில் அந்த மரங்கள் காத்திருக்கும். பெரிய மரம் ஒன்று வீழ்கையில், அந்த சிறிய மரங்களுக்குள் பெரிய போட்டி ஒன்று நடக்கும். எது தன் உச்சியை உயர்த்தி, சூரிய ஒளியைப் பெறுகிறதோ அது பெரிய மரமாக தன் கிளைகளைப் பரப்பும்.
மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில், தி கிரேட் இந்தியன் ஹார்ன்பில் பறவை போலவே நான் வியந்து பார்த்த ஒரு உயிரினம் சிங்கவால் குரங்கு. அவை தோற்றத்திலும் செயல்பாடுகளிலும் மற்ற குரங்குகளிலிருந்து மாறுபட்டவை. அவை பெரும்பாலும் மரங்களின் உச்சானிக் கொம்பில் மட்டுமே வசிக்கும். எப்போதாவது மட்டுமே காடுகளின் கீழ்ப்பரப்பில் அவற்றைக் காணமுடியும். இவைகளும் ஹார்ன்பில் பறவைகளைப் போலவே அத்திப் பழங்களை உண்டு அதன் விதைகளை நீண்டதூரம் பரப்பும் காரணியாக விளங்குகின்றன.
ஆனால், இதில் கொடுமை என்னவென்றால், மனிதர்கள் இத்தகைய அரிய உயிரினங்களை வேட்டையாட நினைப்பதே! வன விலங்குகள் அனைத்தும் உணர்தலிலும் புரிந்துகொள்ளும் தன்மையிலும் கூர்மையாக இருக்கும்போது, மனிதனுக்கு மட்டும் அத்தகைய திறன் ஏன் இல்லை?! மனிதனிடமும் மோப்ப சக்தியும் சூட்சும அதிர்வுகளை உணரும் திறனும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், தேவையற்ற சத்தங்களும், எலக்ட்ரானிக் உபகரணங்களின் பயன்பாடுகளும் வாகனம் மற்றும் இயந்திரங்களின் இரைச்சல்களும் மனிதனின் உணரும் திறனை வெகுவாகக் குறைத்துவிட்டன. ஆனால், இன்றும் காட்டில் வாழும் மனிதர்களிடத்தில் அத்தகைய திறனைக் காணலாம். அத்தகைய ஒரு மனிதர்தான் திரு.நடராஜ். மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்த அவர், வனத்துறையின் வன வழிகாட்டியாக (Guide) பணிபுரிந்து வருகிறார்.
நடராஜ் அவர்கள் ஒரு விந்தையான மனிதரோ அதிசய மனிதரோ அல்ல. ஆனால், அவர் இயற்கையோடு இயற்கையாக வாழும் ஒரு மனிதர். அதனால், காடுகளில் நம்மால் உணர முடியாத பலவற்றை அவரால் உணரமுடியும். 2 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள யானையை அவரால் இருந்த இடத்திலிருந்தே உணரமுடியும். மர உச்சியில் இருக்கும் சிங்கவால் குரங்கினை மோப்ப சக்தியால் உணர்ந்து நம்மிடம் அவர் சுட்டிக்காட்டுவார்.
நீலகிரி வரையாடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அரிய வகை இனமான அவை, பொதுவாக மனிதப் பார்வைக்கு வராது. ஆனால், வரையாடுகள் இருக்கும் இடத்தினை சரியாகக் கணித்து நடராஜ் எங்களிடம் காண்பித்தார். இதுபோன்று உணரும் திறனை அவர் எப்படி பெற்றார் என்று அவரிடம் கேட்டபோது, 'நான் இயற்கையோடு இயற்கையாக வாழ்கிறேன்!' என்றார். ஆம்! காடுகள் சொல்வது இதுதான், இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் மனிதன் கூர்மையாகவும் முழுமையாகவும் வாழமுடியும்.
இயற்கை இன்னும் பேசும்!
இத்தொடரின் பிற பதிவுகள்: இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்