எள்ளுத் துவையல்
பசங்க படத்தில் நடித்துப் பிரபலமானவரும், டைரக்டருமான சிவகுமார் தன் உணவு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்...
ஈஷா ருசி
பசங்க படத்தில் நடித்துப் பிரபலமானவரும், டைரக்டருமான சிவகுமார் தன் உணவு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்...
திரு. சிவகுமார்:
சாப்பாடுங்கிறது கிடைக்காமல் போகும்போது அதற்காக நம்முடைய வயிறும், உடம்பும், மனமும் தவிக்கும்போது தான் உணவுங்கிறது எவ்வளவு உன்னதமான விஷயம்னு புரியும். அப்படி எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வந்தது.
வழக்கு எண் - 18 ங்கிற திரைப்படத்தின் டைரக்டர் பாலாஜி சக்திவேல், நான், படக்குழுவினர் எல்லோரும் சேலத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவிலுள்ள லொகேஷனுக்குப் போனோம். மலையுச்சியில் இடம் பார்க்கணும். தீவட்டிப்பட்டி, பொன்னியம்பட்டி, ஈச்சம்பள்ளம்ன்னு ஏறி போய்க்கிட்டே இருக்கோம். பாலாஜி சுத்த சைவம், அவருக்கேத்த மாதிரி சரியான சாப்பாடு கிடைக்கலை.
ஒரே பசி, மலை வேறே ஏறிக்கிட்டு இருக்கோம். ஆங்காங்கே கண்லபட்ட சிறிய கடையில எல்லாம் கேட்டோம். சரியா ஒண்ணும் கிடைக்கல. என்ன பண்றதுன்னே புரியலை. இதிலே ஷுட்டிங்கிற்கு இந்த இடம் சரியா இருக்குமா அந்த இடம் சரியா இருக்குமான்னு வேறே பார்த்துக்கிட்டும், விவாதிச்சுக்கிட்டும் போறோம். உடம்பும், வயிறும் கெஞ்ச ஆரம்பிச்சுடுச்சு.
Subscribe
மலையிலிருந்து இறங்கிக்கிட்டிருந்த ஒருத்தர் சொன்னார், ஈச்சம்பள்ளம் வீட்டிலேயே செஞ்சி தருவாங்க, கேட்டுப் பாருங்கன்னு. கொஞ்சம் தெம்பை வரவழைச்சுக்கிட்டு போய் சேர்ந்தோம். சிறிய குடிசை. உள்ளே போய் அங்கிருந்த கணவன், மனைவிக்கிட்டே கேட்டோம். எப்படி இருக்குமோன்னு வேறே மனசுல பயம்.
அவங்க தோசை ஊத்தி, ஒரு கார சட்னி செஞ்சு போட்டாங்க பாருங்க, அமிர்தமா இருந்தது. நாங்களெல்லாம் எவ்வளவு தோசை சாப்பிட்டோம்னு எங்களுக்கே தெரியலை. சொல்லப் போனா, எல்லாமே தீர்ந்து போச்சு.
அடுத்த தடவை அங்கே போறப்போ சொல்லிட்டோம் நிறைய சட்னி செஞ்சி வெச்சிடுங்க அப்படீன்னுட்டு. அங்க போகும்போதெல்லாம் அங்கேதான் சாப்பாடு. இந்த அளவு சென்னையிலே சாப்பாடு இருந்தா, ஆயிரத்துக்கு மேலே போயிருக்கும். அவங்க இருபத்தி ஐந்து ரூபாய்தான் வாங்கிக்கிட்டாங்க. மேலே கொடுத்தா கூட வேண்டாம்னு சொல்லிட்டாங்க.
எங்க சொந்த ஊர் கும்பகோணம் பக்கத்துல இருக்கிற குடவாசல். எங்கம்மா அங்கதான் இருக்காங்க. அவங்க சாப்பாட்டுக்கு, முருங்கைக்கீரை சாம்பாரும், எள்ளுத் துவையலும் பண்ணுவாங்க. அந்த மாதிரி ஒரு ருசியான சாப்பாட்டை உலகம் பூரா தேடினாலும் கிடைக்காது.
இதே முருங்கைக்கீரை சாம்பாரை சென்னையிலே செஞ்சா இவ்வளவு ருசியா இருக்காது. ஏன்னா அந்த கிராமத்தின் மண்ணின் மணம் அது. வீட்டிலேயே செடி வளர்த்து இயற்கை உரமிட்டு, அதிலே செய்யும்போதுதான் சாப்பாடு நல்லதா இருக்கு, ருசியாகவும் இருக்கு.
எங்கம்மா செய்யற சமையலை அவங்களைக் கேட்டே எழுதி இருக்கேன். நீங்களும் முயற்சி பண்ணிப் பாருங்க...
எள்ளுத் துவையல்
தேவையான பொருட்கள்:
கருப்பு எள் - அரை கப்
துருவிய தேங்காய் - அரை கப்
காய்ந்த மிளகாய் - ஐந்து
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எள்ளை சுத்தப்படுத்தி வெறும் வாணலியில் வெடிக்கும் வரை வறுக்கவும். பிறகு அதே வாணலியில் காய்ந்த மிளகாய் சேர்த்து துளி எண்ணெய் விட்டு வறுக்கவும். மிக்ஸியில் எள், துருவிய தேங்காய், காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் புளி சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து சூடான சாதத்துடன் நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் ஜோராக இருக்கும். உணவில் எள்ளை சேர்த்துக் கொண்டால் ரத்த அழுத்தம், கொலஸ்ட்டிரால் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.
முருங்கைக்கீரை சாம்பார்
தேவையான பொருட்கள்:
சுத்தப்படுத்திய முருங்கைக் கீரை - இரண்டு கப்
துவரம் பருப்பு - நூறு கிராம்
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
நறுக்கிய தக்காளி - ஒன்று
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - ஒன்று
மிளகாய் தூள் - அரை மேஜைக்கரண்டி
தனியா தூள் - கால் மேஜைக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பருப்பை மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். இத்துடன் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வடிக்கவும். இதில் முருங்கைக் கீரையை சேர்த்து அரை நிமிடம் வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். கீரை வெந்ததும் துவரம் பருப்பு, புளித் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போனதும் இறக்கி, சாதத்துடன் பரிமாறவும். முருங்கை இலையில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் இது பெண்களுக்கு மிகவும் ஏற்றது.