நமது தேசத்தை உருவாக்குவோம்!

எதிர்வரும் தேர்தல் நம் கைகளில் அளித்துள்ள பொறுப்பினைப் பற்றியும், இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் திறன் இந்தத் தேர்தலுக்கு உண்டு என்பதையும் தனக்கே உரிய தொலைநோக்கு பார்வையுடன் இந்தக் கட்டுரையில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சத்குரு. ஒவ்வொரு இந்தியனும் தன் தேசத்தின் நலன் கருதி எடுக்க வேண்டிய முடிவினை ஆணித்தரமாக நம்முன் வைக்கிறார். வாருங்கள் நமது தேசத்தை உருவாக்குவோம்...

இந்தியா மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தல் பலவிதங்களில் தேசத்தின் போக்கை நிர்ணயம் செய்யப் போவதால், பலரும் இதனை "தேர்தல்களுக்கெல்லாம் தாய்" என வர்ணிக்கின்றனர். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் இங்கிலாந்தில் உள்ள ஒரு சிறிய பல்கலைக்கழகம் ஒரு கருத்தோட்டத்தை வெளியிட்டுள்ளது. ஒருவர் பார்ப்பதற்கு எத்தனை அசிங்கமாக, முட்டாள்தனமாக தெரிகிறாரோ அத்துணைக்கு அவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டென்கிறது அந்தக் கருத்தோட்டம். இது என் கருத்தல்ல - அந்த கருத்தோட்டத்தின் கணிப்பு.

நீங்கள் எவ்வளவுக்கு ஒரு சராசரி மனிதரைப் போல் தோற்றமளிக்கிறீர்களோ அவ்வளவுக்கு மக்கள் உங்களுடன் சகஜமாகவும் சங்கோஜமில்லாமலும் தங்களைப் போன்றவர் என்ற உணர்வுடனும் இருப்பார்கள் என்று அவர்கள் சொல்ல வருகிறார்கள். நீங்கள் மிகக் கூர்மையானவராக, புத்திசாலி மனிதரைப் போல தோற்றமளித்தால் மேல்தட்டு மனிதர் என நிராகரிக்கப்படுவீர்கள். நீங்கள் மக்கள் அணியை சாராதவர் ஆகிவிடுவீர்கள். ஆனால் தேசத்தின் குறைகளை நிவர்த்தி செய்யவும், ஒரு நாடு பிற உலக நாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் காக்கவும் சராசரி புத்திசாலித்தனம் பத்தாது. தொலைநோக்கு பார்வையுடைய புத்திசாலித்தனம் தேவை. தற்கால போராட்டங்களைக் கடந்து பார்க்கும் அறிவு தேவை. நாளைய சாத்தியங்களை அறியும் அறிவு தேவை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒருவருடைய புத்திசாலித்தனம் தினசரி விஷயங்களில் காணாமல் போனால், அவரால் வளமான வருங்காலத்தை உருவாக்க முடியாது. நாளை நடக்கவிருப்பதை இன்றே ஆய்ந்தறியும் அறிவு கொண்டவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். இன்றிருக்கும் பிரச்சனைகளைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பவரை விடுத்து வருங்காலத்தையும் சேர்த்து யோசிக்கும் திறன் கொண்டவர்கள் நமக்குத் தேவை. ஏனெனில், இன்றைய பிரச்சனை வருங்காலத்தில் ஒரு பிரச்சனையாகவே இல்லாமல் இருக்கலாம்.

சமூகம் பிரச்சனை எனும் சகதியில் சிக்கி உழலும்போது, மக்கள் தங்கள் வெகுஜன மனநிலையிலிருந்து மாறி, தங்களைப் போன்று இல்லாதவரை, பிரச்சனைக்கு தீர்வளிப்பவரை தேர்ந்தெடுக்கும் சம்பவங்கள் அரிதாக நிகழும். ஆனால் பெரும்பான்மையான சமயங்களில் தன்னைப் போன்ற ஒருவரைத்தான் மக்கள் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். கூர்ந்த அறிவுடன், அழகுடன் இருப்பதைப் போன்ற மனிதர்களை தங்களுக்கு நேரும் அவமதிப்பாகவே பார்க்கிறார்கள். என்ன செய்ய, ஜனநாயகம் இதுபோன்ற குறைகளுடனேயே இயங்குகிறது!

ஜனநாயகம், இவ்வுலகில் அசாதாரண அறிவை இணைத்துக் கொள்வதில்லை, சாதாரண அறிவையே தக்க வைத்துக் கொள்கிறது. சுடர் மிகுந்த அறிவு ஜனநாயகத்தில் மிளிராது, அனைத்தும் சமமாகிப் போகும். எல்லாம் சமமாகிப் போனால், அது நல்ல சமூகமாக மட்டுமே தோன்றும். ஆனால் அது மிகப் பெரிய அநீதியாகும். ஏனெனில், மனிதனால் என்ன உருவாக்க முடியுமோ, மனிதன் என்னவாக உயர முடியுமோ அது அழிக்கப்படுகிறது. எல்லா வகையான திறன் உடையவர்களும் ஒரே நிலைக்கு தள்ளப்படலாம். இதுவல்ல ஜனநாயத்தின் அடிப்படை. ஆனால் இன்றைய சூழலில் துரதிருஷ்டவசமாக, "எல்லோரும் சமம்" என்ற எண்ணம் மக்கள் மீது திணிக்கப்படுகிறது. இது உண்மையல்ல. இந்தப் பிரபஞ்சத்தில் இரண்டு படைப்புகள் எப்போதும் ஒன்றுபோல் இராது. நம்மால் சமமான வாய்ப்புகளை உருவாக்க முடியும், ஆனால் நம்மால் சமத்துவத்தை உருவாக்க இயலாது. அதற்கு வாய்ப்பே இல்லை, இல்லவே இல்லை.

நான் சொன்னது நமக்கும் மிக பொருத்தமானதாக இருக்கிறது ஏனென்றால், ஈஷா அறக்கட்டளையில் தனிப்பட்ட முறையில் விஷயங்களை கையாள்வதிலிருந்து வளர்ந்து, வேறு விதமாக இயங்கும் ஒரு செயல்திட்டத்தை நாம் தீட்டி வருகிறோம். இதனை புரியும்படிச் சொல்ல வேண்டுமென்றால், நாம் ஜனநாயக முறைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறோம் எனலாம். ஜனநாயகத்தின் தனித்துவமே, தலைமை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மாறிக் கொண்டிருக்கும், அதுவும் சண்டை சச்சரவுகள் இல்லாமல் நிகழும். ஆனால் இவை பெருவாரியான மக்களின் தேர்வாக இருக்கும். உலகின் பிரபல திரைப்படங்களைப் பாருங்கள், இசையைப் பாருங்கள், பிரபலமானவற்றை பாருங்கள் அவை உயர்தரத்தில் இல்லாமல், மத்தியதரமாக இருப்பதை காண்பீர்கள்.

மக்களின் தேர்வை உயர்தரமாய் மாற்ற, கீழ்த்தர தேர்வுகளை தவிர்க்க, பெருவாரியான மக்களின் கண்ணோட்டத்தை மேம்படுத்தி அவர்களை வளர்ப்பது அவசியம். அது அறக்கட்டளை ஆனாலும் சரி, தேசமானாலும் சரி சுலபமான பணியல்ல. இதைச் செய்ய அசாத்தியமான முயற்சி தேவை. யோக மையத்தில், இது வாழும் உண்மையாக இருக்கிறது எனலாம். ஏனெனில், இங்கு உயிரோட்டமான ஆன்மீக செயல்முறை நடைமுறையில் உள்ளது. மிகப்பேரளவிலான மக்களை மேலான தேர்விற்கு, மேலான பகுத்தறியும் திறனிற்கு உயர்த்த வேண்டும். இப்படிச் செய்வதனால், ஒரு சமூகமாய் நம்முடைய தேர்வுகள் கீழ்த்தரமாய் இருக்காது.

ஒரு சில கொடுங்கோலாளர்கள் தங்கள் பதவியையும் பொறுப்பையும் துஷ்பிரயோகம் செய்ததால், இன்று ஜனநாயகம் பிரபலமடைந்துவிட்டது. வரலாறு அற்புதமான அரசர்களைக் கண்டிருந்தால் இன்று ஜனநாயகம் பிரபலமடைந்திருக்காது. ஆனால் உலகம் கண்டதோ கொடுங்கோல் ஏகாதிபத்தியத்தை, சர்வாதிகாரிகளை, தயவு தாட்சண்யமற்ற ஆட்சியாளர்களைத்தான். இதனால் ஜனநாயகம் என்னும் பாதுகாப்புடைய ஆட்சிமுறையை தேர்வு செய்துவிட்டோம், அதனாலேயே ஜனநாயகத்தை சிறந்த ஆட்சிமுறை என்றும் சொல்லிவிட முடியாது. ஜனநாயகத்தில் நிச்சயமாக பாதுகாப்பு உள்ளது, ஆனால் அது சிறந்ததல்ல. அது முதிர்ச்சி பெற்றதென்று சொல்ல முடியாது, அதனை வளர்ச்சியுற்றது என்றும் சொல்ல முடியாது.

நமது தேசத்தை உருவாக்குவோம்! Namathu thesathai uruvakkuvom!நீங்கள் இந்தியராய் இருந்தால், மகத்தான பொறுப்பு உங்கள் முன் விரிகிறது. ஏனெனில், பாரத தேசம் செல்லும் பாதையை வரும் 2014ம் வருடத்து தேர்தல் நிர்ணயிக்கும். என் பார்வையில், இந்தியாவின் தன்னாட்சி உரிமை, கலாச்சாரம், ஆன்மீக சாத்தியங்கள், பொருளாதார வளம் போன்றவை அடுத்து வரும் பத்திலிருந்து இருபது வருடங்களில் திசைமாறிப் போவதற்கான சாத்தியங்கள் உள்ளது. அதன்பின், சூழ்நிலை முற்றிலும் கைமீறிப் போகலாம், அல்லது நாம் முழு வீரியத்துடன் துடித்தெழும் தேசமாகவும் மாறலாம். இரண்டிற்கும் சாத்தியங்கள் உள்ளன. ஒன்று நாம் உயிர்துடிப்புடன் விளங்கும் பெரிய சாத்தியமாகலாம் அல்லது மந்தமாகிப் போகலாம். நாம் சிலரையும் சில தேசங்களையும் "மந்தம்" என வர்ணிப்பதில்லையா? அதுபோன்ற ஒரு தேசமாகிப் போகலாம்.

இந்தி மொழியில், பனானா1 என்றால் "உருவாக்கப்பட வேண்டியது" என்றொரு அர்த்தம் இருக்கிறது. அவர்கள் "பனாயா நஹி - பனானா ஹே" என்கிறார்கள். இந்த வாக்கியத்திற்கு "உருவாக்கப்பட்டதல்ல, உருவாக்கப்பட வேண்டியது" என்று அர்த்தம். என்றென்றும் உருவாகிக் கொண்டிருப்பது நல்லதற்கல்ல. 60, 65 வருடங்களாக நாம் வளர்ந்து வரும் தேசமாக இருக்கிறோம். என்றென்றும் வளர்கிறோம்... வளர்கிறோம்... வளர்ந்துகொண்டு மட்டுமே இருக்கிறோம். இது நல்லதல்ல. வளர்வது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் நிகழ வேண்டும். அந்தக் காலகட்டத்தை நீட்டித்தால், பிறகு தேசமே உருவாக்கப்பட வேண்டிய தேசமாய் மட்டுமே இருந்துவிடும்.

நாம் இதனை நிகழச் செய்வோம்.

Love & Grace

ஆங்கிலத்தில் பனானா என்றால் வாழைப்பழம்