மஹாசிவராத்திரி நிகழ்ச்சி வியக்கத்தக்க ஓர் இரவாய் அமைந்தது என்று இந்த வார சத்குரு ஸ்பாட்டில் நம்மிடம் சொல்லும் சத்குரு அவர்கள், நமக்காக சில எழிலான கவிதைகளையும் வடித்துக் கொடுத்துள்ளார். அவற்றை எழுத சத்குருவிற்கு பிடித்த நேரம், வெறும் 10 நிமிடங்கள். கவிதைகளுடன் மஹாசிவராத்திரி நிகழ்ச்சியிலிருந்து சில புகைப்படங்களையும் உங்களுக்காக இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

நான் பல நிகழ்ச்சிகளுக்கு சென்றிருக்கிறேன், ஆனால் இதுபோல் ஒன்றினை இதுவரை கண்டதில்லை. இந்த மஹாசிவராத்திரி ஈடுஇணையில்லாததாய், வியக்கத்தக்க ஓர் இரவாய் அமைந்தது. அனைவரும் ஒன்றுகூடி இதனை நிகழச் செய்ததை பார்க்க அற்புதமாய் இருந்தது. நம் பிரதமர், தன்னுடைய கடுமையான பணிச்சுமைக்கு இடையிலும், உத்திர பிரதேசத்திலிருந்து இந்த 2 மணி நேரத்திற்காக இங்கு வந்தார். சிறப்பு பாதுகாப்பு படையினர், தமிழக காவல்துறை, அரசுத்துறை அதிகாரிகள், நமக்கு பல வகையிலும் உறுதுணையாய் இருந்த பக்கத்து கிராம மக்கள், இந்த இரவை விழிப்பாய் வைத்திருக்க உதவிய கலைஞர்கள், ஊடகங்கள், ஆசிரமத்திலுள்ள துறைகள், தன்னார்வத் தொண்டர்கள், ஆசிரமவாசிகள், பிரம்மச்சாரிகள், இரவு முழுவதும் விழிப்பாய் இருந்த அனைவருக்கும் - இதனை நிகழச் செய்தமைக்காக எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உடல் மனதின் கட்டுப்பாடுகளை கடந்து, நம் வாழ்வை உயிர்துடிப்புடன் வாழ இந்த இரவு உத்வேகம் அளிப்பதாய் இருக்கட்டும். உங்கள் உடலின் எல்லைகளை கடந்து செயல்பட ஒரு வழி இருக்கிறது. நம் மன அமைப்புகளின் எல்லைகளை கடந்து செயல்பட ஒரு வழி இருக்கிறது. இந்த வழியைத்தான் நாம் உலகிற்கு அளிக்க விரும்புகிறோம். ஆதியோகி இதைத்தான் பிரதிபலிக்கிறார். யோக விஞ்ஞானம் இதைப் பற்றியதுதான்.

நம் பிரதமர், ஒரு யோக வீரராக இருக்கிறார், யாரும் துவங்கும் முன், இந்த மஹாயோக யக்னத்தை அவர் துவக்கியிருக்கிறார். யோக அறிவியலை உலகிற்கு அளிக்கும் இந்த பெருமுயற்சியில், 10 லட்சம் யோக வீரர்களை நாம் உருவாக்க நினைக்கிறோம். அடுத்த ஒரு வருடத்தில், எளிமையான ஒரு யோகப் பயிற்சியை, ஒருவர் குறைந்தது 100 பேருக்கு அளிப்பார். அதாவது, அடுத்த மஹாசிவராத்திரிக்குள், குறைந்தது 10 கோடி பேர் புதிதாக யோகப் பயிற்சிக்கு அறிமுகப்படுத்தப்படுவார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்களும் யோக வீரராக மாறி, அடுத்த 12 மாதங்களுக்குள், யோகா எனும் எளிமையான கருவியை நூறு பேருக்கு வழங்கவேண்டும் என்று விரும்புகிறேன். நாம் எத்தனை மருத்துவமனைகளை உருவாக்கினாலும் சரி, மருத்துவம் எவ்வளவு வளர்ந்தாலும் சரி, ஒவ்வொரு தனிமனிதரும் தனது ஆரோக்கியத்தை தனது கைகளில் எடுத்துக் கொள்ளாவிட்டால், ஆரோக்கியம் என்பது கிட்டாது. தனது நல்வாழ்விற்கும், தனது சந்தோஷத்திற்கும், தனது முக்திக்கும் ஒவ்வொரு தனிமனிதரும்தான் பொறுப்பு. அரசாங்கம், பெருநிறுவனங்கள், நிர்வாகங்கள் நல்வாழ்விற்கான வசதிகளை நமக்கு செய்து தரக்கூடும். ஆனால், நல்வாழ்வின் ஆதாரம் நமக்குள் இருக்கிறது. தனது உள்நிலையை தனது கைகளில் எடுத்துக்கொள்ளும்போது மட்டுமே மனிதர்களுக்கு உண்மையான சுதந்திரம் இருக்கிறது. இந்த அறிதலையும், இந்த சாத்தியத்தையும் ஒவ்வொரு மனிதரும் உணரவேண்டும்.

பாறைகள்

நெஞ்சத்தில் பெருமையுடன்
திடமாய் பாறைப்போல் இருந்தேன்
அழைக்காமல் அவர் வந்தார்
உயிர்கள் அனைத்திற்கும், ஒரு பாறைக்கும்கூட
என் இதயம் துடித்திட, கசிந்துருகிடச் செய்தார்.

அழிவுடைய இந்த உடலை வீழ்த்த
நூற்றிபன்னிரண்டு தந்திர உத்திகள்.
கபடதாரியான அவர், இந்த உத்திகளில்
எனை அகப்பட வைத்தார், நான் சிக்குண்டேன்.
எனக்காகவோ என் மூலம் வந்தவற்றிற்காகவோ
நான் யோசிக்கவும் முடியாது, செய்யவும் முடியாது.

இனிமையான ஒலிகளை கேட்ட பின்னர்
அருமையான ஒளிகளை கண்ட பின்னர்
அற்புத உணர்ச்சிகளை உணர்ந்த பின்னர்
என் அறிவை முழுமையாய் இழந்தேன், அவருக்காக
இல்லாதவர் - வேறொருவரையும் போன்றவர் அல்லர் அவர்.

அவர் அன்பல்ல
அவர் கருணையும் அல்ல
அவரை சுகத்திற்காக தேட வேண்டாம்
அவர் உச்சகட்ட அருட்பேறிற்கானவர் அன்றோ!

வாருங்கள்! உருவில்லா ஒன்றின்
பெயரில்லா பேரானந்தத்தை அறிவீர்
நிறைவின் ஆனந்தம் அல்ல இது
தன்னை வீழ்த்திக்கொள்ளும் விளையாட்டு இது
பலனில்லா இந்த விளையாட்டை ஆட
நீங்கள் தயாரா?

அசைவற்றவனை துணிந்தும் நம்பாதீர்
தன் அசைவின்மையால் எனை அவன்பால் ஈர்த்தான்
அவனே வழியென நான் நினைத்தேன்
எச்சரிக்கிறேன், அவனே முடிவு.

உங்கள் இறுதிச் சடங்கிற்கும்,
பிரம்மாண்ட தகனத்திற்கும் நீங்கள் இருப்பீர்களா
அவனது வானவேடிக்கை இது
தகன மேடையின் காவலன். என் சிவன்.

Love & Grace