வாழ்க்கையே ஒரு யாத்திரை

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், நேபாளத்திலிருந்து சத்குரு நமக்கு எழுதியுள்ளார். ஒரு யாத்திரையை எப்படி அணுகுவது என்று சொல்வதோடு, வாழ்க்கையையே ஒரு யாத்திரையாக அணுகும் வழியையும் அதன் மகத்துவத்தையும் எடுத்துச் சொல்கிறார். அதோடு, தற்போது சத்குருவுடன் பலர் பயணிக்கும் யாத்திரையிலிருந்து, வியக்கவைக்கும் இயற்கை அழகின் புகைப்படங்களையும் தொகுத்துள்ளோம்.
 
 
 
 

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், நேபாளத்திலிருந்து சத்குரு நமக்கு எழுதியுள்ளார். ஒரு யாத்திரையை எப்படி அணுகுவது என்று சொல்வதோடு, வாழ்க்கையையே ஒரு யாத்திரையாக அணுகும் வழியையும் அதன் மகத்துவத்தையும் எடுத்துச் சொல்கிறார். அதோடு, தற்போது சத்குருவுடன் பலர் பயணிக்கும் யாத்திரையிலிருந்து, வியக்கவைக்கும் இயற்கை அழகின் புகைப்படங்களையும் தொகுத்துள்ளோம்.

கைலாய யாத்திரையில் இப்போது என்னுடன் இருப்போர் பலர், யாத்திரை செல்வது பற்றி கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். நான்கூட யாத்திரை செல்வதற்கு எனக்கு எந்தவொரு தேவையும் இருப்பதாக நினைத்ததில்லை. ஆனால் இப்போது பதிமூன்றாவது முறையாக இங்கு வந்திருக்கிறேன். இப்படியொரு யாத்திரையை முடித்துத் திரும்பும் ஒவ்வொரு முறையும், "போதும்! மலைகளுக்கு வருவது இதுவே கடைசி" என்று நினைப்பேன். ஆனால் இரண்டே மாதங்களில் அடுத்த பயணத்திற்கு திட்டமிடத் துவங்கிவிடுவோம். நான் பல சக்திவாய்ந்த இடங்களுக்கு சென்றிருக்கிறேன், பல அற்புதமான மனிதர்களை சந்தித்திருக்கிறேன், சக்தியுடன் அதிர்ந்துகொண்டிருக்கும் இடங்களுக்கும் சென்றிருக்கிறேன். ஆனால் கைலாயம் போல அதிர்வுகள் மிகுந்த ஒரு இடத்தை நான் இதுவரை கண்டதில்லை. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் இங்கு வரச்செய்கிறது. அவ்விதத்தில் பார்த்தால் கைலாயம் உங்களை அடிமைப்படுத்தக்கூடிய ஒரு இடம்.

இதை நாம் யாத்திரை என்று எதனால் சொல்கிறோம்? இது ஏன் வெறும் சுற்றுலா அல்லது மலையேற்றமல்ல? நீங்கள் சுற்றுலாப் பயணியாக இருந்தால், மலைப்பாதையை சற்று தேய்ந்து போக மட்டுமே செய்வீர்கள். நீங்கள் யாத்திரிகராக இருந்தால், வெளியில் செல்லும் இப்பயணத்தை, உள்முகமாக பயணிக்கவும் பயன்படுத்துவீர்கள். மலைப்பாதை தேய்ந்துபோக வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அல்லது உங்களுக்குள் ஏதோவொன்று தேய்ந்துபோக வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இது நீங்கள் எடுக்கவேண்டிய ஒரு முடிவு. யாத்திரை என்பது உங்களை நீங்களே குறைத்துக்கொள்வதற்கானது. உங்களை ஒன்றுமில்லாமல் செய்துகொள்ள முடிந்தால், இங்கு உயிரின் ஒரு சிறு துளியாக இருந்து சுவாசிக்க முடியும். அது மிகவும் கடினம் என்றால், நீங்கள் உங்களை யாராக நினைத்துக்கொள்கிறீர்களோ, அதை சற்று குறைத்துக்கொள்ளவேனும் செய்யுங்கள். யாத்திரை செல்வதற்கு இதுதான் முறை.

இதை ஏன் உங்கள் வீட்டிலேயே செய்யக்கூடாது? வீட்டிலேயே செய்துகொள்ளலாம், ஆனால் நீங்கள் செய்யவில்லையே. அதனால் நாம் இப்போது இங்கு இருக்கிறோம். உங்கள் தோல் மிகவும் கனமாக இருந்தால், உள்முகமாகத் திரும்புவதற்கும், உங்கள் எல்லைகளை உடைப்பதற்கும் இதுவே சிறந்த வழி. உங்கள் உடல் உங்கள் பொருள்தன்மையின் எல்லை. ஆனால் உங்கள் மனதிற்கும், உணர்வுகளுக்கும் சக்திக்குமே எல்லைகள் உண்டு. ஒரு எல்லை இருந்து அதை நீங்கள் உடைத்துவிட்டால், எல்லையில்லாத் தன்மை இருக்கிறது. கைலாயம் என்பது அதுதான் - எல்லையில்லாத் தன்மையை நீங்கள் உள்வாங்கிக் கொள்வதற்கான உங்கள் வாய்ப்பு.

நீங்கள் எப்படி எல்லையில்லாமல் ஆவது? சுதந்திரம் பற்றிய மக்களின் கருத்து, பறவை போல பறக்க முடியவேண்டும் என்றே பெரும்பாலும் இருப்பதால், நான் இந்த உதாரணத்தை எடுத்துக்கொள்கிறேன். நீங்கள் பறக்க விரும்பினால், வானத்திற்கு நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. உங்களை கீழே பிடித்து வைத்திருப்பதை மட்டுமே கவனிக்க வேண்டும். அதாவது புவியீர்ப்பு சக்திக்கு ஏதாவது செய்யவேண்டும். அதே போல, உங்களுக்கு சுதந்திரம் வேண்டுமானால், உங்களை கீழே கட்டி வைத்திருக்கும் கயிறுகளை கவனிக்கவேண்டும். உங்களை கீழே பிடித்து வைத்திருப்பது எது என்று கவனித்து அதனைக் கையாளுவதன் விளைவே சுதந்திரம். பிரச்சனையை நீங்கள் கையாண்டால், தீர்வு கிடைக்கும். இது மக்களுக்கு புரியாமல் போவதால், அவர்களுக்கு நீங்கள் வழங்கும் ஒவ்வொரு தீர்வையும் பிரச்சனையாக மாற்றிக்கொள்ள வழி கண்டுபிடிக்கிறார்கள்.

உலகின் இப்பகுதியில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு, கைலாயம் செல்வது அவர்கள் வாழ்க்கையின் கனவு. இந்த யாத்திரையையும் ஒரு பிரச்சனையாக மாற்றிக்கொள்ளாதீர்கள். என்ன நடந்தாலும் சரி, அதை ஒரு பிரச்சனையாக பார்க்காதீர்கள் - அது வெறும் சூழ்நிலையே. "பிரச்சனை" என்பது ஏதோவொரு சூழ்நிலைக்கு நீங்கள் குத்தும் முத்திரை. வாழ்க்கை நடக்கிறது - அவ்வளவுதான். ஒன்று, உங்கள் வாழ்க்கை அனுபவத்தை மேம்படுத்திக்கொள்ள எல்லாவற்றையும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். அல்லது உங்களை நீங்கள் முடிச்சுகளாக செய்துகொள்ளவும் பயன்படுத்த முடியும். ஏதோவொன்றை பிரச்சனை என்று முத்திரை குத்துவது உங்கள் வாழ்க்கை அனுபவத்தையோ வாழ்க்கையையோ மேம்படுத்தாது. நான் எதையும் பிரச்சனையாக பார்ப்பதில்லை. எல்லாவற்றையும் எப்படி சிறப்பாக நடக்கச்செய்வது என்று மட்டுமே பார்க்கிறேன். என்னையும் கூட எப்படி சிறப்பாக நடத்திக்கொள்வது என்று மட்டுமே பார்க்கிறேன். இந்த நிலையில் இருக்கையில், உங்கள் வாழ்க்கையே ஒரு யாத்திரையாக விரியும்.

அன்பும் அருளும்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1