வாழ்க்கை என்பது மாமரம் போன்றது
இந்த வார சத்குரு ஸ்பாட்டில், நம் தேசத்து மாங்கனிகளின் தனித்துவத்தை நினைவுபடுத்துகிறார் சத்குரு. அதோடு மாமரம் கனிதரும்முன் வெட்டி வீழ்த்துவது முட்டாள்தனம் என்றால், ஆன்ம சாதனை முழுப்பலன் தரும்முன் அதனை மதிப்பிடுவதும் அதே முட்டாள்தனமே என்பதை குறிப்பால் உணர்த்துகிறார் சத்குரு.
 
 
 
 

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், நம் தேசத்து மாங்கனிகளின் தனித்துவத்தை நினைவுபடுத்துகிறார் சத்குரு. அதோடு மாமரம் கனிதரும்முன் வெட்டி வீழ்த்துவது முட்டாள்தனம் என்றால், ஆன்ம சாதனை முழுப்பலன் தரும்முன் அதனை மதிப்பிடுவதும் அதே முட்டாள்தனமே என்பதை குறிப்பால் உணர்த்துகிறார் சத்குரு.

சமீபத்தில் ஒருநாள் இங்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர், ஒரு ஞானோதயம் அடைந்த மனிதர் எப்படி மாம்பழம் சாப்பிடுவார் என்று கேட்டார். இது உங்களுக்கு சிறுபிள்ளைத்தனமான கேள்வியாக இருக்கலாம், ஆனால் மாம்பழங்கள் சாதாரண விஷயமல்ல. நான் குழந்தையாக இருந்தபோது, வருடத்தில் நான்கு மாதங்களுக்கு மாம்பழம்தான் பாரதத்தின் மதமாக இருக்கும். மாம்பழ சீசனில் நான் மாம்பழ டயட்டில் இருப்பேன். எங்கள் வயிறுகளில் இருந்ததெல்லாம் மாம்பழம் மட்டுமே. மாம்பழப் பைத்தியம் பிடித்துவிட்டால், முகங்களெல்லாம் மாம்பழம், துணிகளெல்லாம் மாம்பழம், எங்கள்மீதும் மாம்பழ வாடை, வீடெல்லாம் மாம்பழ வாடை என்று அனைத்தும் மாம்பழமாக இருந்தது.

மாம்பழங்களை மும்முரமாகப் படித்துக்கொண்டு இருந்ததால் நான் பரிட்சைகளைக் கூட தவறவிட்டிருக்கிறேன். மைசூரைச் சுற்றிலும் தானாக வளர்ந்த மாமரங்களும் மாந்தோப்புகளும் ஏராளமாக இருந்தன. கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்கள் இவை இருந்த இடங்களையும் மாம்பழ வகைகளையும் நான் ஆய்வுசெய்து, என் மனதில் அப்பகுதியில் மாமரங்கள் இருந்த இடங்கள் அனைத்தையும் நிலப்படமாகத் தீட்டியிருந்தேன். மாம்பழங்கள் பல வகைகளில் வருவதுண்டு. அவற்றின் தோற்றமும், அவற்றை நீங்கள் ருசித்துணரும் விதமும் மார்ச் முதல் ஜூன், ஜூலை வரை மாறிக்கொண்டே வரும். நான் பல்கலைக்கழக பட்டப்படிப்பிற்கு முந்தைய படிப்பில் இருந்தபோது இது நடந்தது. படிப்பில் இந்த காலகட்டம் முக்கியமாக கருதப்படுகிறது, ஏனெனில் பல்கலைக்கழக படிப்பிற்கு முன்பு கிடைக்கும் மதிப்பெண்களே உங்கள் கல்வியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். அந்த வருடப்படிப்பு முடிந்திருந்தாலும், அதிகபட்ச மதிப்பெண்கள் பெற கடினமாக படிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிற காலமது. அந்த கட்டத்தில் என் குடும்பத்தினரே அங்குமிங்கும் செல்வதை கட்டுப்படுத்துவார்கள், அந்த கட்டுப்பாட்டைப் பொருத்துக்கொள்வது எனக்கு கடினமாகவே இருந்தது. கல்லூரியில் நடந்த ஸ்பெஷல் கிளாஸ்கள் எனக்கு வீட்டை விட்டு வெளியேறும் வாய்ப்பை வழங்கின.

அது மாம்பழ சீசன் துவங்கிய சமயம். நானும் என் நண்பர்களும் கல்லூரியில் ஒன்றுகூடினோம். எந்தெந்த ரக மாம்பழங்கள் எங்கெல்லாம் கிடைக்கும் என்பதற்கு நான்தான் ஆலோசகராக இருந்தேன். எங்கு செல்வது என்று திட்டமிட்டு கிளம்ப ஆயத்தமானபோது கல்லூரி தலைமை ஆசிரியர் கீழே வந்து எங்களை சரிக்கட்டும் முயற்சியில் இறங்கினார். நாங்கள் நின்றிருந்த இடத்திற்கு நேர் மேலே, முதல் மாடியில் அவருடைய அறை இருந்தது. அவர் கீழே பார்த்து நாங்கள் பேசியதை கேட்டிருக்கக்கூடும். "என்னது? இன்னும் இருபது நாட்களில் பரிட்சை வருகிறது, நீங்கள் மாம்பழங்கள் பின்னால் சுற்றப் போகிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு நான் அவரிடம், "பரிட்சைகள் வருடத்தில் இருமுறை வருகின்றன. மாம்பழங்களோ வருடத்தில் ஒருமுறை தான் வருகின்றன" என்றேன்.

தென்னிந்தியாவில் முந்நூறுக்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் உண்டு, அவற்றில் பெரும்பான்மை தானாக வளர்ந்தவை, சில வகைகள் மாந்தோப்புகளில் வளர்க்கப்பட்டவை. அப்போது நம்மிடமிருந்த பெரும்பாலான வகைகள் இன்று மறைந்துவிட்டன. இப்போது பெரிய தோப்புகளிலேயே அதிக மாம்பழங்கள் விளைவிக்கப்படுவதால், அதிக காலம் கெடாமல் இருக்கும் தன்மை உள்ளிட்ட பொருளாதாரத்திற்கு உகந்த குணங்கள் கொண்ட ரகங்களே தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இது மாம்பழங்களுக்கு மட்டுமல்ல, நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது இந்தியாவில் இருந்த பல பழங்களுக்கும் காய்களுக்கும் பொருந்தும். அப்போது கிடைத்த பலவகைக் காய்கனிகள் இப்போது கிடைப்பதில்லை. விவசாயத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் சர்வதேச விவசாய பெருநிறுவனங்களாலும் அவற்றின் விதைகளாலும் பல காய்கனி வகைகள் அழிந்துள்ளன. அதோடு இதனால் பூமியிலுள்ள உயிரினங்களின் பல்வகைத்தன்மை அழிந்துவிடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மாங்கனிகள் எப்போதுமே நம் கலாச்சாரத்தின் அங்கமாக இருந்துவந்துள்ளன. கடவுள்கள் கூட மாங்கனிகள் உண்பதாக சித்தரிக்கப்பட்டனர். ஆதியோகிக்கும் பார்வதிக்கும் பிறந்த கணபதியும் கார்த்திகேயனும் மிக இனிப்பான ஒரு மாங்கனிக்காக சண்டை போட்ட அந்த மிகப்பிரபலமான கதை உங்களில் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கும். மாங்கனிகள் என்ற தலைப்பிற்குள் இன்னும் ஆழமாகச் செல்லவேண்டும் என்றால் நான் மீண்டும் இந்தியா திரும்பவேண்டும்! பிற இடங்களில் மாம்பழங்கள் என்ற பெயரில் பரிமாறப்படுபவை என்னைப் பொருத்தவரையில் மாம்பழங்களே கிடையாது. உலகின் பிற இடங்களில் விளைவிக்கப்படும் மாம்பழங்கள் மீது உங்களுக்கு ஏற்கனவே பிரியம் ஏற்பட்டுவிட்டது என்றால் நீங்கள் மாம்பழ சீசனில் இந்தியா சென்று இந்திய மாம்பழங்களை ருசிக்கவேண்டும். சரியாக எங்கு செல்லவேண்டும், எந்த ரக மாம்பழங்கள் சாப்பிடவேண்டும், அவற்றை எப்படி சாப்பிடவேண்டும் என்று எல்லாவற்றையும் நான் உங்களுக்கு சொல்லிவிடுவேன். இன்று பெரும்பாலான இந்தியர்களுக்குக்கூட இது தெரிவதில்லை, ஏனென்றால் அவர்கள் மாம்பழங்களை அறுத்துச் சாப்பிடுகிறார்கள்.

பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நீங்கள் ஒரு மாமரத்தைக் கண்டால், அதில் பச்சை இலைகளைத் தவிர எதுவும் இருக்காது. பிறகு சில சிறிய கண்ணுக்குத் தெரியாத பூக்கள் பூக்கும். திடீரன ஒருநாள், மரம் முழுக்க சின்னச்சின்ன மாம்பிஞ்சுகள் தொங்கும். அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் பெரிதாகுக்கொண்டே சென்று, ஒருநாள் இனிப்பும் ரசமும் நிறைந்த மாம்பழங்களாக மாறும். ஆனால் ஆரம்பத்தில் நான்கைந்து வருடங்களுக்கு எதுவும் நிகழாது. முதன்முதலாக ஒரு மாமரம் காய்காய்க்க வேண்டும் என்றால் அதற்கு வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும். சில வருடங்களுக்குப் பிறகு, "எதுவும் வரவில்லை, அதனால் மாமரத்தை வெட்டி வீசப்போகிறேன்" என்று நினைப்பது முட்டாள்தனம்.

இப்படித்தான் வாழ்க்கை உருவாக்கப்பட்டுள்ளது முதலில் நீங்கள் உறுதியான அடித்தளம் உருவாக்கவேண்டும். இதற்கு சற்று காலம் எடுக்கும். இது உங்கள் ஆன்ம சாதனாவிற்கும் பொருந்தும். விதை தரமானது படைப்பின் மூலமே அதற்குள் பொதிந்திருக்கிறது. படைப்பின் மூலம் வெளிப்பட்டுவிட்டால், நீங்கள் படைப்பின் ஒரு மிக அழகான துண்டாக மாறுகிறீர்கள். அதற்கான மூலப்பொருள் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது அதை வைத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்கள் கைகளில் உள்ளது. விதையை விதைத்தபிறகு, முளைவிடுகிறதா என்று பார்ப்பதற்காக சிறிது காலம் கழித்து வெளியே தோண்டி எடுக்காதீர்கள். தினமும் தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சி வாருங்கள். மாமரம் முன்பு நின்று பழங்களுக்காக பிரார்த்தனை செய்தபடி காத்திருக்காதீர்கள். பழம் பருவத்திற்கு வரும்முன் அதை பறித்திடவும் முயற்சி செய்யாதீர்கள். நேரம் வரும்போது காய் கனிவது வெகுசீக்கிரமாக நிகழும். ஒருநாள் மாங்கனி உங்கள் தலைமீது விழும்.

"யோகஸ்த குரு கர்மானி" என்பதற்கு இதுதான் அர்த்தம். முதலில் உங்களை யோகநிலையில் நிலைநிறுத்துங்கள், பிறகு செயல்படுங்கள். அதிலிருந்து அழகான விஷயங்கள் வெளிப்படும்.

Love & Grace

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1