வலியும் பரவசமும்!

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், சம்யமாவின் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சத்குரு.
 
வலியும் பரவசமும்!, Valiyum paravasamum
 
 
 

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், சம்யமாவின் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சத்குரு.

மிகத் தீவிரமாய் நடந்துகொண்டிருக்கும் சம்யமா நிகழ்ச்சி என்னுள் உண்டுசெய்யும் பிரசவவேதனை போன்ற வலியில், கடந்த சில வாரங்களில் நிகழ்ந்தவற்றை எல்லாம் நான் மறந்தேபோய்விட்டேன் போலிருக்கிறது. கடந்த சில நாட்களில் பற்பல விஷயங்கள் நடந்து கொண்டிருந்தாலும், நான் சுத்தமான கரும்பலகை போல் இருக்கிறேன். கர்ம சம்யமா அல்லவா!

என் மனதில் ஒன்றும் இல்லாதபோது, கவிதைகள் தானாய் ஊற்றெடுக்கிறது. சம்யமா நடைபெறும் அறையில் இருந்துகொண்டு, எண்ணூற்றிற்கும் மேற்பட்ட மக்களை தியானத்தின் உச்சநிலையிலும், பரவசத்தின் ஆழங்களிலும் ஆழ்த்துவது, சக்தியை பொருத்த மட்டில் மலைப்பான ஒரு சவால்தான். ஆனால் அதே சமயம், என்னுள் உற்சாகம், வலி, சிலிர்ப்பு, பரவசம் என இன்னும் எத்தனை எத்தனையோ ...

ஒளியினால் ஆன ஆடை

உலகை ஒளி ஆடையில்
போர்த்த நினைக்கும் என் முயற்சியில்
உடலெனும் இந்த ஆடை
நைந்து, தேய்ந்து போயிருக்கிறது.

இது கிழியும் முன்,
இதை பலப்படுத்த வேண்டும்...
பக்தியிலும் துணிவிலும் முனைப்பிலும்
ஊறிய நூலிழைகளால்.

தாபத்தைத் தாண்டிய காதல்
சந்தேகத்தை தாண்டிய பக்தி
தனித்தன்மையை தாண்டிய ஈடுபாடு
இதுபோன்ற இழைகளை வைத்துத்தான்
ஒளி ஆடையை நெய்திட முடியும்.

ஆம், இவ்வுலகை ஒளி-ஆடை
கொண்டு போர்த்திட முனைகிறேன்...
இல்லாவிட்டால் ஆடையற்றோர்
இருளிலேயே இருந்திட முடிவுசெய்வர்.

அன்பும் அருளும்