ஒரு வெற்றிகரமான தொழிலதிபரின் குணம் என்ன, நீண்டகால குறிக்கோள்களை நிர்ணயிப்பது எப்படி, தொழில் செய்ய வாழ்வின் எல்லா பரிமாணங்களிலும் நாம் துடிப்புள்ளவராய் இருப்பதன் அவசியம் என்ன என்று ஈஷா இன்சைட்டின் இவ்வாண்டு நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு திறந்துகொடுத்த வெற்றிக்கான சாவிகளை இந்த வார சத்குரு ஸ்பாட் மூலம் நம்முடனும் பகிர்ந்துகொள்கிறார் சத்குரு.

சில தினங்களுக்கு முன் இந்தியாவின் தலைசிறந்த வியாபார தலைவர்கள், விஞ்ஞானிகள் தங்கள் அனுபவங்களையும், வியாபாரத்தை பெருக்குவதைப் பற்றியும் பகிர்ந்துகொண்ட ஈஷா இன்சைட் நிகழ்ச்சி நிறைவிற்கு வந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் கருத்துக்களை பிறக்கிக் கொள்வது இன்சைட் அல்ல. உள்நிலையில் பார்க்கக்கூடிய நிலையில் இருப்பது இன்சைட். கருத்துக்களை பிறக்கி எடுத்துக்கொள்வது, சூழ்நிலைகளை சற்று சிறப்பாய் கையாள வேண்டுமென்றால் உதவிடலாம். ஆனால், இங்கு எழும் அடிப்படை கேள்வி இதுதான்: நீங்கள் பிறருடைய கருத்துக்களின் காப்பகமாக இருக்க விரும்புகிறீர்களா, அல்லது உயிருள்ள ஒரு சக்தியாக இருக்க விரும்புகிறீர்களா?

நிறைய ஐடியாக்களை நீங்கள் சேகரித்தால், பிறரைவிட சில விஷயங்களை சற்று சிறப்பாக செய்வீர்கள், ஆனால் சிறப்பாக வாழ மாட்டீர்கள். இன்னொரு மனிதரைவிட சிறப்பாய் வாழ்வதுதான் "சிறப்பான வாழ்க்கைக்கான" நியமமாக நீங்கள் கொண்டிருக்கும் வரை, உங்கள் வீடு, உங்கள் வருமானம், உங்கள் கார் இவை யாவும் இன்னொருவர் வைத்திருப்பதைவிட பெரிதாக இருந்தாலும், அது சிறப்பான வாழ்க்கை அல்ல. உங்களிடம் இருப்பவற்றை நீங்கள் அனுபவிக்கக்கூடாது என்று கிடையாது, ஆனால், பிறரால் அனுபவிக்க இயலாது என்பதால் நீங்கள் மகிழ்ச்சியுறுவது ஒரு நோய்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்களைப் பற்றி எதையாவது ஒன்றை அறிந்துகொள்வது இன்சைட். அந்த கணப்பொழுதில், மேலோட்டமாய் மட்டும் உங்களைப் பார்க்காமல், ஆதார உண்மைகளின் அடிப்படையில் உங்களைப் பாருங்கள். உங்களுடைய நீண்டகால குறிக்கோள், உங்களுக்குள் இருக்கும் உயிருக்காக இருக்கட்டும்; உங்கள் எண்ணங்கள், உணர்வுகள், சமூகத்திற்காக வேண்டாம். உங்கள் குறிக்கோள்கள் உங்களுக்குள் இருக்கும் உயிர் சார்ந்ததாய் இருந்தால், அது அனைவருக்கும் நலம் பயக்கும். ஏனெனில், அனைவருமே வெறும் உயிர்தானே.

மாறாக, உங்கள் ஆளுமையின் அடிப்படையில் உங்கள் நீண்டகால குறிக்கோளினை அமைத்துக் கொண்டால், உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் அது அலங்கோலமானதாய் ஆகிவிடலாம். மேலும், உங்களுடைய சிந்தனை மற்றும் உங்கள் உணர்வினைப் பொருத்து உங்கள் ஆளுமையும் மாற்றமடையலாம். அப்படியென்றால், அது நீண்டகால குறிக்கோளாக இருக்கமுடியாது. உங்கள் உயிர்சார்ந்ததாய் உங்கள் நீண்டகால குறிக்கோளை நீங்கள் அமைத்தால், உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் அற்புதமானதாய் அது அமையும்.

வாழ்க்கையைப் போலவே, தொழிலிலும், உங்கள் திறமையென்ன என்பதை அறிவது முக்கியம். மிகப் பெரிய தொழில் தலைவர்கள் சென்ற வாரம் இங்கு இருந்தனர், ஒன்றுமில்லாத நிலையிலிருந்து தங்கள் தொழிலை இவர்கள் துவங்கியிருக்கிறார்கள். நிச்சயமாக, சிறப்பாய் எதையோ ஒன்றைச் செய்ததால்தான் வளர்ந்திருக்கிறார்கள். சரியான நேரத்தில், சரியானவற்றை செய்வதும் மிக மிக முக்கியம். இப்போதைய நிலையில், நீங்கள் இன்னொரு பில்கேட்ஸ் ஆகிவிட முடியாது. ஏனென்றால், அந்த காலத்தில் தொழில்நுட்ப அலையை பயன்படுத்தி கொண்டவர் அவர்.

இன்று மற்றொரு இன்போசிஸை நீங்கள் கட்டமைக்க முடியாது, ஐடி எழுச்சியுற்ற நேரத்தில் அது வேலைசெய்தது. இன்று வேறு ஏதாவது ஒன்று வேலை செய்யலாம். ஆனால், அன்றும் இன்றும் அடிப்படைகள் ஒன்றுதான். நீங்கள் துவங்கும் தொழிலும், நீங்கள் இருக்கும் சூழ்நிலையும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், ஒரு மனிதனாக, அதே அளவு திறமையும், காரியங்கள் செய்யக்கூடிய ஆற்றலும் தேவைப்படுகிறது. நீங்கள் மிகப் பெரிய தொழிலதிபராக இருக்கலாம் அல்லது சிறிய தொழில் முனைவராக இருக்கலாம், ஆனால், வெற்றியாளராய் திகழ, காரியங்களை சரியாய் செய்யவேண்டும்.

தங்கக் கிண்ணத்துடன் பிறந்தவர்கள்கூட, தங்கள் தொழில் வளர, சரியானவற்றைச் செய்யவேண்டும். அதனால், ஒருவர் பெரியவர் இன்னொருவர் சிறியவர் என்கிற ரீதியில் சிந்திக்க வேண்டாம். உண்மையில், உங்களை நீங்கள் சிறிதாக்கிக் கொள்ளவேண்டும். அது உங்களை சிறந்த தொழில்முனைவராக ஆக்கும். ஒரு மனிதராய், ஒன்றுமில்லாதவராய் உங்களை நீங்கள் ஆக்கிக்கொண்டால் , அது மிக அற்புதமாய் இருக்கும். அதுபோன்ற நிலை தற்போது சாத்தியம் இல்லை என்பதால், நீங்கள் உங்களை சிறிதாக்கிக் கொள்ளவேண்டும்.

ஆதியோகியிடமிருந்து சப்தரிஷிகள் விடைபெற்றுச் செல்வதற்கு முன், அவரிடம் அவர்கள் பல கேள்விகளை எழுப்பினர். அவர்கள் கேட்ட கடைசி கேள்வி இதுதான்: "நீங்கள் பிரபஞ்சத்தின் இயல்பைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள், அதன் பரப்பு என்ன?, அதன் உண்மையான பரப்புதான் என்ன?" என்றனர். ஆதியோகி சிரித்தார். "ஒரு கடுகிற்குள் என்னால் பிரபஞ்சத்தை அடக்கமுடியும்," எனச் சொன்னார். இதுவும் அப்படித்தான். அது சிறுதொழிலோ அல்லது பல கோடிகள் புரளும் பெருந்தொழிலோ, அதை நடத்தத் தேவையானது அனைத்தும் ஒரு மனிதனுக்குள் அடக்கம்.

நீங்கள் தொழில் முனைவரோ, தொழிலாளரோ, குடும்பத்தை நடத்துபவரோ எவராக இருந்தாலும் நீங்கள் துடிப்புடன் செயலாற்றுபவராய் இருக்கவேண்டும். நீங்கள் ஒரு கம்பெனியை நடத்தும்போது, துடிப்புடன் செயலாற்றி, தங்களுக்கு விதிக்கப்பட்டதையும் தாண்டி, பொறுப்புகளை ஏற்றுச் செயல்புரிபவரைத்தானே எதிர்பார்ப்பீர்கள்?

ஈஷாவில் நாம் தொழில் செய்யாமல் இருக்கலாம், ஆனால், ஆசிரமத்தில்கூட, துடிப்புடன் செயல்செய்பவரை, உயிரோட்டமுள்ள ஒருவரை, செயல் செய்ய விருப்பமாய் இருப்பவரையே நாம் விரும்புகிறோம். தொழில்முனைவராய் இருப்பதென்றால், எந்த பிரச்சனையையும் எதிர்கொண்டு, தீர்வினை நாடுபவராய் இருத்தல். நீங்கள் அந்த நிலையில் இருந்தால், நீங்கள் இயல்பாகவே மேல்நோக்கி செல்வீர்கள். ஆனால், நீங்கள் மேல்நோக்கிச் செல்வதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கக் கூடாது. மேல்நோக்கி செல்வது இயல்பாக நடக்கும். உங்கள் சிறகுகளை போதுமான அளவு அடித்தால், நீங்கள் பறப்பீர்கள். தொழில் முனைவராய் இருப்பது என்றால், துவங்குவது மட்டுமல்ல, பறப்பதும் கூடத்தான்.

Love & Grace