தனலாய் தகிக்கும் உயிர்
சிவன் தன்னை அத்து மீறி ஊடுறுவிய அனுபவத்தை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் அழகாய் எடுத்துரைக்கிறார் சத்குரு. தீயாய் தகிக்கும் ஒரு உயிரை எவ்வாறு தனியாய் விட்டு வைப்பான் சிவன் எனக் கேட்கும் அவர், அதனை நமக்கு விளக்கும் பாங்கு அழகு. படித்து மகிழுங்கள்!
 
 
 
 

சிவன் தன்னை அத்து மீறி ஊடுறுவிய அனுபவத்தை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் அழகாய் எடுத்துரைக்கிறார் சத்குரு. தீயாய் தகிக்கும் ஒரு உயிரை எவ்வாறு தனியாய் விட்டு வைப்பான் சிவன் எனக் கேட்கும் அவர், அதனை நமக்கு விளக்கும் பாங்கு அழகு. படித்து மகிழுங்கள்!

Question: சத்குரு, நீங்கள் சிவனுடனான தங்கள் உறவு பற்றி பேசி இருக்கிறீர்கள். உங்கள் அனுமதி இல்லாமல், அவர் எப்படி உங்கள் வாழ்க்கைக்குள் நுழைந்தார். அனுமதி பெறாமல் உள்நுழைய எப்படி நீங்கள் அவரை அனுமதிக்கலாம்? அப்படி நுழைந்ததற்கு நீங்கள் ஏதாவது கைமாற்று பெற்றீர்களா?

சத்குரு:

நான் என்றுமே ஆன்மீக நோக்கம் உடையவனாய் இருந்ததில்லை. தற்சமயம் இது அறியப்பட்ட உண்மை. ஆனால் வேறெதோ ஒன்றைச் சார்ந்திருந்தேனா என்றால் அதுவும் இல்லை. நான் குறிப்பிட்ட எந்தவொரு தொழிலையோ, வேலையையோ, மனிதரையோ, வேறெதையோ சார்ந்திருக்கவில்லை. எந்த திசையும் அறியாத தீ அது. என்னைச் சுற்றி இருந்த உலகின் மீது சற்று கோபம். முக்கியமாக, உலகில் நிலவி வரும் அநியாயங்கள் என்னை அதுபோல் இருக்கச் செய்தது.

ஒரு மனிதன் இளைஞனாய் இருக்கும்போது, எப்படி முட்டாள்தனம் என்பது மோசமான குற்றமாய் தெரிகிறதோ அதுபோல், என்னுள் இருந்த அந்தத் தீ, கோபமாய் வடிவம் கொண்டது. அதில் ஒரு பகுதி இன்றும் என்னை எரித்துக் கொண்டுதான் இருக்கிறது. என் வாழ்வின் பல அம்சங்களில் அது பரவி வியாபித்திருக்கிறது. மக்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பவற்றில் எல்லாம் இது தாக்கம் ஏற்படுத்துகிறது. முட்டாள்தனமும் அபத்தமும் என் தீவிரத்தின் ஒரு பகுதியை கோபத்தில் செலுத்தியது. அந்தத் தீவிரம் - எதன் மீதுமானதல்ல. அந்த சிறிய கோபம் - எதன் மீதும் அல்ல.

என்னுள் இருந்து ஏதோ ஒன்று நான் என் சக்திகளை கோபத்தில் செலுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தது. எனக்கும் அந்த சமயத்தில், கோபம் என்ற அந்த உணர்வு பிடித்திருந்தது. கோபம் மட்டுமே என் வாழ்க்கைக்கு அர்த்தம் புகட்டுவதாய் இருந்தது, இல்லாவிட்டால் என் வாழ்க்கைக்கு எந்த நோக்கமும் இருக்கவில்லை. எதைக் கண்டாலும் கொதிக்கும் கனலாய் கோபம் கொண்டேன். நான் எதைத் தொட்டாலும் அது முழு வீரியத்துடன் இருந்தது, ஆனால் எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. நான் ஏதோ ஒன்றின் மீது கோபத்துடன் இருந்த்தால், அந்தக் கோபம் என் வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பிப்பதாய் இருந்தது, ஆனால் திசை தெரியாத, நோக்கமில்லாத, தீவிரத்துடன் இருந்தேன்.

சிவனுக்கு எதையும் சார்ந்திராத, தீயாய் தகிக்கும் மனிதர்களை மிகவும் பிடிக்கும். வெறும் உயிர். உயிர் என்றால் உணவோ, உடையோ, குடும்பமோ, சமூகமோ, நீங்கள் செய்யும் செயல்களோ அல்லது செய்யாத செயல்களோ அல்ல. உயிர் என்றால் இது (தன்னைக் குறித்துச் சொல்கிறார்). இது உயிர். உயிரே நோக்கமுடையது தான், அதற்கு வேறொரு நோக்கம் தேவையில்லை. அதுவே அளப்பரிய ஒரு நிகழ்வு, அதற்கு மற்றுமொரு திசை தேவையில்லை. இன்று பெருநகரங்களில் பல பேர், "சத்குரு, என் வாழ்க்கையின் நோக்கம் என்ன?" என்று கேட்கிறார்கள் (சிரிக்கிறார்). கடவுள் அவர்களுக்கு ஏதோ நோக்கம் கொடுத்திருக்க வேண்டும் அல்லது அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

வாழ்வின் ஆதாரத்தை தெரிந்து கொள்ள, தெய்வீகத்தை உணர நீங்கள் ஒரு உயிராக இருக்க வேண்டும். வேறொன்றும் அல்ல வெறும் உயிராக இருக்க வேண்டும்.

நான் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்று நீங்கள் நினைக்கத் துவங்கியவுடன் அத்தனை வகையான முட்டாள்தனமான செயல்களையும் நீங்கள் செய்யத் துவங்கிவிடுவீர்கள். "நான் தேர்ந்தெடுக்கப்பட்டவன்" என்று நீங்கள் சொல்லும் கணத்திலேயே நீங்கள் தனித்தன்மையானவர் என்று நம்பத் துவங்கிவிடுவீர்கள். நீங்கள் சிறப்பானவர் ஆனவுடன் வாழ்க்கையிடமிருந்தும் சிறப்பான உபசாரம் உங்களுக்கு கிடைக்கும், ஆனால் இந்த வாழ்க்கை மிக சாதாரணமானது... ஒரு எறும்பைப் போல, ஒரு வெட்டுக்கிளியைப் போல, ஒரு யானையைப் போல, மரத்தைப் போல, மலையைப் போல, பாறையைப் போல சாதாரண வாழ்க்கைதான் இது. வெறும் வாழ்க்கை. இதில் எதுவுமே விசேஷமல்ல, வெகு சாதாரணம் தான். இதனால் சாதாரணமும் மிக சாதாரணம் ஆகிவிடும். 'நான் தனித்துவமாக இருக்க வேண்டும்,' என்பது ஒரு வகையான நோய். அது உங்களை தொற்றிக் கொண்டால், நீங்கள் அத்தனை விதமான முட்டாள்தனமான செயல்களையும் செய்யத் துவங்கிவிடுவீர்கள். அதனைச் செய்து எவருக்கும் தேவைப்படாத விஷயங்களை உங்களிடம் ஈர்க்கத் துவங்கிவிடுவீர்கள்.

உயிரை உணர, தெய்வீகத்தை அறிந்து கொள்ள, நீங்கள் ஒரு உயிராக மட்டுமே இருக்க வேண்டும், வேறொன்றாகவும் அல்ல. ஆனால் தற்சமயம் நீங்கள் ஒரு ஆணாக, பெண்ணாக, மனமாக, சிந்தனையாக, எண்ணமாக, தத்துவமாக, நம்பிக்கையாக இன்னும் ஏன் ஒரு கோஷமாக (slogan) இருக்கிறீர்கள். மக்கள் தங்களை பல விஷயங்களாக குறைத்துக் கொண்டுள்ளனர். இவையெல்லாம் வாழ்விலிருந்து செய்யப்பட்டவை. ஆனால் நீங்கள் இங்கு வந்ததோ முழு உயிராக வந்தீர்கள், முழு உயிராகவே போய்விடுவீர்கள்... இடையே, எந்த மாதிரி பிசக வேண்டும் என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால், உங்களால் உயிரைத் தவிர வேறெப்படியும் இருக்க முடியாது.

ஒரு அரசனாக உங்களை நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம், உங்களைச் சுற்றி ஒர் ஆயிரம் பேர் பெருமதிப்பிற்குரிய அரசரே என்று அழைக்கலாம். ஆனால் அவை அத்தனையும் வெறும் விளையாட்டுதான். உண்மையில் நீங்கள் ஒரு உயிர். ஒன்று நீங்கள் உங்களுடைய உச்சபட்ச சாத்தியத்திற்கு மலர வேண்டும் அல்லது முளைவிடாத விதையாக இருக்க முடியும் இல்லையேல் மலராத மொட்டாக இருக்க முடியும். ஒன்றுமே நடக்காமல் இருக்க முடியும். உங்களுக்கு எதுவுமே நடக்கவில்லை என்றால் நீங்கள் பத்திரமாக இருக்கிறீர்கள் என்று நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள். உங்களை நீங்கள் சிறைக்குள் பூட்டிவைக்கலாம். சிறை வெகு பத்திரமான இடம் ஆயிற்றே, இன்னும் சொல்லப் போனால் சவப்பெட்டியில் சற்றே பாதுகாப்பு அதிகம், வெகு அதிகம். அங்கே உங்களுக்கு எதுவும் நடக்காது. அதனை கரையான்கள் அரிக்காதவாறுகூட செய்ய முடியும்.

எப்பொழுது நீங்கள் ஒரு தீவிரமான உயிராய் இருக்கிரீர்கள், உயிரின் அடிப்படை எதுவோ அது வந்தே தீரவேண்டும், அதனால் உங்களைத் தவிர்க்கவே இயலாது. நீங்கள் தனலில் தகிக்கும் உயிராக இருந்தால், சிவனால் உங்களைத் தனிமையில் விட இயலவே இயலாது. ஆனால் நீங்கள் எதுவெல்லாம் ஆக முடியாதோ அதை நோக்கி, நீங்கள் ஏதோ ஒன்றாக, மற்றொன்றாக ஆகிக் கொண்டே இருந்தால்... உங்களை மரணக் குழியில் போட்டுப் புதைக்கும்போது மட்டுமே நீங்கள் அது இல்லை என்று உணர்வீர்கள்.

பிறந்தநாட்களும் இறுதிச் சடங்குகளும் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் உடையவை. ஒன்று நிகழ்ந்தால் மற்றொன்று நிகழ்ந்தே ஆக வேண்டும். எனக்கும் உங்கள் அனைவருக்கும் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். நாம் அழிவுடையவர்கள், அதுவே நம்மை விலை மதிப்பில்லாதவர்களாகச் செய்கிறது. நீங்கள் மகத்தான வாழ்க்கை வாழும் பேறு பெறுவீர்களாக.

Love & Grace

*செப்டம்பர் 3, 2013 அன்று, சத்குரு அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சத்குரு பேசியதிலிருந்து தொகுத்தது.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1