கடந்த இரண்டு வாரங்களாக மின்னல் வேகப் பயணங்கள், செயல்பாடுகள். டென்னிசியில் வார இறுதியில் அருமையான பாவ ஸ்பந்தனா நிகழ்ச்சி முடித்து, பிறகு ஹவாய் தீவிற்கு சில முக்கியமான, சுவாரஸ்யமான சந்திப்புகளுக்காக ஒரு விரைவுப் பயணம். முதன்முறையாக உயிருள்ள எரிமலை உள்ள ஒரு தீவிற்கு செல்கிறேன். கறுத்த எரிமலைக் குழம்புகளின் மீதங்கள் கழுவபட்ட அடிசுவடுகள் ஆங்காங்கே வளமை ததும்பும் பசுமை. வியப்பூட்டும் நீலப்பசுமை நிறத்தில் சமுத்திரம், நன்கு பராமரிக்கப்பட்ட கோல்ஃப் மைதானங்கள். இந்த தீவை சுற்றிப் பார்க்க இன்னும் சற்று அதிக நேரம் கிடைத்திருக்கலாம்...

ஐரோப்பாவில் இடைத்தங்கல் இல்லாமல், டெல்லியில் நடைபெறும் பார்முலா ஒன் பந்தயத்திற்கு சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தமைக்கு, ஏர் இந்தியாவிற்கு நன்றி சொல்ல வேண்டும். இந்தப் பந்தயம் இந்தியாவில் நடைபெறுவது இது இரண்டாவது முறை. எனக்குச் சிறு வயது முதலே இயந்திரங்களின் மீது மிகுந்த ஈடுபாடு. விடலைப் பருவத்தில் தென்னிந்தியா முழுவதும் சுற்றித்திரிந்ததிலிருந்து, மோட்டார் பைக்கில் இந்தியாவை வட்டமிட்டது வரை, வேறெந்த தனி நோக்கமும் இல்லாமல், பயணம் செய்வதற்காக மட்டுமே செய்த பயணங்கள் அவை. அப்பயணங்கள் எனக்கு இந்தியாவைப் பற்றி நெருக்கமான பார்வையும் அனுபவமும் தந்தன. ஒவ்வொரு விதமான இந்தியனையும் நெருக்கமாக அறிந்தது போல் உணர்கிறேன்.

அந்த நாட்களில் காட்டுத்தனமான சவாரிகள், ரோட்டோர தாபாக்களில் உணவு. காடுகள், கடற்கரைகள், மலைகள், சிலநேரங்களில் ரோட்டோரமாக பைக்கிலேயே உறக்கம். இந்த சவாரிகளில் நான் பார்த்த மனித முகங்களும் விதவிதமான நிலப்பரப்புகளும் என் நினைவில் தெளிவாகவும் செழிப்பாகவும் உள்ளன. இவை எல்லாவற்றிலும் எனக்குத் துணையாய் இருந்தது, என்னை ஏற்றிச்சென்ற என் வாகனத்தின் துடிப்பான எஞ்சின்தான் (internal combustion engine). மனித நுண்ணறிவின் பலனாக உருவாகியிருக்கும் இந்த எஞ்சின்களை கொண்டாடும் இடம் இந்த பந்தயத் தடங்கள். இதை நம்பவேண்டும் என்றால், பார்முலா ஒன் இயந்திரங்களின் அலறல்களை நீங்கள் காதாரக் கேட்க வேண்டும். வியக்கத்தக்க இயந்திரங்கள், மற்றும் அதை ஓட்டும் திறன்கள்! ஆனால், கோயமுத்தூரைச் சேர்ந்த எஃப் 1 ஓட்டுனர், பந்தயத்தின் நடுவே இடிபட்டு வீழ்ந்தது வருத்ததிற்குரிய தருணம்.

அதற்குப் பிறகு இரண்டு நாள் ஆசிரமத்திற்கு ஓரு விரைவுப் பயணம். மும்பையில் இலக்கிய நேரலை திருவிழாவிற்கு பிறகு ரிஷிகேஷில் ஒரு நிகழ்ச்சி, அதன்பின் கோவாவில் இன்னொன்று, இவை எல்லாம் முடிந்து இப்பொழுது இந்திய பொருளாதார மாநாட்டில் இருக்கிறேன். நடுநிசி தாண்டி வெகுநேரமாகி விட்டது. நாளைய தினம் மிக நீண்டதாகத்தான் இருக்கும். மும்பையிலும் கோவாவிலும் நடந்த சில சுவாரசியமான தருணங்களை வரும் வாரத்தில் எழுதுகிறேன்.

Love & Grace

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.