சனாதன தர்மம் - ஆழமான தேடுதலை அடிப்படையாகக் கொண்டது
அக்டோபர் 4ம் தேதியன்று கலிஃபோர்னியாவின் சேட்ஸ்வோர்த் நகரில், "தர்ம பண்பாட்டு அறக்கட்டளை" (Dharma Civilization Foundation) நிர்வாகக் குழு உறுப்பினர்களிடையே "சனாதன தர்மம்" பற்றி சத்குரு ஆற்றிய உரை... இந்த வார சத்குரு ஸ்பாட்டில்.
அக்டோபர் 4ம் தேதியன்று கலிஃபோர்னியாவின் சேட்ஸ்வோர்த் நகரில், "தர்ம பண்பாட்டு அறக்கட்டளை" (Dharma Civilization Foundation) நிர்வாகக் குழு உறுப்பினர்களிடையே "சனாதன தர்மம்" பற்றி சத்குரு ஆற்றிய உரை... இந்த வார சத்குரு ஸ்பாட்டில்.
சனாதன தர்மத்தை நீங்கள் பல்கலைகழகம் என்ற தளத்துக்குள் எடுத்துச் செல்ல முயற்சி செய்கிறீர்கள். அதாவது நீங்கள் உச்சபட்ச செயல்முறை ஒன்றை குறுகிய எல்லைகள் கொண்ட கல்விக்கூடத்திற்குள் நுழைக்க முயல்கிறீர்கள். இதைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இது ஒரு வேதாந்த சாஸ்திரமாக அமைந்துவிடாமல், ஆன்மீகத் தேடலில் மக்களுக்கு ஒரு தூண்டுதலாக இருக்கும் வண்ணம் அமைய சில அடிப்படையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
இதை நம்பவேண்டும், அல்லது நீங்கள் மாண்டு போவீர்கள் என்று சொல்வதல்ல சனாதன தர்மம். இது அப்படிப்பட்ட ஒரு கலாச்சாரமும் அல்ல. நீங்கள் நினைத்துப் பார்த்தே இராத கேள்விகளை உங்களுக்குள் அது எழுப்பும். சனாதன தர்மத்தின் செயல்முறை முழுவதும் உங்களுக்குள் கேள்விகளை எழுப்புவதற்கே, ஆயத்த பதில்களைத் தருவதற்கு அல்ல. தேடுதலை ஆழப்படுத்தி, உங்களிடம் கேள்வியை வரவழைத்து அதன் மூலம் இந்த அனைத்துப் படைப்பிற்குமான மூலத்தை நீங்களே அறியும் வண்ணம் செய்வதே சனாதன தர்மம். எனவே இது மற்றொரு வேதாந்த படிப்பாக இல்லாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிகைகள் உருவாக்கப்பட வேண்டும்.
இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியிலும் இந்த தர்மத்தைச் சார்ந்திருக்கும் மக்கள் பலரும் ஏற்கனவே ஒரு விரக்தியில் இருக்கிறார்கள். யாரோ தங்களை போட்டியில் முந்திச் செல்வதாக நினைக்கிறார்கள், அதனால் இந்த தர்மத்தை உறுதியாக நிலைநிறுத்த விரும்புகிறார்கள். அதன் விளைவாக, இந்த தர்மத்தை அனைவரும் பின்பற்றும் ஒரு புனித நூலாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்று நமது பாதை எப்பொழுதும் இருந்ததில்லை. கீதையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று இப்பொழுது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அர்ஜுனன், அவனே ஆயிரம் கேள்விகள் கேட்கிறான். கண்மூடித்தனமாக கீதையை பின்பற்றினால், கீதையைக் கொடுத்ததன் அடிப்படை நோக்கமே சிதைந்து போகும்.
Subscribe
தேடலுக்கான எண்ணத்தை உலகில் அனைவருக்கும் உருவாக்க வேண்டும் என்பதே அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, நாம் பின்பற்றும் வழிமுறையை மற்றவர் மேல் திணிப்பது நோக்கமாக இருக்கக் கூடாது. நமக்கென்று குறிப்பிட்ட வழி ஒன்றும் கிடையாது. வாழ்கையை இப்படி வகுத்தால் தனி மனித நலனுக்கும், சமூக நலனுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்பதைக் கண்டறிந்தோம். ஆனால், இந்த தர்மம், எதையும் இதுதான் என்று குறிப்பிட்டு சொல்வதில்லை. அன்றாடம் கேள்விகள் கேட்கலாம், லட்சக்கணக்கில் கேள்விகளை எழுப்பலாம். கேள்விகள் குறித்து அச்சம் உங்களுக்கு இருந்தால், எளிதில் நொறுங்கக்கூடிய ஒரு பரப்பின் மீது நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அந்த நிலையில், மூன்று கேள்விகள் நான் எழுப்பினால் உங்கள் தளம் உடைந்து போகும். உண்மையோடு இருந்தால், நான் லட்சம் கேள்விகள் எழுப்பினாலும் ஒரு பிரச்சனையும் இருக்காது. பொய்யின் மீது நின்று கொண்டிருந்தால்தான் கேள்விகள் பிரச்சனையாகும். கேள்வி எப்பொழுதும் தவறாக இருக்க முடியாது. பதில்கள்தான் தவறாக இருக்க முடியும்.
எனவே சனாதன தர்மத்தின் நோக்கம் தேடுதலை ஆழமாகத் தூண்டுவதாக இருக்க வேண்டும். நம் கருத்தை பிறர் மீது திணிப்பதாக இருக்கக் கூடாது. எப்படியும் அது வேலை செய்யாது. இன்னும் 50 வருடங்களில், பெரும் போர் அல்லது கலகம் எதுவும் இல்லாத பட்சத்தில், இந்த பூமியில் யோகாதான் மதங்களை விட பிரதானமாக இருக்கும். யோகா என்று சொல்லும் பொழுது, சனாதன தர்மம் ஒரு வகையில் குறிப்பிடும் பயிற்சிகளைப் பற்றி நாம் பேசுகிறோம்.
மனித குல வரலாற்றில் முதன் முறையாக மனித அறிவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மலர்ந்திருக்கிறது. பல தலைமுறைகளாக ஒரு கிராமத்தில் ஒருவர், அங்கே இருக்கும் அனைவருக்காகவும் சிந்திக்கும் நிலையே இருந்து வந்தது. அந்த காலம் முடிந்து விட்டது. விரைவில் அனைவரும் சுயமாக தங்களுக்கென சிந்திக்கத் தொடங்குவார்கள். உலகில் அனைவரும் அனைத்தையும் அணுகும் சூழல் ஏற்படும். அப்படி ஒரு நிலை வரும் பொழுது, "நான் சொல்வதை நீ நம்பவில்லை என்றால் தொலைந்தாய்" என்ற கொள்கை பயனில்லாது போய்விடும்.
சொர்க்கத்தில் தீர்வுகள் வழங்கும் தத்துவங்கள் இனி வேலை செய்யாது. காரண பின்புலம் இல்லாத எந்த ஒரு விரிவான தத்துவமும் வேலை செய்யாது. மக்கள் ஒவ்வொன்றுக்கும் நடைமுறைக்கேற்ற தீர்வுகளையே நாடுவார்கள். 50 வருட காலத்தில், தீர்வை நடைமுறைப்படுத்தி விளைவை அப்போதே, அங்கேயே பார்க்கும் ஒன்றுதான் நிலைக்கும். தாங்கள் பார்க்க முடியாத, இன்னொரு இடத்தில் நிகழும் தீர்வு முறைகள், தங்களுக்கு பொருத்தம் அற்றதாக மக்கள் சிறிது சிறிதாக உணர்வார்கள். இயல்பாகவோ, அல்லது நோக்கத்துடனோ, தன்னை சுற்றி நிகழ்வதை அறியாமல் இருந்த காலத்தில் இது சாத்தியமாக இருந்தது.
எனவே சனாதன தர்மத்தை முன்னிறுத்த வேண்டிய நேரம் இது. இதை இந்து மதம் என்று பிரச்சாரம் செய்யாமல் இருப்பது முக்கியம். ஏனென்றால் இது இந்து மதம் அல்ல. இந்து என்பதே அந்நிய கருத்துதான். இந்த தேசத்தில் அப்படி ஒரு கருத்து இருந்ததே இல்லை. இந்து என்பது பூகோள அடையாளத்தால் ஏற்பட்டது. இமயம், இந்திய பெருங்கடல் இரண்டுக்கும் இடையே இருந்த நிலப்பரப்பு இந்து என்று அழைக்கப் பெற்றது. இந்தியாவில் உருவான ஒரு புழு, இந்து புழு என்று நான் சொன்னது சர்ச்சைக்கு உள்ளானது. என்ன என்று அவர்கள் கேள்வி எழுப்பிய பொழுது, "ஆப்பிரிக்காவில் பிறந்த ஒரு யானையை ஆப்பிரிக்க யானை என்று நீங்கள் சொல்லும் பொழுது இது மட்டும் என்ன பிரச்சனை. ஹிந்துஸ்தானத்தில் பிறந்த ஒரு புழு ஹிந்து புழு, ஒரு வெட்டுக் கிளியும் அப்படிதான். நீங்களும் அப்படித்தான். இந்த நிலத்தில் பிறந்தால் நீங்கள் ஒரு ஹிந்து" என்றேன்.
இந்த நிலத்தின் பூகோள அம்சங்களோடு நம்மை அடையாளப்படுத்திக் கொண்டோம். கடந்த 6000, 8000 வருடங்களாக மிகவும் சுதந்திரத்துடன் நமது ஆன்மிக செயல்முறைகளை, நமது இசையை, நமது கணிதத்தை, நமது வானியலை பெரும் உயரத்துக்கு நாமே எந்த குறுக்கீடும் இன்றி, எந்த தாக்குதலும் உள்ளாகாமல் உருவாக்கினோம். ஏனெனில் கடலும் மலையும் நமக்கு அரணாக இருந்தன. இந்த இரண்டு பூகோள கூறுகளின் உதவி இன்றி, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வடிவெடுத்த, ஒரு குறுக்கீடு இல்லாத, கலாச்சாரத்தை உருவாக்கியிருக்க முடியாது. இந்த ஆழமான நன்றியின் காரணமாகவே நம்மை ஹிந்து என்று அழைத்துக் கொள்கிறோம்.
ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு குழுவில் இருந்தாக வேண்டும் என்று கருத்து கொண்டிருந்த, வெளியில் இருந்து வந்தவர்கள்தான், இந்த கலாச்சாரத்தை "ஹிந்துயிசம்" என்று முத்திரை குத்தி விட்டனர். அது வரை அப்படி ஒன்று இருந்ததில்லை. எனவே அறிந்து கொள்ளும் அந்த தாகத்தை மீண்டும் நாம் கொண்டு வர வேண்டிய நேரம் இது. இது நம்பிக்கை பற்றியது அல்ல. உங்கள் நம்பிக்கையா, என் நம்பிக்கையா என்பதும் அல்ல. ஒவ்வொன்றுக்கும் மிகுந்த மதிப்புடன் கவனம் கொடுத்து, அதை எந்த அளவுக்கு நாம் சிறந்த முறையில் புரிந்து கொள்கிறோம் என்பது பற்றியது. இதுவே சனாதன தர்மத்தின் இயல்பு. அதனால்தான் அது காலங்கடந்ததாக இருக்கிறது. உங்கள் நம்பிக்கையை என் மீது திணித்தால், எத்தனை காலம் அது வேலை செய்யும்? சனாதன தர்மம் காலம் கடந்து இருப்பதன் காரணம், வழங்கப்படும் ஏதோ ஒன்று ஒருவரின் அறிவுக்கு இசைவாக இருப்பதால் தான். சனாதன தர்மம் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும் என்பதற்கு அது ஒன்றே காரணம்.
மனித நலவாழ்வில் உச்சபட்ச சாத்தியமான சனாதன தர்மம் உலகளாவிய பயிற்சியாக ஆக வேண்டுமென்றால், எதனோடும் அது அடையாளப் படுத்தப்படாமல் இருப்பது முக்கியம். தேடல் என்பது மனித புத்திசாலித்தனத்தின் இயல்பு. நம்பிக்கை முறைகளை மக்கள் மீது திணித்ததால் தான் அந்தத் தேடல் குறைந்துவிட்டது. "இதுதான், இதை நம்பாவிட்டால் நீ வாழ முடியாது" என்றே அந்த நம்பிக்கை முறைகள் தெரிவிக்கின்றன. பயம், குற்ற உணர்ச்சி இன்ன பிறவற்றை பயன்படுத்தி மனிதனின் இயல்பான தேடல் பெரிதளவில் கட்டுப் படுத்தப்பட்டு விட்டது. மனிதனின் உச்சபட்ச நலனை கருத்தில் கொண்டு, ஆழமான தேடுதல் ஒவ்வொருவரின் வாழ்விலும் கொண்டு வரப்பட வேண்டும். இதுவே சனாதன தர்மத்தின் அடிப்படை நோக்கம்.