புரிந்த அர்த்தம், புரியாத அதிர்வுகள் !
"சப்தம் தான் படைப்பின் ஆதாரம். நவீன விஞ்ஞானம், ஒலி, ஒளி இரண்டுமே அதிர்வுதான் என்று, இன்று சொல்லி வருகிறது. ஒரு ஒலியின் அதிர்வு நுட்பமாகும் வகையில், அதன் அலைவரிசையை பெருக்கிக் கொண்டே வந்தால், அறிவியல் விதிப்படி அது ஒளியாகிறது. ஆனால் இதை நாம் நமக்குள் எப்போதும் செய்து கொண்டுதான் இருந்திருக்கிறோம்" என்று சத்குரு அவர்கள் சொல்கிறார். இது எப்படி.... தொடர்ந்து படியுங்கள் இந்த வார சத்குரு ஸ்பாட்...
புரிந்த அர்த்தம், புரியாத அதிர்வுகள்!
"சப்தம் தான் படைப்பின் ஆதாரம். நவீன விஞ்ஞானம், ஒலி, ஒளி இரண்டுமே அதிர்வுதான் என்று, இன்று சொல்லி வருகிறது. ஒரு ஒலியின் அதிர்வு நுட்பமாகும் வகையில், அதன் அலைவரிசையை பெருக்கிக் கொண்டே வந்தால், அறிவியல் விதிப்படி அது ஒளியாகிறது. ஆனால் இதை நாம் நமக்குள் எப்போதும் செய்து கொண்டுதான் இருந்திருக்கிறோம்" என்று சத்குரு அவர்கள் சொல்கிறார். இது எப்படி.... தொடர்ந்து படியுங்கள் இந்த வார சத்குரு ஸ்பாட்...
Subscribe
ஒவ்வொரு அதிர்வும், முக்கியமானதோ, இல்லையோ, அது இப்பிரபஞ்சத்தில் வேரூன்றி இருக்கிறது. ஆனால் அர்த்தங்கள் அவ்வாறல்ல. அதற்கு, உங்கள் மனதின் குறுகிய எல்லைக்குள் மட்டுமே அர்த்தம் இருக்கிறது. மனித சமூகத்தில் வாழ்ந்தால் மட்டுமே மனதளவிலான அர்த்தங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. காரணம் இப்பிரபஞ்சத்துடனான தொடர்பை நாம் துருப்பிடிக்க விட்டுவிட்டோம். அர்த்தத்திற்கு மதிப்பு என்று ஒன்று இருந்தால், அது அவரவரின் முட்டாள்த்தனமான உருவாக்கம், அதாவது, அவரவர் மனோபாவத்திற்கு உட்பட்டு மட்டும் தான் இருக்க முடியும். இது தனக்கென, ஒவ்வொருவரும் உருவாக்கிக் கொள்ளும் தனி உலகம். இப்படி ஒவ்வொருவரும் 'தங்கள் உலகில்' வாழ்ந்து கொண்டிருப்பதால்தான், நிஜ உலகில் இத்தனை சண்டை சச்சரவுகள் நிகழ்கிறது. மனதைப் பொறுத்து, மனம் இருக்கும் நிலையைப் பொருத்து அர்த்தங்கள் மாறுபடும். அது உண்மையாய் இருக்க வேண்டியது இல்லை. இது நீங்களே உருவாக்கிக் கொள்ளும் மாயத் தோற்றம்.
இந்த மாயத் தோற்றத்திற்குள் நீங்கள் ஆயிரமாயிரம் அர்த்தங்களை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த மாயத்தோற்றங்களை விடுத்து ஒருவர் தன் நிலைக்கு வந்துவிட்டால், இதை வாழ்க்கையை வெறுத்தவன், விட்டேத்தியாய் இருக்கிறான் என்பார்கள். இந்த மயக்கத்தினின்று வெளிவருவது, நம் சமூக கோட்பாடுகளின்படி நல்லதல்ல. ஆனால் ஆன்மிகரீதியாகப் பார்த்தால் நீங்கள் எத்தனை விரைவாக இந்த மயக்கத்தில் இருந்து தெளிகிறீர்களோ, அத்தனை நல்லது. நீங்கள் அடுக்கடுக்காய் உருவாக்கியிருக்கும் உங்கள் மன மாயைகள் இன்றே சருகாகி விழுந்துவிட்டால் அது உங்களுக்கு நல்லது தானே? 'இல்லை, இதை நான் இறக்கும் வரை பாதுகாப்பேன்' என்கிறீர்களா? அப்படியே பாதுகாத்தாலும், 'மரணம்' உங்கள் மன மாயை அனைத்தையும் எப்படியும் அழித்துவிடுமே!
ஒரு மந்திரம் உச்சரிக்கும் போது, அதன் அர்த்தத்தை நாம் பார்ப்பதில்லை. ஆனால் தங்களுக்கு அர்த்தம் புரியாத ஒன்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது பெரும்பாலான மக்களுக்கு இன்று முடியாத காரியமாக இருக்கிறது. பிரபஞ்சத்தில் நிகழும் மிகமிக அற்புதமான விஷயங்களையும் கூட பலர் புறக்கணிப்பது ஏனென்று நினைக்கிறீர்கள்? சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், பௌர்ணமியின் முழு நிலவு. இதனை எல்லாம் எத்தனை மனிதர்கள் கவனிக்கிறார்கள்? வசந்த காலத்தில் மலர்கள் மலர்வதை எத்தனை பேர் ரசிக்கிறார்கள்? இதையெல்லாம் விட்டுவிட்டு, வார்த்தை ஜாலங்களை, யார் பயன்படுத்திய சொல்லில் அர்த்தம் பொதிந்து இருக்கிறது என்று விவாதம் செய்கிறார்கள். உலகில் நிகழும் அர்த்தமற்ற, பிரம்மாண்ட நிகழ்வுகளைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. அர்த்தமுள்ள விஷயங்களைத் தான் அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்களே!
சப்தம் தான் படைப்பின் ஆதாரம். ஆனால் அந்த சப்தத்திற்கான அர்த்தங்கள் மனித மனதில் உருவாக்கப்படுபவை மட்டுமே. இப்பிரபஞ்சத்தில் பல வகையான சப்தங்கள் உள்ளன. அதிர்வின் அடிப்படையில், மிக மிக மென்மையான, நுட்பமான சப்தங்களும் உள்ளன, அத்தனை மென்மையற்ற சப்தங்களும் உள்ளன. படைப்பில் உள்ள அனைத்துமே ஒருவித சப்தம் தான். ஏன், மரம், காற்று, உடல் என எல்லாமே ஒருவிதமான சப்தம்தான். தியானலிங்கம் போலவே மற்றுமொரு பாறை கூட இங்கிருக்கலாம், ஆனால் அதன் அதிர்வு வேறு விதமாக இருக்கும். அதே சப்தம் தான், ஆனால் அதை குறிப்பிட்ட அளவிற்கு நுட்பமாக்கி விட்டோம். இந்தத் தளத்தில் தான் இன்று அறிவியல் நுழைந்து கொண்டிருக்கிறது, ஆனால் யோக விஞ்ஞானம் காலம்காலமாக இதைத் தான் செய்து கொண்டிருக்கிறது. நவீன விஞ்ஞானம், ஒலி, ஒளி இரண்டுமே அதிர்வுதான் என்று, இன்று சொல்லி வருகிறது. ஒரு ஒலியின் அதிர்வு நுட்பமாகும் வகையில், அதன் அலைவரிசியை பெருக்கிக் கொண்டே வந்தால், அறிவியல் விதிப்படி அது ஒளியாகிறது. கோட்பாடின் அடிப்படையில் ஒலி, ஒளியாக முடியுமெனில், அதை நிஜத்தில் சாத்தியமாக்குவது நம் திறத்தை பொருத்து மட்டுமே இருக்கிறது. என்றாலும் இதை நாம் நமக்குள் எப்போதும் செய்து கொண்டுதான் இருந்திருக்கிறோம்.
ஒரு ஒலியை எடுத்து, அதை உங்களுக்குள் அடைகாத்தால், உங்கள் விழிப்புணர்வின் நுட்பமான அதிர்வோடு அதை அடைகாக்கும் போது, அந்த ஒலியை ஒளியாய் மாற்றலாம். உங்கள் உடல் ஒரு வித அதிர்வு, எண்ணம் வேறுவித அதிர்வு, உணர்சிகள் வேறுவித அதிர்வு, விழிப்புணர்வு முற்றிலும் மாறுபட்ட ஒரு அதிர்வு. இருப்பதிலேயே மிக நுட்பமான அதிர்வு இந்த விழிப்புணர்வு தான். இதையும் தாண்டியது தான் 'ஷிவா', அதாவது 'எது இல்லையோ அது'. இந்த அதிர்வு இருப்பதே உங்களுக்குத் தெரியாது. இது முழுமையான நிச்சலனம். ஆனால் அதிலும் ஒரு அதிர்வு உள்ளது. ஒரு சப்தத்தை உங்களுக்குள் ஏற்றி, உங்கள் விழிப்புணர்வால் அதை அடைகாத்தால், மெல்ல மெல்ல அதை ஒளியாய் மாற்றலாம்.
வெவ்வேறு அதிர்வுகள் வெவ்வேறு மனிதர்களிடத்து வெவ்வேறு வகையில் செயல்படும். ஆனால் ஒரு அதிர்வை, விழிப்புணர்வோடு உங்களுக்குள் அடைகாத்து, அதை ஒரு பரிமாணத்தில் இருந்து இன்னொரு பரிமாணத்திற்கு மாற்றினால், உங்களுக்குள் ஒளி பிறக்கும். இதை, சுற்றி இருப்பவராலும் கூட கவனியாமல் இருக்க முடியாது!